Tuesday, February 24, 2015

குறுந்தொகை-195



தலைவி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவ வரவின்கண், “எனக்குத் துன்பத்தைத் தரும் இம்மாலைக் காலத்தில் தாம் மேற்கொண்ட வினையை முடிக்கச் சென்றவர் எனது நிலையை உணராராயினர். அவர் யாண்டுள்ளாரோ!” என்று தலைவி கூறி வருந்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் தேரதரன்

இனி பாடல்-
 
சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப்
   
படர்சுமந் தெழுதரு பையுண் மாலை
   
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
   
இன்னா திரங்கு மென்னா ரன்னோ

தைவர லசைவளி மெய்பாய்ந் துறுதரச்
   
செய்வுறு பாவை யன்னவென்
   
மெய்பிறி தாகுத லறியா தோரே.


                          -தேரதரன்


 தடவுதலையுடைய அசைந்து வரும் காற்று, உடம்பின் கண் பரந்து தீண்ட, அதனால் அலங்காரம் செய்தலைப் பெற்றபாவையைப் போன்ற,  எனது மேனி, வேறுபாடுடையதாகுதலை அறியாதவராகிய தலைவர்,  தாம் விரும்பிச்சென்ற கருமத்தை முடித்துக் கொள்வாராய்,  கதிரவன் வெம்மை நீங்கி, அத்தகிரியை அடைய, நினைவு கூரும் துன்பத்தைமேற்கொண்டு,  வாரா நிற்கும்துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், எங்கே இருக்கின்றனரோ? அந்தோ! இம்மாலைக் காலம் துன்பத்தைத் தருவது, தலைவி வருந்துவாள்,  என்று நினையாராயினர்.

 

    (கருத்து) என்னுடைய மெலிவையறிந்து தலைவர் இன்னும் மீண்டாரல்லர்.

Monday, February 23, 2015

குறுந்தொகை-194



தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததை மேகத்தின்ஒலியாலும் மயிலின் மகிழ்ச்சியாலும் அறிந்த தலைவி தோழிக்குத் தன்ஆற்றாமைக் காரணத்தை அறிவித்தது.)


முல்லை திணை - பாடலாசிரியர் கோவதத்தன்

இனி பாடல்-

என்னெனப் படுங்கொ றோழி மின்னுபு
   
வானேர் பிரங்கு மொன்றோ வதனெதிர்
   
கான மஞ்ஞை கடிய வேங்கும்
   
ஏதில கலந்த விரண்டற்கென்

பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே.

.
                 -கோவதத்தன்



மேகம் எழுந்து,  ஒலிக்கின்ற செயல்ஒன்றுதானா எனக்குத் துன்பந் தருவது?  அந்தமேகம் ஒலித்ததற்கு எதிரே,  காட்டிலுள்ள மயில்கள்,  விரைவனவாகி ஆரவாரிக்கும்;இவ்வாறு அயன்மையையுடையனவாகிக் கலந்த இரண்டு பொருளாலும்,  எனது பேதைமையை யுடைய நெஞ்சம்,  பெரிய கலக்கத்தை அடையும்;  இந்நெஞ்சினது நிலை எத்தகையதென்று சொல்லப்படும்?

   

    (கருத்து) கார்ப்பருவம் வந்தமையின் என் மனம் கலங்குகின்றது.

    (கார்காலம் வந்துவிட்டதை மேகத்தின் முழக்கம் உணர்த்தியது;அதனெதிர் அகவிய மயிலின் ஆரவாரம் பின்னும் அதனை வலியுறுத்தியது; இது காமத்தை மிகுவிப்பது;)

Wednesday, February 18, 2015

குறுந்தொகை-193





தலைவி கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றதோழி,”நீ வரையு நாளளவும் நின் நலம் தொலையாமல் ஆற்றி யிருந்தாய்” என்று பாராட்ட அது கேட்ட தலைவி, “அஃது என் வலியன்று; தலைவன் செய்த தண்ணளியே அத்தகைய நிலையைத்தந்தது” என்றது.)

