Wednesday, May 5, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 16


கணவன் பொருளீட்ட மனைவியைப் பிரிந்துச் செல்கிறான்..மனைவிக்கு கணவனின் பிரிவை தாங்க முடியவில்லை..தன் நிலை குறித்து கணவனுக்கு சேதி அனுப்ப வேண்டும்..அப்போதுதான் அவன் உடன் திரும்புவான்..என எண்ணுகிறாள்..

யாரைத் தூது அனுப்புவது...என்ற கேள்வி எழுகிறது?..யார் அந்தக் காரியத்தைத் திறம்படச் செய்வர் என அறியாது மனதில் குழப்பம்..

தன்னிடம் வேலை செய்யும் பெண்ணை அனுப்பலாமா..? வேண்டாம் அது நன்மை பயக்காது

தான் வளர்க்கும் கிளியைத் தூது அனுப்புவோமா? ஆனால்..அதுவும் தன் தூதுப் பணியை திறம்படச் செய்யாது..

தன் தோழியை அனுப்பலாம் என்றாலோ..அவள் சென்று திரும்ப நாளாகலாம்..உடன் செயல்பட முடியாது..

அவன் நினைவை நெஞ்சிலிருந்து அகற்றி..பசலை நோயிலிருந்து விடுபட்டு தெய்வ வழிபாட்டில் மனதை செலுத்தலாம் என்றாலும் அது தீதில் முடியலாம்..

சரி..இதற்கு என்ன தான் வழி...ஒரே வழி..

அவன் திரும்பும் வரை அவன் பெயரை எண்ணி..மகிழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும்..என எண்ணுகிறாள்..

இதைத்தான் காளமேகப் புலவரின் இப்பாடல் கூறுகிறது

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

(அடிமைப்பெண் மூலம் அனுப்பும் தூது நன்மை பயக்காது..கிளியோ தூதுப் பணியில் திறம்பட செயலாற்றாது.தோழியின் தூதோ நாளைக் கடத்தும்..ஆகவே பூந்தளிர் போன்ற தேமல்கள் என் மேல் படராது தெய்வத்தை வழிப்பட்டுத் தொடர்தலும் தீதாகும்..தித்திப்பாய் இனிக்கும் அவன் பெயரை ஒதிக் கொண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை)

கண்ணதாசன் தான் தயாரித்த வானம்பாடி படத்திலும்..நாயகன்..நாயகிக்கான பாட்டுப் போட்டியில் இப்பாடலை வைத்திருப்பார்.

காளமேகம் பற்றி சொல்லிவிட்டு..வள்ளுவன் பற்றி சொல்லவில்லையெனில் எப்படி...

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

என்கிறார்...உள்ளத்திலேயே காதலர் குடியிருக்கையில்..நெஞ்சே வெளியே அவனை நினைத்து எவரிடம் தேடி அலைகிறாய்?

24 comments:

  1. அருமைங்க..... அழகா தொகுத்து தந்து இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வள்ளுவருக்கு குசும்பு அதிகம் போல. காளமேகம் கலக்கல் மோகம்:)

    ReplyDelete
  3. //Chitra said...
    அருமைங்க..... அழகா தொகுத்து தந்து இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.//

    நன்றி Chitra

    ReplyDelete
  4. //வானம்பாடிகள் said...
    வள்ளுவருக்கு குசும்பு அதிகம் போல. காளமேகம் கலக்கல் மோகம்:)//

    :)))

    ReplyDelete
  5. //தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
    தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
    துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
    தித்தித்த தோதித் திதி//
     
    ஒவ்வொரு வார்த்தையாகப் பொருள் தந்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  6. அழகான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  7. அப்பிடியே காளமேகத்தோட சிலேடைப் பாட்டுக்கள் சிலவற்றையும் போடுங்க சார் :)

    ReplyDelete
  8. நவநீத்..நீங்க கேட்டு நான் மறுப்பேனா..இதோ உரை

    தாதி-வேலை செய்யும் பெண் (அடிமைப்பெண்)
    தூதோ-மூலமாய் அனுப்பும் தூது
    தீது-நன்மை பயக்காது
    தத்தை- கிளியோ
    தூது-தூதுப்பணியில் தூதை
    ஓதாது-திறம்பட செய்யாது
    தூதி தூது- தோழியின் தூதோ
    ஒத்தித்த தூததே-நாளைக் கடத்திக் கொண்டே போகும்
    தாதொத்த-(ஆகவே) பூந்தளிரைப் போன்ற
    துத்தி-தேமல்கள்
    தத்தாதே-என் மீது படராது
    தேதுதித்த-தெய்வத்தை வழிபட்டு
    தொத்து-தொடர்தலும்
    தீது-தீதாகும் (நல்லதல்ல)
    தித்தித்தது-தித்திப்பு நல்கும் (இனிமையான காதலனின் பெயரை)
    ஓதித்துதி-ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. //அக்பர் said...
    அழகான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி சார்.//


    வருகைக்கு நன்றி அக்பர்

    ReplyDelete
  10. //மயில்ராவணன் said...
    அப்பிடியே காளமேகத்தோட சிலேடைப் பாட்டுக்கள் சிலவற்றையும் போடுங்க சார் :)//


    போட்டுடுவோம்..வருகைக்கு நன்றி மயில்ராவணன்

    ReplyDelete
  11. அருமைங்.....

    பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  12. வள்ளுவரும் காளமேகமும் அருமை டி வி ஆர் உங்க வார்த்தைகளில்

    ReplyDelete
  13. படிக்கப் படிக்க இனிமையாய் இருக்கிறது அய்யா! என் மாமா வைத்திருந்த தனிப்பாடல் திரட்டில் காளமேகப்புலவர் பாடல்களை படித்திடுக்கிறேன்.

    நீங்கள் தரும் விளக்கமும், தொகுத்தளிக்கும் விதமும் அருமை.

    பிரபாகர்...

    ReplyDelete
  14. காதலும் பிரிவும் கலந்த இடத்தை அலசியிருக்கிறீர்கள் இலக்கியத்தில்.
    அருமை ஐயா.

    ReplyDelete
  15. //கமலேஷ் said...
    அருமைங்.....

    பகிர்வுக்கு நன்றி....//

    வருகைக்கு நன்றி கமலேஷ்

    ReplyDelete
  16. //thenammailakshmanan said...
    வள்ளுவரும் காளமேகமும் அருமை டி வி ஆர் உங்க வார்த்தைகளில்//

    நன்றி thenammailakshmanan

    ReplyDelete
  17. //பிரபாகர் said...
    நீங்கள் தரும் விளக்கமும், தொகுத்தளிக்கும் விதமும் அருமை.//

    நன்றி பிரபா

    ReplyDelete
  18. //ஹேமா said...
    காதலும் பிரிவும் கலந்த இடத்தை அலசியிருக்கிறீர்கள் இலக்கியத்தில்.
    அருமை ஐயா.//

    நன்றி ஹேமா

    ReplyDelete
  19. பிரமாதம் ஐயா ...

    ReplyDelete
  20. நன்றி கே.ஆர்.பி.செந்தில்

    ReplyDelete
  21. நானும் இந்த பாடலை என் கல்லூரியில் வியந்து படித்தது ஞாபகம். அருமையான பாடலைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்...

    -
    DREAMER

    ReplyDelete
  22. தமிழ் தமிழ்தான். அருமை ஐயா.

    ReplyDelete