Sunday, September 30, 2018

நாடகப்பணியில் நான் - 73



"நூல் வேலி" நாடகத்தின் வெற்றிக்கு அடுத்து, நான் மேடையேற்றிய நாடகம் "என்றும் அன்புடன்"

மகன் மீது ஆயிரம் மடங்கு அன்பை மனதினுள் வைத்துக் கொண்டு எதிரியைப் போலத் தெரியும் உறவு அப்பா மட்டுமே!

உயிருடன் இருக்கும்வரை அப்பாவின் அருமையை நாம் அறிவதில்லை

அம்மாவின் பாசத்திற்கு எள்ளளவும் குறைந்ததில்லை தந்தையின் பாசம்

ஆனால் தன் உணர்வுகளை...பாசத்தை..வெளிக்காட்டாத ஒரே காரணத்தால்...தாய்க்கு அடுத்த இடத்தையே அவரால் அடைய முடிகிறது

இது தந்தையர் வாங்கி வந்த வரமா?

மகனை வளர்க்க வாழ்வில் தந்தையரின் தியாகங்கள் அளப்பறியாது.

சமுதாயத்தில் ஒருவனுக்குக் கிடைக்கும் அந்தஸ்து, செல்வாக்கு, பணம், கௌரவம் அத்தனைக்கும் அஸ்திவாரமாய் அமையும் உழைப்பு அவன் தந்தையினுடையதே!

தனக்கென வாழாது தன் மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு தந்தையின் கதையே "என்றும் அன்புடன்"



தாயில்லாத மகன்களை வளர்க்க, இளம் வயதிலேயே மனைவியை இழந்தும் மறுமணம் செய்து கொள்ளாமல்  இருக்கிறார் தந்தை.

"கடைசி காலத்தில் உங்க இருவர் கையைப் பற்றிக் கொண்டே என் உயிர் பிரிய வேண்டும் என்பவர்.

படிப்பை முடித்து, ஒரு மகன் அமெரிக்கா செல்கிறான்.மற்றொரு மகனோ ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறான்.

ஒரு கட்டத்தில், அமெரிக்க மகன் அங்கேயே ஒரு பெண்ணை மணந்து விட, தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிறான்.

மற்றொரு மகனோ தந்தையின் சொத்தை பிரித்து கேட்கிறான், தன் தொழில் முதலீட்டிற்கு.

தந்தைக்கு ஆதரவாக பேசக்கூடியவர், அவர்களின் மாமன் மட்டுமே!

மக்களின் ஆதரவைப் பெற்ற இந்நாடகம், அடுத்து அடுத்து வந்த தேதிகளால், போட முடியுமா? என்ற பிரச்னையில் இருந்தது.

அது ஏன்? அதன் பின் அந்நாடகம் போடப்பட்டதா? பிரச்னை என்ன? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


Friday, September 28, 2018

நாடகப்பணியில் நான் - 72



இந்த பதிவு சற்றே மாறுபட்ட பதிவு..

ஆம்...நாடகப்பணியில் அமெச்சூர் நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்படும் அமரர் திரு ஒய் ஜி பார்த்தசாரதி ,மற்றும் பத்மநாபன் எனும் பட்டு அவர்களால் 1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் குழு கடந்த 66 ஆண்டுகளில் 67 நாடகங்களை அரங்கேற்றி..ஏறக்குறைய 10000 முறை மேடையேறி சாதனை புரிந்துகொண்டிருக்கிறது
இது மாபெரும் சாதனை.
இக்குழுவில், ஜெயலலிதா, சோ,சந்தியா, வித்தியாவதி, ருக்மணி, லட்சுமி,ஐஸ்வர்யா, ஏ ஆர் எஸ்.,விசு, மௌலி, ராதாரவி, வரதராஜன்,மதுவந்தி
என் பலர் நடித்து பின்னாளில் பிரபலமானார்கள்

அக்குழுவின் சாதனைகளை ஆவணப்படுத்த வேண்டும் என நானும், யூ ஏ ஏ வின் இன்றைய தயாரிப்பாலர் ஒய் ஜி மகேந்திரனும் விரும்பினோம்.

அதன் மூலம் பிறந்ததே "யூஏஏ எனும் ஆலமரம்" என்ற நூல்.

இந்நூலில், 67 நாடகங்கள் பற்றியும், ஆரம்பகால யூஏஏ வில் ஒய்ஜிபியின் உழைப்பு, திருமதி ஒய்ஜிபி யின் பக்கபலம்,
ஆகிய அனைத்தையும் எழுதியுள்ளேன். 

அடுத்துவரும் தலைமுறையினர்களுக்கு ஒய்ஜிபி பற்றி தெரிய வேண்டும் என்ற அவா இதன் மூலம் நிறைவேறும் என எண்ணுகிறோம்.

வானதி பதிப்பகம் மூலம் வெளியாகும் இந்நூலை நாளை (30-9-18)காலை 10-30 மணியளவில் திரு நல்லி செட்டியார் முன்னிலையில் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் வெளியிடுகிறார்.

திருமதி ஒய்ஜிபி, ஏ ஆர் எஸ், லட்சுமி, விசு, மௌலி, கே எஸ் நாகராஜன், எஸ் வி சேகர், காத்தாடி ராமமூர்த்தி, மாது பாலாஜி,கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ராஜகோபால்சேகர்,தியாக பிரம்ம கான சபா தலைவர் டெக்கான் மூர்த்தி ஆகியோர் முன்னிலை

ஒரு நாடகக்குழுவினைச் சேர்ந்த நான் மற்றொரு நாடகக்குழுவின் சாதனைகளை நூலாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்

வானதி ராமநாதனுக்கும், இந்நூல் வெளிவர உதவிய அருமை நண்பன் ஒய் ஜி மகேந்திரனுக்கு எனது நன்றிகள்

நூல் வெளியீட்டு விழாவில், என் நாடக நண்பர்கள், என் நலம் விரும்பும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்  

Wednesday, September 26, 2018

நாடகப்பணியில் நான் - 71

"நூல்வேலி" நாடகத்திலிருந்து மேலும் சில வசனங்கள்

1) சுதந்திரத்திற்கு முன்னால் வெள்ளைக்காரன் நம்ம நாட்டை சுரண்டினான்.இன்னிக்கு, தலைக்குத் தலை தலைவன்னு சொல்லிக்கிட்டு..ஜாதிக்கு ஒரு கட்சியை வைச்சுக்கிட்டு..கையில ஒரு அறிவாளோட தாதா வேலை செஞ்சுக்கிட்டு..நாட்டை..நாட்டு மக்களை சுரண்டறாங்க

2)வளர்ந்த நாடுதான் நம்ம நாடு..ஆனா கட்டுமஸ்தான உடல் இல்லாதவனை வளர்த்திப் போதாதுன்னு சொல்லுவாங்க இல்லை..அது போலத்தான் வளரும் நாடுன்னு சொல்றதும்.

3)நம்ம நாட்டோட விசேஷம் ஒன்னு சொல்றேன் கேட்டுக்க-

அபுதாபில பேரிச்சம் பழம் விளையும்..மிளகு விளையாது
ருமேனியாவில ஆப்பிள் விளையும் தேங்காய் விளையாது
கனடாவிலே உருளை பயிறாகும், பூண்டு விளையாது
இங்கிலாந்துல கோதுமை விளையும் ,கொய்யா விளையாது
ஆனா, இவை எல்லாமே விளையுற அற்புத மண் நம்ம இந்தியா தான்டா.

4)தண்ணீ கீழே இருக்கறப்போ கனமா இருக்கு.அதுவே ஆவியாகி மேலே போறச்சே லேசாகிறது
அதுபோல கீழ் மட்டத்திலே ஒருத்தர் தப்பு பண்ணினா..அது பெரிய தப்பாத் தெரியுது.அதுவே மேல் மட்டத்திலே பண்ணினா லேசாகிடறது

5)When the God Pushes you to the edge of difficulty, Trust him fully because two things can happen.Either he will catch you when you fall or he will teach you how to fly

நாடகப்பணியில் நான் - 70

(நாடகத்தில் பங்குப் பெற்ற அனைத்துக் கலைஞர்கள்)

"நூல்வேலி" நாடகத்திலிருந்து சில வசனங்கள்

1).தலைவா...முதன் முதலா உன்னை மறுத்துப் பேச மன்னிக்கணும். இந்த ஊர் வளர்ச்சியில..இந்த ஊர் மக்கள் முன்னேற்றத்திலே எனக்கு அக்கறை இருக்கு.ஆனா...அந்த வளர்ச்சி...எனக்கு...என் குடும்பத்துக்கு..ஏன்..ஓரளவு மக்களுக்கும் சாப்பாடு போட்டுட்டு வர விவசாய நிலங்களை அழிக்கறதாலத்தான் வரும்னா அப்படிப்பட்ட வளர்ச்சி தேவையில்லை.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்னு சொன்னவங்கக்கூட முதல் இடத்தை உழவுத் தொழிலுக்குத்தான் கொடுத்திருக்காங்க.
உயிர்கள் வாழ உணவுப் போடறது இந்த மண்ணு,இந்த மண்ணுல விளையற உணவை அழிச்சுத்தான் ஒரு தொழில் உண்டாகணும்னா..அந்த அழிவிலத்தான் மக்கள் வளர்ச்சியடையணும்னா..அந்த வளர்ச்சி மக்களோட அழிவின் ஆரம்பம்.

2)பொன்னு விளையற பூமியா இருந்த இடம்.மூணு போக விளைச்சல்..ஆனா இப்ப லேஅவுட் போட்டு plotடுகளா மாறிடுச்சு.இருக்கிற கொஞ்ச நஞ்ச நிலத்திலேயும் ரசாயன உரத்தைப் போட்டு காட்டாமணக்கும், கத்திரியும்தான் விளையுது.அந்த மண்ணுக்கு மட்டும் வாயிருந்தா அழும்..அழும்..தலைவா.எந்தக் காரணம் கொண்டும் சாப்பாடு போடற நிலத்துக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்

மற்றவை அடுத்த பதிவில்

Monday, September 24, 2018

நாடகப்பணியில் நான் - 69



எனது சௌம்யா குழுவிற்காக நான் எழுதி அரங்கேறிய நாடகம் "நூல் வேலி"

வேலியே பயிரை மேயும் கதை.