முல்லை திணை - பாடலாசிரியர் அரிசில் கிழார்
 இனி பாடல்-
 
மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
   
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
   
தட்டைப் பறையிற் கறங்கு நாடன்
   
தொல்லைத் திங்க ணெடுவெண் ணிலவின்

மணந்தனன் மன்னெடுந் தோளே
   
இன்று முல்லை முகைநா றும்மே.


                           -அரிசில் கிழார்

 தோழி,  கள்ளை ஊற்றி வைத்த, நீலக்குப்பிகளைப் போன்ற,  சிறிய வாயையுடைய சுனையி ன்கண்உள்ளனவாகிய,  பிளந்த வாயையுடைய தேரைகள், கிளிகடிகருவியாகிய தட்டைப் பறையைப் போல ஒலிக்கும்நாட்டையுடைய தலைவன், களவுக் காலமாகிய பழைய திங்களில் நெடிய வெண்ணிலாவின் கண், என் நீண்ட தோள்களை, தழுவினான்; அதனால், இக்காலத்தும்,  அவன் மேனியினது முல்லையினது மொட்டறா மலரின் மணத்தை என் தோள்கள்வீசா நிற்கும்.



    (கருத்து) தலைவன் களவுக் காலத்துச் செய்த இன்னருள் இன்றளவும் மாறாது என்னைப் பாதுகாத்தது.


 

   ( கள் வைத்த கலம் சுனைக்கு உவமை.) இட்டுவாய்- இட்டிய வாய்; சிறிய வாய் (மதுரைக். 48.)

    தட்டைப் பறையென்றது தட்டையையே; தட்டை மகளிர் தினைப்புனத்திற் கிளி முதலியவற்றைக் கடிவதற்குரிய கருவிகளுள் ஒன்று;மூங்கிலைக் கண்ணுக்குக் கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை யுண்டாக ஒன்றிலே தட்டப்படுவது

Wednesday, February 11, 2015

குறுந்தொகை-192




தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் வருவர்; நீ வருந்தற்க”என்று தோழி கூறி ஆற்றுவிப்பத் தலைவி, “இளவேனிற் பருவத்தும்அவர் வாராமையின் தனித்திருக்கும் யான் எங்ஙனம் வருந்தாமல்இருப்பேன்;” என்று இரங்கிக் கூறியது.)

பாலை திணை -பாடலாசிரியர் கச்சிப்பேட்டு நன்னாகையார்

இனி பாடல்-
 
ஈங்கே வருவ ரினைய லவரென
   
அழாஅற்கோ வினியே நோய்நொந் துறைவி
   
மின்னின் றூவி யிருங்குயில் பொன்னின்
   
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை

நறுந்தாது கொழுதும் பொழுதும்
   
வறுங்குரற் கூந்த றைவரு வேனே.


                      -கச்சிப்பேட்டு நன்னாகையார்.

  உரை-


நோயால் வருந்திஉறையும் தோழி,  தலைவர் இவ்விடத்தேமீண்டு வருவார்,  வருந்தற்க என்று நீசொல்வதனால், இப்பொழுது, நான்அழாமல் இருப்பேனோ? மின்னுகின்ற இனிய இறகுகளையுடைய,  கரிய குயில், தன் மேனிபொன்னினது உரைத்த பொடி விளங்குகின்ற உரைகல்லைஒக்கும்படி,  மாமரத்தின் கிளையினிடத்து, நறிய பூந்தாதைக் கோதுகின்றஇளவேனிற் காலத்திலும், அவர் வாராமையால் புனையப் பெறாமலுள்ள வறியகொத்தாகிய கூந்தலைத் தடவுவேன்.


    (கருத்து) தலைவருடைய பிரிவைப் பொறுத்துக் கொண்டு யான்எங்ஙனம் வருந்தாமல் இருத்தல் இயலும்?

   (வறுங்குரற் கூந்தல் : மகளிர் தம் காதலரைப் பிரிந்த காலத்தில்கூந்தலைப் புனைதல், மலரணிதல் முதலியவற்றைச் செய்யார்; தலைவர்மீண்ட காலத்துப் புனைந்து மகிழ்வர்;)
 


Monday, February 9, 2015

குறுந்தொகை-191




தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தம் பிரிவினால் யான்துன்புறுவேன் என்பதையும், தாம் பிரியுங்காலம் ஏற்றதன்று என்பதையும்கருதாமற் பிரிந்து சென்ற தலைவர் மீண்டு வரிற் புலந்து மறுப்பேன்”என்று தோழிக்குத் தலைவி கூறியது.)

முல்லை திணை -
 
இனி பாடல்-

உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ
   
நோன்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினம்
   
தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளா
   
தீங்குர லகவக் கேட்டு நீங்கிய

ஏதி லாள ரிவண்வரிற் போதிற்
   
பொம்ம லோதியும் புனையல்
   
எம்முந் தொடாஅ லென்குவெ மன்னே.



 தோழி,  இதனைஎன்னென்று சொல்வேன்?  வலியமரக்கிளையில் இருந்த, பெரியதொகுதியை உடைய பறவைக் கூட்டங்கள்,  தாம் துணைகளோடு சேர்ந்தமையால், துணைவரைப் பிரிந்தாருடையதுன்பத்தை எண்ணாதனவாய், இனிய குரலால் அழைப்பக் கேட்ட பின்பும், நம்மைப் பிரிந்த, அயற்றன்மையை உடையதலைவர்,  இங்கே மீண்டு வந்தால்,  மலர்களால் பொங்குதலைஉடைய கூந்தலையும் அலங்கரித்தலை யொழிக,  எம்மையும் தொடுதலை யொழிக, என்று கூறுவம்;  அங்ஙனம் செய்தலை,உவ்விடத்துப் பார்ப்பாயாக.

   

    (கருத்து) நம்மைப் பிரிந்த தலைவர் வரின், அவரை ஏற்றுக்கொள்ளேன்.

Sunday, February 8, 2015

குறுந்தொகை-190



தலைவி கூற்று
(பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்திருந்த காலத்தில்தனிமையை யாற்றாத தலைவி தோழியை நோக்கி, “நடுயாமத்தில் யான் துயிலின்றிப் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ?” என்று கூறியது.)

முல்லை திணை -பாடலாசிரியர் பூதம்புல்லன்

இனி பாடல்

 
நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச்
   
செறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர்
   
அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி
   
வெஞ்சின வரவின் பைந்தலை துமிய

உரவுரு முரறு மரையிரு ணடுநாள்
   
நல்லே றியங்குதோ றியம்பும்
   
பல்லான் றொழுவத் தொருமணிக் குரலே.


                       -பூதம்புல்லன்

 

   தோழி,  நெறிப்பை உடைய கரிய கூந்தலோடு, பெரியதோள்களைத் தடவி என்னைத் தேற்றி, இறுகச் செறித்த வளைகள் நெகிழும்படி, தாம் ஈட்டும் பொருளின் பொருட்டு என்னைப்பிரிந்து சென்ற தலைவர், புள்ளிகளையும், பத்திக்கீற்றுக்களையும் மிக்க சினத்தையுமுடைய பாம்புகளின்,  பசிய தலைகள்துணியும்படி, வலியையுடைய இடியேறு முழங்குகின்ற, பாதியிரவின் கண்,  பல பசுக்கள் உள்ள தொழுவத்தில்,  நல்ல ஆனேறுசெல்லுந் தோறும் ஒலிக்கின்ற,  ஒற்றைமணியின் குரலை,  அறிவாரோ?



    (கருத்து) இங்கே நான் படும் துன்பத்தைத் தலைவர் அறியார்போலும்!

