Sunday, April 28, 2013

பாவேந்தர் பாரதிதாசன் 123 ஆவது பிறந்த நாள்





அண்ணாவால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்ட பாரதிதாசனின்  பிறந்தநாள் விழா இன்று.

பாரதிதாசனின்..புகழ் பெற்ற நம்மால் மறக்க முடியா வரிகள்..

'புதியதோர் உலகம் செய்வோம்..கெட்ட
போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்'

மற்றும்..

தமிழுக்கு அமுதென்று பெயர்-அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்'

'சங்கே முழங்கு' என்ற பாடலும் திரைப்படத்திலும் பாடப்பட்டு புகழ் பெற்றது..

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? என்ற பாடலும் பிரசித்தம்.

உவமைகள் சொல்வதில் மன்னர் இவர்.இவர் தன் படைப்புகளில் 900 க்கும் மேற்பட்ட உவமைகளை சொல்லியிருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

உவமை என்பதை ஆங்கிலத்தில் simile என்பர்.உவமை என்பது தெரிவிக்க விரும்பும் பொருளைத்..தெரிந்த பழைய பொருளோடு ஒப்பிட்டுச் சொல்வதே யாகும்..

உதாரணமாக..பாரதிதாசன் மணல் மேட்டை உவமைப்படுத்தும் போது..அந்த மணலின் மென்மைத் தன்மையை..'கீரியின் உடல் வண்ணம் போல்..மணல் மெத்தை' எம்கிறார்.

கணவனும், மனைவியும் தேனும்..வண்டும் போல இருக்க வேண்டுமாம்..அப்படிப்பட்ட இல்லறமே சிறக்குமாம்.

அதேபோல கல்வி இல்லா பெண்களை களர் நிலத்திற்கு ஒப்பிடுகிறார்..

கல்வியில்லாத பெண்கள்
களர் நிலம்!.அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்..நல்ல
புதல்வர்கள் விளைவதில்லை
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி

என்கிறார்.

குழந்தையைப் பற்றிக் கூறுகையில்..

பெற்ற தாயின் மடியின் மீது யாழ் கிடப்பது போல பிள்ளை ..என்கிறார்..

குழந்தைகளின் வளரும் புருவத்தை

'எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்' என்கிறார்

எறும்புகள் செல்லும் வரிசையை புருவத்திற்கு ஒப்பிடுகிறார்.

எந்த ஒரு இலக்கியவாதியும்..உவமைகள் அற்ற இலக்கியத்தை படைக்க முடியாது..அதுபோல பாவேந்தரும் உவமைகளை விடவில்லை..

மேலே குறிப்பிட்டுள்ள சில உவமைகள் மாதிரிக்கே..இவை பாவேந்தரின்..'குடும்பவிளக்கு' காவியத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இவரது படைப்புகள் 1990 அரசுடமையாக்கப்பட்டன.
1970ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இவர்.

Sunday, April 21, 2013

நாடக விழாவில் எனது புதிய நாடகம்

                                         
                               


நாடக விழாவில் எனது புதிய நாடகம்


எனது 'சௌம்யா' குழு சார்பில், நான் எழுதி, இயக்கிய, "காத்தாடி" என்னும் நாடகம்..கார்த்தில் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடகவிழாவில், வருகின்ற வெள்ளிக்கிழமையன்று (26-4-13) சென்னை ஆள்வார்பேட்டை நாரத கான சபா அரங்கில் மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.அனுமதி இலவசம்.

பதிவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


Monday, April 15, 2013

தேமதுரக் குரலோன் P.B.S.,


ஏ.எம்.ராஜா..போன்றே..குரலையுடையவர் ஸ்ரீநிவாஸ்..கல்கண்டு போன்ற இனிமை.

ஆந்திராவில் காகிநாடாவில் 1930ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு தெலுங்கு,தமிழ்,மலையாளம்,ஹிந்தி,உருது,கன்னடா,சேன்ஸ்கிரிட் மற்றும் ஆங்கிலம் என்று எட்டு மொழிகள் தெரியும்.ஜாதகம் படம் மூலம் அறிமுகமானார் இவர்..பிரேமபாசம் படம்தான் இவரை அனைவருக்கும் வெளிக்காட்டியது.பாவமன்னிப்பு படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம் 'பாடல் இவருக்கு புகழை ஈட்டித்தர ஆரம்பித்தது.
இவர் குரல்..ஜெமினி,முத்துராமன்,பாலாஜி ஆகியோர்களுக்கு சரியாக இருந்தது.இவர் பாடி என் நினைவில் நிற்கும் சில பாடல்கள்.

ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்
என் அருகே நீ இருந்தால்-திருடாதே
பால் வண்ணம் பருவம் கண்டு-பாசம்
காற்று வெளியிடை கண்ணம்மா-கப்பலோட்டிய தமிழன்
இன்பம் பொங்கும் வெண்ணிலா-வீரபாண்டிய கட்டபொம்மன்
அழகிய மிதிலை நகரினிலே-அன்னை
ஆண்டொன்று போனால்-போலீஸ்காரன் மகள்
எந்த பருவத்து கேள்விக்கு - சுமைதாங்கி
ஒடிவது போல இடை இருக்கும்-இதயத்தில் நீ
மாம்பழத்து வண்டு-சுமைதாங்கி
யார்..யார்..அவள் யாரோ--பாசமலர்
அவள் பறந்து போனாளே-டி.எம்.எஸ்.உடன் சேர்ந்து பார் மகளே பார் படத்தில்
பொன் ஒன்று கண்டேன்-படித்தால் மட்டும் போதுமா
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்- ஊட்டி வரை உறவு
உங்க பொன்னான கைகள்-காதலிக்க நேரமில்லை
நிலவே என்னிடம் - ராமு
நேற்றுவரை நீ யாரோ-வாழ்க்கைப்படகு
அடுத்த வீட்டுப் பெண் படத்தில் 'கண்ணால பேசி பேசி' பாடலும், வாடாத புஷ்பமே பாடலும் கேட்கக் கேட்க திகட்டாதவை.

ஆமாம்..முக்கியமான ஒரு பாடலை விட்டுவிட்டேன் என்கிறீர்களா? இவர் பெயரைக் கேட்டதுமே வயது வித்தியாசம் இல்லாது அனைவரும் முணுமுணுக்கும் பாடல்...ஆம்..அதுதான்

சுமைதாங்கிக்காக இவர் பாடிய 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்'

சென்னை வுட்லண்ட்ஸ் டிரைவின் இருந்தவரை இவரை அங்கு பார்க்கலாம்..சட்டைப்பை நிறைய பேனாக்களுடன்..கையில் ஒரு டயரி வைத்துக் கொண்டு கவிதை எழுதிக் கொண்டிருப்பார்..இப்போது நாரத கான சபா வளாகத்தில் உள்ள வுட்லண்ட்ஸில் காணலாம்





(இது ஒரு மீள் பதிவு)

நேற்று அமரரான பி.பி.எஸ்.,ஸின் ஆத்மா சாந்தியடைய பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறேன்

Wednesday, April 10, 2013

சாவே உனக்கொரு சாவு வாராதா...




'காலா..உன்னை காலால் மிதிக்கிறேன் வாடா' என்றார் பாரதி.ஆனால்..காலன் வந்த போது அவனை அவரால் வெல்ல முடியவில்லை.

நேரு இறந்த போது, 'சாவே, உனக்கொரு சாவு வாராதா' என்றார் கண்ணதாசன்..

இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாலும், அந்த 'காலன்;' தன் கடமையை செய்துக் கொண்டுதான் இருக்கிறான்.

இதுதான் இயற்கை.'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது'.

இது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தாலும், நமக்கும், நமக்கு வேண்டியோருக்கும் இழப்பு ஏற்படுகையில்தான் நமக்கு அந்த இழப்பின் வலி தெரிகிறது.

என்ன ஒன்று...சில சமயங்களில் காலன் வயது வித்தியாசம் பார்ப்பதில்லையே என்ற ஆதங்கம்...புலம்புகிறோம்.

கடந்த இரண்டு மாதங்களாக மரணவலிப் பட்டுக்கொண்டிருந்த மணிஜியின் மனைவியின் மறைவு...அவரைப் பொறுத்தவரை விடுதலையானாலும், அவரை இழந்து வாடும் மணிஜிக்கும், அவரது மகள் நிலாவிற்கும் எப்படிப்பட்ட இழப்பு.