சமுதாயத்தில் தனது ஆசைக்கு இணங்காத பெண்கள் மீது Acid கொட்டப்பட்டு, அப்பெண்களின் உடலும், உறுப்புகளும் சிதைக்கப்பட்டு..உருக்குலைந்து வாழ்நாள் முழுதும் ரணவேதனைக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதுவே இந்நாடகத்தின் மையக்கருவாய் எடுத்துக் கொண்டேன்

ஒரு ஏழை விவசாயி.அவனுக்கு ஒரே மகள்.கஷ்டப்பட்டு அவளை மருத்துவம் படிக்க வைக்கின்றான்.
அந்த விவசாயி கட்சி ஒன்றின் ஆதரவாளனாய் இருக்கின்றான்.அக்கட்சித் தலைவன் ஒருநாள் அவன் வீட்டிற்கு விஜயம் செய்கிறான். அவளின் மகளைப் பார்த்து மையல் கொள்கிறான்.

அவளை ஒருநாள் யாரும் இல்லாத நேரம் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவள் முகத்தில் acid ஐ கொட்டி சிதைத்து விடுகிறான். அவளும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைகிறாள்.

அந்த அரசியல்வாதிக்கு அதற்கான தண்டனைக் கிடைத்ததா? என்பதே  முடிவு.

அரசியல்வாதியாக நானும், விவசாயியாக பி டி ரமேஷூம், அவனது மகளாக ராஜஸ்ரீ பட்டும் நடிக்க , நாடகம் வெற்றி நாடகமாக அமைந்தது.

அடுத்த பதிவில் இந்நாடக வசனங்கள் சில.   

Sunday, September 23, 2018

நாடகப்பணியில் நான் - 68

அடுத்து, அமிர்தம் கோபாலின் "கீதாஞ்சலி" குழுவினருக்காக நான் எழுதிய நாடகம் "பெண்ணே நீ வாழ்க"

ஒரு வக்கீலுக்குப் படித்த பெண்.அவளுக்கு கணவன் சரியாக வாய்க்கவில்லை.

விவாகரத்து வரை போகிறது.அவர்கள் இருவரையும் சில காலம் பிரிந்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

இந்நிலையில், கணவன், அலுவலகத்தில் கையாடல் செய்ததாக  கைதாகிறான்.அவனை, அவனது வக்கீல் மனைவி காப்பாற்றுகிறாள்.

நகைச்சுவையுடன் சொல்லப் பட்டது இந்நாடகம்.

பி டி ரமேஷ், நாஞ்சில் ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.

நாடக வசனங்கள் சில-

இந்தப் பொண்ணுங்கக் கிட்ட "என்னை லவ் பண்றியா?ன்னு கேட்கறதும், பஸ்ல கண்டக்டர் கிட்ட சில்லறை இருக்கான்னு கேட்கறதும் ஒன்னுதான்.இருந்தாலும் இல்லைன்னுதான் சொல்லுவாங்க

2)உமாங்கற பயிர் இருபத்தைந்து வருடமா ஒரே இடத்திலே விதைக்கப்பட்டு, வளர்ந்து இப்போ பூத்திருக்கு,அதை ,ஒரே நாள்ல பெயர்த்து வந்து, இன்னொரு புது இடத்திலே நட்டா..அது அந்த மண்ணைப் பற்றிண்டு வளர கொஞ்ச காலம் தேவைப்படும்.ஏன்..சில சமயங்களில் அந்தச் செடியே வாடிடும். அந்தச் செடிக்கு நம்ம அன்பான பராமரிப்பு இருந்தா கொஞ்ச கொஞ்சமா புதுசா துளிர் விட்டு வளர ஆரம்பிக்கும்

3) இல்லறம்ங்கிற ஐந்தெழுத்து நல்லறம்ங்கிற ஐந்தெழுத்தாக ஆகணும்னா புரிதங்கற நாலெழுத்து கண்டிப்பா வேணும்

4) ஓடம் ஓட நீர் அவசியம்.நீரின்றி ஓடம் ஓடாது.ஆனா ஓடம் ஓட நீர் வெளியே இருக்கணும்.உள்ளே இருந்தா அது மூழ்கிடும்.நாம வாழற சமுதாயத்திலெ பணமும் அப்படித்தான்.பணம் வாழ்க்கைங்கற ஓடத்துக்குள்ள பூந்துட்டா அவவ்ளவுதான். வாழ்க்கையே அழிஞ்சுடும். வாழ்க்கைங்கற ஓடத்துக்கும் பணம் வெளியே ஆதரவா இருக்கணும்

5) வாழ்க்கை பல அற்ப விஷயங்களையும், பல அற்புத விஷயங்களையும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கு.நாம் அற்பர்களாக இருந்தா அற்ப விஷயங்களே முக்கியத்துவம் அடையுது

அடுத்த பதிவில் சந்திப்போம்
  

Saturday, September 22, 2018

நாடகப்பணியில் நான் - 67

"சாலையோரப் பூக்கள்" நாடகத்திலிருந்து சில வசனங்கள்

1) பொய் சொல்லாத பொழைப்பு ஆசிரியர் தொழில் தான்.உலகம் முழுதும் நாலும், மூணும் ஏழுதான்.ஆறுன்னு சொல்லிக் கொடுக்க முடியாது.இந்தியாவின் தலைநகரம் டெல்லிதான் மும்பைன்னு சொல்லிக் கொடுக்க முடியாது.

2)பிரச்னைகள்ங்கறதை நாமே உருவாக்கிக் கொள்வதுதான்.நமக்கு ஒரு பிரச்னை வந்தா , முதல்லே கொஞ்சம் யோசனைப் பண்ணனும்.அப்பத்தான் அதற்கானத்
தீர்ப்பும் நம்ம கிட்டேயே இருக்குன்னும் தெரியும்

3)அப்பாவோட மனசு கல்லுக்குள் ஈரம் போல.எங்கே அந்த ஈரம் வெளிப்பட்டா குழந்தைகள் பாதை மாறிப் போயிடுவாங்களோன்னு தன்னை வெறும் கல்லாவே காட்டிகிறாங்க.அப்பாவோட அருமை அப்பா செத்தாத்தான் தெரியும்னு சொல்லுவாங்க

4)உண்மையைச் சொல்லணும்னா வாடகைத் தாய்னு சொல்றது கூட தப்புதான்.அம்மாவிற்கு பதிலான தாய் என்பதே சரி.surrogate motherனா என்ன அர்த்தம் தெரியுமா? substitute ..அதுதான் உண்மையான அர்த்தம். கிரிக்கெட் மேட்ச்ல 12த் மேன்னு ஒருத்தன் இருப்பான்.விளையாடற 11 பிளேயர்ஸ்ல யாருக்காவது காயம் ஏற்பட்டா அவனுக்கு ஃபீல்டிங் மட்டுமே செய்ய அனுமதி.அவனால bat paண்ணமுடியாது. ஏன்னா அவன் substitute.. அதுபோல நானும் உங்கக் குழந்தைக்கு substitute அம்மாவா இருக்கேன்.உங்கக் கூட எல்லாம் சேர்ந்து வாழ அனுமதி இல்லை.Yes, I am also Like the 12th man.ஆனா team playersக்கு கிடைக்கிற benefit எல்லாமே அவனுக்குக் கிடைக்கும் அதுபோல உங்களுக்குக் கிடைக்கிற ஆதாயத்திலே எனக்கும் பங்கு வேண்டும்

5) உலகத்திலேயே இருக்கிற உறவுகள்ல உன்னத உறவு பெத்தெடுத்த தாய் தான்டா.ஒரு தாய் தன் குருவில் அந்த சிசுவிற்கு தன் உதிரத்தைக் கொடுக்கிறா.பிறந்ததும் சிசுவோட தொப்புள் கொடியைத்தான் மருத்துவர்களால் கட் பண்ண முடியும்.தொப்புள் கொடி உறவை முடியாதுடா

6) உலகத்திலேயே சிறந்தது தாய்மை.அந்தத் தாய்மையையே பிற குடும்பங்களின் மகிழ்ச்சிக்காக தியாகம் பண்ணும் வாடகைத் தாய்மார்களுக்கு இந்நாடகம் சமர்ப்பணம் 

நாடகத்தில் தொழில் அதிபராக ரவிக்குமாரும், வாடகைத் தாய், மற்றும் அவள் மகள் ஆகிய இரு வேடங்களில் ராஜஸ்ரீ பட்டும் வந்து அமர்க்களப்படுத்துவார்கள். 

நாடகப்பணியில் நான் - 66

"கோவை பத்மநாபனின்" குட்வில் ஸ்டேஜிற்காக நான் எழுதித் தந்த நாடகம் "சாலையோரப் பூக்கள்"

இது ஒரு வாடகைத்தாயின் கதை என்று கூறலாம்.

ஒரு பிரபல தொழிலதிபர் தன் மனைவி, மருத்துவரான மகனுடன் ஆனந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அப்போது, அவர் மகன் நடத்தும் மருத்துமனைக்கு ஒரு இளம் பெண்..கோமா நிலையில் உள்ள தன் தாயுடன் வருகிறார்.அந்த இளம்பெண் மருத்துவரிடம், அந்நகரில் தனக்குத் தெரிந்த ஒரே நபர், அந்தத் தொழிலதிபர் என் கிறாள்.

மருத்துவருக்கோ அதிர்ச்சி.ஏனெனில் அவள் சொன்னது அவரின் தந்தையின் பெயரை.

இளம் பெண்ணினால் அக்குடும்பத்தில் குழப்பம் வருகிறது.இந்நிலையில், அப்பெண் தொழிலதிபரின் மகள் என்றும் தெரிய வருகிறது.

இதனிடையே, அப்பெண்ணின் தாய் மரணம் அடைய, தொழில் அதிபர் அவளின் இறுதிச் சடங்குகளைத் தன் மகன் செய்ய வேண்டும் என் கிறார்.

அதற்கான காரணம்...தெரிய வரும் போது..அவரின் மனைவியைத் தவிர மற்றவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதுவே கதை.

வெள்ளித்திரைக்கு ஏற்ற கதை.இன்னமும் அவ்வப்போது..இக்கதை எனக்குத் தெரிந்த திரையுலக நண்பர்களிடம் சொல்லி, இதற்கான தயாரிப்பாளர்கள் கிடைக்குமா எனக் கேட்டு வருகின்றேன்.

