Friday, April 30, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி ..சுண்டல்(30-4-10)

நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்..அவர்களில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ஜீவாவும் ஒருவர்.'அன்பும் அரசியலும் வேறு வேறல்ல..உலகம் முழுமைக்கும் அன்பும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்பதே உண்மையான அரசியல் தத்துவமாகும்.ஆகவே..அன்பினை அழிக்கக்கூடிய எதுவும் அரசியலாக இருக்கமுடியாது.'இதுதான் ஜீவாவின் அரசியல் தத்துவம்.

2)மக்கள் தொகை அடிப்படையிலான செல்ஃபோன் இணைப்புகளின் எண்ணிக்கையில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.அதாவது 100 நபருக்கு 150 இணைப்புகள் உள்ளன.100 க்கு 167 என்று தில்லி முதல் இடத்திலும்,100க்கு 137 என மும்பை மூன்றாவது இடத்திலும்..100க்கு 114 என கொல்கத்தா 4ஆம் இடத்திலும் உள்ளது.

3)மோனலிசா என்ற உலகப் புகழ் பெற்ற ஒவியத்தில் அந்தப் பெண்ணிற்கு புருவங்கள் வரையப் படவில்லையே...ஏன்..அதற்கான காரணம்..இந்தக் கால பெண்கள் தங்கள் புருவங்களை Trim செய்வது போல..15,16 ஆம் நூற்றாண்டில் பெண்கள் தங்கள் புருவங்களை நன்கு மழித்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததாம்.

4)தக்காளிச் சாற்றிலே சர்க்கரையைப் போட்டால் ரத்தச் சிவப்பாக மாறுகிறது..சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டால் வெளுத்துப் போகிறது.இனிமையான பேச்சு மேலும் உன்னை அழகுள்ளவனாக்குகிறது.கடுமை உன் முகத்தைச் சோகையாக்குகிறது. -கண்ணதாசன்

5) ஐந்து வயது வரை அரசனைப் போலவும்..பதினைந்து வயதுவரை தாசனைப் போலவும் பதினாறாம் வயது முதல் நண்பனைப் போலவும் நினைத்து ஒரு தந்தை தன் மகனை நடத்த வேண்டும்.

6)இதயம் சீராக இயங்கி நோய்களை தவிர்க்க..ரத்தத்தில் இன்சுலின் அதிகரித்து டயாபடீஸ் ஆபத்தை குறைக்க திராட்சை சாப்பிடச் சொல்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்

7)கொசுறு- ஒரு ஜோக்

சாப்பிடும் போது அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு..அப்புறம் சாப்பிட்டதை வாய்க்குக் கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன் டாக்டர்
இந்த நேரத்திலே எப்படி என் கிளினிக்கிற்கு வந்தீங்க
கால்நடையாகத்தான்

Thursday, April 29, 2010

பாவேந்தர் பாரதிதாசன்..120


அண்ணாவால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்ட பாரதிதாசனின் 120ஆம் பிறந்தநாள் விழா இன்று.

பாரதிதாசனின்..புகழ் பெற்ற நம்மால் மறக்க முடியா வரிகள்..

'புதியதோர் உலகம் செய்வோம்..கெட்ட
போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்'

மற்றும்..

தமிழுக்கு அமுதென்று பெயர்-அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்'

'சங்கே முழங்கு' என்ற பாடலும் திரைப்படத்திலும் பாடப்பட்டு புகழ் பெற்றது..

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? என்ற பாடலும் பிரசித்தம்.

உவமைகள் சொல்வதில் மன்னர் இவர்.இவர் தன் படைப்புகளில் 900 க்கும் மேற்பட்ட உவமைகளை சொல்லியிருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

உவமை என்பதை ஆங்கிலத்தில் simile என்பர்.உவமை என்பது தெரிவிக்க விரும்பும் பொருளைத்..தெரிந்த பழைய பொருளோடு ஒப்பிட்டுச் சொல்வதே யாகும்..

உதாரணமாக..பாரதிதாசன் மணல் மேட்டை உவமைப்படுத்தும் போது..அந்த மணலின் மென்மைத் தன்மையை..'கீரியின் உடல் வண்ணம் போல்..மணல் மெத்தை' எம்கிறார்.

கணவனும், மனைவியும் தேனும்..வண்டும் போல இருக்க வேண்டுமாம்..அப்படிப்பட்ட இல்லறமே சிறக்குமாம்.

அதேபோல கல்வி இல்லா பெண்களை களர் நிலத்திற்கு ஒப்பிடுகிறார்..

கல்வியில்லாத பெண்கள்
களர் நிலம்!.அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்..நல்ல
புதல்வர்கள் விளைவதில்லை
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி

என்கிறார்.

குழந்தையைப் பற்றிக் கூறுகையில்..

பெற்ற தாயின் மடியின் மீது யாழ் கிடப்பது போல பிள்ளை ..என்கிறார்..

குழந்தைகளின் வளரும் புருவத்தை

'எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்' என்கிறார்

எறும்புகள் செல்லும் வரிசையை புருவத்திற்கு ஒப்பிடுகிறார்.

எந்த ஒரு இலக்கியவாதியும்..உவமைகள் அற்ற இலக்கியத்தை படைக்க முடியாது..அதுபோல பாவேந்தரும் உவமைகளை விடவில்லை..

மேலே குறிப்பிட்டுள்ள சில உவமைகள் மாதிரிக்கே..இவை பாவேந்தரின்..'குடும்பவிளக்கு' காவியத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இவரது படைப்புகள் 1990 அரசுடமையாக்கப்பட்டன.
1970ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இவர்.

Tuesday, April 27, 2010

வள்ளுவனும்..இன்பத்துப்பாலும் - 5

மலரும்..மங்கையும் ஒரு ஜாதி என்றான் ஒரு கவிஞன்..மற்றவனோ மலர்களிலே அவள் மல்லிகை என்றான்..அடுத்தவன் ஒருவன் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப்பார்க்கையிலே என்றான்..

இப்படி ஒவ்வொரு கவிஞனும் போட்டிப் போட்டுக் கொண்டு பெண்களை மலர்களுக்கு ஒப்பிட்டனர்..

இவர்களின் முன்னோடி..பொய்யாமொழியான் மட்டும் சும்மா இருந்திருப்பானா..இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவன் பெண்களையும்..அவர்களின் அங்கங்களையும் என்னென்ன மலர்களுக்கு ஒப்பிட்டு இருக்கிறான் பாருங்கள்..

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

அனிச்ச மலர் மென்மையானதுதான்..ஆனால்..அதனினும் மென்மையானவளாம் அவனது காதலி..

மலர்களைக் கண்டால்..நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது, புத்துணர்ச்சி தோன்றுகிறது..ஆனால் கண்டால் வியக்கவைக்கும் மலர்கள் உளதா...இருக்கிறது என்கிறார் வள்ளுவர்..தன் காதலியின் கண்கள் பலரும் கண்டு வியக்கும் மலராம்..

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

மலர்களைக் கண்டு மயங்கும் நெஞ்சமே..இவளது கண்களைப் பார்..பலரும் கண்டு மயக்கும் மலராய் அது திகழ்கிறது

ஒரு மலர் தன்னைப் போன்ற இன்னொரு மலரைக் கண்டு..அது போன்ற அழகு தனக்கு இல்லையே என நாணித் தலைகுனியுமா....குனியும் என்கிறார்..

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

(என் காதலியை)குவளை மலர்கள் காண முடிந்தால்..'இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே' என தலைகுனிந்து நிலம் நோக்குமாம்..

ஒரு பெண்..தன்னை மற்ற அழகான ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு தான் அது போல இருப்பதாக எண்ணுகிறாள்..உண்மையில் அப்படி துளியும் இல்லை..ஆனால் அப்படி நினைப்பவள்..அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள முடியாமலும் இருக்கிறாள்..ஊரார் இவளை அழகாக இருப்பதாக நினைக்க இவள் என்ன செய்ய வேண்டும்..அந்த அழகானப் பெண்ணை நோக்கும் பலரும்..இவளைப் பார்க்காமல் கேள்வி ஞானத்திலேயே இருக்க வேண்டும்..இதைத்தான் இந்தக் குறள் மூலம் வள்ளுவர் கூறுகிறார்..

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

நிலவே..மலரனைய கண்களுடைய என் காதலிக்கு ஒப்பாக நீ இருப்பதாய் உனக்கு பெருமை இருக்குமேயாயின்..(அதை மற்றவர்கள் நம்ப வேணுமெனில்) அவர்கள் காணும்படி நீ தோன்றாது இருப்பதே மேல்...

Monday, April 26, 2010

18000000000 + 2000000000



(மேலே உள்ள போலீஸ்காரரால் என்ன செய்ய முடியும்?)


கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தும் 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாகக் கட்டித்தரும் தமிழக அரசின் திட்டத்திற்கு..முதல் ஆண்டிற்கான அரசு செலவிடப்போகும் பணம் இது..இதனால் மூன்று லட்சம் மக்கள் வீடு பெறுவர்..இதற்கான செலவு 1800 கோடீ ருபாய்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி,5 பேரூராட்சி மற்றும் 64 வழியோரக்குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு குடிநீர்திட்ட விவாக்கத்திற்கு அரசு செலவிடப்போகும் பணம் 1800 கோடி..இதனால் மக்கள் தாகம் தீர 270 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்..

மாயாவதிக்கு அவர் ஆயுள் முழுதும் பிறந்த நாளுக்கு பணமாலை போட 1800 கோடி போதும்..

