Tuesday, March 31, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 93

ஆசையை விட்டொழிப்போம்
-----------------------------------------

உயர்ந்த செல்வம் எது என சாமான்யனைக் கேட்டால், பணம், சொந்த விடு, நகை என சொல்லிக் கொண்டே போவார்கள்.முடிவே இருக்காது.

ஆனால்...சிலர் ஆரோக்கியமாய் இருந்தாலே மற்றதெல்லாம் பெறலாம் என்பர்,.

ஆனால்..வள்ளுவர் சொல்கிறார்..எல்லாவற்றையும் விட பெரும் செல்வம் "வேண்டாமை" என்று.

வேண்டாமை யன்ன விழிச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்(363)

என்கிறார்.


தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை.வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே சொல்லலாம்.

சுருங்கச் சொன்னால்..மேன்மேலும் வேண்டும்..வேண்டும் என்னும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்.

ஆசை என்பதே..எல்லோரிடமும்,எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதையாகுமாம்..


அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பினும் வித்து (361)

பெரும் ஆசை..அதாவது பேராசை என்பது பெரும் துன்பத்தைத் தரக்கூடியது.ஆகவே பேராசை ஒழிந்தால்தான் வாழ்வில் இன்பம் தொடர்ந்து இருக்கும்.

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்த்ள் துன்பங் கெடின் (369)


வேண்டும் என்பது வேண்டாமே! ஆசையை விட்டொழிப்போமாக!




Monday, March 30, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -93

நட்பின் இலக்கணம்
-----------------------------------

நல்ல நட்பு என்பதின் இலக்கணம் என்ன ?

இதைச் சொன்னதுமே , உங்களில் பலர்..

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (787)

என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.அதாவது..


அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படி கைகள் உடனடியாக செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தை ப் போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.
எனச் சொல்வீர்கள்.

வள்ளுவர் அதை மட்டும் சொல்லவில்லை.வேறொன்றும் சொல்கிறார்.


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை (789)

என்கிறார்.

அதாவது

மனவேறுபாடு இல்லாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவதுதான் நட்பின் சிறப்பாகும்.

சரி..நண்பன் நீங்கள் செய்ய வேண்டாம் எனும் ஒரு செயலை செய்துவிடுகிறான்.நான் அப்பவே "செய்யாதே" என்று சொன்னேனேஎன்று சொல்லிவிட்டு வாளாயிராது.. நண்பனை சிக்கலில் இருந்து விடுவிக்க வேண்டுமாம் அதுதான் நட்புக்கு இலக்கணம்.

முகத்தளவில் இன்முகத்தோடு இருந்தால் போதாது.மனமும் இனிமையாய் இருக்க வேண்டுமாம்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு (786)

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமில்லை.இதயமார நேசிப்பதே உணமையான நட்பாகும்.
.




Sunday, March 29, 2020

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்
-----------------------------------------------------------------

அது ஒரு சின்ன கிராமம். ஒரு காலத்தில் இங்கு நிறைய மக்கள் இருந்தார்கள். ஊரில் திருவிழாக்கள், கூத்து என்று அந்த ஊர் எப்போதும் கல கல என்று மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆனா, இப்ப அப்படி இல்ல. மழை தண்ணி இல்லாததால, வெவசாயம் இல்ல. ஊரு சனம் எல்லாம் ஒவ்வொன்னா ஊரைக் காலி பண்ணிட்டு போயிருச்சு.
ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. எல்லா வீடும் காலியா கிடக்கு. வீடு முற்றத்தில் அணில்கள் இறங்கி வந்து விளையாடி கொண்டு இருக்கின்றன.
அப்படி ஒரு தனிமை போல் இருக்கிறது அவன் இல்லாத தனிமை.
அணில்லாடும் முன்றில் என்ற குறுந்தொகை பாடல்.....

காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.

பொருள் -

என் காதலன் அருகில் இருக்கும் போது பெரிதும் மகிழ்ந்து இருந்தேன்.மகிழ்ச்சியுடன் இருக்கும் ஊர் மக்களைப் போல.வாழ்க்கை ரொம்ப கடினமாகி விட்டது அந்த ஊரில்.கஷ்டம் வந்து சூழ்ந்து கொண்டது.அந்த ஊரில் மக்கள் எல்லாம் போன பின், அணில் ஆடும் முற்றத்தில் தனிமையான வீட்டைப் போல அழகு இழந்து வருந்துவேன் தோழி..அவர் பிரிந்து சென்ற பொழுது.