அவர்கள் இருவருக்கும்...இந்த துயரைத் தாங்கி..மீண்டும் எழ பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறேன்.

Friday, April 5, 2013

மணிஜியின் வாழ்க்கைத் துணைவிக்காக பிரார்த்தியுங்கள்..



பிரபல பதிவரும், நண்பரும் குறிப்பாக மனித நேயம் மிக்கவருமான மணிஜி யின் மனைவியார் வீட்டில் சமைக்கும்போது சிறு தீவிபத்தில் சிக்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அவரிடம் தொலைபேசியபோது...அவர் குரலில் காணப்பட்ட தெளிவு, என் மனதிற்கு சற்று நிம்மதி அளித்தது.

ஆனால்..நேற்று இரவு அவர் பிளஸ்ஸில் இப்படி செய்தி இட்டுள்ளார்..

"உடல்,மனது...இரண்டும் களைத்து விட்டது. மிகக் கடுமையான போராட்டம்.. பிரார்த்தனைகள் மட்டுமே ஏதேனும் அற்புதம் நிகழத்தலாம்.. பிரார்த்தியுங்கள் நண்பர்களே."

அவரது அலைபேசி ரிங் டோன் கூட..'குறையொன்றும் இல்லை' என்றே ஒலிக்கும்.

அவருக்குக் கண்டிப்பாக குறையேதும் ஏற்படாது என நம்புவோமாக..

மருத்துவர்களால் முடியாததையும்..கூட்டு பிரார்த்தனைகள் நிறைவேற்றியுள்ளதை...நாம் அறிவோம்...

ஆகவே..நண்பர்களே..நாம் அனைவரும் நாளை ஞாயிறு காலை 8 மணிக்கு அவரவர் இல்லத்திலோ..அல்லது கோவிலிலோ, சர்ச்சிலோ, மசூதியிலோ இருந்தவாறு பிரார்த்திப்போம்.

இறைநம்பிக்கை இல்லாதோர்..பிரபஞ்ச சக்தியை வேண்டுங்கள்..

நல்லதே நடக்கும்...நம்புவோம்..


Thursday, April 4, 2013

வாய் விட்டு சிரிங்க...





1) இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியா இருக்கிற நீங்க..அவங்களுக்கு ஏதேனும் சொல்ல ஆசைப்படுகிறீர்களா?
அவங்க விலாசங்களைத் தெரிவிச்சா..அவங்க கனவில நான் வர்ற நேரத்துக்கான என் கால்ஷீட் பணத்தை வாங்க சௌகரியா இருக்கும்

2)தலைவர் பேசும்போது.நடுவே..நடுவே..மீட்டர்..மீட்டர்னு சொல்றாரே ஏன்.
அவர் எதையும் அளந்து தான் பேசுவாராம்.

3)ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு கவர்னர்...இதே போல ஒரு வாக்கியம் சொல்..
ஆட்டுக்கு தாடி போல..ஆட்டோவிற்கு மீட்டர்

4) அந்த டாக்டர் முன்னால துணிக்கடை வச்சிருந்தார்னு எப்படி சொல்ற?
ஆடித் தள்ளுபடி..அறிவிச்சிருக்கார்..ஒவ்வொரு பேஷண்டும்..இன்னொரு பேஷண்டைக் கூட்டிக்கிட்டு வந்தா..ஒருத்தருக்கு வைத்தியம் இலவசமாம்

5)நம்ம பையன் எட்டணா காசை விழுங்கிட்டான்..
சரி..சரி..டாக்டர் கிட்ட ஐந்து ரூபா காயினை விழுங்கிட்டான்னு சொல்லு..எட்டணா ன்னா நம்மைப் பத்தி கேவலமா நினைப்பார்

6) சம்பந்தமில்லாமல் பெயரை வைச்சிருக்காங்க
எந்த படத்துக்கு சொல்றீங்க?
படத்துக்கு இல்ல....இவ்வளவு ஒல்லி ஊசிக்கு குண்டூசின்னு பெயர் வைச்சாங்களே அவங்களைச் சொல்றேன்



Wednesday, April 3, 2013

விருந்தும் ....மீனவனும்


           



ஐந்தாண்டு பதவி வேண்டி

ஐந்து நட்சத்திர ஓட்டலில்

பலவகை மீன்களுடன்

பலமான விருந்து

போதை ஏறியதும்

தட்டில்

தண்ணென கிடந்த

ஒவ்வொரு மீனும்

தமிழக மீனவனாகவும்

கொண்டு வந்த வெயிட்டர்

சிங்கள கடற்படையாயும்

கண்ணுக்குத் தெரிந்தது

தலைவனுக்கு

Monday, April 1, 2013

வள்ளுவனும் ..பைத்தியக்கார சிவராமனும்..