இந்நாடகத்தின் முக்கிய வசனங்கள் அடுத்த பதிவில் 

Friday, September 21, 2018

நாடகப்பணியில் நான் - 65

எனது "சௌம்யா" குழு நாடகங்களுக்கு இடையே, ஜெயகீர்த்தனா குழுவினருக்காக நான் எழுதிக் கொடுத்த நாடகம் "உறவுகள் மலரட்டும்".

இந்நாட்களில்.ஒவ்வொருவர் இல்லத்திலும் ஓரிரு குழந்தைகளே இருப்பதால்,பல உறவுகள்..குறிப்பாக..பெரியப்பா, சித்தப்பா, அத்தை,பெரியம்மா , சித்தி போன்ற உறவுகள் அழிந்து வருகின்றன.

நான் எழுதிக் கொடுத்த இந்நாடகத்தின் நாயகி, "இப்பேர்பட்ட நிலையில்...நாம் ஏன் புது நடைமுறையை நம் வாழ்வில் கொண்டு வரக்கூடாது? " என வினவுகிறாள்.

படடாபி - இந்திரா சொன்ன கூட்டுக் குடும்பம் பற்றி எங்கப்பா, அம்மா கிட்ட பேசினேன்.கொஞ்ச நேரம் யோசனை பண்ணினாங்க.பிறகு, இந்திரா நம்ம வீட்டு மரு(று) மகள்.அதாவது எங்களுக்கு இன்னொரு மகள்.அதுபோல நீ அவங்க வீட்டுக்கு மரு (று) மகன்.அதாவது அவங்களுக்கு இன்னொரு மகன்.அதனால..மகன் வீட்டுல அப்பா, அம்மா இருப்பதைப் போல , மகள் வீட்டிலநாங்க இருக்கப் போறோம்.அவ்வளவு தானேன்னு எல்லோரும் ஒன்னா இருக்க சம்மதிச்சுட்டாங்க.

இந்திரா- இரு தரப்பு பெற்றோரோட நாங்க வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.இன்றைய இளைய சமுதாயமும் இதை ஆரம்பித்தால், மீண்டும் உறவுகள் தழைக்க ஆரம்பிக்கும்.உதிர்ந்த சிறகுகளை வளர்த்தாக வேண்டிய பறவைகளைப் போல..புதிய உறவுகளை துளிர்க்க வைக்க வேண்டியது இன்றைய இளைஞர்கள் கடமை..ஆகவே சேகர், மனோ, ஆனந்தன் நீங்களும் எங்கக் கூட உறவினைத் தொடர்ந்தால்..எங்க குழந்தைகளுக்கு சித்தப்பா. சித்தி ஆகிய உறவுகளும் மீண்டும் பூக்கும்

2)இந்த உலகமே மூன்று விஷயங்களை வைச்சுதான், ஒரு மனிதனை எடை போடுது
அவனது தோற்றம், அவனது தகுதி, அவனது வார்த்தைகள்

3)குழந்தை பிறக்கலைன்னு ஒரு ஆபரேஷன்.குழந்தை பிறப்பதில் சிரமம் என்றால் ஒரு ஆபரேஷன்.குழந்தை வேண்டாம்னா ஒரு ஆபரேஷன்..இப்படி வயிறு முழுக்க அறுவை சிகிச்சைகளால் போடப்பட்ட தையல்களுடன் இன்றைய தையல்கள் உலா வருவது உங்களுக்குத் தெரியுமா?

4)நம்ம முதுகுக்கு பின்னால் பேசறவங்களைப் பத்தி கவலைப் படாதீங்க! அவங்களுக்கு இரண்டடி முன்னால நாம் இருக்கோம்னு சந்தோஷப்படுங்க

அடுத்த நாடகம் பற்றி அடுத்த பதிவில்..

Thursday, September 20, 2018

நாடகப்பணியில் நான் - 64

"காத்தாடி" நாடகத்தின் வசனங்கள்

1) அம்மா..நம்ம வாழ்க்கை..சாப்பிடறப்போ நாம கீழ சிந்தறோமே அந்த சோத்துப் பருக்கைப் போலத்தான்.கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பாரு..
களத்து மேட்டுல.. அரவை ஆலையில, கடையிலே..அரிசி களையும்போது...சாதம் வடிக்கும் போது..அப்படின்னு எத்தனை இடங்கள்...எல்லா இடத்தில இருந்தும் தப்பி வந்து...அதனோட பிறவிப் பயனுக்காக..சாதமாக மாறி நம்ம தட்டுல,,நம்ம கைக்கு வந்து..தவறி கீழே விழுந்துடுது.எவ்வளவு பாவம்மா அது.
நம்மோட பிறப்பும் ..அந்த அரிசியைப் போலத்தான்.நாமும் நம்ம வாழ்க்கையில..எவ்வளவு இடங்களில் இருந்து தப்பித் தப்பி..வாழ்க்கையைக் கடந்து வந்து இருக்கோம்.
ஒருபோதும் அற்புதமான இந்த வாழ்க்கையை வீணாக்கக் கூடாது அம்மா
கடைசி நிமிஷத்தில..தவறிப் போய் தன்னோட பிறவிப் பயனை அடையாத அந்த சோத்துப் பருக்கையைப் போல..வாழ்க்கையில தவறிப் போறவங்க எத்தனைப் பேர்..கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பார்

2) மனம் அமைதியா இருக்கணும்னா மறக்க முடியாததை மன்னிக்கணும்..மன்னிக்க முடியாததை மறந்துடணும்

3)   ஒவ்வொரு ம்னுஷனுக்கும் மனைவி அமையறது மிகப் பெரிய கொடுப்பினைடா.ஒருவன் மனைவியை நேசிக்கறது பெரிசில்லை.அதை அவன் வெளிப்படுத்தணும்.
ஒருவனுக்கு முதல் பாதில துணையாக வரது தாய்..
பின் பாதியில வரவ மனைவி.தாய் மறைந்தும் தாரம் இருப்பதால்தான் அந்த இழப்பை அவன் சமாளிக்கிறான்.ஆனா...தாரத்தை இழந்துட்டா..அவன் அனாதை. அப்படிப்பட்ட உறவை இன்னிக்கு Just Like that decide பண்ணிடறாங்க

4)இன்னிக்கு இளைய தலைமுறை எல்லாம் காத்தாடி மாதிரி.பணம், நாகரிகம்,சௌகரியம், பண்பாடு மீறுதல் ஆகிய சூறாவளிக் காற்றால அந்த காத்தாடி இலக்கு இல்லாம பறந்து கிட்டு இருக்கு.அதனால், ஒரு கட்டத்துல அறுந்து போய் பலனில்லாமல் எங்கேயோ போய் விழுந்து, அழிஞ்சுப் போறது.
காத்தாடி உயர உயரப் பறக்கலாம்.தப்பில்லை.அதுதான் அதோட வேலையும்.ஆனா..அதைக் காப்பத்தறது ..காத்தாடியில் இருந்து கண்ணுக்குத் தெரியாம அதை control  பண்ண ஒரு நூலிழை கீழே ஒருத்தன் கையில இருக்கே அதுதான்.
அதுபோல பெத்தவங்க கையில..இளைஞர்கள் என்னும் காத்தாடியின் நூலிழை இருக்கணும்.yes பெத்தவங்க control ல தான் அவங்க வாழ்க்கையை ஆரம்பிக்கிற வரை இருக்கணும்.
அந்த நூலிழையை பெத்தவங்க யாரும் விட்டுடாதீங்க..விட்டீங்க..வேதனை உங்களுக்கு மட்டுமில்ல..காத்தாடியான உங்க குழந்தைகளுக்கும் தான்

(அடுத்த நாடகம் பற்றி அடுத்த பதிவில்)

Wednesday, September 19, 2018

நாடகப்பணியில் நான் - 63



"காத்தாடி" நாடகத்தில் மேலும் குறிப்பிடும்படியான வசனங்கள்

1)தண்டவாளமும் ஓடி..நாமும் ஓடினா குறிப்பிட்ட இடத்தை அடைய முடியாது.பெத்தவங்க தண்டவாளம் போல இருந்தாத்தான் பிள்ளைகளால் நல்ல நிலைமைக்கு வர முடியும்

2)Perfect Maturity ன்னா யாராவது உன்னைக் காயப்படுத்தினா அவங்க எந்த  நிலைமைல அப்படி பண்ணினாங்கன்னு புரிஞ்சுண்டு..திரும்ப அவங்களைக் காயப்படுத்தாம இருக்கறதுதான்

3)சிறகு கட்டிவிட வேண்டியதுதான் பெத்தவங்க வேலை.பறக்கறதுக்கு அவங்க உதவி தேவையில்லைன்னு இளைய சமுதாயம் நினைக்குது

4)தடுமாறி விழறது தப்பு இல்லை.ஆனா..அப்படி விழுந்தவங்க மறுபடி எழுந்து நிற்க முயற்சி பண்ணனும்.அதைவிட்டுட்டு..நான் விழுந்துட்டேன்..எழுந்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா..என்ன செய்ய முடியும்? ஒருத்தருக்குத் தோல்வி வரலாம்.தோல்வி மனப்பான்மை வரக்கூடாது

காத்தாடி நாடகத்தைப் பார்த்துவிட்டு, ஒரு ரசிகர் எழுதிய மின்னஞ்சல்



Respected Director Sir, 

" Kathadi" is a good drama to create awareness and many lessons to parents & youth. We enjoyed the drama fully. . Last few scenes are really came out well. 

We will be happy to invite you soon to make repeated performance in other areas like Ashok Nagar, Anna Nagar, Nanganallur. Let us wait & see for "God's wish"

I will contact you soon


Growing together is a sign of Success.
Pranams & Dhanyawad

TSIyer

(அடுத்த பதிவுடன் "காத்தாடி" நாடகத்தின் வசனங்கள் முடியும்)

Tuesday, September 18, 2018

நாடகப்பணியில் நான் - 62



"காத்தாடி " நாடகத்திலிருந்து சில வசனங்கள்..

1) அமெரிக்காவிலே இருக்கறவங்களுக்கு அந்த ஆண்டவன் அருள் இருக்குடா.அது சிவனோ..ஏசுவோ அதைப்பற்றி கவலையில்லை,அவங்க டாலர் நோட்டிலே ஒரு வரி இருக்கும்
"In God We Trust" னு .அதுபோல நம்ப நாட்டிலே நோட்டில அச்சிட முடியுமா?

