Saturday, January 12, 2013

எனக்கு பொங்கல் பிடிக்கும்..



பச்சரிசி,பாசிப்பருப்பு சரியான விகிதத்தில் கலந்து உப்பிட்டு,நெய்யில் முந்திரி,மிளகு, சீரகம் வறுத்துப் போட்ட பொங்கல் எனக்குப் பிடிக்கும் என்பதால் இத் தலைப்பிடவில்லை.

எனக்குப் பிடித்தப் பண்டிகை 'பொங்கல்' என்பதால் இடுகைக்கு இப்பெயர்.

நம் பண்டிகைகள் பல..கடவுள்கள் அவதரித்த தினமென்றும்,அரக்கர்களை அழித்த தினம் என்றும்..இதிகாசம், புராணங்களை மேற்கொள்காட்டி..கொண்டாடப்படுபவை.இவற்றில் மெய்யைக் காட்டிலும்..கற்பனைகளே அதிகம்.

சிலமிகைப்படுத்திச் சொல்லப்படுபவை. (அதனால் என்ன..நடிப்பு, அரசியல் எல்லாவற்றிலும் ஒரு இந்தியனுக்கு மிகைப்படுத்துதலே பிடித்திருக்கிறது..என்பது வேறு விஷயம்)

சரி..தலைப்புக்கு வருகிறேன்..

பொங்கல்..முதலில் தமிழ்ப் பெயர்..அதனால் பிடிக்கும்.

தமிழர் திருநாள் என்பதால் பிடிக்கும்

சாதி, மத பேதமின்றி அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடும் பண்டிகை என்பதால் பிடிக்கும்.

இயற்கை நாம் உயிர் வாழ..நெல்,கரும்பு,பருப்பு.இஞ்சி,மஞ்சள் என ஏராளமாய் படைத்துள்ளது.இது பஞ்சபூதங்கள் என்னும் இயற்கையின் அன்பளிப்பு மனிதர்களுக்கு.அந்த இயற்கையை வழிபடும் நாள் இது என்பதால் பிடிக்கும்

இயற்கைதான் கடவுள் என தெள்ளத் தெளிவாய் விளக்கும் பண்டிகை என்பதால் பிடிக்கும்

இயற்கையின் படைப்பான வயலில் ..நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி..மண்ணிலே நெல் முத்தை விளைவிக்கும் அந்த உழைப்பாளி உழவரின் திருநாள் என்பதால் பிடிக்கும்.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது.எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

இந்நாளில் விவசாயியின் வாழ்வு செழிக்க பிரார்த்திப்போம்..

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

No comments: