Tuesday, October 27, 2020

என்னவென்று சொல்ல...

 "அம்மா..அம்மா..நேரமாயிடுச்சு..ஒர்க் ஃபிரம் ஹோம்னா வேலை குறைச்சல்னு நெனைக்காதே.வேலை அதிகமாயிடுச்சு.ஒன்பது மணிக்கே லேப்டாப் முன்னால உட்காரணும்..தெரிஞ்சுக்க.." என கத்திக் கொண்டிருந்தான் சுரேந்தர்.

'எனக்குத் தெரியும்.முதல்ல டிஃபனை சாப்பிடு" என்றார் அம்மா."இல்லைம்மா..அதுக்கெ எல்லாம் நேரமில்லை.என்னைப் போல சாஃப்ட் வேர் பீப்புள் எல்லாம் நேரம் காலம் பார்க்காம வேலை செய்யறதாலத்தான்..கம்பெனியால எங்கள் எல்லாருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பளம் கொடுக்க முடியுது.இதையெல்லாம் நீ எப்ப தெரிஞ்சுக்கப் போறியோ...அப்பா..அப்பா..கொஞ்சம் தள்ளி நில்லு..வீடியோ கான்ஃபெரென்ஸ்..நீ தெரியறபார்.."என பேசிக் கொண்டே இருந்தான் சுரேந்தர்.


"கம்பெனிக்கு ஏகப்பட்ட லாஸ்னு வேலையை விட்டு இவனை அனுப்பின அதிர்ச்சிலே இருந்து இவன் இன்னமும் மீளலையே! இன்னிக்கும் வேலைக்குப் போறாப் போல ஒர்க் ஃபிரம் ஹோம்னு சொல்லிட்டு பைத்தியம் போல பேசிக்கிட்டு இருக்கானே..எப்ப பழைய நிலைமைக்கு வருவானோ..?' என அம்மாவிடம் வருத்தப் பட்டுக் கிட்டு இருந்தார் அப்பா. 


Monday, October 26, 2020

எங்கே போச்சு..?

 "இங்க தானே வைச்சிருந்தேன்..எங்கே போச்சு?..வாணி..வாணி..நீ பார்த்தியா?"என்றான் ஹாலிலிருந்து சுரேஷ்.


"நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க..எங்கே வைச்சீங்கன்னு


"ஆமாம்.. இங்கதான் வைச்சேன்..நீதான் எதையும் இடம் மாறி..இடம் மாறி வைக்கறவளாச்சே"


"ஆமாம்.எது காணும்னாலும்..நான்தானா? உங்க பொருளை நான் ஏன் எடுக்கப் போறேன்?"


"அப்போ.கால் முளைச்சு அதுவே..ஓடிடுத்தா?"என்றான் கோபத்துடன்.


அதற்குள் சமையலறையில் இருந்து வெளியே வந்தவள்..டீபாயின் மீது வைத்திருந்த டிவி ரிமோட்,செய்தித் தாள்..என ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்துவிட்டு வைத்தாள்.


அதற்குள் வெளியே கிளம்பத் தயாரானவன்.."ஏன்..வேணும்னா என் பேன்ட் பாக்கெட்டிலும் தேடேன்" என பேன்ட் பாக்கெட்டினுள் கையை விட்டவன்"இதோ இருக்கு.."என அசடு வழிய எடுத்தான்.


போன தடவை வெளியே போயிட்டு வந்துட்டு ஃபேஸ் மாஸ்க்கை அப்படியே பேக்கட்ல போட்டுண்டு கத்தறதைப் பாரு"என தன் பங்குக்குக் கத்திவிட்டு சமையலறைக்குள் மீண்டும் நுழைந்தாள் வாணி.

Saturday, October 24, 2020

கடல்


தனியாக
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
இந்த
நதிகள்தான்
ஓடி வந்து
ஒருகை ஓசையாக
அதனுடன்
சங்கமிக்கின்றன

மழையில் நனையவே
ஆசைப்படுகின்றேன்
விண்ணின்
கொடைக்கு
குடை
எதற்கு..

காலம் ஓடுகிறது
மிகப் பெரியவன் சொல்ல
நடுவனோ
சற்றே விரைந்து
செயல்பட
சிறியனோ
நிதானமாய் கடக்கின்றான்
காலக் கடிகாரத்தை

உனக்கென்ன
மலர்ந்து
மணம் விசி விட்டாய்
மொக்காய் நிற்கும் என்னை
மலர விடுவார்களா
அழித்து விடுவார்களா
பாவிகள்

மழையும்..மனிதனும்..
------------------------------
மழை
பெய்து கொண்டிருக்கிறது
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
நொறுக்குத் தீனியுடன்..
பாழாய்ப்போன மழை
வெளியே செல்ல இயலவில்லை
என்கின்றேன்..
தொலைபேசியில் அழைப்பவனிடம்..
நல்லது செய்யும்
மனிதன் மட்டுமல்ல
மழையும்
சபிக்கப்படும் போல.