IPL T20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு..போட்டியாளர்கள் முதல் பரிசுத் தொகையாக 1800 கோடியை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்குக் கொடுக்கலாம்.

ஆமாம் இதெல்லாம் என்ன கணக்கு என்கிறீர்களா?

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாயிடமிருந்து ஊழல் குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்..ஒவ்வொரு வருடமும் அங்கீகாரம் தர கோடிக்கணக்கில் லஞ்சம்..தவிர அக்கல்லூரிகளில் அவருக்கென்று 5 சீட்டுகள்..அதன் மூலம் ஆண்டு வருமானம் 200 கோடி..

ஊழல் பெருச்சாளி எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்..ஆனால் ஊழல் யானை இவர்..

ஆமாம்..சாதாரணக் குடிமகனுக்கு கிடைக்கும் டெபாசிட் வட்டியில் கூட pan நம்பர் இல்லையேல் வருமான வரி பிடித்தம் செய்யச் சொல்லும் அரசுக்கு..இவ்வளவு ஆண்டுகளாக எப்படி இவரைப் பற்றித் தெரியாமல் போச்சு?

மேலே குறிப்பிட்டுள்ளது 1800 கோடிக்கு எத்தனை சைபர் எனத் தெரிந்துக் கொள்ள..

அது சரி + போட்டு அது என்ன என்கிறீர்களா? அவரிடமிருந்து கைப்பற்றிய 1500 கிலோ தங்கத்தின் மதிப்பு..(கிராம் 10000 ரூபாய் எனக் கொண்டால்)

அவருக்கென்ன..வாழ்நாளில் பெரும் பகுதி கழிந்து விட்டது..மீதி நாளை ஜாமீனில் கழித்துவிடுவார்..

கடைசியில் பதிவை ஒரு திருக்குறளுடன் முடிக்காவிட்டால் வானம்பாடிகள் (பாலாஜி) கோபித்துக் கொள்வார்..அதனால் ஒரு குறள்

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்

(களங்கத்துக்குப் பயப்படக்கூடியவர்கள்..விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்)

எருமைத் தோலர்களைப் பற்றியும், நாட்டு துரோகிகள் பற்றியும் பேசிப் பயனில்லை..

டிஸ்கி..- ஹி..ஹி..மேலே உள்ள போலீஸ்காரர் நான் தான்..என் 'மனசேதான் கடவுளடா" நாடகத்தில்

Sunday, April 25, 2010

முப்பதாயிரத்தில் திரைப்படம் எடுக்க முடியுமா?




கேபிள் சங்கரின் வலைப்பூவில் மேலே போட்டுள்ள விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்..

உண்மையில் 30000 ரூபாயில் படம் எடுக்க முடியுமா?

முடியும் என்று நிரூபித்துள்ளது ஏவிஎம் நிறுவனம்...அதுவும் முழுநீள நகைச்சுவைப் படத்தை 32000 ரூபாய் செலவில் எடுத்து..படமும் மாபெரும் வெற்றி பெற வைத்தனர்..

ஹி..ஹி..ஹி...

அந்தப் படம் டி.ஆர்.ராமசந்திரன்,காளி என்.ரத்தினம்,சாரங்கபாணி ஆகியோர் நடித்த 'சபாபதி' என்ற படம்.

அப்போது அந்த நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கதாநாயகனுக்கு படம் முடியும் வரை மாதச்சம்பளம் அறுபத்தேழரை ரூபாய்..கதாநாயகிக்கு நாற்பத்து ஐந்து ரூபாய்..

படம் வெளியான ஆண்டு 1942.

அதே போன்று 'நாம் இருவர்" படக் கதைக்கு இவர்கள் கொடுத்த பணம் 3000 ரூபாய்..ஆனால் அதில் இடம்பெற்றிருந்த பாரதியார் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட காப்பிரைட்டிற்குக் கொடுத்த பணம் பத்தாயிரமாம்

Saturday, April 24, 2010

உணவும்..செரிமானமும்




நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

Friday, April 23, 2010

தெளிந்த உள்ளம்..

யானை படுத்தால்

குதிரை உயரம் என்பதால்

குதிரை சிறப்பற்றதா?

பட்டுப் புழு பின்னாளில்

பட்டாம்பூச்சியாய் பறக்கும் என்பதால்

மலப் புழு தன்னை

பட்டுப்புழுவாய் எண்ணுவதா?


எழுத்தாளன் என்பதால்

எழுதுவதெல்லாம் தரமானதா?

தரமானதை எழுதாதால் அவன்

தரமற்ற எழுத்தாளனா?


சாதிஎனும் முள்கிரீடத்தை

தூக்கி எறிந்ததால்

அவன் மனிதனில்லையா?

அவன் மனிதன் என்பதால்

சாதியை பற்றுவதா?


மனிதனாய் வாழ்பவனுக்கு

மனித நேயம் இல்லையா?

மனிதநேயம் இல்லாததால்

மனிதனானவனா அவன்?


மனித சாதிக்கும்

மிருக சாதிக்கும்

வேறுபாடை உணர்ந்தால்

மனிதன் ஆகிவிடலாமா?

Thursday, April 22, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(23-4-10)

உடல் இளைக்க சிலர் 'டயட்' டில் இருப்பதாகக் கூறுவர்..ஆனால் இப்படி டயட்டில் இருப்பதால் இதய நோய்கள்,கேன்சர்,டயாபடீஸ் ஆகிய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வு அறிக்கைக் கூறுகிறது..ஆகவே மருத்துவரை கலந்து ஆலோசிக்காது..நீங்களே இஷ்டத்திற்கு டயட்டில் இருக்காதீர்கள்

2)சர்வதேச நிதி நெருக்கடிக்கு இடையேயும்..வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த நிதியாண்டில் முதல் ஆறு மாத காலங்களில் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 1.22 லட்சம் கோடி..நமது நன்றியை என்.ஆர்.ஐ., க்களுக்கு சொல்வோம்

3)நம் நாட்டு மக்கள் தொகையில் 37.2 சதவிகிதத்தினர்..அதாவது கிட்டத்தட்ட 40.71 கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாம்..

4)உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக கோவையில் 140 திருமண மண்டபங்கள் இதுவரை பதிவு செய்து வைக்கப் பட்டுள்ளனவாம்..தவிர்த்து கோவையில் நான்காயிரம் ஓட்டல் அறைகளும்,மேட்டுப்பாளயத்தில் 300 அறைகளும்,திருப்பூரில் 400 அறைகளும், நீலகிரியில் ஆயிரம் அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்

5)தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 105 கடைகள்..கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம். இவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது..(தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என அறிவித்த தமிழக அரசு..எங்களுக்கும் அப்படி அறிவித்தால் தமிழில் பெயர் வைக்கிறோம்..அதைவிடுத்து சட்டப்படி நடவடிக்கை என்றால்..அரசு..ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பாய் செயல்படுவது ஏன்? என்கிறார் ஒரு வியாபாரி)

6) இரவுக்கு வேண்டியதை பகலில் தேடி வைத்துக் கொள்
மழைக்காலத்திற்கு வேண்டியதை மற்றைய காலத்தில் தேடி வைத்துக் கொள்
முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக்கொள்
மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக்கொள்

- வாரியார்

7)கொசுறு ஒரு ஜோக்

தலைவரே! உங்க மேல உயர்நீதி மன்றத்தில் உள்ள கேஸ்ல தர்மம் வெல்லும்னு மக்கள் பேசிக்கிறாங்க
உச்ச நீதி மன்றம் வரைக்கும் போய் பார்த்துடலாம்.,


டிஸ்கி- 25-4-10 ஞாயிறு மாலை 7 மணி அளவில் நாரத கான சபாவில் நடைபெறும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் நான் எழுதி, இயக்கும் 'மனசேதான் கடவுளடா' என்ற நாடகம் அரங்கேறுகிறது.அனுமதி இலவசம்..அனைத்து நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன்

Wednesday, April 21, 2010

அனுமதி மறுத்த அண்ணாசாமி

அதி புத்திசாலி அண்ணாசாமி வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்தார்....அண்ணாசாமி குடியிருக்கும் வீட்டிற்கு அவர் குடிவர உதவிய நண்பர் ஒருவருக்கு அந்த உறவினரைப் பிடிக்காது.அதனால் வந்த உறவினரை உபசரித்தால் நண்பருக்குப் பிடிக்காது என அண்ணாசாமி அறிவார்.மேலும் அந்த நண்பர் அனுமதியில்லாமல் அண்ணாசாமி வீட்டிற்கு யாரும் வரவும் முடியாது.

அதனால்..தன் வீட்டு நுழைவாயிலில் உள்ளே வர முடியாத அளவிற்கு அண்ணாசாமி..தடைக்கல்லாக ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்தார்.

வந்த உறவினர் 'இப்படி தடைக்கல்லைப் போட்டால் எப்படி உள்ளே வருவது?' என்றார்.

உடன் அண்ணாசாமி..

உறவினரான அவர் தன் வீட்டிற்குள் வர விரும்பினால்..அதை தனக்குத் தெரிவிக்குமாறும்..அப்படித் தெரிவித்ததும் தான் தன் நண்பருக்கு கடிதம் எழுதுவதாகவும்..அந்தக் கடிதத்திற்கு பதில் வந்ததும்..நண்பர் தடைக்கல்லை அகற்றச் சொன்னால்..அப்படி அகற்றியதும் உறவு உள்ளே வரலாம் என்றும் கூறினார்.

