Tuesday, January 29, 2019

தினம் ஒரு தகவல் - 2


வள்ளுவன் வாக்கு

சாதாரணமாகவே. ஏதேனும் ஒரு துறையில் வல்லுனராக உள்ளவர்களுக்கு சற்று அகந்தை இருக்கும்.

பள்ளியில் நன்கு படிக்கும் மாணவன் மற்ற மாணவர்களை சற்று (வித்யா)கர்வத்துடன் பார்ப்பான்


உயர் அதிகாரி, தன் கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்கையில், அதைத் தட்டிக் கேட்கும் போது...தான் அவர்களுடன் உயர்ந்தவன் என்ற அகந்தையை அடைவார்.


பக்கத்துவீட்டுக் காரர் கார் வாங்கிவிட்டால், நேற்றுவரை சகஜமாகப் பேசியவர், இன்று கண்டும் காணாமல் போவார்.


இதெல்லாம் சில உதாரணங்களே..


மனிதனாய் பிறந்த அனைவருமே, ஏதேனும் ஒரு கோட்டில் சற்று அகந்தைப் பிடித்தவர்களாகவே இருப்பார்கள்.


மனிதர்களே இப்படியெனில்..அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு எவ்வளவு அகந்தை இருக்கும்.அது என்ன அகந்தை? என்பதை வள்ளுவர் சொல்கிறார்.


"நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்துவ் வுலகு"
(இந்த உலகமானது, நேற்றுவரை உயிருடன் இருந்தவனை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைக் கொண்டதாகும்)

Saturday, January 26, 2019

"பத்ம" விருதும்..கலைஞனும்

இந்த ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும், இவ்விருதுகள் அறிவிப்பு வருகையில் இந்த மாபெரும் கலைஞன் ஞாபகத்தில் வருவான்..

ஆம்..கடைசி வரை தனக்கு தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என மனம் வருந்தியவன் அவன்.

ஆம்..அக்கலைஞனின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கத்தான் இல்லை..

அக்கலைஞன் மாபெரும் நகைச்சுவை கலைஞன் மட்டுமல்ல,சிறந்த குணசித்திர நடிகன், வில்லன்..

அக்கலைஞன் தான் நாகேஷ்.

ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும்

வாழை மரமும் சவுக்கு மரமும்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க
அருமையான வார்த்தைகள்...‬

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் அவர்கள் சொன்னது:

வானொலிக்காரர்கள் கேட்ட கேள்வி:: நியாயமாக உங்களுக்கு
வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது
உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம்
கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு
வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது
ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம்
மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே
போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும்
சிரித்துக;் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்..

தினம் ஒரு தகவல் - 1 ------------------------------------ (வள்ளுவனின் வாக்கிலிருந்து)


நம் நண்பர்களில் பலர், அவ்வப்போது.."எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனைகள் வருகிறது" என்றும், "எனக்கு அதற்குக் கொடுப்பினை இல்லை" என்றும் எப்போதும் எதிர்மறையாகவே பேசிக்கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பதை நாம் காணலாம்.
உண்மையைச் சொல்வதானால், இவர்கள் வாழத் தெரியாதவர்கள்.
ஆண்டவன் இருக்கின்றான் என நம்பும் இவர்கள்,அந்த நம்பிக்கையே நம்மை வாழ்வில் உயர்த்திவிடும் என எண்ணாமல்..வாழ்வில் உயர நம்பிக்கையும், அதற்கான உழைப்பும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
தனக்கு இணையாக வாழும் நண்பன், தன்னைவிட வசதிகள் படைத்தவனாய் இருந்தால், தனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் இல்லை என பிதற்றுவர்.ஆனால், அந்த வசதியை அடைய அவன் பட்ட துன்பங்கள், வாழும் நெறி ஆகியவற்றை மறந்துவிடுவார்கள்.,எப்போதும் சோம்பித் திரிவர்.சோம்பல் படுபவன் வாழ்வில் உயர இயலாது.
வள்ளுவர் சொல்கிறார்..
"இலமென் றசையி இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்"
(வாழவழியில்லையே என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி செய்வாளாம்)

Thursday, January 10, 2019

பொங்கலோ பொங்கல்




சுழன்றும் ஏர் பின்னது உலகம்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை..

மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் விவசாயி

இப்படி உழைச்சு அவன் கொடுக்கற

அரிசியையும் பருப்பையும், கரும்பையும்

உழைப்பின்றி

இலவசமாக வாங்கி

பொங்கல் வைத்து

"பொங்கலோ பொங்கல்"

என

கூப்பாடு போடுவது

நியாயமா? நண்பனே!