பெண்களை வர்ணித்தே
கவிதை எழுதப்படுகிறதாம்
கவிஞர்களால்....
வேறு என்ன செய்ய
மாற்றி எழுதினால்
அவனா நீ
என்கிறீர்களே

இதழ்கள்
முத்தத்திற்குக் காத்திருந்தாலும்
தேனை மட்டுமே உறிஞ்சி
பறக்கிறது
வண்டினம்

கலாமும், கனவும்
--------------------------------------
இத் தரணியில்
இளைஞர்களை
நல் கனவுக் காணச் சொன்னார்
நமது கலாம் எனும் மகான்...
கண்ட கனவை
நனவில் நிறைவேற்றிட
நாளும் உழைத்திடுவீர் என்றிட்டார்....
செய்யும் தொழிலில் நேர்மையாய் இருந்திட்டால்
செய்ய வேண்டாம்
கையூட்டு அதிகாரிகளுக்கு சல்யூட்டு
இலட்சிய நாயகன் சொன்னார்....
இனிய வார்த்தைகளில்
விதைத்துவிட்டு சென்றிட்டார் கனவுகளை
வளரும் இளைஞர் மனதில்...
நாளை அவை..
நாளும் வளர்ந்து
அறுவடைக்கு தயாராயிடும்
அன்னை நாடு சிறந்திட...
வாழ்க எம் கலாம் புகழ்
வையகம் இருந்திடும் வரை

கவிதைக்கான
கருவினைத் தேடி
கவிஞனே அலையாதே!
இயற்கை என்னிடம்
இல்லா
கவிதைக் கருவா
உனக்கு
வெளியே கிட்டிடும்


நாட்கள்
நகர்ந்து
கொண்டுதான் உள்ளன
சில
நட்புகளின்
இழப்புகளுடன்

அவர்
நாண
நன்னயஞ் செய்து விட்டாலும்
கண்ணாடியில் விழுந்த
விரிசலாகவே உள்ளது
நட்பு..


அழகிய கண்ணே..
----------------
இதயத்தின் வாசல் அது
இன்பமாய் வரவேற்றிடும்..
காந்தமாய்
கவர்ந்திழுக்கும்..
கவிஞனாய்
கவிதை பேசும்...
கதாசிரியனாய்
கதைபலக் கூறும்..
நடிகனாய்
நவரசமும்
நன்குக் காட்டிடும்...
தூண்டில் போட்டு
தூய மனதினையும்
தூண்டில் புழுவாக்கிடும்..
சாதித்திடும் அனைத்தையும்
தன் கண்ணீரினால்

சக பயணிகள் அவ்வப்போது
இறங்குகிறார்கள் - நானோ
இறங்க வேண்டிய இடம்
எப்போது வரும்
எனத் தெரியாமல்..
பயணித்துக் கொண்டிருக்கிறேன்...


மண்ணில் கிடந்தது நேற்றைய சருகு
மரத்தில் இன்று துளிர்த்த இலை
அதனைக் கண்டு கண்ணீர் விட்டது
தாயின் சோகத்திலும் சற்று மகிழ்ச்சி
தாண்டவமாடியது சற்று.
தாயின் ஆட்டத்தில்
சருகு மறைந்தது.

கூண்டுக்குள் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்
சிறிது சிறிதாக
சிறகுகள்
முளைத்துக் கொண்டிருக்கின்றன
கூண்டைவிட்டு
வெளியேறச் சொல்லி
படபடக்கின்றன

Friday, October 23, 2020

வேலை இல்லை

 முன்னர் இருந்தது போல இல்லாமல் அவனது வேலை வெகுவாகக் குறைந்திருந்தது.


இதேநிலை நீடிக்குமெயானால், ஒரு கட்டத்தில் வேலையை விட்டே அனுப்பிவிட்டாலும் அனுப்பி விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. தனக்கு மட்டுமின்றி, தன்னைச் சேர்ந்தவர்களும் இதனால் பாதிக்கப்படுவரே என வருந்தினான்.


ஒருவேளை..தனக்கேத் தெரியாமல் தன் வேலையை அவுட் சோர்சிங் முறையில் வெளியே கொடுத்து விடுகிறார்களோ என்ற சந்தேகமும் இருந்தது.


எப்படியாவது தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தவன், தனது மேலதிகாரியைக் காணச் சென்றான்.அவரைப் பார்த்து..


"பூவுலகில் கொரோனா  உயிரை எடுக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதால், தனக்கு வேலை பளு குறைந்துள்ளது.என்னை நம்பியுள்ள வர்களும்  தங்களுக்கு வேலை போய்விடுமோ எனக் கவலைப்படுகின்றனர்.நீங்கள்தான் தலையிட்டு கொரோனாவிடமிருந்து எங்களது வேலையை மீட்டுத் தர வேண்டும்" என கிங்கரர்களுடன் வந்திருந்த யமன் விஷ்ணுவிடம் வேண்டினான்.