வந்த உறவினரோ...

உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

என்ற குறளை மனதில் எண்ணியபடியே திரும்பிச் சென்றார்.

Tuesday, April 20, 2010

ஒரு அவசர அறிவிப்பு

டோண்டு அவர்களின் இடுகை ஒன்று பதிவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது..

அதற்கு பதில் இடுகையிட்டு..அவரின் கீழ்த்தர இடுகைக்கு விளம்பரம் தர வேண்டாம்..

அனைத்து பதிவர்களும் தமிழ்மணத்திற்கும்..கூகுள் ரீடரிலும் அவர் பதிவை நீக்கக் கூறி மின்னஞ்சல் அனுப்புவோம்..

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

மனித நேயம் காப்போம்..

Monday, April 19, 2010

நாய் வால்


இந்து என்றும்

இஸ்லாமியர் என்றும்

கிறிஸ்துவர் என்றும்

ஏனிங்கே பல மதங்கள்

மனிதன் என்றே இணைவோம்

மனித நேயம் காப்போம்

முழங்கினான்

கட்சிக் கூட்டத்தில்

அன்றுதான்

அக்கட்சியில் இணைந்தவன்

பின்னால் அமர்ந்திருந்த

தலைவர் கேட்டார்

அருகிலிருந்தவரிடம்

பேசுபவன் யார் மகன்

என்ன சாதி என

நளினி-பார்வதி அம்மா-சோனியா மற்றும் கலைஞர்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..ஒரு வேளை நாடாளுமன்றத்திலும்..நிறைவேறி விட்டால்..பல மாநில சட்டசபைகளும் ஒப்புதல் தெரிவித்து அடுத்த தமிழக சட்டசபை தேர்தலிலேயே அமுலில் வர நேரிடலாம்.

அப்படி நடந்தால் முதலில் மகளிர்களுக்கு வாழ்த்துகள்..கிட்சன் கேபினட் என்பது போல..வென்று வரும் எம்.எல்.ஏ.,க்களின் கணவர்கள் பினாமி எம்.எல்.ஏ.,க்களாக செயல் படாதிருக்கட்டும்.

அப்போது..தமிழகத்தில் 78 இடங்கள் மகளிருக்கு ஒதுக்க நேரிடும்..இதனால் தி.மு.க., மூத்தவர்கள் பலருக்கு தேர்தலில் டிக்கெட் கிடைக்காமல் போகலாம்..அப்படிப்பட்டவர்களுக்கு தஞ்சம் கொடுக்க மேலவை வரப்போகிறதே..ஐயா ஆர்.எம்.வி., பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்..ஆர்காட்டார்,பேராசிரியர்,வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் மேலவை உறுப்பினர்கள் ஆகலாம்.

சட்டசபை தேர்தலில்..காங்கிரஸுடன் ஆன கூட்டணியை கலைஞர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்..காங்கிரஸ் கேட்கும் அளவு சீட் ஒதுக்கப்பட முடியாவிட்டால்..அவர்கள் பலரையும் மேலவை வரவேற்கக் காத்திருக்கும்..

காங்கிரஸுடன் ஆன கூட்டு நிலைத்திருக்க மேலும் வழி..சோனியாவை திருப்தி படுத்த வேண்டும்..

நளினி 19 ஆண்டுகள் சிறையில் கழித்தாயிற்று..அவரை விடுவிக்க மறுத்து தமிழகத் தரப்பில் சொன்ன காரணம்..அவர் சிறையில் இருந்தே பட்டப் படிப்புப் படித்துள்ளார்..மேலும்..அவரை வெளியே விட்டால்..ராயப்பேட்டையில்தான் தங்குவார்..அதன் அருகேதான் யு.எஸ்.,கான்சுலேட் அலுவலகம் உள்ளது....அடடா..எப்படிப்பட்ட காரணம் என நாம் வியந்தாலும்..சோனியா சற்று திருப்தி அடைந்திருப்பார்..இந்திராவின் மருமகளே வா..உனது ஆதரவைத் தா..

அடுத்து..பிரபாகரனின் தாய்..எண்பது வயது மூதாட்டி..சிகிச்சைக்காக வருகிறார்..கணவனையும் சமீபத்தில் இழந்தவர்..பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்..எழுந்து நடமாட முடியாதவர்..கொடுத்த அனுமதி மறுக்கப் பட்டு..வந்த மலேஷிய விமானத்தில் இருந்து இறக்கக் கூடப் படாமல் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்..குடியுரிமை அதிகாரிகளால்..இந்த விஷயம் கலைஞருக்கு தெரியாமல் நடந்து இராது..ஏதேதற்கோ..மைய அரசுக்கு கடிதங்கள் எழுதிக் குவிப்பவர்..எம்.பி.க்கள் குழுவை பிரதமரை சந்திக்கச் சொல்பவர் இந்த விஷயத்திலும் தலையிட்டிருக்கலாம்..தலையிடாததன் காராணம்..'சோனியாவே நமஹ..'வாய் இருக்கக்கூடும்.

ஒரு விதத்தில்..அனுமதி மறுத்தது நல்லதற்கே..அனுமதி அளித்திருந்தால்..ஒருவேளை..பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பிற்கு மூதாட்டிக்கு தொடர்பு என்று கூட சொல்லியிருப்பர்..

வெட்கம்..வெட்கம்...

Sunday, April 18, 2010

சாகுந்தலம்..(நாட்டிய நாடகம்)



முந்தைய பதிவு

காட்சி-9

(துஷ்யந்தன் அரசபையில்)

(சகுந்தலையைப் பார்த்ததும் மன்னன் நிலை)

இவளைக் கண்டதும்

என் தலையில் ஏன்

இவ்வளவு பாரம்

கிரீடத்தின் சுமையும்

தாங்க முடியாமல் என்னுள்

தலைக்குடைச்சல் ஏன்?

(சகுந்தலையைப் பார்த்து)

பெண்ணே.. நீ யார்

உனக்கு என்ன வேண்டும்

உன்னை நம்பிக்கையூட்டி

ஏமாற்றியவன் எவன்

உன்னை இந் நிலையில் விட்டுச்

சென்ற கயவன் யார்

(சகுந்தலை உரைக்கிறாள்)

மன்னா..நான்

சகுந்தலை..உங்கள்

மணவாட்டி

கன்வ மகரிஷியின்

சுவீகாரப் புத்திரி - என்னை

எப்படி மறந்தீர் நீர்

நினைவு இருக்குமா எனக்

கேட்டபோது

மறந்தால் தானே நினைப்பதற்கு

என்றீரே

(துஷ்யந்தன் உரைக்கிறான்)

பெண்ணே

நீ மனம் உடைந்து

ஏதேதோ பிதற்றுகிறாய்

நான் உன் மணாளன்

என்பதற்கு ஆதாரம் உண்டா

உனை மணம் புரிந்ததற்கு

யார் சாட்சி

(சகுந்தலை)

யார் சாட்சி...யார் சாட்சி..

நம் திருமணம்

காந்தர்வத் திருமணம்

முப்பது முக்கோடி

தேவர்கள் சாட்சி

நிலவு சாட்சி

நீர் அளித்த

கணையாழி சாட்சி - ஆயின்

நேரில் வர இயலா

சாட்சிகள் - நீர்

அளித்த ராஜமோதிரமும்

துர்வாசர் சாபத்தால்

தொலைந்ததுவே..

(துஷ்யந்தன்)

பெண்ணே..உன் நிலைக்

கண்டு வருந்தினேன்

சித்தம் தடுமாறும்

பெண்ணே..நீ யார்

சற்றே யோசி

(என்றிட்டான்)

இம்முறை

பெண்ணே நீ யார்

உன் சித்தம் சரியில்லையா - என

மன்னன் வினவியதும்

அவள் காதுகள்

கேட்கும் திறன் இழந்தன

கோலம் கலைந்தது போல

வாழ்வும் கலைந்தது

ஞாலம் மீதினில் - என்

வாழ்வில் ஞாயிறும்

வராது போயிற்று

கானல் நீரானதென் வாழ்வு

ஏலம் போட்டு நினைவுகளை

ஏழை விற்றிட முடியுமா?

வயிற்றில் சுமப்பது - அவன்

மஞ்சத்தில் தந்த கரு

ஓலம் போட்டு அழுதாலும்

ஓடிவராது போன காலம் - என்

மன்னனுடன் நான்

வாழ்ந்த காலம்

வாழ்வின் இலைகள்

இலையுதிர்காலமாய் உதிர

தேவன் போட்ட புதிராம்

தலையெழுத்தறியாப் போனாள்

நீர் சிந்தும் விழியாள்

வாழ்வு கனவானது

மரணதேவனே - நீ

எனை அணுகுமுன்

ஒரு வேண்டுகோள்

இதயத்தில் மன்னன் பெயரையும்

வயிற்றில் அவன் வாரிசையும்

சுமந்தவள் நானென

கோமகன் உணரும் வரை

அவரை நீ அணுகாதே (என்றவாறே மயங்கி விழ)

யார் அங்கே..

மன்னன் விளித்தான்..

அரண்மனை வைத்தியனை

அணங்கை சோதித்திட

அவ்வேளையில்..

மன்னா...மன்னா..

விளித்தவாறு ஒடி வந்தனர் இருவர்

காவலர் அவரைத் தடுக்க

காவலன் அனுமதித்தான்..

வந்தவரோ..