கே.என்.சிவராமன்....

இப்படிச் சொன்னால் வலையுலகில் பாதிப் பேருக்குத் தெரியாது.ஆனால்..பைத்தியக்காரன் என்றால்..உடனே அவரா..! என்பார்கள்.

தான் பெற்ற இன்பம்..பெருக இவ்வையகம்..என்று திகழ்பவர்.பல உலகப் படங்களை..கிழக்குப் பதிப்பக மாடியில் வலைப்பூவினருக்காக ஏற்பாடு செய்து..அவர்கள் ரசனையை வளர்த்தவர்.

டால்ஸ்டாயின்,அன்னாகரீனா படத்தை நீண்ட நாட்களாக நான் பார்க்க எண்ணியதுண்டு.அந்த ஆசையை தீர்த்துவைத்தவர் இவர்.

தவிர்த்து தினகரன் வெள்ளிமலரில்..உலகப் படங்கள் பற்றிய இவரது விமரிசனம் என்னைப் போன்ற பலரை அப் படங்களைத் தேடிப் பார்க்க வைத்தது.

வலைப்பூவினர் இடையே எழுத்துத் திறனை வெளிக் கொணர..ஜ்யோவ்ராமுடன் சேர்ந்து..சிறுகதைப் போட்டி வைத்து..இருபது பேருக்கு 1500 ரூபாய் பரிசு வழங்கியது...இவரது எழுத்து தாகத்தை வெளிப்படுத்தியது.

இதுவெல்லாம் கூட பரவாயில்லை...இவரின் அபாரத் திறமையுள்ளதை நிரூபித்து வருகிறது..'குங்குமம் இதழில் இவர் எழுதிவரும்,'கர்ணனின் கவசம்' என்னும் அமானுஷ்ய மர்மத் தொடர்.தயவு செய்து அதைப்படிக்காதவர்கள்.கடந்த நாலு இதழ்களை தேடி வாங்கி படிக்க ஆரம்பியுங்கள்.

ஆமாம்..இதற்கும் வள்ளுவனுக்கும் என்ன தொடர்பு....என்கிறீர்களா..

சொல்கிறேன்..

இனிய உலவாக இன்னாத கூறல்..இவரிடம் கிடையாது..இனிமையாகப் பேசக்கூடியவர்.ஒரு சமயம் இவர் மீது ஒருவர் அநாவசியமாக கெட்டப் பெயர் ஏற்படுத்த நினைத்தபோது...அமைதி காத்தவர்.வயதிற்கு மீறிய பொறுமை.

பெருக்கத்து வேண்டும் பணிவு ..என்பதற்கேற்ப..பணிவானவர்.என்னைக்கூடசிலரிடம் அறிமுகம் செய்தபோது..நான் பிரமாதமாக சாதித்து விட்டது போல..'பிரபல நாடக எழுத்தாளர்' என அறிமுகம் செய்தவர்.(அப்படியாவது நான் பிரபலம் ஆவேன் என அவர் எண்ணியிருக்கலாம்.ஆனால் அது நிராசையானதுதான் மிச்சம்??!!)

இப்படி இவரைப் பற்றி ..எழுதிக் கொண்டே போகலாம்..இவ்வளவிற்கும் என்னுடனான அவர் பழக்கம் சில காலமே.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிந்துள்ளோம் அவ்வளவே.

அமாம்..இவருக்கு பைத்தியக்காரன் என்ற பெயர் பொருத்தமா...

கண்டிப்பாக..

பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் என்பது சொலவடை..

ஆனால், இந்தப் பைத்தியக்காரன் பத்தும் அறிந்தவன்..

சிவராமனே...கர்ணணின் கவசம் படைப்பவனே..உனக்கு ஹேட்ஸ் ஆஃப்.