2)நமக்குள்ளே இப்ப என்ன உறவு.நான் யாரோ! நீ யாரோ! இந்த சமயத்திலே நாம இரண்டு பேரும் Just Living Together அவ்வளவுதான்.நாம இப்படியே இருந்துட்டு..அப்புறமும் நமக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம் என்பதுதான் நமக்குள்ளே கண்டிஷன்.அதனால என் பணத்தை செலவழிக்க நான் யோசிக்கணும்.உன் பணத்தை செலவழிக்க நீ யோசிக்கணும்

3) எந்த தோல்வியும் நம்மை வீழ்த்துவதாக இருக்கக் கூடாது.தோல்வியை வீழ்த்துபவர்களாக நாம இருக்கணும்.தோல்வி ஏற்படுவது நம்ம அடுத்த செயலை கவனமாகச் செய்வதற்கான எச்சரிக்கை ஆகும்

4)வாழ்வில் வெற்றி குறைவு.தோல்வி அதிகம்னு வருந்தாதே! செடியில் இலைகள் அதிகம் என்றாலும் அதில் பூக்கும் மலருக்கே மதிப்பு அதிகம்

5)பெண்கள் ஆண்கள் சொல்றதை எல்லாம் நம்பற முட்டாள்கள் அல்ல.அவங்க..நம்மளை காயப்படுத்தக் கூடாதுன்னு நம்பற மாதிரி நடிக்கறாங்க

6) நடந்ததை எல்லாம் திருப்பிப் பார்க்கக் கூடாதுன்னுதான் அந்த ஆண்டவன் நம்ப தலையைபின் பக்கம் திரும்ப முடியாமல் படைச்சு இருக்கான்

7) மனுஷன் வாழ்க்கையிலே கஷ்டப்பட்டு படிச்சு, வேலையை தேடிண்டு, கல்யாணம் பண்ணின்டு, குழந்தைகளைப் பெத்து...அவங்களை முன்னுக்கு கொண்டு வந்துட்டு..அப்பாடா! வேலையில் இருந்து ரிடையர் ஆனதும் இனி எஞ்சிய காலத்தை நிம்மதியாய் கழிக்கலாம்னு நினைக்கிறது...இந்த வியாதிகளுக்கு எப்படி தெரியறதுன்னு தெரியலை.வேக வேகமா ஓடி வந்து உடம்புல புகுந்துண்டு எதையுமே சாப்பிட விடாம ஆக்கிவிடுது.பேசாம ..செத்துத் தொலைக்கலாம் போல இருக்கு

மரணத்தைப் பத்தி கவலைப்படாதே! நீ இருக்கும் வரை அது வரப் போறதில்ல. அது வரும் போது நீ இருக்கப் போறதில்லைன்னு விவேகானந்தர் சொல்லியிருக்கார்.

(காத்தாடி நாடக வசனங்கள் அடுத்தப் பதிவிலும் தொடரும்)

Monday, September 17, 2018

நாடகப்பணியில் நான் - 61



மழையுதிர் காலம் முடிந்தபின் அரங்கேறிய நாடகம் "காத்தாடி"

லிவிங் டுகெதர் ..

இன்று பரவலாக பல இடங்களில் நடந்து வருகிறது.இதை அன்றே எங்கள் நாடகத்திற்கான கருவாக எடுத்துக் கொண்டேன்.

இதில் மற்றொரு புதுமையும் செய்தேன்.முதல் இரு காட்சிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.

அதாவது..பிளஸ் டூ படிக்கும் மாணவன் வீட்டில் பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும் என்றும்..அதே மாணவன் இஞ்சினீரிங் படிப்பை முடித்து கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலை கிடத்ததும் பெற்றொரின் மனநிலையையும் அந்த இரு காட்சிகளும் சொல்லும்.

முதலில் சற்றே புரியாமல் இருக்கும் ரசிகர்கள், சிறிது நேரம் கழித்து புரிந்து கொண்டு இரண்டாம் காட்சியை ரசிப்பர்.

இந்நாடகத்தில் ஜெயசூர்யா, ரமேஷ்,   என் நடிப்பு ஆகியவை பாராட்டுப் பெற்றன.அல்சைமர் நோயாளியாக வந்த ராஜேந்திரனின் கதையைக் கூறும் கட்டத்தில்  கண் கலங்காமல் இருக்க முடியாது.

இந்நாடகம் எழுதியமைக்கு நான் மிகவும் பெருமையடைகிறேன்.

இது போன்ற கருவினைக் கொண்ட நாடகங்கள் ஏன் திரைப்படத்துறையினர் கண்களில் படுவதில்லை? என எனக்குத் தெரியவில்லை

நாடகத்தில்வந்த சிறந்த வசனங்களையும், நாடகத்திற்கு "காத்தாடி" என்ற பெயரை ஏன் வைத்தேன் என்பது அடுத்த பதிவில்  

Sunday, September 16, 2018

நாடகப்பணியில் நான் - 60

எனது மழையுதிர் காலம் நாடகத்திலிருந்து சில வசனங்கள்

1)உங்க எழுத்துலக சேவைக்கு உங்களுக்கு என்னிக்கோ இந்த விருது கொடுத்து இருக்கணும்.Better Late than Never

ஆமாம்.அந்த நெவர் பலருக்கு நடந்து இருக்கு.அதைத்தவிர இப்ப எல்லாம் விருதுகள் காலன் நம்மை அழைக்கிற நேரத்தில் தான் கிடைக்கிறது.அப்படியே அந்த விருதினை வாங்கி அவன் கிட்ட கொடுத்துட வேண்டியிருக்கு

2)இப்ப எழுத்துத் துறையில சிறந்த எழுத்தாளரைக் கூட சரியாக வெளிச்சம் போட்டுக் காட்ட ஆளில்லாததால் அவர்களால் சோபிக்க முடியாமல் போகிறது

3)எழுத்தாளர்களிலே மூன்றுவகை உண்டு.சிலர் எரி நட்சத்திரங்கள்..ஒளிர்ந்து..விழுந்து உடனே மறைந்து விடுவார்கள்.சிலர் கிரகங்கள் போல சில காலம் இருப்பார்கள்.சிலர் மட்டுமே நிலாக்கள். மறுபடி..மறுபடி..நினைவுகள்ல இருப்பாங்க

4)எழுத்தாளனுக்கு ஒவ்வொரு கதையும், பிரசவம் போலத்தான்.வலிகளுக்கு நடுவேத்தான் அவனுக்குக் கதை பிறக்கிறது

5) THe suffering of the past and fears of the future should not be allowed to disturb the pleasure of the present

Saturday, September 15, 2018

நாடகப்பணியில் நான் - 59

"கருப்பு ஆடுகள்" நாடகம் எனக்கு மாபெரும் வெற்றி நாடகமாக அமைந்ததுடன், மைலாப்பூர் அகடெமியினரால் 'சிறந்த ஆல்ரவுண்டர்" என்ற விருதினையும் பெற்று தந்தது.

அடுத்த என் நாடகம்..ஒரு திரில்லர்..

இரண்டே பாத்திரங்கள்..

இதை வைத்து என்ன திரில்லர் என்கிறீர்களா?  இருவரும் ஒருவரை ஒருவர் கொல்லப் பார்க்கின்றனர்.அதில் வெல்வது யார்? என்பதே நாடகம்.

இது போன்ற நாடகங்களை வடுவூர் துரைசாமி ஐயங்கார் பாணி எனலாம்.மிக்க படித்தவர்கள் ஹிட்ச்காக் பாணி என்றும் சொல்வர்

ஆம்..அவர் நாவல்கள் முதலிலேயே குற்றவாளியினை சொல்லிவிடும்.பின், அதை எப்படி நிரூபிக்கிறார்கள்? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லுவார்.

உதாரணமாக, "திகம்பர சாமியார்" என்ற படத்தைச் சொல்லலாம்.

சரி...என் நாடகத்திற்கு வருகிறேன்...திரில்லர் என்றேன் பெயரைச் சொல்லவில்லை அல்லவா?

அந்நாடகம் "மழையுதிர் காலம்"

ரமேஷ், ஜெயசூர்யா ஆகியோர் நடித்தனர்.இந்நிலையில், எங்களது நிரந்தர நடிகரான கரூர் ரங்கராஜனுக்கான நடிக்கும் வாய்ப்பு இதில் இல்லை..என்பதால்..அவருக்காக பத்திரிகை ஆசிரியர் என்ற பாத்திரத்தை இணைத்தேன்..

இப்போது இந்நாடகம் மூவர் நடிக்கும் நாடகமாக அமைந்தது.இவர்களுடன்..இடி, மின்னல், மழை, இசை , அரங்க அமைப்பு ஆகியவையும் தன் பங்கினை சிறப்புடன் ஆற்ற நாடகம் மாபெரும் வெற்றி.

ரமேஷ்...கண்ணில்லாதவராகவும், ஃபிளாஷ்பேக்கில் கண்ணுள்ளராகவும் மாறி மாறி வந்தாலும்..மறக்காமல் பாத்திரத்திற்கேற்றாற்போல மாறி பாராட்டினைப் பெற்றார்.

இசை, ஒளி அமைப்பிற்கான விருதினையும், சிறந்த நாடக ஆசிரியனுக்கான விருதினையும் பெற்று தந்த நாடகம்.

தனிப்பட்ட முறையில் நாரத கான சபாவின் காரியதரிசியாக இருந்த அமரர் கிருஷ்ணசாமி அவர்கள் என்னை பாராட்டியதை என்னால் மறக்க இயலாது  

Friday, September 14, 2018

நாடகப்பணியில் நான் - 58



அடுத்து 2011ல் அரங்கேறிய நாடகம் "கருப்பு ஆடுகள்"

ஒரு தீவிரவாதி எப்படி உருவாகிறான் என்பதைச் சொன்ன நாடகம்

தன் கண்முன்னாலேயே நடக்கும் ஊழல் அதற்கு பலிகடா ஆனவன் ..அரசியல்வாதி ஒருவனைக் கொலை செய்து விட்டு, அவர்களின் அடையாளம் தெரியா தலைவனின் கட்டளைப்படி ஒரு மருத்துவரின் வீட்டினுள் கால் அடிபட்டு அராஜகமாக நுழைந்து விடுகிறான்.