மன்னா..மீன் பிடிப்பது எம் தொழில்

இன்று மீனொன்று கிட்டியது- அதை

பல கூறு போடையில்

ஆச்சர்யம்

அதன் வயிற்றில்

அரசரின் ராஜ மோதிரம்..

கணையாழியை மன்னனிடம் ஈய

மன்னன் கை அதில் பட்டதும்

வந்ததே பழைய நினைவுகள்

துர்வாசர் சாபமும் நீங்க

மன்னனும்..சகுந்தலை..சகுந்தலை

என கூவியபடியே

அவளை வாரி அணைக்க

தாய்..தந்தை இணைந்ததுக் கண்டு

மகிழ்ந்தது மகவு வயிற்றில் இருந்தவாறே...

(முற்றும்)

Friday, April 16, 2010

வாய் விட்டு சிரியுங்க..

நிருபர்-(நடிகரிடம்) தொடர்ந்து உங்க படங்க தோல்வி அடையுதே..உங்க தோல்வியின் ரகசியம் என்ன?

2)தலைவர்-(வாக்கு சேகரிக்கும் வீட்டில்) நான் உங்க வீட்டுப் பிள்ளை
வாக்காளர்-ஐயோ..வேணாம்யா..ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை வைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்

3)மன்னர்-(அமைச்சரிடம்) மந்திரியாரே!..யானை ஏற்றம் தெரியும்..குதிரை ஏற்றம் தெரியும்..ஆனால்..விலைவாசி ஏற்றம் என்கிறார்களே...அப்படி என்றால் என்ன

4)கோமா நிலையில் உள்ள நம்ம தலைவர் திடீர்னு எழுந்தா என்ன ஆகும்
'கோமா வெற்றி கொண்டான்'னு பட்டம் தரச்சொல்லி..பாராட்டுவிழாவும் நடத்தச் சொல்லுவார்

5)தயாரிப்பாளர்-(கதாசிரியரிடம்) உங்க கதையைச் சொல்லுங்க
கதாசிரியர்-கதாநாயகி ஒரு ஏழை..உடுத்தக் கூட கந்தல் துணிதான்..அதுல அவ அரை நிர்வாணமாத்தான் தெரிவாள்..
தயாரிப்பாளர்-அடடா..ஆரம்பமே..அசத்தலான கதை சார் இது

6)லீவு வேணும்னு கைல காயம்னு கட்டு கட்டிண்டு போனியே..என்ன ஆச்சு..
என் மேலதிகாரி..'காயமே இது பொய்யடா' ன்னு சொல்லிட்டார்

7)டாக்டர்..போலி மருந்துகள் அதிகம் வர ஆரம்பிச்சுடிச்சே..
போலி மருத்துவர்கள், போலி மருந்துகள்..ம்..ம்..வர வர மருத்துவமே போலி ஆயிடுச்சு..நாட்டில போலி மருத்துவக் கல்லூரிக் கூட எங்கயாவது இருக்கலாம்..அது எப்போ வெளியே வரப்போவுதோ?

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(16-4-10)

1)பேராசிரியர் ஆல்பர்ட் ஈன்ஸ்டீனிடம்..'வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி" என்று கேட்ட போது..அவர் கொடுத்த கணித சூத்திரம்
A = X+Y+Z

A.. என்பது வாழ்க்கையில் வெற்றி
X என்பது கடின உழைப்பு
Y என்பது ஆரோக்கியமான விளையாட்டு
Z என்பது அதிகம் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது

2)கால் தடுமாறினால் சமாளித்துக் கொண்டுவிடலாம்..ஆனால் நாக்குத் தவறினால் மீளவே முடியாது

3)இந்த வார விகடனில் வந்த எனக்குப் பிடித்த புதிர்..எழுதியவர் பி.கிருஷ்ணசாமி..சேலம்

ஆங்கில வசனத்தில் I am, I was என்று ஆரம்பிக்கப் பார்த்திருக்கிறோம்..ஆனால் I is என்று ஆரம்பிக்குமா?

4)கடவுள் என்பது வாய்மையும்,அன்பும் தான்..கடவுள் என்பது ஒழுக்க நெறியும், அற வழியும்தான், கடவுள் என்பது வெளிச்சத்திற்கும் வாழ்க்கைக்கும் மூல ஊற்றாகும்..கடவுள் என்பது மனசாட்சி..நாத்திகவாதிகளின் நாத்திகமாகவும் கடவுள் இருக்கிறார்

5)மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்..சிகரெட்,குட்கா போன்றவற்றின் அட்டைப்பெட்டிகளில் எச்சரிக்கும் விதமாக தேள், மற்றும் உருக்குலைந்த நுரையீரல்களின் படங்களைப் போட இருக்கிறார்கள்.ஜூன் முதல் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

6)பெண்களுக்கு மட்டுமே அழகுக் குறிப்புகள் வருகிறது..ஆண்களுக்கென ஏதும் இல்லையா ...
இருக்கிறது..நீங்கள் முகம் மழிக்கும் முன்..இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய்யை கையில் விட்டு குழைத்து..முகத்தில் ரோமப் பிரதேசங்களில் தடவி விட்டு..பின் சோப்போ, ஜெல்லோ தடவியபின் மழிக்கவும்..கன்னம்..மழ மழ தான்

7)கொசுறு - ஒரு ஜோக்

எங்க டாக்டர் பை பாஸ் சர்ஜரி செய்துமுடித்ததும்..அது பை ஃபெயில் சர்ஜெரி ஆகிடும்

(புதிருக்கான விடை - ஆரம்பிக்கும்..'I' is the ninth letter in English alphabet)

Thursday, April 15, 2010

அரிசியில் உன் பெயர்



நீ

உண்ணும் அரிசியில்

உன் பெயர் எழுதி இருக்கும்

என்றார் அப்பா

அப்போ

எறும்பு இழுத்துப் போகும்

இரையில்

அதன் பெயர் இருக்குமா


2)நாளை

வெளியில் வேலையிருக்கு

மழை வரும்னு சொல்லாதீங்க

ஆணையிடுகிறாள் இல்லாள்

வானிலை அறிக்கை

அதிகாரியிடம்


3)நீ

பார்த்துவிட்டுப் போன

என் வீட்டுக் கண்ணாடி

இப்போதெல்லாம்

என் முகம் காட்டுவதில்லை


4)என் உயிர் உன்னிடம்

என்ற பாடல்

தேநீர்க் கடையில்

ஒலித்துக் கொண்டிருக்க

ரசித்துக் கொண்டிருக்கிறான்

உயிரில்லாமல்

Wednesday, April 14, 2010

சாகுந்தலம்..(நாட்டிய நாடகம்) - 5



முந்தைய காட்சிக்கு

காட்சி-7

(சகுந்தலை ஆசிரமத்தை விட்டு கிளம்புதல்)

மன்னனும் திரும்பக் காணோம்

வரச்சொல்லியும் சேதி இல்லை

கன்வ ரிஷி சொல்ல..கடலை நோக்கி

சகுந்தலை நதி செல்ல ஆரம்பிக்க

சோகநிழல் பரவியது குடிலில்

இடியோசை வானத்தைப் பிளக்க

இயற்கை அழ ஆரம்பித்தது

கன்வரோ..சகுந்தலை அறியாமல்

கண்களின் நீரைத் துடைத்தார்

தோழிகள் ஊமையாயினர்

நந்தவனத்தில்

அவள்... நீர் விட்டு

வளர்த்த பூஞ்செடிகள்

காற்று வீசியும் அழியாது

மௌனம் காத்தன .-அவளின்

சிவந்த இதழ்கள்

துக்கம் தாளாமல் கடிபட்டதால்

இரத்தச் சிவப்பாயின..

மரக்கிளையில் அமர்ந்து

பறவைகள் அழுதன

பசு..கன்று..மான்..முயல்

சினேகிதியின் பிரிவால்

வாடிடுவோமோ எனக் கலங்க

சாவு வீட்டு மௌனம்..

நங்கை சகுந்தலை

கன்வரை வணங்கி

திரும்பிப் பாராது

விரைந்தாள்..


காட்சி-8

(ராஜமுத்திரை கை நழுவுதல்)

மணாளனை நோக்கி

மனதில் இன்ப சூரியன்

ஒளிர் விட

பரிசல் ஒன்றில் ஏறி

மங்கை அவள்

நதி கடக்கிறாள்

பாதி வழியில்...- ஐயகோ..

காற்று..சூறாவளிக் காற்று

பரிசல் முன்னேறாது

சுற்றுகிறது...விளிம்பில்

நதி நீர் முட்டி முட்டிச் செல்ல

பரிசல் மூழ்கிடுமோ என

ஐயம் ஏற்பட

கைகள் பிடிமானத்தைத் தேட

பரிசலின் விளிம்பைப் பிடிக்கிறாள்

நங்கை

கையில் அரசன் ஈந்த

ராஜ மோதிரம்

தண்ணீரின் வழவழப்பில் நழுவி

நதியினுள் வீழ்ந்திட

ஐயோ பெண்ணே..இருந்த ஒரு

ஆதாரமும் தொலைந்ததே - என

இயற்கை அழத் தொடங்கியது

Tuesday, April 13, 2010

நான் போலி இல்லை

வெளியே கிளம்பியதும்

குறுக்கே ஓடியது பூனை

சகுனம் சரியில்லை

சட்டெனக் கூறினாள் இல்லாள்

பாய்ந்து ஓடி வந்த நாயொன்று

பூனையைக் கவ்வ

சகுனம் சரியில்லைதான்

பூனைக்கு


2)கவிஞர்கள் அதிகமாகக்

கவிதைகளைப் படிப்பதால்

கவிஞர்கள் படிக்க

கவிதை ஒன்று எழுதிட்டேன்

கவிதை எப்படி என

கவிஞர்கள் படித்து

கவிதை வடிவிலேயே

கூறட்டுமே!