அணிலாடும் முன்றலாய்

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 92

ஒருவர் தான் எண்ணியதை செயல்படுத்துவதில் உறுதி உடையவராய் இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் என்கிறார் இக்குறளில்

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (667)

ஆதேநேரம்..என்னால் அந்தக் காரியத்தை செய்ய முடியுமா? எவ்வளவு பெரிய செயல்? நானோ வலிமையில்லாதவன் என்றெல்லாம் எண்ணினால் அக்காரியத்தைச் செய்ய இயலாதாம்.

உதாரணத்திற்கு சொல்கிறார்..

கோயிலில் தேர்த்திருவிழா.எவ்வளவு பெரிய தேர்.ஊர் கூடி இழுததால்தான் தேர் நகரும்.அவ்வளவு கைகள் இணைய வேண்டும்.பெரிய பெரிய சக்கரங்கள்.

அச்சக்கரங்கள் கழண்டுவிடாமல் கட்டுப்படுத்தி தேரை சிறியவனான என்னால் ஓடச்செய்துவிட முடியுமா?

என்றெல்லாம் நினைத்திருந்தால்..அச்சக்கரத்தில் உள்ள அச்சாணி முறிந்துவிடும் .ஆனால்..அந்த அச்சாணி தான் உருவத்தில் அத்தேரைவிட பல்லாயிரம் மடங்கு சிறிதானாலும்..அத்தேர் ஓட என்னால் முக்கியக் காரணமாய் இருக்க முடியும் என்று எண்ணுகிறது.தேர்..வெற்றிகரமாக நான்கு வீதிகளிலும் வலம் வருகிறது.

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து (667)

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்யக்கூடாது.பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும் .

மனதில் உறுதி வேண்டும்.இருந்தால் எதுவும் சாத்தியமே!

Saturday, March 28, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 91


பிறிதின் நோய்
----------------------------
நமக்கு ஒருவர் தீங்கிழைத்து விட்டார்.உடனே நமக்குக் கோபம் அதிகரித்து, "நானும் அவனுக்கு தீங்கு செய்துவிட்டு ,நான் யார் என அவனுக்குக் காட்டுகின்றேன்" என்போம் சாதாரண்மாக.

"அப்போதுதான் அவனுக்கு புத்தி வரும்" என்போம்..

ஆனால்..வள்ளுவர் என்ன சொல்கிறார்.நமக்கு தீங்கு செய்பவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை பதில் தீங்காய் இருக்கக் கூடாது.அவரை மன்னித்து விடுவதுதான்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல் (314)

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி,அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.


அத்துடன் நில்லாது மற்றொரு குறளில் சொல்கிறார்..மற்றவர் துன்பத்தை நீக்குவதுதான் நாம் பெற்ற அறிவின் பயன் என்கிறார்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை (315)

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முணையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்த பயனுமில்லை.

பிறிதின் என ஏன் சொல்ல வேண்டும்/

அடடா..வள்ளுவர் எந்த ஒரு சொல்லையும் சாதாரணமாக சொல்லமாட்டார்.அதற்கென தனி அர்த்தம் இருக்கும்.

பிறிதின் என்றால்...பிற மனிதர்களுக்கு மட்டுமல்ல.

பிராணிகள், செடி கொடிகள்,  ஊர்வன, பறப்பன என்று எல்லாமே அந்த "பிறிதின்" என்பதில் அடங்கும். தன்னைத் தவிர மற்ற எல்லாம். நீர் நிலைகள்,  ஆகாயம், ஆறு, குளம், என்று அனைத்தும் அதில் அடங்கும்.

நவில்தொறும் நூனயம் போல்..படிக்க..படிக்க ஒவ்வொரு குறளுக்கும் பல..பல..அர்த்தங்களைச் சொல்லிடலாம்.

கடல் போல விரிந்து கிடக்கும் கருவூலம் திருக்குறள்.


வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 90

செரிமானம்
--------------------
நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது (1326)

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

Tuesday, March 24, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 89

நமக்கெல்லாம்..மேடையில் பேச வேண்டும் என்றும்..நாம் பேசுவதை நான்கு பேர் கேட்டு பாராட்ட வேண்டும் என்றும் உள்ளூர ஒரு விருப்பம் இருக்கும்.

பேசுவது என்பதே ஒரு கலை.அதற்காக பேசுவதையெல்லாம் கலை என்று சொல்லிவிட முடியாது.அதுவும்..மேடையில் பேசுவது என்பது...!!! எளிய நடையில் பலர் முன் நின்று மேடையில்..உயர் கருத்துகளைச் சிறந்த முறையில்..கேட்போர் உள்ளத்தில் அழகாக பதிய வைப்பதே ஆகும்.

மேடைப்பேச்சை 'சொற்பொழிவு' என்பர்.சொற்களைத் தேடிப் பிடித்து..எளிய நடையில்..அமைதியாக பொழிவது தான் சொற்பொழிவு.

மழை பொழிகிறது என்கிறோம்....மழை நீர்த் துளிகள்..ஒன்றன் பின் ஒன்றாக சீராக..நேராக..அமைதியாக பெய்வது தான் 'பொழிதல்' எனப்படுவது.அழகாக ஒன்றன் பின் ஒன்றாக வரம்பு மீறாமல் இருப்பதுதான்.வரம்பு கடந்தால் மழை பொழிதலும்..மழை அடித்தல், மழை கொட்டல் என்றெல்லாம் ஆகிவிடும்.

அதுபோலவே தான் சொற்பொழிவும்..வரம்பு கடந்தால்..மக்களிடமிருந்து..கிண்டல்,கத்தல்,திட்டுதல் என்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டு விடும்..

ஒருவர் பேசும் சொற்கள் அனைத்தும் நல்ல சொற்களாக, பண்பட்டவைகளாக இருந்தாக வேண்டும் என்ற கவலை சொற்பொழிவாற்றுவோருக்கு இருக்க வேண்டும்.சொற்கள் பற்றி வள்ளுவன்
சொல்வன்மை என்ற அதிகாரத்தையே வைத்துள்ளார்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லிங்கட் சோர்வு (642)

ஆக்கமும், அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால்..எந்த ஒரு சொல்லிலும் குறைபாடு நேராது கவனமாக இருக்க வேண்டும்...என்கிறார்.

நாம் சொல்வதை பிறர் எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.எவ்வளவு நேரம் பேசினோம் என்பதை விட..நாம் என்ன பேசினோம் என்பது மக்களுக்குப் புரிகிறதா என்பதே முக்கியம்.

நாம் கற்றதை ..பிறர் உணரும் வண்ணம் சொல்லத் தெரியாதவர்..கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லா மலருக்கு ஒப்பாவர்..(யாருக்கும் பயன் தரா மலர்) என்கிறார் வள்ளுவர்.

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார் (650)

ஒருவனின் உண்மைத் தோற்றத்தைக் காட்டுவது அவன் வாய்ச் சொற்களே..மற்ற அனைத்தும் போலித் தோற்றங்கள்.ஆகவே..பிறரிடம் பேசும்போது..அதிலும் குறிப்பாக மேடையில் பேசும்போது மிக விழிப்புடன் இருக்க வேண்டும்..இல்லையேல்..நமக்கு வீழ்ச்சியே ஏற்படும்.

எதைக் காப்பாற்றாவிடினும் நாக்கை காப்பாற்ற வேண்டும்..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும்..நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவரது துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.

Monday, March 23, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 88

அன்பு செலுத்துவோம்
---------------------------------------

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.

 உடலும்,உயிரும் போல, அன்பும்..நம் செயலும் இருக்க வேண்டும்.