(பல பசுக்கள் கட்டிய தொழுவத்திற்கேட்கும் ஒரு மணிக்குரல், அவை அந்நல் லேற்றோடு இன்புற்றிருக்கும்நிலையை நினைவுறுத்தி, “இவை பெற்றபேறு யாம் பெற்றிலேமே!”என இரங்குதற்குக் காரணமாயிற்று. அக்குரலை நள்ளிரவில் தான்கேட்பதாகக் குறிப்பித்தாள்; இதனால் அவள் நள்ளிரவிலும் துஞ்சாமை தெரிகிறது.)

Friday, February 6, 2015

குறுந்தொகை-189



தலைவன் கூற்று
(வேந்தனது வினைமேற் செல்லாநின்ற தலைவன் தன் பாகனைநோக்கி, “இன்று விரைந்து சென்று வினைமுடித்து, நாளைத் தலைவிபால்மீண்டு வருவேமாக” என்று கூறியது.)

பாலை திணை - பாடலாசிரியர் மதுரை ஈழத்துப் பூதன்றேவன்

இனி பாடல்-

இன்றே சென்று வருவது நாளைக்
   
குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக
   
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
   
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்

காலியற் செலவின் மாலை யெய்திச்
   
சின்னிரை வால்வளைக் குறுமகள்
   
பன்மா ணாக மணந்துவக் குவமே.




                              -மதுரை ஈழத்துப் பூதன்றேவன்.

    .

 பாக,  இன்றைக்கே வினையின் பொருட்டுப் புறப்பட்டுப் போய், நாளை மீண்டு வருவேமாக.  குன்றினின்று வீழும் அருவியைப் போல, யானைத் தந்தத்தாற் செய்த வெள்ளிய தேர் விரைந்துசெல்ல,  இளம்பிறையைப் போன்ற, விளங்குகின்ற ஒளியையுடையஅத்தேரினது சக்கரம், வானத்தினின்றும், வீழ்கின்ற கொள்ளியைப் போல, பசிய பயிர்களைத் துணிப்ப,  காற்றைப் போன்ற இயல்பையுடைய வேகத்தினால், மாலைக் காலத்தில் தலைவியிருக்கு மிடத்தையடைந்து,சிலவாகிய வரிசையையுடைய வெள்ளிய வளைகளை யணிந்த அவளது,  பலவாக மாட்சிமைப் பட்ட மேனியை, மணந்து உவப்போம்.

.

    (கருத்து) இன்று சென்று வினைமுடித்து விட்டுத் தலைவியின்பால் நாளை மாலையில் வந்து எய்துவோமாக.

    (வி-ரை.) வேந்தனால் செய்ய வேண்டுமென்று சுமத்தப்பட்ட காலத்தில்.செயலை செய்து முடித்து நாளை வந்து தலைவியிடம் வருவோமாக

Thursday, February 5, 2015

குறுந்தொகை-188


தலைவி கூற்று

(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி,“கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்!” என, தோழிக்குக் கூறி வருந்தியது.)


முல்லை திணை - பாடலாசிரியர் மகனார்மள்ளனார்

இனி பாடல்-


முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
   
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
   
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
   
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.



 முல்லைக்கொடிகளில் அரும்பு முதிர்ந்தன; தண்ணிய கார்காலத்தைஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடுஅழகு முதிர்ந்தன;  எனதுமாட்சிமைப் பட்ட அழகைக் கெடுத்தலை எண்ணி,  மாலைக் காலம் வந்தது;என்னைப் பிரிந்து என் தூய ஆபரணங்களைநெகிழச் செய்த தலைவர் இன்னும் வந்தாரல்லர்.



    (கருத்து) கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.

 
   (பொருளீட்டச் சென்ற தலைவன், தலைவியிடம், "கார் காலத்திற்குள் திரும்புவேன் என்று கூறிச் சென்றான்.ஆனால், கார் காலம் வந்தும் அவன் வராத்தால் தலைவி வருந்தி, அதைத் தன் தோழியியம் சொல்கிறாள்)