3)என்னை விமரிசிக்க

உரிமை உனக்கு

உண்டெனில்

உன்னை விமரிசிக்க

எனக்கும் உரிமை உண்டு


4)என்னைச் சுற்றி

ஆதரவு யாருமில்லை

ஏனெனில்

நான் போலியில்லை

Monday, April 12, 2010

கார்க்கியின் தந்தைக்கு ஒரு மடல்

பேரன்புமிக்க ஐயா,

வணக்கம்..

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் ஆன்மா சென்ற 8ஆம் நாள்..ஆரணியில் நடந்த உங்கள் மகன் திருமணத்தையும்..பின்னர் சென்னையில் அன்று மாலை நடந்த ரிசப்ஷன் விழாவிலுமே இருந்திருக்கும்..

நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நினைத்து..உங்களது மனைவியும்..உங்கள் பிள்ளைகளும் வருத்தப்பட்டிருந்தாலும்..திருமணத்தில் அவர்களது ஒற்றுமையையும்..நடக்கும் நிகழ்ச்சிகளையும் கண்டு உங்களது மனம் குளிர்ந்திருக்கும்..

சரி விஷயத்திற்கு வருகிறேன்..

அடுத்து லைன் கிளியர் ஆகி உள்ள நிலையில்..உங்கள் அன்பு மகன் கார்க்கி திருமணத்திற்குக் காத்திருக்கிறான்..

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்

என்ற வள்ளுவனின் கூற்றுக் கிணங்க..தான் விரும்பும் பெண்ணை எதிர் நோக்கி..தன் கண்ணின் கருமணியில் உள்ள பாவையை..தன் வாழ்வில் வரப்போகும் பாவைக்கு இடமளித்து விட்டு நீ போய் விடு என்று சொல்லும் நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார்..

தெய்வமாகிவிட்ட நீங்கள் உடனே முனைந்து..சம்பந்தபட்டவர்கள் நினைவில் புகுந்து..கார்க்கியின் ஏக்கத்தைத் தீர்க்க கேட்டுக் கொள்கிறேன்..

நன்றி

அன்புடன்
T.V.ராதாகிருஷ்ணன்

Sunday, April 11, 2010

நான் ஏன் பதிவர் சந்திப்பைப் புறக்கணித்தேன்

பதிவர் சந்திப்பு என்றால்..நான் சென்னையில் இருந்தால் கண்டிப்பாக இதுநாள் வரை கலந்துக் கொள்வேன்..ஆனால் சென்ற சனிக்கிழமை நடந்த சந்திப்பிற்கு நான் செல்லவில்லை.

அதற்கான 10 காரணங்கள்

1)முக்கியமாக சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால்..யாரேனும் ஏதேனும் ஜெராக்ஸ் காபி எடுத்த நோடீஸ்களைக் கொடுத்தால் அதை வாங்குவதா..வேண்டாமா என்ற குழப்பம்.

2)முதலில் சில பதிவர்கள்..முதலிலேயே பதிவர் சந்திப்பு என்பதைத் தீர்மானித்து விட்டு..பின் மற்றவர்களை அழைத்திருக்கிறார்கள் என யாரேனும் வன்மையாக குற்றம் சாட்டுவர்

3)பதிவர்கள் வட்டமாக அமர்வார்களா..வரிசையில் அமர்வார்களா..வரிசையில் அமர்ந்தால் யார் யார் முதல் வரிசையில் அமர்வது என்ற குழப்பம் இருக்கும்

4)யாரேனும் ஒரு பதிவர் டீ,பிஸ்கெட் சப்ளை செய்துவிட்டு ..அதற்கான காசை கொடுத்தால் ..நானும் தருகிறேன் என்று சொல்வேன்..உடன் அவர்..அப்படியானால் நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றுவிட்டால்..கடற்கரை வேறு..நமக்கு எதற்கு ஏன் வீண் வம்பு?

5)வரும் அனைத்துப் பதிவினரிடையேயும் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும்..யாரிடமேனும் மறந்து சொல்லாமல் கிளம்பினால்..அவர்கள் மனதில் கீறல் ஏற்படும்..அதைத் தவிர்க்கலாம்..

6)நாம் ஒரு யூத் பதிவர் என்பது ஊரறிந்த ரகசியம்..நம்மை யாரேனும் வயதான, மூத்த பதிவர் புகைப்படம் எடுத்து..தன் பதிவில் நமக்கு விளம்பரம் கொடுத்து விட்டால்...அவர்களுக்கு நம்மால் வீண் வேலை

7)நாம் யாரேனும் பேசுகையில் மௌனியாய் இருக்க வேண்டும்..அப்படியில்லா விட்டால்..'சைலன்ஸ் பேசறாங்க இல்ல..' என்று வாத்தியார் தோரணையில் யாரேனும் குரல் கொடுப்பார்களோ என்ற பயம்..

8)ராமு..சோமு என இயக்குநர்கள் யாரேனும் வந்திருந்து..சந்திப்பு அவர்கள் எடுத்த படங்கள் பற்றி இருந்து விட்டால்...என்ன செய்வது.

9)சந்திப்பிற்கு முன் நம் பெயர், விலாசம் என..கேட்டு வாங்கும் போது..அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் கடற்கரைக்கு வரும் கூட்டம் நம்மை ஒரு தீவிரவாதி என எண்ணிவிட்டால் என்ன செய்வது?

10)வலைப்பதிவர் குழுமத்தில் இனி பதிவர் சந்திப்பு நடத்த அனுமதி வாங்க வேண்டுமா? இவர்கள் வாங்கி இருக்கிறார்களா?

மேற்குறிப்பிட்ட காரணங்களால் நான் கலந்துக் கொள்ளவில்லை.


ஹி..ஹி..ஹி...உண்மைக் காரணம்..அன்று எனக்கு வேறு வேலை இருந்தது.உண்மையில்.பால பாரதியையும் மற்ற நண்பர்களையும் பார்க்க முடியாதது வருத்தமே!

யாரேனும்..இன்னொரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா..

Saturday, April 10, 2010

நான் நீயாக ஆசை ..





நீ யாராக ஆசை

நானே கேட்டுக் கொண்டேன்

யோசித்தேன்

உன்னைக் காணும்வரை

கண்டதும்

மனதில் துயரம் ஏற்படினும்

உன் தியாகம் கண்டு

மலைத்தேன்

மகிழ்ந்தேன்

வியந்தேன்

உடன் தீர்மானித்தேன்

நான் நீயாக வேண்டும்

Friday, April 9, 2010

சாகுந்தலம்..(நாட்டிய நாடகம்) - 4




முந்தைய பதிவு
காட்சி-6

(துஷ்யந்தனை நினைத்துக் கொண்டு சகுந்தலை இருக்க துர்வாசர் வருதல்)

காலம் ஓடியது

மன்னன் திரும்பவும் இல்லை

அழைத்திடவுமில்லை

அவன் நினைவால்

பசலை நோய் தாக்க..

தாமரைத் தடாகத்திலே

நீரின் நிழலில் தன்

உரு பார்த்திருந்தாள்

அவன் தன்னை அன்று

வான் நிலவோடு ஒப்பிட்டது

எண்ணினாள்..- அப்போது

துர்வாச முனிவனும் வந்தானே

சகுந்தலையோ நிலவை நோக்கி

இன்று அவன் உடன் இல்லை

நிலவே நீயேனும் என்னிடம் பேசு

கண்ணில் நான் தேக்கி வைத்துள்ள

காதல் அம்புகளை

அவன் மேல் தைக்க வேண்டும்

நிலவே நீயேனும் என்னிடம் பேசு

என் தனிமை போக்கு

மங்கை என் மனத்தை

அவனிடம் ஒப்படைத்ததையும்

இதயத்தால் மட்டுமின்றி

உடலால் இணைந்ததையும்

நீ அறிவாயே வெண்ணிலவே

அவனிடம் சென்று சொல்

வட்ட நிலவே

எட்டி நின்றாகிலும்

என்னிடம் பேசு..

கன்னி மனம்

காதல் பருவம்

காந்தர்வ மணம் புரிந்தோம்

அவரே உயிராக

உறவு கொண்டேன்

வண்ணநிலவே அவரில்லை இன்று

நீயாவது என்னுடன் பேசு இன்று

நெஞ்சு கனக்குது

நினைவுகள் சுமையானது

இப்போது நான் இளைப்பாற

அவனது தோள்கள் வேண்டும்

பால் நிலவே..பேச அவனில்லை

நீயேனும் பேசு

கனவிலும் எனை மறவேன்

என்றவன் காலம் பல கடந்தும்

காணவில்லை

கருவிலே வளரும் மகவு

நாளை தந்தை யாரெனில்

யாது உரைப்பேன்..

நீயேனும் எனக்குச் சொல்

பால் நிலவே

(வந்த துர்வாச முனி கோபம் கொண்டு

உரைக்கிறார்)

பெண்ணே..