அவனின் கதையைக் கேட்டு அவனை காவல்துறையில் மாட்டிவிட மனமின்றி வைத்தியம் பார்க்கிறார் மருத்துவர்.

இதனிடையே, அவன் அங்கே தங்கியிருப்பது காவல் துறைக்குத் தெரிய வர, அவர்கள் அங்கு வந்து அவனை கைது செய்தார்களா?

அவன் ஈடுபட்டிருந்த தீவிரவாதி இயக்கம், உண்மையிலேயே தீவிரவாதிகள் இயக்கமா?

அவர்களின் தலைவன் யார்?

என்பதையெல்லாம் சுவைப் பட சொன்ன நாடகம்

இந்த நாடகத்தில் நடித்த ஜெயசூர்யா சிறந்த நாடக நடிகனுக்கான விருதினைப் பெற்றார்

சிறந்த நாடக ஆசிரியருக்கான விருதினை நான் பெற்றேன்.

நீதிபதிகளாக இருந்து இவ்விருதிற்கு எங்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் "முத்ரா" பாஸ்கரும், பிரியா கிஷோரும்.

தவிர்த்து இந்நாடகத்திற்கு 95 மதிப்பெண்கள்  தனது விமர்சனம் மூலம் அளித்து என்னை கௌரவித்தார் முத்ரா பாஸ்கர்.

Thursday, September 13, 2018

நாடகப்பணியில் நான் - 57

சிற்சில சமயங்களில் சிற்சில நிகழ்ச்சிகள் நம்மை அறியாமல் நடந்து விடுவதுண்டு.

நிகழ்வுக்குப் பின்...ஆராய்ந்தால் அதற்கான காரணம் தெரிவதுண்டு.

அதுபோல, நட்பு காரணமாக நமக்கு சில இழப்புகள் உண்டாவதுண்டு.

இழப்பை உண்டாக்கிய நட்புகளெ பின் நம்மை பிரிவதுண்டு..

என்ன ஏதும் புரியவில்லையா? விளக்கமாகவே சொல்கிறேன்.

அடுத்து நான் எழுதிய நாடகம் "மனசேதான் கடவுளடா"

கடவுள் இல்லை என்று சொல்பவன் எதிர்பாராது ஒரு ஏடிஎம் திருட்டு வழக்கில் மாட்டிக் கொள்கிறான்.தனக்குத் துயரம் வரும்போது அந்த இறைவனை அழைக்கின்றான்.இறைவன் கைவிடவில்லை.நகைச்சுவை சற்று அதிகம் கலந்த ஸ்கிரிப்ட்.

இதுவே அந்த நாடகத்தின் ஒன் லைன்.

எனது முந்தைய நாடகங்கள் போலவே எனக்குத் திருப்தியை தந்த ஸ்கிரிப்ட்.

நடிகர்களின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் மேடையில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

ஆகவே..3 காட்சிகளுக்குப் பிறகு..கிடைத்த சபாக்களின் தேதிகளை நிராகரித்தேன்.

.
எந்த நாடகமும் முதலில் நமக்குத் திருப்தியை அளிக்க வேண்டும்.அப்போதுதான் அதே ரியாக்க்ஷனை மக்களிடமும் ஏற்படுத்தும்.

எனக்கு திருப்தியினை அளிக்கா அந்நாடகத்தைப் போடுவதை நிறுத்தியது சரிதானே!

    

தமிழ்நாடகபப்ணீயில் நான் - 56

அடுத்து நாங்கள் அரங்கேற்றிய நாடகம் "பத்ம வியூகம்"

ஏற்கனவே, யூஏஏ விற்காக மௌலி பத்மவியூகம் என்ற நாடக ஒன்றை எழுதியிருந்தார்.

ஆகவே, நம் நாடகத்திற்கும் அப்பெயரா? வேறு ஏதேனும் வைக்க முடியுமா? என யோசித்தேன்.ஆனால், "பத்ம வியூகம்" என்ற தலைப்பே சரி..என முடிவெடுத்தேன்.

காரணம்...

மகனை நம்பி, தன் வசதிக்கு அதிகமாக செலவழித்து டாக்டருக்கு படிக்க வைக்கின்றனர் ஸ்ரீனிவாசன்,மைதிலி தம்பதியினர்.ஆனால், படித்து முடித்ததும் தனக்கு ஒரு வளமான எதிர்காலம் வேண்டும் என விரும்பும் மகன் , பணக்கார பெண்ணை மணமுடித்து, அவர்கள் வீட்டு மாப்பிள்ளை ஆகிறான்.

பெற்றோரோ..மகன் செய்யும் தவறையெல்லாம் பொருட்படுத்தாது பிள்ளை பாசத்தில் தவிக்கின்றனர்

பாசம் என்பது, பத்மவியுகம் போல.அதனுள் சென்றுவிட்டால் வெளியே வரத் தெரியாது/ வரமுடியாது அபிமன்யூவைப் போல உயிரைவிடும் நிலையே உருவாகும் என்று சொன்ன நாடகம்

இதில் மைதிலியாக நடித்த காவேரி சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார்.கரூர் ரங்கராஜன் ஸ்ரீனிவாசன் பாத்திரம் ஏற்றார்.

இந்த நாடகத்தில் ஒரு கட்டத்தில் மகனின் கல்லூரி செலவிற்காக வேறு வழியில்லாமல் தாய் தனது தாலியைக் கழட்டித் தருவார்.அப்போது ஸ்ரீனிவாசன் நெஞ்சடைக்க.."மைதிலி:" என்பார்.
அதற்கு மைதிலி பாத்திரம் சொல்லும் வசனம்..

"ஏங்க..உங்களைக் கேட்காம இதை நான் செய்யறேனேன்னு பாக்கறீங்களா..
ஒரு கடிதத்தை தபாலில் சேர்க்கும் வரைக்கும் தான் அது எழுதினவருக்கு உரிமை.தபால் பெட்டியில் போட்டதுமே, அதில் எழுதப்பட்டுள்ள முகவரியாளருக்கே உரிமை.அதுபோல நீங்கக் கட்டின தாலி அதைக் கட்டறவரைக்கும் தான் உங்களுக்கு சொந்தம்.அதைக் கட்டினதுமே அது எனக்கு மட்டும்தாங்க சொந்தம்" எனக் கூறியபடியே அழுவார்.

அரங்கில் கைத்தட்டலை அள்ளிச் சென்ற காட்சி இது.  

Tuesday, September 11, 2018

நாடகபப்ணியில் நான் - 55





"என்று தணியும்" நாடக வெற்றிக்குப் பிறகு, அடுத்த நாடகம் குறித்து யோசித்தோம்.

பாரத ரத்னா, ஒரு ஆசிரியரின் கதை

சொல்லக் கொதிக்குது நெஞ்சம்..ஒரு கிராமத்தின் இன்றைய நிலை..தண்ணீர் பிரச்னை, காவிரி பிரச்னை, தீண்டாமை ஒழிப்பு என அனைத்தையும் சொன்னோம்

அடுத்து, "என்று தணியும்" மருத்துவம் படிக்க நினைக்கும் முற்பட்ட பிரிவினரும் சரி, பிற்படுத்தப்பட்டொரும் சரி படும் வேதனைகளைச் சொன்னோம்

அடுத்து..நாம் ஏன் ஒரு political satire செய்யக்கூடாது?என நினைத்தேன்.

அப்போது புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமியும்" சிறுகதை ஞாபகத்தில் வந்தது.

அதுபோலவே, இறைவன் தானே வந்து அரசியலில் ஈடுபட்டால் என்ன ஆகும்? என்பதை அன்றைய அரசியலுடன் கலந்து மக்கள் ரசிக்கும் படி செய்தோம்.

அந்த நாடகம் ."மாண்புமிகு நந்திவர்மன்"

அதே நாடகத்தை இந்த பத்து வருட அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து மீண்டும் வருகின்ற அக்டோபர் 4ஆம் நாள் அரங்கேற்றம் செய்கிறோம்.

அன்று.."நந்திவர்மனாக" நான் நடித்தேன்.
இப்போது அரங்கேறும் நாடகத்தில் அப்பாத்திரத்தை எங்கள் குழுவின் ஆஸ்தான நடிகர் பி டி ரமேஷ் செய்கிறார்.

அவருடன் கிரீஷ் வெங்கட், அம்பி ராகவன், சுரேஷ்,சுந்தர்,ஸ்ரீனிவாசன் ஆகியோரும் இணைகின்றனர்.

ஆனால்  நான்...

நான் இல்லாமலா.அன்று கரூர் ரங்கராஜ் ஏற்ற பாத்திரத்தை இன்று நான் ஏற்கின்றேன்


Monday, September 10, 2018

நாடகப்பணியில் நான் - 54



ஆண்டு 2007..
எனது புதிய நாடகம் "என்று தணியும்"
சாதாரணமாகவே நான் சிவாஜி ரசிகன்.குறிப்பாக கௌரவம் படத்தில் அவர் ஏற்ற பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரம் என் மனதைவிட்டு அழையாத ஒன்று.
நீயும் இதுபோல ஒரு பாத்திரத்தை எழுது...எழுது..என என் உள்மனம் என்னை தினமும் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.
அதை இந்நாடகம் மூலம் தீர்த்து கொண்டேன்..
ஆம்...இதில் அடவகேட் பத்ரிநாத் பாத்திரத்தை படைத்தேன்.பத்ரிநாத் ரஜினிகாந்தின் ஜூனியர் என்று சொன்னேன்.கரூர் ரங்கராஜ் இவ்வேடம் ஏற்றார்
சீனியரைப் போலவே ஜூனியரும், கொலைகாரன் என தெரிந்தும் தனசேகர்/விஸ்வநாதனை விடுவிக்கும் விதத்தில் வாதாடி வெற்றி பெறுவார்.

ஆனால்..அந்த விஸ்வநாதன், தனசேகர் ஆகிய இருவரையா? என்று கேட்டால் ..இல்லை இருவரும் ஒருவர்தான் 

இதுவரை மேடையில் தோன்றாத ஒரு பாத்திரம் 

ஆம்..ஸ்பிளிட் பெர்சனாலிட்டி ..