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது.அன்புக்குரியவரின் துன்பங்களை காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும்..என்கிறார் இக்குறளில் வள்ளுவர்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும் (71)

உலகில் இன்பமாய் வாழ்கிறவர்கள் அன்புள்ளம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

ஒரு பாலைவனம்.அதில் மரம் ஒரு பட்டுப் போய் நிற்கிறது.அது துளிர்க்குமேயானால், அதனால் யாருக்கு என்ன பயன் கிடைக்கும்?அதுபோலவாம்  அன்பு இல்லாதவர்களின் வாழ்க்கை.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று (78)

அவன் அழகானவன்.ஆனால் அன்பில்லாதவன்.மனதில் அன்பு இல்லாதவன். ம்னம் விகாரமானவன்.அவனின் புறத்துறுப்பு அழகாய் இருந்து என்ன பயன்..அகம் அழகாய் இல்லையே.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பண்பி லவர்க்கு (79)

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன் (எந்த பயனும் இல்லை)

நாம் அனைவரிடமும் அன்பு செலுத்துபவராக இருப்போம்.

Sunday, March 22, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 87



யாரிடம் எப்படிப் பேச வேண்டுமோ..அப்படி..அப்படி அவர்களிடம் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


"அறிவுள்ளவர்கள் முன் அறிவோடு பேச வேண்டும். அறிவில்லாதவர்கள் முன் ஒன்றும் தெரியாதவர் போல இருக்க வேண்டும்"

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல் (714)

அறிவாளிகளுக்கு முன்னால் அறிவாளியாய் இருக்க வேண்டும்.அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்புப் போல தன்னையும் அறிவற்றவராய்க் காட்டிக் கொள்ள வேண்டும்

அவை அறிதல் என இதற்கென ஒரு அதிகாரமே வைத்திருக்கிறார்.

ஆமாம்..வான்சுதை என சுண்ணாம்பைச் சொல்கிறார்.

சுண்ணாம்பு வெண்மை நிறம்.

இருப்பதிலேயே மிக மிக வெளிறிப்போன நிறம் வெள்ளை நிறம்தான்.

ஆகவேதான் அறிவற்றவர்களை சுதையுடன் ஒப்பிட்டார். 

அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்தினால்
 அந்தச் சொற்களின் வகையும் தெரியாது..பேசும் திறமையும் கிடையாது.

மேலும் ஒரு குறளில் சொல்கிறார்..

அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம் போல வீணாகிவிடும்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல் (720)




Saturday, March 21, 2020

வள்ளுவத்திலிருந்து தின்ம ஒரு தகவல் - 86

கல்வியும்..அறிவும்

-------------------------------------------

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும்.அதற்கிணையான செல்வம் வேறு எதுவுமில்லை.

என்று சொன்னவர் சொல்கிறார்.

கல்வி வேறு..அறிவு வேறு என..

வள்ளுவர் எங்கே அப்படிச் சொல்கிறார்..தெரியுமா?

கீழே சொல்லியுள்ள குறளில்தான்.

கொஞ்சம் ஆழ்ந்து இக்குறளை சிந்திப்போம்..

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு (396)

மணற்கேணியில் எப்படி தோண்ட தோண்ட நீர் ஊறுகிறதோ அது போல மக்களுக்கு படிக்கப் படிக்க அறிவு வளரும்.

அதுசரி..மணற்கேணி என்கிறாரே! அதுஏன்?

மணலில் தோண்டும் கேணியை மணற்கேணி என் கிறார்.

மணற்கேணியைத் தோண்டும்போது மண் சரியும்..உள்ளே விழுந்த மண்ணை மீண்டும் தோண்டி எடுத்தால்தான், அதில் உள்ள நீர் கலங்கல் இன்றி தெளிவாக இருக்கும். 

அதுபோல..ஒருவர் படித்து முடித்துவிட்டார்..என்று சொல்லமுடியாது."கற்றது கைம்மண் அளவு" அல்லவா?அதனால் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.படிப்புக்கு வயது இல்லை அல்லவா? 

அதுபோலத்தான்..மணற்கேணியில் தோண்டி எடுக்க..எடுக்க நீர் வந்து கொண்டு இருக்கும்..வற்றிவிடாது.இல்லையேல் நாளடைவில் கேணி பயனற்றுப் போகும்.

அதுபோல நாம் படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்....

தொட்டனைத்து...அதாவது தோண்டத் தோண்ட ..கற்கக் கற்க..ஊறும் நீரினைப் போல அறிவு வளரும்.

கல்வி வளரும் என வள்ளுவர் சொல்லவில்லை..அதை கவனித்தீர்களா?