துர்வாசர்..நான் வந்து


நேரம் பல கடந்தும்

உன் மனதில் இருப்பவனையே

எண்ணீக் கொண்டிருக்கும் நீ

யார் நினைவில் உள்ளாயோ

அவன் உனை மறப்பான்

விருட்டென தன் நிலை உணர்ந்த

பேதை உரைக்கின்றாள்

ஐயா...எனை மன்னியும்

விருந்தினராய் வந்த

உம்மை நான் மதிக்கிறேன்

நான் வேறு எண்ணத்தில் இருந்ததென் தவறே

பிள்ளைகள் தவறு செய்யின்

பொறுத்தல்

பெரியோர் கடனன்றோ

என் வாழ்வே

பாழாகும் தண்டனை தரலாமோ

ஐயனே..என்னை மன்னியும்

என்றவாறே துர்வாசர் பாதம் பணிய

பெண்ணே..

துர்வாசனின் கோபம் நாடே அறியும்

இட்ட சாபம் இட்டதே

அதற்கான விமோசனம்

உன் மனதில் உள்ளவன்

உன்னிடம் கொடுத்த பொருள் ஒன்றை

மீண்டும் பார்ப்பானாயின்

உன் நினைவு திரும்பி பெறுவான்

அதுநாள் வரை

நீ துன்பம் அடைவாய்

அதுதான் விதி

என்றிட்டான்

(தொடரும்)

Thursday, April 8, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(9-4-10)

பிறர் உழைப்பில் வாழ்வது மனித இனம் ஒன்றே..உதாரணத்திற்கு...தேன்கூடு..தேனீக்கள் பாடுபட்டு உழைத்துக் கட்டுவது..தேனீக்கள் துளித்துளியாக தேனை சேகரித்துக் கொண்டு வந்து கூட்டில் சேர்க்கிறது.தேன்கூட்டை மனிதன் தன் சுயநலத்திற்காக..தான் சுவைக்க கலைக்கிறான்..அதன் உழைப்பை அபகரிக்கிறான்.

2)இந்த வார விகடனில் மிஸ்டர் ஐ.க்யூ., பகுதியில் வந்திருந்த இந்த புதிர் எனக்குப் பிடித்திருந்தது..எழுதியவர் சென்னை 24 லிருந்து ஜெ.விஜய பார்வதி
'கணேஷ் கலந்துக் கொள்ளும் நேர்முகத் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுகிறது.தேர்வு அதிகாரி 'காஃபி சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்டு இரண்டு காஃபி கொண்டு வரச் சொல்கிறார்.அதிகாரி காஃபியைச் சுவைத்த படியே 'வாட் ஈஸ் பிஃபோர் யூ?' என்று கேட்க..கணேஷ் 'டீ' என பதிலளிக்கிறான்.சரியான விடைச் சொன்ன கணேஷ் தேர்ந்தெடுக்கப் படுகிறான்.."

3)அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆண்டு சம்பளம் 1.8 கோடி(இந்திய ரூபாயில்)..தவிர அலவன்ஸ்கள் 22.5 லட்சம்., பதவிக் காலம் கழிந்ததும் அவருக்கு அளிக்கப்போகும் பென்ஷன் ஆண்டுக்கு 90 லட்சம்

4)பந்தா என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடியவர் கர்ம வீரர் காமராஜர்.அவர் முதல்வராய் இருந்த போது அவருக்கான பாதுகாப்பு கார்கள் 'சைரனு'டன் புறப்பட்ட போது 'நான் உயிரோடுதானே இருக்கேன்..அதுக்குள்ளே ஏன் சங்கு ஊதறீங்க ' என்றாராம்

5)பண பலம்,அதிகார பலம்,அடியாள் பலம் வைத்து 13 கட்சிகளுடன் கூட்டணி வைத்து சுமார் 70 கோடி செலவு செய்து பென்னகரத்தில் தி.மு.க., வெற்றி பெற்றது..அது வாங்கிய வாக்குகள் 77 ஆயிரம்..ஆனால் பா.ம.க., வோ அதில் 10 சதவிகிதம் கூட செலவு செய்யாது 41 ஆயிரம் வாக்குகள் பெற்றது..என்று ஒரு பேட்டியில் அன்புமணி கூறியுள்ளார்..அவரே கிட்டத்தட்ட 7 கோடிகள் பா.ம.க., செலவு செய்தது என பொருள்படும்படிக் கூறியுள்ளார்.ஒரு தொகுதியில் தேர்தலுக்கு 7 கோடி செலவு செய்யலாமா? தேர்தல் ஆணையம் என்ன கூறுகிறது?

6) கொசுறு..ஒரு ஜோக்

சபாநாயர் பொண்ணு கல்யாணம்னு சொன்னாங்களே எப்போ?
அவர் அதற்கான தேதியை மறு தேதிக் கூறாமல் ஒத்தி வைச்சுட்டார்

(புதிருக்கான விடை- தன் முன் இருப்பது காஃபி என கணேஷிற்குத் தெரியும்..ஆனால் அதிகாரி அதைக் கேட்கவில்லை..என்றும்..தனக்கான அடுத்தக் கேள்வியே..'வாட் ஈஸ் பிஃபோர் யூ' என்றும் உணர்ந்து 'டீ' என பதிலளித்தான் கணேஷ். யூ என்னும் ஆங்கில எழுத்திற்கு முன் எழுத்து 'T' தானே)

Wednesday, April 7, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 15

பணம் வாழ்வில் முக்கியமில்லை குணம் தான் முக்கியம் என்றெல்லாம் நாம் சொன்னாலும்..நம்மிடம் செல்வம் இல்லையெனில் மற்றவர்களால் சற்று இகழ்ச்சியுடனேயே பார்க்கப் படுகிறோம் என்பதே நடைமுறை உண்மை.

செல்வத்தின் சிறப்பை நன்கு உணர்ந்தவர் திருவள்ளுவர்..அருளும் பொருளும் மனிதனின் இன்றியமையாதத் தேவைகள்.ஆயின்..இவை இரண்டிடிலும் பொருளின் அவசியத்தை மறக்கமுடியாது...மறுக்கவும் முடியாது..பொருளில்லாமல் இவ்வுலகில் இன்பமாக வாழ முடியாது என்பது உண்மை..ஆனால் வள்ளுவனோ..மேலும் ஒரு படி அதிகம் சென்று..

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு - என்கிறார்

பொருளின் பெருமை இது..அருள் என்பது அன்பின் வழித்தோன்றலாகும்..தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் பற்று அன்பு எனப்படும்..தொடர்பில்லாதவரிடம் கொள்ளும் பற்று அருள் ஆகும்.இவை இரண்டும் உலக மாந்தர்க்கு வேண்டிய பண்புகள்..ஆனால் அன்பும்..அருளும் உடையவரிடத்து பொருள் இல்லையேல் என்ன பயன்?

அதே போல் பொருளுடையவரிடம், அன்பும்..அருளும் இருப்பின் அது சுற்றத்தாருக்கும்...பிறருக்கும் பயன்படும்..

பொருளின் சிறப்பை மற்றுமொரு இடத்தில் சொல்கிறார்....

அன்பு என்பது ஒரு நல்ல தாயைப் போல..அந்தத் தாயின் குழந்தையே அருள் ..அந்த அருள் குழந்தையை வளர்க்க ஒரு செவிலித்தாய் வேண்டும்..அவள் வறுமை மிக்கவளாய் இருந்தால்..குழந்தை எப்படி நன்கு வளரும்..ஆகவே அப்படிப்பட்ட செவிலித்தாய் செல்வம் மிக்கவளாய் இருக்க வேண்டும்..

அன்பு என்னும் தாய்ப் பெற்ற அருள் என்னும் குழந்தை வளர பொருள் என்னும் செவிலித்தாய் வேண்டும்.. அப்போதுதான் அது ஓங்கி வளர்ந்து புகழ்ப் பெற்று வாழும்..இந்த உலக வாழ்க்கையின் உண்மையையே

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

என்கிறார் வள்ளுவர்.

Tuesday, April 6, 2010

விவசாயியும்..தண்ணீர் பிரச்னையும்


சில ஆண்டுகளுக்கு முன்..ஊர் பக்கம் சென்று திரும்புகையில்..தாம்பரம் வந்தாலும் சென்னைக்குள் வந்தது போல இருக்காது..இன்னும் ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டுமே என்றிருக்கும்..மாம்பலம் வந்தால்தான்..'அப்பாடா வண்டி சென்னை வந்துவிட்டது' என்ற எண்ணம் ஏற்படும்.

ஆனால்..இப்போதோ...செங்கல்பட்டு வந்தாலே சென்னை வந்தார் போல் தோற்றம்..பச்சை பட்டாடை உடுத்தி..வளர்ந்துவிட்ட பருவப் பெண்ணைப்போல தலை வணங்கி..காற்றின் ஓசையில் கல கல என சிரிப்பதுபோல் நெற்பயிர்கள்..ரயில் ஓடும் பாதையின் இரு பக்கங்களிலும் தோற்றம் அளித்தக் காலம் போய் விட்டது..இந்தப் பக்கமும் ஸ்ரீபெரும்புதூர் வரை இதே நிலை.

சென்னை தான் இப்படி வளர்ந்து விட்டது என்றால்..ஊர் பக்கங்களும் அப்படித்தான்.உதாரணத்திற்கு..முன்பெல்லாம்..திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் வரை தான் கட்டிடங்கள்..பின்னர் நெல்வயல்கள் தான்..ஆனால் இன்று சமயபுரம் வரை கான்கிரீட் கட்டிடங்கள்..பசும் வயல்களை விழுங்கி விட்டன..கிட்டத்தட்ட எல்லா இடங்களுமே இப்படி ஆகி விட்டன..அது போதாது என..தென் தமிழகத்தில் நாம் பயணிக்கும் போது..ஆங்காங்கே..பல ஏக்கர் நெல்வயல்கள்..அரசியல்வாதிகளால்..பொறியியற் கல்லூரிகளாய் ஆகிவிட்டதையும் பார்க்க முடிகிறது.சுவரிருந்தாலே சித்திரம் எழுத முடியும் என்னும் நிலையை மறந்து விட்டோம்.