விஸ்வநாதனே தன்னையும் தனசேகர் என்று சொல்லிக் கொள்வான்

இதில் விஸ்வநாதன், மேல்சாதியில் பிறந்ததால்..தேவையான மதிப்பெண் இருந்தும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை

அதே நேரம்..தனசேகர்..தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவன்.ஆனாலும் உயர் பிரிவினரின் சதியால் மருத்துவம் படிக்க இயலவில்லை.ஆகவே தனசேகர் அதற்குக் காரணமாக இருந்த கனபாடிகளை கொலை செய்கிறான்.

வழக்கு நீதிமன்றம் வருகிறது.

தான் யாரையும் கொல்லவில்லை என சொல்லும் விஸ்வநாதன்..அடுத்த நொடியே தான் தனசேகரன் என்றும், தான் கனபாடிகளைக் கொன்றவன் என்றும் கூறுகிறான்.

அவனை வாதாடி விடுவிக்கும் பத்ரிநாத்திற்கு, கடைசியில் விஸ்வநாத்/தனசேகர் ஸ்பிளிட் பர்சன் அல்ல..அப்படி நடித்தான் எனத் தெரிகிறது

என்ன...தலை சுற்றுகிறதா..
நாடகம் பார்ப்போர் சிந்தித்து நாடகம் பார்த்தால் புரியும்.

இந்நாடகம் என் மாஸ்டெர்பீஸ் எனலாம்.இன்றும், இப்படி ஒரு நாடகத்தை மேடையேற்றியதற்காக எனக்குள் சற்று தலைக்கனம் உண்டு

இந்நாடகத்தில் நடித்த ஜெயசூர்யா சிறந்த நடிகனுக்கான விருதினைப் பெற்றார்.

நான் மிகவும் மதிக்கும் முத்ரா பாஸ்கர் தன் சமுத்ரா பத்திரிகையில் இந்நாடகத்திற்கு 95 மதிப்பெண்கள் கொடுத்து பாராட்டினார் 

தில்லி தமிழ்ச் சங்கத்தில் இந்நாடகம் நடந்து முடிந்த அடுத்தநாள் நாங்கள் ஷாப்பிங் செல்கையில் ஒரு சிறுவன் எங்களிடம் வந்து "அங்கிள்..இன்னிக்கு இப்போ இங்கக் கூட வரது தனசேகரனா இல்ல விஸ்வநாதனா? என்று கேட்டான்.இன்றளவும் அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை  இல்லை.

Sunday, September 9, 2018

நாடகப்பணியில் நான் - 53



சொல்லக் கொதிக்குது நெஞ்சம் நாடத்தின் மேலும் சில வசனங்கள்

(அல்லிக்கேணி கிராமத்திற்கு பிருத்வி என்ற இளைஞன் வருகின்றான்.அவன் மூக்கனிடம் விவசாயம் பற்றிக் கேட்கின்றான்)

பிருத்வி- விவசாயம் பத்தி எதாவது சொல்லுங்களேன்

மூக்கன்- விவசாயம் பத்தி..விவசாயிகள் பத்தி இன்னிக்கு இருக்கிற நிலமைலே என்னத்த தம்பி சொல்ல முடியும்?
நான் படிச்சவன் இல்ல தம்பி...ஆனாலும் அனுபவ அறிவால சொல்றேன்.
சோழ நாடு சோறுடத்துன்னு சொல்வாங்க..
ஆனா..இப்ப  தஞ்சையே உணவுக்குத் திண்டாடுது.அந்த நாள்ல நெல் ரகங்கள்லே 4 லட்சம் இருந்ததாம்.தினமும் மனுஷன் ஒரு ரக அரிசியை சாப்பிட்டா...மொத்த அரிசி வகைகளையும் அவன் ருசி பார்த்து முடிக்க 500 வருஷங்கள் ஆகுமாம்.ஆனா இன்னிக்கு இருக்கிற அரிசி ரகங்களை விரல் விட்டு எண்ணிடலாம்

சீரகசம்பான்னு ஒரு அரிசி..கேள்விப்பட்டு இருப்பியே... அதோட ருசி இருக்கே..அடேங்கப்பா..அதைச் சாப்பிட்டு பார்த்தவங்களுக்குத் தான் தெரியும்.அந்த சீரக சம்பா அரிசி எத்தனை வகை தெரியுமா?

ஈர்க்குச்சி சம்பா,ஊசிச் சம்பா,இலுப்பைச் சம்பா,கருவாலன் சம்பா,கம்பஞ் சம்பா,கனகச் சம்பா,கோட்டைச் சம்பா,மல்லிகைச் சம்பா,மாப்பிள்ளைச் சம்பா,மூங்கில் சம்பா,பொய்கைச் சம்பா,பொட்டிச் சம்பா,வரகச் சம்பா,சின்னட்டி சம்பா,சீரகச் சம்பா,சுந்தரப் புழுகுச் சம்பா,சூரியச் சம்பா,சொல்லச் சம்பா,பூலஞ்சம்பா,பூவானிச் சம்பா,டொப்பிச் சம்பா,பிரியாணிச் சம்பா

ஆனா, இன்னிக்கு....என்னிக்கு ரசாயன உரங்கள் வர ஆரம்பிச்சுதோ..அன்னிலேயிருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பிச்சுடுத்து...பல நெல் ரகங்களும் அழிந்துப் போச்சு

(மேலே குறிப்பிட்ட வசனத்தை மூக்கன் பாத்திரம் ஏற்ற கரூர் ரங்கராஜன் கூறி முடித்ததும் கைதட்டல்கள் அடங்க சில நிமிடங்கள் ஆகும்.
இந்நாடகம், கல்கத்தா, திருவனந்தபுரம்,தஞ்சை மாவட்டம் ஆகிய இடங்களில் நடத்த  வேண்டும் என விரும்பினேன்.அவ்விடங்களில் இது மிகவும் ரசிக்கப்படும்.ஆனால் என் ஆசை நிறைவேறவில்லை) 

Saturday, September 8, 2018

நாடகப்பணியில் நான் - 52



"சொல்லக் கொதிக்குது நெஞ்சம்" நாடகத்திலிருந்து மேலும் சில வசனங்கள்

1)அர்ச்சகர் - இன்னிக்கு பிராமணர்களும் சரி, தலித் மக்களும் சரி..தங்களைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் நிலையிலேதான் இருக்காங்க.என்ன ஒன்னு...பிராமணர்கள் என்னிக்கும் கோஷம் போட்டதோ...கொடி பிடித்ததோ கிடையாது.ஏன்னா அவங்க அவமானத்தைத் தாங்கிக்க பழைகிட்டாங்க.ஆனா..அது பூமராங்கா..அவமானப்படுத்தினவங்களையே திரும்பத் தாக்கும்னு மறந்துட்டாங்க.

2) ராமன்- இன்னிக்கு ஏதாவது நல்லது நடக்குதுன்னு வைச்சுக்கங்க..என்னோட மகிழ்ச்சியை எப்படிக் கொண்டாடறதுன்னு கேட்டா..இவங்க எல்லாம் அந்த ஆண்டவனுக்கு தங்கக் கவசம் போடலாம்னு சொல்லுவாங்க.ஆனால் நானோ...நாம கண்ணால பார்க்காத ஆண்டவனுக்கு எதுவும் செய்ய வேண்டாம்.அதுக்கு பதிலாக எழை மக்களுக்கு உதவி செய்தா போதும்னு சொல்லுவேன்.உடனே இவங்க என்னை நாத்திகவாதின்னு சொல்லிடுவாங்க

3)அர்ச்சகர் - குடிக்கிற தண்ணீ..அடிப்படை உரிமைங்கற நிலைமை மாறி..அடிப்படைத் தேவைங்கற நிலைக்கு வந்திடுத்து.வருங்காலத்திலே ஏற்படப்போகும் தண்ணீர் பஞ்சம்..மூன்றாம் உலகப் போரைக்கூட உண்டாக்கும்னு அறிக்கைகள் சொல்லுது

4)ராமன்- விவசாயி விளைவிக்கிற ஒவ்வொரு நெல்முத்துக்களும்..அவனோட வியர்வையில முளைச்ச முத்துக்கள்னு இந்த பட்டணத்து ஜனங்களுக்குப் புரியணும்.பொங்கல் அன்னிக்கு குக்கர் பொங்கல் வைச்சு..சூரியனை வணங்கறோம்னு சொல்லிட்டு சாமிமேல ஒரு கண்ணும், டிவி யிலே ஒரு கண்ணும் வைக்கிற மக்கள்..இது உழவர் திருநாள்..அந்த உழவன் வாழ்வு செழிக்கணும்னு வேண்டிக்கலாம் இல்லையா

(வசனங்கள் தொடரும்)

Friday, September 7, 2018

நாடகப்பணியில் நான் - 51



எனது 'சொல்லக் கொதிக்குது நெஞ்சம்" நாடகத்திலிருந்து சில வசனங்களை அடுத்த பதிவில் எழுதுவதாகச் சொன்னேன் அல்லவா..அவை கீழே

1) ஒரு காலத்திலெ, இந்தக் காவிரி நதியும், பச்சைப் பசேல்னு மரகத நிறத்திலே விளைகிற நெற்பயிரும்..இந்த அம்மன் கோயிலும்..மாசுபடாத காற்றும்..பறவைகளின் சப்தமும்..கிராமம்னா..இந்த அல்லிக்கேணி கிராமம்தான்னு அழகாயிருந்தது.இப்பவெல்லாம் நம்ம குடிதண்ணீருக்கே திண்டாட வேண்டியிருக்கு


2)பண்ணையாரிடம் அர்ச்சகர் -  ஏரு போட்டு உழறது, விதைக்கிறது,கதிரடிக்கிறது இப்படியெல்லாமே  செய்யப்போறது மூக்கன் தான்.ஆனா, அவனை மட்டும் உங்கக் கூட விதை விதைக்கும் பூஜைக்கு சமமாக வரக்கூடாதுன்னு சொல்றது எந்த விதத்திலே நியாயம்னு சொல்லுங்க.உண்மையைச் சொல்லணும்னா மூக்கன் மாதிரி ஆளுங்கதான் உங்களைப் போன்றவங்களுக்கு எஜமானன்,உங்க எஜமானர்கள்தான் உங்களுக்காக உழுகிறார்கள், விதிக்கிறார்கள், அறுவடை செய்கிறார்கள்