Wednesday, October 21, 2020

பயம்

 புது மனைவி மாலதியை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தான் ரகு.அவனுக்குத் திருமணமாகி ஒரு வாரமே ஆகியிருந்தது.


அலை அலையாய் வந்திருந்த மக்கள்..தண்ணீரில் நின்றுக் கொண்டு அலைகள் வந்து தங்கள் கால்களை நனைத்து காலடி மண்ணை எடுதுதுக் கொண்டு மீண்டும் கடலுக்குள் செல்வதை ரசித்த படி இருந்தனர்.


அப்போதுதான் சற்று தள்ளி அவனுடன் வங்கியில் வேலை செய்யும் அவனது மேலதிகாரி வேதாசலத்தைப் பார்த்தான்.


உடனே..முகம் சற்றே மாற, "மாலதி வா..வா..நேரமாச்சு..போகலாம்" என அவளை அவசரப் படுத்தினான்.


"இவ்வளவு நேரம் சந்தோஷமாய் இருந்தவர் ஏன் கலவரமாய்க் காணப்படுகிறார்? என்ன ஆச்சு இவருக்கு?" என புரியாது விழித்தாள் மாலதி.


அவளை "தர தர.." என் இழுத்துக் கொண்டு ராணி மேரி  கல்லூரி அருகில் ஒரு ஆட்டோ பிடித்து ஏறிய பின்னரே..நிம்மதி பெருமூச்சு விட்டான்.


வங்கியில் மெசஞ்சராகப் பணி புரியும் அவன்..மாலதி வீட்டாரிடம் கிளார்க் வேலையில் இருப்பதாகக் கூறி மணம் முடித்திருத்தான்..வேதாசலம், இவனைப் பார்த்ததும் ,உண்மையை மாலதியிடம் சொல்லிவிடப் போகிறாரே! என்ற பயம்தான் காரணம்.

Tuesday, October 20, 2020

தன்னைத்தான் காக்கின்...

 வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டு வெளியே வந்த கற்பகம்,ஆட்டோவிலிருந்து இறங்குபவளைக் கண்டாள்."இன்னிக்கும் ஆரம்பிச்சாச்சா? என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.


ஆட்டோவிற்குக் காசு கொடுத்து விட்டு, கையில் ஒரு சிறு பெட்டியுடன் அழுதபடியே வீட்டினுள் வந்தாள் மீனாட்சி.


"என்ன ஆச்சு? ஏன் அழறே? அழாம விஷயத்தைச் சொல்லு " என்றாள்மீனாட்சியிடம்.


"இப்போ ஒன்னும் கேட்காத..சாயங்காலம் என்னைத் தேடி இங்கே வருவார்.அப்போ அவர் கிட்ட கேளு.இனிமே நான் அங்கே போக மாட்டேன்..உனக்கு பாரம்னா சொல்லு வேற எங்கேயாவது போய்க்கிறேன்" 


கடந்த சில மாதங்களாக..கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு மீனாட்சி அடிக்கடி அங்கு வருவது வழக்கமாகி விட்டது.


மாலையில் சுந்தரம் வந்தார்.அவரைப் பார்த்த கற்பகம், "இது உங்களூக்கே நல்லாயிருக்கா?" என்றாள்.


"என்னை என்ன பண்ணச் சொல்ற.என் கோபம்தன உனக்குத் தெரியுமே..ஆனா கோபம் வந்தா அடுத்த வினாடியே அது மறந்துடும்.முன்னெல்லாம் நான் கோபப்பட்டா அம்மா அதை புரிஞ்சுண்டு மௌனமா இருப்பா.ஆனா, இப்ப எல்லாம் இவளும் பதிலுக்குப் பதில் கோபப்படறதால சண்டை வலுத்து இது போல ஆகிவிடறது.சரி..சரி.. மீனாட்சி..கிளம்பு..இனிமே கோபப்பட மாட்டேன்" 


அப்பாவும்..அம்மாவும் கிளம்பிச் செல்வதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம்..

Thursday, October 15, 2020

அப்துல் கலாம்.

 கலாமும், கனவும்

--------------------------------------
இத் தரணியில்
இளைஞர்களை
நல் கனவுக் காணச் சொன்னார்
நமது கலாம் எனும் மகான்
கண்ட கனவை
நனவில் நிறைவேற்றிட
நாளும் உழைத்திடுவீர் என்றிட்டார்
செய்யும் தொழிலில் நேர்மையாய் இருந்திட்டால்
செய்ய வேண்டாம்
கையூட்டு அதிகாரிகளூக்கு சல்யூட்டு
இலட்சிய நாயகன் சொன்னார்
இனிய வார்த்தைகளில்
விதைத்துவிட்டு சென்றிட்டார் கனவுகளை
வளரும் இளைஞர் மனதில்
நாளை அவை..
நாளும் வளர்ந்து
அறுவடைக்கு தயாராயிடும்
அன்னை நாடு சிறந்திட...
வாழ்க எம் கலாம் புகழ்
வையகம் இருந்திடும் வரை