உலகம் சுருங்கிவிட்டது என்றெல்லாம் சொன்னாலும்..நகரங்கள் பெருகிவிட்டன..என்பதே நிதர்சனம்.

இது போன்ற நிலை ஏற்படும்போது..ஏன்..உணவுப்பிரச்னை..விலைவாசி ஏற்றம்..தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது..

விவசாயி தான் மக்களின் பசி தீர்ப்பவன்..மக்களின் வயிறு நிரம்பணும்னு..அவன் வெயிலில் உடலை வருத்திக் கொள்கிறான்..ஆனால் அரசு அந்த விவசாயியின் வயிறு நிரம்புவதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை.அவனை நல்லபடியாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதே உண்மை..ஒவ்வொரு வருடமும் அவன் உழைப்பால்..அவன் வியர்வையால் உருவான நெல்முத்துக்களுக்கு அவனால் விலை நிர்ணயிக்க முடிவதில்லை..அரசே..கட்டுப்படியாகாத ஒரு விலையை நிர்ணயிக்கிறது.

விலைவாசி உயர்வுக்கேற்ப..அகவிலைப்படியை ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தும் அரசு..விவசாயியின் அகத்தைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை.

தண்ணீர் பிரச்னையை எடுத்துக் கொண்டால்...ஒரு தொலை நோக்குப் பார்வையில்லை..ஆற்றுப்படுகை நிலத்தடி நீரையும்..ஆழ்துளை கிணறு தோண்டி தண்ணீரை எடுத்து விட்டால்..கிராமங்களில் எந்த நாளிலுமே பயிரிட முடியாத நிலை ஏற்படும்.குடிக்கும் தண்ணீர் அடிப்படை உரிமை என்னும் நிலை மாறி..அடிப்படை தேவை என்னும் நிலைக்கு வந்து விட்டது..இனி வரும் நாட்களில் ..உலக அளவில் ஏற்படப் போகும் தண்ணீர் பஞ்சம்..மூன்றாம் உலகப் போரைக் கூட உண்டாக்கும் என ஆய்வறிக்கை ஒன்று சொல்கிறது..

இந்நிலையில் சமீபத்திய செய்தி ஒன்று..ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு..காவிரி ஆற்றுப் படுகையில் ராட்சசஷ கிணறுகள் தோண்டப்படும்..என்பது..

ஆனால்..உண்மையில் காவிரியில் அப்பகுதியில் கர்நாடகாவிலிருந்து வரும் நீரையே..தர்மபுரி மாவட்டங்களில் குடிநீராகக் கொடுப்பதே ஒகேனக்கல் திட்டம்..அதனால்தான் கர்நாடகா பிரச்னை எழுப்பியது..(நாம்..நம் பகுதியில் கிணறு நோண்டுவதற்கு அவர்கள் ஏன் தடை சொல்லப் போகிறார்கள்)

அரசு ..இந்நிலையில்..உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக..வயல்வெளிகள்..லேஅவுட் போடும் நிலங்களாக மாறுவதைத் தடை செய்ய வேண்டும்..நதிப்படுகைகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை நிறுத்த வேண்டும்..தண்ணீர் பிரச்னைக்கு மக்கள் ஒத்துழைப்போடு நிரந்தரத் தீர்வுக் காணவேண்டும்..

அதை விடுத்து..ஒரு தொலைநோக்குப் பார்வையின்றி..அவ்வப்போது ஏற்படும் நிலையை..அவ்வப்போது சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணுமேயாயின்..இனி வரும் நாட்களில் தாகத்தாலும்..வறுமையாலும் வாடப்போகும் மக்களை யாராலுமே காப்பாற்ற முடியாது

Monday, April 5, 2010

வாய் விட்டு சிரிங்க..

1) அந்த அலுவலகத்திலே..எல்லோரும் தலையை விரிச்சுப் போட்டுட்டு இருக்காங்களே...ஏன்?
அங்க லஞ்சம் கொடுத்தா தான் எதுவும் நடக்குமாம்..அதை 'சிம்பாலிக்' கா உணர்த்தறாங்களாம்..லஞ்சம் தலை விரிச்சு ஆடுதுன்னு

2)அம்மா...அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்
ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்..அதுதான்..

3)நாதஸ்வர வித்வான்- (சபா காரியதரிசியிடம்)அடடா...நீங்க சொல்ற தேதிக்கு நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே
சபா காரியதரிசி-ஒத்து வரலேன்னா..பரவாயில்லை..நீங்க வந்தா போதும்

4)என் மனைவிக்கு 'வீசிங்' ப்ராப்ளம் டாக்டர்
அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க
பாத்திரங்களை 'வீசி' எறியறாளே என் மேல

5)நம்ம தலைவருக்கு ஆஸ்பத்திரியில உடனடியா ரத்தம் கொடுக்கணும்னு..சொல்றாங்க..ஆனா அவர் குரூப் ரத்தம் கிடைக்கலை
அவர் ரத்தம் என்ன குரூப்
ஊழல் குரூப்பாம்

6)அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற
ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!

Sunday, April 4, 2010

வள்ளுவனும்..இன்பத்துப்பாலும்..- 4

வள்ளுவனும்..கண்ணழகும் என்று மூன்று இடுகைகள் எழுதியதும்..அதைவிட இத் தலைப்புப் பொருத்தம் என்பதால்.தலைப்பை மாற்றியுள்ளேன்

மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பவள் பெண் என்கிறார் வள்ளுவர்..

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள

வளையல் அணிந்த வடிவழகியிடம் கண்டு மகிழவும், கேட்டு மகிழவும்,தொட்டு மகிழவும்,முகர்ந்துண்டு மகிழவும் ஆன ஐம்புலன்களுக்குமான அழகு நிறைந்துள்ளது.

ஒருவருக்கு ஏதேனும் நோய் வருமேயாயின்..மருத்துவரிடம் செல்வார்..அவர் நோய் தீர மருந்துகள் தருவார்..ஆனால் ஒருவன் காதல் வயப்பட்டு காதல் நோயால் வருந்துவானாயின்..அந்த நோயை எந்த மருத்துவராலும் தீர்க்கமுடியாதாம்.அந்நோய் உண்டாக என்ன காரணமோ..அந்தக் காரணமேதான் நோயையும் தீர்த்து வைக்குமாம்.அந்தக் காரணம்..அந்நோய் தீர்க்கும் மருந்து.. அவனது காதலியேயாம்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து

நோய்களைத் தீர்க்க பல மருந்துகள் உள்ளன..ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்

இந்திரலோகம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்..ரம்பை,ஊர்வசி,மேனகை போன்ற பேரழகிகள் அங்கு உள்ளதாகக் கதை உண்டு.ஆனால்..அப்படிப்பட்ட பேரழகிகள் நிறைந்த இடத்தை
விட அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில் கொள்வது..இனிமையானதாம்.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

தாமரைக்கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அது என்ன..அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல ..அவ்வளவு இனிமையானதா..?

நெருப்பை நாம் நெருங்கினால் சுடும்..அதை விட்டு நகர்ந்தால் சூடு தெரியாது..ஆனால் காதலியோ அதற்கு நேர் எதிர்மாறானவளாம்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்காள் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக்கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்..என்கிறார்.

ஒரு பொருளை நாம் விரும்புகிறோம்..அந்தப் பொருள் நாம் விரும்பும்போதெல்லாம் நமக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷப்படுவோம்..அதுபோன்ற இன்பத்தை..ஒவ்வொருமுறை காதலியின் தோள்களில் சாயும்போதும் உணரலாமாம்.இதையே...

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்

என்கிறார்...

விருப்பமான பொருள் ஒன்று..விரும்பிய பொழுதெல்லாம்..நம்மிடம் வந்து நமக்கு இன்பம் அளித்தால் எப்படியிருக்குமோ ..அதுபோன்று..பூ முடித்த காதலியின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.


(தொடரும்)

Saturday, April 3, 2010

அழகிரி தி.மு.க., தலைவர்...?

எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., அவர் இருந்தவரை..ஒரு அசைக்க முடியாத சக்தியாய் இருந்தது..

படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்..என்று சொன்ன கர்மவீரரைக் கூடத் தோற்கடித்த மக்கள்...படுக்கையில் கிடந்த...தொகுதிப் பக்கம் பிரசாரத்திற்கு ஒரு முறைக் கூட வராத இருந்த புரட்சித் தலைவரை வெற்றி பெறச் செய்தனர்..ஏனெனில்..அவரிடம் அகங்காரமோ..தலைக்கனமோ..அளவிற்கு அதிகமான தன்னம்பிக்கையோ இருந்ததில்லை.

அப்படி அவரால் கட்டிக் காக்கப்பட்ட கழகம்..அவர் மறைவிற்குப் பின் உடைந்தது..இரு அணிகளாகப் பிரிந்தது.எம்.ஜி.ஆர்., மனைவியின் பெயரில் ஒரு அணியும்..ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு அணியும் உருவானது.. ஒற்றுமையின்மையாலும்..பதவி ஆசையாலும் பிரிந்த இக்கழகத்தை...புரட்சித்தலைவரால் தொடங்கப்பட்டிருந்தாலும்..அதை எண்ணாது மக்கள் புறக்கணித்தனர்.

