சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்தார்..
மிகவும் சுவாரஸ்யமான அந்தப் பேட்டி குறித்து ஒன்றிரண்டு இடுகைகள் இடலாம் என்று எண்ணம்.
சமிப காலங்களில்..எதற்கும் பயப்படாமல்..தன் மனதில் உள்ளதை பளீரென பதிலாக அளித்த எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.
அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும்..அதற்கு அவரது பதிலும்..
கேள்வி- இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே
பதில்-உண்மைதான்.தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம்.ஆனால் இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட'பார்ப்பதற்கு செலவழிக்கும் மணித்துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள்.ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு இன்று எந்தத் தேசியத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள்.நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?
இன்று ஸ்பெக்ட்ரமில் 1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம்.ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம்.உணர்ச்சி வசப்படுவதும் போராடுவதும் தான் இளைய தலைமுறையின் இயல்பே.ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப் போல இருக்கிறான் இளைஞன்.
எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்த்க் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை..
நாஞ்சில் நாடனின் இந்த் பதிலில் உண்மையில்லாமல் இல்லை.இது குறித்து பதிவர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்டமாகவோ..அல்லது தங்கள் வலைப்பூவில் தனி இடுகையாகவோ இடலாம்.
சினிமா மட்டுமே தமிழ் காலாசாரத்துக்கு அபாயமானதா? என்ற கேள்விக்கு அவர் பதில் அடுத்த இடுகையில்..