3) மூக்கனை அர்ச்சகர் தொட்டுவிட
மூக்கன் _ (அதிர்ச்சியுடன்) சாமி...
 அர்ச்சகர் - என்னடா..உன்னைத் தொட்டுட்டேனா..ஏன் நான் தொட்டா என்ன.நீயும் நானும் சமம்டா.எங்களுக்கு ஊருக்கு புறம்பா அக்ரஹாரம்.உங்களுக்கு ஊருக்கு புறம்பா சேரி.நீங்க இருக்கிற இடத்துக்கு நாங்க வரக்கூடாது.நாங்க இருக்கிற இடத்துக்கு நீங்க வரக்கூடாது.சுப, அசுப காரியங்களை பறை கொட்டி நீங்க தெரிவிப்பீங்க.நாங்க அதை நடத்தி வைப்போம்.எங்களுக்கு பூணூல் உண்டு.உங்களில் சில பிரிவினருக்கும் பூணூல் உண்டு. மடிசார் கட்டறேன்னு எங்க பெண்கள் புடவைத் தலைப்பை வலது பக்கம் போடுவாங்க.உங்களைச் சார்ந்த பெண்களுக்கும் வலது பக்கம் தான் தலைப்பு.நம்ம இரண்டுபேரை வைச்சுதான் அரசியல் கட்சிகள் விளையாடுது..உன்னை நான் தாராளமா தொடலாம்

(மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்)

Thursday, September 6, 2018

நாடகபப்ணியில் நான் - 50



பாரத ரத்னா நாடகம் வெற்றிக்குப் பின், அடுத்த கோடை விழாவில் போடப்பட வேண்டிய நாடகம் குறித்த விவாதத்தில் ஈடு பட்டோம்.
அப்போது, இம்முறை ஒரு கிராமத்தை மையப்படுத்தி நாடகம் போட தீர்மானித்தோம்.குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் உள்ள கிராமம்.

"சொல்லக் கொதிக்குது நெஞ்சம்" நாடகம் உருவானது.
ஒரு அழகான அம்மன் கோவில் செட் சைதை குமார் போட்டுத் தந்தார். கோவிலை ஒட்டி ஒரு அரச மரம், ஒரு டீஸ்டால்.

கோவில் அர்ச்சகராக நான், மூக்கன் எனும் தலித் கதா பாத்திரத்தில் கரூர் ரங்கராஜன், பண்ணையாராக முத்து சுப்ரமணியம். எதைச் சொன்னாலும் அதில் குற்றம் சொல்லும் ஏடாகூட ராமனாக ஜெயசூர்யா, டீக்கடைக் காரனாக ராஜேந்திரன்.

தீண்டாமை பிரச்னை, இரட்டைக் குவளை முறை டீக்கடையில், காவிரி தண்ணீர் பிரச்னை, அதனால் வளமை இழந்து வரும் கிராமம், என எல்லாவற்றினையும் சேர்த்து கதையாக்கினோம்.

ஒரு கட்டத்தில், அந்த கிராமத்தில் விவசாயம் அழிந்து, பண்ணையார் தற்கொலை செய்து கொள்ள.ராமன் பிழைப்புத் தேடி சென்னை செல்ல...தொழில் நகரமாக கிராமம் மாறுகிறது.

சில அருமையான வசனங்கள்.அவற்றை மட்டும் அடுத்த பதிவில் தருகிறேன்.

இந்நாடகம் சிறந்த நாடகத்திற்கான பரிசினைப் பெற்றது.மூக்கன் பாத்திரத்தில் நடித்த ரங்கராஜன், ஏடாகூடமாக நடித்த ஜெயசூர்யா ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான பரிசினைப் பெற்றனர்.

சிறந்த கதை, இயக்கம்,சிறந்த நாடகம் ஆகிய வற்றிற்கு எனக்கு விருது.

மொத்தத்தில் ஐந்து விருதுகளை இந்நாடகம் பெற்றது.நாடக அகடெமி சார்பில், சிறந்த அரங்க அமைப்பு என சைதை குமார் விருது பெற்றார்.

எல்லாவற்றையும் விட சிறந்த நாடகமாக தேர்ந்தெடுத்த நீதிபதிகளில் ஒருவராக நான் பெருமதிப்பினை வைத்துள்ள வீயெஸ்வி அவர்கள் இருந்தார் என்பதே எனக்குக்கிடைத்த மாபெரும்  விருதாகும்

இனி நாடக முக்கிய வசனங்கள் அடுத்த பதிவில்

Wednesday, September 5, 2018

நாடகப்பணியில் நான் - 49


"பாரத ரத்னா" நாடகம் என் நீண்ட நாளைய ஆசை ஒன்றை நிறைவேற்றியது? என்று சொன்னேன் அல்லவா?

அது என்ன என்று சொல்வதற்கு முன் ஒரு சிறு ஃபிளாஷ் பேக்..

கீழாம்பூர் அவர்களை எனக்குக் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாகத் தெரியும்.அவர் சிறுவனாய் இருந்த போதே , அவர் திறமைக் கண்டு வியந்தவன்.

தகப்பனுக்குப் பாடம் சொன்னவனைப் போல , கீழாம்பூர் ஒரு நாள் என்னிடம், "நீங்கள் சிறுகதைகள் ஏன் எழுதக் கூடாது?" என ஊக்குவித்தார்.அத்துடன் நில்லாது என் முதல் கதை "ஓய்வு" என்ற பெயரில் , ஜெயராஜ் அவர்கள் வரைந்த ஓவியத்துடன் கலைமகளில் பிரசுரமும் செய்தார்.
இதுவரை எனது 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன என்றால்..அதற்கானக் காரணம் கீழாம்பூரும், என்னை அவ்வப்போது மெருகேற்றிய நண்பர் வண்ணதாசனுமே.அவர்களுக்கு என் நன்றிகள்.

அந்த சமயங்களில், ப சிதம்பரமும், அவரது அண்ணன் ப லட்சுமணனும் இலக்கியச் சிந்தனை என்ற விருதினை ஏறபடுத்தினர்.மாதந்தோறும் பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த மாதத்திற்கான சிறந்த கதையாக இலக்கியச் சிந்தனை விருதினை அளிப்பர்.அந்த ஆண்டு முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளில் ஒன்றை சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்து கேஷ் பிரைஸ் அளிப்பர்.அந்த பன்னிரெண்டு கதைகளையும் வானதி பதிப்பகம் நூலாக வெளியிடும்.

எனக்கும் ஒரு முறையேனும் "இலக்கியச் சிந்தனை" விருதை பெற்றிட வேண்டும் என்ற ஆசை இருந்தது (முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டேனோ).

அந்த ஆசை "பாரத ரத்னா" நாடகம் மூலம் நிறைவேறியது.ஆம், 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடக நூலாக இலக்கியச்சிந்தனை விருது எனக்குக் கிடைத்தது.லட்சுமணன் சாருக்கு நன்றி

(இதுவரை நாடகத்திற்காக சுஜாதாவிற்கும், கோமலுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது இவ்விருது.மூன்றாவதாக நான்.எனக்குப்பின் ஸ்ரீவத்சனுக்கும், சித்ராலயா ஸ்ரீராமுக்கும் கிடைத்துள்ளது)

பாரத ரத்னா எனது நாடகப்பணியில் ஒரு மைல்கல் எனலாம்.

இனி அடுத்த நாடகம்...குறித்து விவாதித்தோம். என்ன முடிவெடுத்தோம்? அடுத்துப் பார்ப்போம்.

Tuesday, September 4, 2018

நாடகப்பணியில் நான் - 48

இந்த நாள் அன்று இந்தப் பதிவிற்குத் தனிச் சிறப்பு.
எப்படி அமைந்தது இப்படி? என வியக்கின்றேன்!
அப்படி என்ன விஷேசம் என்கிறீர்களா? சொல்கிறேன்.

ராஜகோபால் சொன்னதும் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து அவரிடம் கொடுத்தேன் என்றேன் அல்லவா?

அந்த நாடகம் "பாரத ரத்னா".2005ஆம் ஆண்டு கோடை நாடக விழாவில் நடத்திடும் சந்தர்ப்பத்தை அளித்தார்.

கரூர் ரங்கராஜன் சிறந்த நடிகர், நான் சிறந்த குணசித்திர நடிகன், சிறந்த வசனம், இயக்கம் என நான்கு விருதுகள்.  நீதிபதியாய் இருந்தவர்களில் ஒருவர் கீழாம்பூர் ஆவார்

இந்த நாடகம் தன்னலமற்ற ஒரு ஆசிரியரின் கதை.

நாடகத்தின் இறுதிக் காட்சியில் ஒரு பாத்திரம் கேட்கும் -  ஒரு நடிகன் தன் நடிப்புத் தொழிலைச் செய்ய கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார்.அதில் ஒரு பகுதி சட்ட விரோதமா கறுப்புப் பணம்.ஆனாலும் அவர்களுக்கு பத்மஸ்ரீ, பதமபூஷன் போன்ற விருதுகள்.ஒரு விளையாட்டு வீரர் தன் விளையாட்டு மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்,அவர்களுக்கு அர்ஜுனா அவார்டைத் தவிர பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகள்.இவையெல்லாம் அவங்க ஈடுபட்டிருக்கிற தொழில்ல அவங்க திறமையைக் காண்பித்ததற்காக.அவங்களுக்கெல்லாம் கொடுங்க வேண்டாம்னு சொல்லல... ஆனா,ஆசிரியர் தொழில்ல ஈடுபட்டு இருப்பவங்களுக்கு மட்டும் ஏன் இது போன்ற விருதுகள் கொடுப்பதில்லை? ஆசிரியர்கள் எல்லாம் திறமைசாலிகள் இல்லையா?