மீண்டும்..அது ஒன்றிணைந்ததுமே..மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.

இது..மக்கள் மதிப்பு வைத்தவரால் ஆரம்பிக்கப்பட்ட தாயினும்..ஒற்றுமையில்லையேல் தூக்கி எறியப்படுவர் என்பதை உணர்த்தியது.

இந்த இடுகையை ஏன் இப்போது இடுகிறேன் என்பதற்கான முக்கியக் காரணம் உள்ளது.

சில கருத்து வேறுபாடுகளால்..தி.க., விலிருந்து வெளியேறி தி.மு.க., வை அண்ணா..தன் ஆதரவாளர்களுடன் ஆரம்பித்த போது..அது ஆலமரமாய் தழைத்து..தமிழக அரசியலில் பெரும் இடத்தைப் பிடிக்கும் என்று கூட அரசியல் புரிந்தோர் ஆருடம் கூறியிருக்க முடியாது.

தி.மு.க., பதவிக்கு வந்து..பின் அண்ணா மறைவிற்குப் பின் முதல் கட்டத் தலைவர்களிடையே..சிற்சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்..அவர்கள் ஒற்றுமையாய் இருந்ததால்தான்..கலைஞரால் கழகத்தை கட்டிக்காக்க முடிந்தது.எம்.ஜி.ஆர்., வெளியேற்றத்தை மக்கள் விரும்பாததால்...தி.மு.க., ஆட்சி சில காலம் தமிழகத்தில் இல்லாமல் போனது.அவர் மறைவிற்கு பின்..நான் மேலே கூறிய படிக்கு அ.தி.மு.க., உடைய கலைஞர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

ஆமாம்..இதெல்லாம்..தெரிந்த விஷயம்தானே..இப்போது என்ன என்கிறீர்களா?

தி.மு.க., இப்போது அப்படிப்பட்ட நிலையில் உள்ளது..சமீபத்தில் அழகிரி பத்திரைகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில்..'கலைஞரை மட்டுமே தன்னால் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும் 'என்றும்..கழகத் தலைவர் பதவிக்கு போட்டி வந்தால்..தேர்தலில் நின்று வெல்வேன் என்றும் கூறியுள்ளார்.

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..நம்மில்.ஒற்றுமை நீங்கின்...'

மீனுக்காக காத்திருக்கும் கொக்குகள் நம்மை விழுங்க காத்துக் கொண்டிருக்கின்றன..

தி.மு.க., மேல் மட்டக் குழு..இப் பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்...

இன்னும் தேர்தல் வர ஒரு வருடமே உள்ள நிலையிலும்..ராகுல் சமீபத்தில்..'அ.தி.மு.க., உடன் கூட்டா' என்ற கேள்விக்கு..வெறும் சிரிப்பை பதிலாகக் கொடுத்ததையெல்லாம் பார்த்து..சிந்தித்து..அனுபவசாலி கலைஞர் உடனே செயல்படுவார் என்றே தோன்றுகிறது.

(அழகிரி..தி.மு.க., தலைவராகவும்..ஸ்டாலின்..முதல்வராகவும்..கனிமொழி மத்திய அமைச்சராகவும் ஆக வாய்ப்பு உள்ளதாக பட்சி சொல்கிறது)

Friday, April 2, 2010

சாகுந்தலம் ..(நாட்டிய நாடகம் )- 3



முந்தைய பகுதி

காட்சி - 4

(துஷ்யந்தன்..சகுந்தலை கூடல்)

தெற்கு வாசல்

தென்னம் ஓலை குடில்

தென்றல் காற்று

குளிர்கால இரவு

வெளியிலோ பனிப் பொழிவு

இரு நிலவுகள்

வானில் ஒன்று

மன்னன் அருகில் ஒன்று

பொட்டு வைத்த முகம்

அள்ளி முடிந்த கூந்தல்

அள்ளும் பூ வாசம்

படிக்காமலே புரியும்

மன்மதக்கலை

அவளைப் படிக்கப் படிக்க

அவனுக்குப் புரிந்தது

அறுபத்தினாலு கலை

சிக்கிமுக்கி கற்களாய்

உடல்கள் உரச

பற்றிக்கொண்டது நெருப்பு


காட்சி-5

(துஷ்யந்தன் நாட்டிற்குத் திரும்புதல்)

றெக்கைக் கட்டி பறந்தது காலம்

தினம் தினம் புது அத்தியாயம்

மன்னனுக்கு நாட்டிலிருந்து அழைப்பு வர

'சகுந்தலை' என விளித்து

அரசரில்லாது நாடு தவிக்கிறதாம்

அமைச்சர்களால் முடிவேதும்

எடுக்க முடியவில்லையாம்

நான் உடன் தலைநகர் சென்றிடவேண்டும்

என்றிட்டான் மன்னன்

பெண்ணே...என் கண்ணே

இன்று உனை நான் பிரிகிறேன்

சென்று..சில நாட்களில் உனை

எந்நாட்டு அரசியாய் அழைத்திடுவேன்

அதுவரை பொறுமகளே என்றிட்டான்

பிரிவு அன்பை வளர்க்கும்

பிரியமுடன் கூறியதைக் கேட்ட பேதை

எதிர்காலக் கனவுகளில் மூழ்கி

கண்கள் தாரையாய் நீர் சொரிய

பிரியா விடை அளித்தாள் பிரியமானவனுக்கு

(தொடரும்)

Thursday, April 1, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(2-4-10)

நாடு முழுதும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வி அளிக்கும் சட்டம் அமுலுக்கு வந்துவிட்டது.படிக்காத இந்த வயதுக் குழந்தைகள் எல்லாம் கண்டறியப் பட்டு..தேவையான பயிற்சி அளிக்கப் பட்டு அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கப் படுவார்கள்.இதனால் விரைவில் கல்வி அறிவு நிறைந்த சமுதாயம் ஏற்பட வழி ஏற்படும்.

2)முன்பெல்லாம் ஒருவரிடம் இருந்து ரத்தம் பெற்றால் ஒருத்தருக்கு மட்டுமே பயன்படும்..ஆனால் இப்போதெல்லாம் ஒருவரிடமிருந்து எடுக்கப் படும் ரத்தத்தை..நான்கு பேருக்குக் கொடுக்கலாமாம்.,ரத்தத்தை நான்காகப் பிரித்து..'சிவப்பு அணுக்கள்' அனீமியா உள்ளவர்களுக்கும்..'பிளேட்லெட்ஸ்' எனப்படும் தட்டணுக்கள் புற்றுநோய் நோயாளிகளுக்கும்..தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு நினநீர் (பிளாஸ்மா) தரப்படுகிறது.க்ரையோபிரசிபிடேட்..ரத்தம் உறையாத..ரத்த போக்கு உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது

3)இந்தியாவில் விற்கப்படும் செல்ஃபோன்களில் 80 சதவிகிதம் சென்னையில் தயாரிக்கப் படுகிறது.வாகனங்களில் 30 சதவிகிதம் தமிழகத்தில் தயாராகிறது.தோல் பொருள்கள் 45 சதவிகிதமும்..ஜவுளி உற்பத்தி 50 சதவிகிதமும் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

4)எந்த ஒரு பொருளை நாம் துரத்திச் சென்றாலும்..அது நம்மை விட்டு ஓடிப் போகும்..அப்படித் துரத்துவதை நிறுத்தினால் அந்தப் பொருள் தானே நம்மைத் தேடி வரும்

5)கடந்த பத்து நாட்களாக பதிவர்களிடையே புரிதல் இல்லை என்பதை பல இடுகைகள் காட்டுகின்றன..எழுதுவதும்..பேசுவதும்..அடிப்படை உரிமை என எண்ணுபவர்கள்..அதே உரிமை அடுத்தவர்களுக்கும் உள்ளது என்பதை ஏன் புரிந்துக் கொள்வதில்லை என்று தெரியவில்லை

6)விலங்குகளுக்கு ஐந்து அறிவு..மனிதனுக்கு ஆறு அறிவு..என்று சொல்கிறோம்..ஆறறிவு என்றால் என்ன என்று பார்த்தோமானால்..உடல்,நாக்கு,மூக்கு,கண்.காது, இதயம் ஆகியவற்றால் அறிவதே ஆறறிவு

7)உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
இக்குறள் சொல்வது போல நடந்துக் கொண்டு கற்றுக் கொள்ள இனி தீர்மானித்துள்ளேன்..

8)எல்லாம் தெரியும்

என்றிருந்தேன்

எல்லாம் தெரிந்தவர்களை

எள்ளி நகைக்கும் போது

எதுவுமே தெரியாதவன்

என்றுணர்ந்தேன்

எல்லாம் தெரிந்தவர்

எதுவும் தெரியாதவராய்

வாளாயிருந்த போது


9) கொசுறு..ஒரு ஜோக்

ஆசிரியர்- (மாணவனிடம்) உங்கப்பாவிற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து..மாதம் நூறு ரூபாயாக திருப்பித் தரச் சொன்னேன்..ஆறு மாதங்கள் கழித்து..உங்கப்பா எனக்கு எவ்வளவு மீதம் கடன் தர வேண்டியிருக்கும்?

மாணவன்- ஆயிரம் ரூபாய் சார்

ஆசிரியர்- உனக்கு இந்த சின்னக் கணக்குக் கூடத் தெரியவில்லையே

மாணவன்- உங்களுக்குத்தான் எங்கப்பாவைப் பற்றித் தெரியலே