அதற்கு கலெக்டர் பாத்திரம் பதில் சொல்லுவார் -

உங்களுக்கு மட்டுமல்ல.உங்களைப் போல நிறைய பேருக்கு அதுபோல சந்தேகம் இருக்கு. பாரதரத்னாங்கறது நம்ம நாட்டோட உயரிய விருது. அதை இதுவரைக்கும் எத்தனைப் பேருக்குக் கொடுத்து இருக்காங்கன்னு.விரல் விட்டு எண்ணிடலாம்.
கர்நாடக இசையில் தனிப்புகழ்ப் பெற்று உலகையே வியக்க வைத்த ஒரு எம் எஸ்
ஏழைகளுக்கு இலவசக் கல்வி..மதிய உணவுன்னு உழைத்த அப்பழுக்கற்ற ஒரு காமராஜ்
பசுமைப் புரட்சி ஏற்படுத்திய சி எஸ்
ஜனாதிபதியாய் இருந்த ராதாகிருஷ்ணன்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை திறம்பட உருவாக்கிய அம்பேத்கர்
எம் ஜி ஆர்., சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறந்த விஞ்ஞானியாய் திகழ்ந்த அப்துல் கலாம்
இப்படி சிலரே! இப்படி அவுட் ஸ்டாண்டிங் பெர்சனாலிட்டுக்குத்தான் பாரதரத்னா கிடைச்சிருக்கு.
ஆனா..ஆசிரியர்களில் இப்படி அவுட் ஸ்டாண்டிங் பெர்சனாலிட்டின்னு எப்படி பாகுபாடு படுத்த முடியும்? நான் மேலே சொன்ன பாரதரத்னாக்கள் உருவாகக் காரணமானவர்கள் யார்?
ஆசிரியர்கள்தான்...
இதைத்தவிர இந்த ஆசிரியர்கள் உருவாக்கிய/உருவாக்கும் விஞ்ஞானிகள். எத்தனை..மென் பொருள் தொழில்நுட்ப வல்லுநர்கள் எத்தனை.ஐ பி எஸ், ஐ ஏ எஸ் அதிகாரிகள் எத்தனை..இப்படி எத்தனை..எத்தனைன்னு சொல்லிக் கிட்டேப் போகலாம்.
இப்படி அனைவரையும் உருவாக்கும் ஆணிவேர்களான ஆசிரியர்களில் யாரை பாரதரத்னான்னு சொல்ல முடியும்? ஆசிரியர்கள் அனைவருமே பாரதரத்னாக்கள் தான்.அதனால்தான் அவர்களைப் பிரித்துத் தனிப்பட்ட முறையில் யாருக்கும் அந்த விருதுகளை வழங்கறதில்லைன்னு நினைக்கிறேன்

இந்த நாளில்..இப்படிப் பட்ட பதிவு எப்படி சரியாக வந்தது.?
ஆச்சரியம்தான்..
ஆசான் கள் அனைவருக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகள்

இந்நாடகம் மேலும் என் நீண்ட நாளைய ஆசை ஒன்றை நிறைவேற்றியது? அது என்ன?

அடுத்த பதிவில் 

Monday, September 3, 2018

நாடகப்பணியில் நான் - 47

சாதரணமாக ஒரு நடிகனுக்கு ஒரு முறை மேக்கப் போட்டு நடித்தால் போதும், அவனால் பிறகு வாளாயிருக்க முடியாது.
ஏதாவது நாடகத்தில் மீண்டும் நடிக்க மாட்டோமான்னு மனசு ஏங்கும் என்று சொல்வார்கள் .பணம் அவனுக்கு பெரிதல்ல..மக்களின் பாராட்டுகளும், கைதட்டல்களும்..பணம் தராத மகிழ்ச்சியினை அளிக்கும் அவனுக்கு.

அது இருநூறு சதவிகிதம் உண்மை.

அந்த நிலை அன்று எனக்கும் ஏற்பட்டது.

இவ்வளவு நாட்கள் நாடகம் போடாமல் நாட்களை வீணே  கடத்தி விட்டேனே என வருந்தினேன்

அதற்கு ஏற்றாற் போல கண்ணனும், "ஏம்பா..சும்மா இருக்க.ஏதாவது நாடகம் போட ஆரம்பிக்க வேண்டியதுதானே1" என எனது ஆசையில் எண்ணெயை விட்டு , திரியையும் போட்டுவிட்டார்.

நாடகம் முடிந்ததும், கண்ணன் சொன்னதையே மனம் அசை போட்டு வந்தது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்..

அந்த நாடகத்தில் என்னைப் பார்த்த கார்த்திக் ராஜகோபாலிடமிருந்து அடுத்த நாள் எனக்கு ஃபோன்.
"என்னடா...நேத்து ரொம்ப நாள் கழிச்சு டிராமாவிற்கு வந்தே!ஏதாவது புது டிராமா போடப்போறியா? போடு..எப்ப தேதி வேணும் சொல்லு" என்றார்.

கண்ணன் போட்ட திரியை ராஜகோபால் தூண்டிவிட்டு கொளுத்தி விட்டார்.

இந்த சமயம் எனக்கு ஞானம் வந்தது.."எவ்வளவு காட்சிகள் போனால் என்ன..ஒரு ரசிகன் வந்து நாடகம் பார்த்தாலும் போதும்..மீண்டும் சௌம்யாவை துவக்க வேண்டியதுதான்" என தீர்மானித்தேன்.

ஆனால், அதை வெளிக்காட்டாமல் ,ராஜகோபாலிடம் "இந்த வருஷம் கோடை விழாவிலே தேதி தர்றீங்களா? நான் போடறேன்" என்றேன்.

அவர் உடனே முடிவைச் சொல்லவில்லை."நீ ஸ்கிரிப்டைக் கொடு" ன்னார்.

ஸ்கிரிப்ட் ஒன்றை அடுத்த ஒரு வாரத்தில் எழுதி அவரிடம் கொடுத்தேன்.

இப்படி  மீண்டும் என் நாடகப் பிரவேசத்திற்கு கண்ணனும், எனது நாடகத்தந்தையாகக் கருதும் ராஜகோபாலும் காரணமாயினர்.

இப்போது சொல்லுங்கள் நீண்ட நாட்கள் கழித்து பாம்பே கண்ணன் நாடகம் காண நான் போனது சரியா/தவறா?
ஏனெனில், அதுதானே மீண்டும் இன்றுவரை என்னை நாடகம் போட வைத்துக் கொண்டிருக்கிறது

ஆம்..ராஜகோபால் கோடை விழாவில் நாடகம் போட சந்தர்ப்பம் அளித்தாரா? அது என்ன நாடகம்? என்பன அடுத்த பதிவில்.

நாடகப்பணியில் நான் - 46

ஆண்டு 1993..க்கு பிறகு.

வடசென்னையில் மாதம் 30நாட்களும் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாடகங்கள்.
வடசென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட சபாக்கள்.
மன்றம் கிடைக்காமல், கலைவாணர் அரங்கம், ராணி சீதை ஹால் என நாடகக் குழுக்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து வந்த சபாக்கள் கொஞ்சமாய் மூடுவிழாவினைக் கண்டு வந்தன

கந்தன் ஆர்ட்ஸ், பாரத் ஃபைன் ஆர்ட்ஸ், கலாரஞ்சனி, இளங்கோ கலை மன்றம்,டென் ஸ்டார்ஸ், பிரபாத் கல்சுரல், மதி ஒளி, மெட்ராஸ் சோசியல்,கிட்டப்பா கலை அரங்கம், ஃபிரண்ட்ஸ் கல்சுரல், நேஷனல் ஆர்ட்ஸ்,மணிமேகலை ,கச்சாலீஸ்வரர் கான சபா இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...ஆகியவை மூடுவிழா கண்டன

தென் சென்னையிலும், நவரசா,கீதாலயா, அருணோதயா ,ஆனந்த் ஆர்ட்ஸ்,சக்தி ஆர்ட்ஸ்,பாலாஜி ஃபைன் ஆர்ட்ஸ் என பட்டியல் நீண்டுக் கொண்டே போனது.

டிவி நிகழ்வுவள், தனியார் சேனல்கள் வருகை என இதற்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டே போனாலும்..நாடகங்கள் காண வரும் ரசிகனுக்கு செலவுகள் அதிகமாகிப் போனதும் ஒரு காரணம் எனலாம்.

இந்நிலையில், நாடகம் மேடையேற்றினால் 100 காட்சிகளை சர்வ சாதாரணமாகக் கடந்த குழுக்கள், 25 காட்சிகள் நடத்தவே சிரமப்பட்டன.

அந்த காலகட்டத்தில்...இக்காரணங்களால் நாடகங்களை நடத்தி வந்த குழுக்கள் சிலவும் நாடகம் மேடையேறுவதை நிறுத்திக் கொண்டன

நான் மட்டும் விதிவிலக்கா என்ன? நானும் எனது சௌம்யா குழு மேடையேற்றும் நாடகங்களை நிறுத்துக் கொண்டேன்.

சில வருடங்கள் கழிந்தன.

அப்போதும், விடாமல் நாடகங்களை நடத்தி வந்தன சில குழுக்கள்.அதில் பாம்பே கண்ணனின் சுபா கிரியேஷன்ஸும் ஒன்று.

ஒருநாள் வழக்கம் போல என் நண்பன் பாம்பே கண்ணனின் நாடகம் ஒன்றிற்குச் சென்றேன்.

ஆனால், அன்று நாடகம் பார்க்கச் சென்றது தவறா/சரியா என இதுநாள் வரை எனக்குத் தெரியவில்லை.

ஏன் இப்படிச் சொல்கிறேன் என் கிறீர்களா? விவரம் அடுத்த பதிவில்  

Saturday, September 1, 2018

நாடகப்பணியில் நான் - 45

அடுத்த எனது நாடகம் பொதிகைக்காக..

ஒரு அரசியல்வாதி...
அவன் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்து பேச அழைக்கிறார்கள்.
பிரம்மாண்ட கூட்டம்..
அவனது சொற்பொழிவினைக் கேட்டு, சரமாரி கைத்தட்டல்கள்.
பாராட்டு மழையில் அவன்..
மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்து இறங்குகிறான்.
வீட்டு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சவில்லை..
வீட்டினுள் ஒரே குப்பை, தூசி
பெருக்கித் துடைக்கவில்லை.
மனைவியை அழைக்கின்றான்.."வேலைக்காரன் வரவில்லையா?" என் கிறான்.
அவளும் தயங்கியபடியே, நேற்று மாலை அவன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என சற்று முன்னதாகவே சென்றவன் இன்னமும் வரவில்லை என் கிறாள்.
அந்த சமயம் உள்ளே நுழைகின்றான் தயங்கயவாறே அவன்.
"ஏன்டா லேட்டு..சம்பளம் வாங்கற இல்ல.செய்ய வேண்டிய வேலையை ஒழுங்காச் செய்யலாம் இல்ல?" என்ற படியே கன்னத்தில் "பளார்..பளார்" என அறைகிறார் அரசியல்வாதி.
அந்த வேலைக்காரனின் வயது 10.