படிப்பதை மனதிற்கும் இருத்திக் கொள்வது கல்வி.அக்கல்வி உள்ளே போய்..உள்ளே இருக்கும் அறிவினை வெளியே கொண்டு வந்து..மணற்கேணி நீரினைப் போல மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

இப்போது புரிகிறதா..அறிவு வேறு..கல்வி வேறு என.

வள்ளுவத்தைத் தோண்டத் தோண்ட பல செய்திகள் புரிய வரும்.





.
.


Friday, March 20, 2020

ஒரு பக்கக் கட்டுரைகள் - 26

பொதுவாக நமது குணம் 'ராமன் ஆண்டால் என்ன..ராவணன் ஆண்டால் என்ன' என்பதுதான்.(யார் ராமன்..யார் ராவணன் எனக் கேட்கக் கூடாது)

ஆனால் சமீப காலங்களாக நம்மிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது..நடக்கும் நாட்டு நடப்புகளை சமூக வலைத்தளங்களில் ஆரோக்கியமாக அலசத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியையேத்  தருகிறது.
.
ஆனால் அரசியல்வாதிகள் பிரச்னைக்கு உண்மையில் தீர்வு காண வேண்டும் என எண்ணாது...பிரச்னையை மேலும் மேலும் வளர்த்து..குளிர் காய்வது சற்று வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நிதானமாக ஓடும் ஆறு..தான் போகும் பாதை எங்கும் அடுத்தவர்க்கு உயோகமாய் இருக்கும் விதத்தில் பசுமையை அள்ளித் தெளித்து தொடர்ந்து ஓடுவது போல..நாம் செயல்பட வேண்டும்.நம் செயல்பாட்டால்..நம் காரியமும் ஆக வேண்டும்..பிறரும் பயனடைய வேண்டும்..அப்படி பயனடையாய் விட்டாலும்..அவர்கள் அன்றாட வாழ்விற்கு தொந்தரவு இருக்கக் கூடாது.

இதை மனதில் கொண்டு நற் காரியங்களுக்காக போராட்டம் இருக்குமேயாயின்..அனைத்து மக்கள் ஆதரவும் கண்டிப்பாய் இருக்கும்.ஆணவத்தால்,அகங்காரத்தால்,காழ்ப்புணர்ச்சியால் சாதிக்கமுடியா காரியங்களை அன்பு சாதிக்கும்..அஹிம்சை முறை சாதிக்கும்.

பிரச்னைகள் நாம் உருவாக்குவது தான்.பிரச்னைகளின் தீர்வும் நம்மிடம்தான்

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 85



மறந்தும் நாவினால் சுடாதீர்கள்
-------------------------------------------------

ஒருவருக்கு ஒருவரின் மீது கோபம் வரும்போது..என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் வரம்பு மீறி பேசிவிடுகிறோம்.

சற்று நேரம் கழித்து கோபம் தீ ர்ந்ததும், நம்
செயலுக்கு நாமே வெட்கப் படுகிறோம். என்ன இருந்தாலும் நாம் அப்படி பேசி இருக்கக் கூடாது
என மன வருத்தம் அடைகிறோம்.

இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்.யாராய் இருந்தாலும் பேசும்போது நாவடக்கம் வேண்டுமென..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவரது துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.

வள்ளுவனின் ஒவ்வொரு குறளிலும்ஆழ்ந்த அரத்தம் இருக்கும்.

நாம் அப்படி கோபத்தில் நாவடக்கம் இன்றி பேசியபின், தவறை உணர்ந்து..அந்த நபரிடம் மன்னிப்புக் கேட்டாலும்..நாம் சொன்ன வார்த்தைகளின் வடு அந்த நபரின் மனதிலிருந்து அகலவே அகலாது.


"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"(129)

ஒருவருக்குத் தீக்காயம் ஏற்படுமேயாயின்..அது ஆறக்கூடியதாயினும், ஆறியபின் அதன் வடு உடலில் இருக்கும்.

ஆனால்..ஒருவரை, மற்றவர் காயப்படும்படி பேசினால், அப்படிப் பேசப்பட்ட பேச்சு காலப்போக்கில் இருவரும் மற
ந்துவிடுவார்.ஆனாலும், .தீயினால் சுட்ட வெளி வடு போல அல்லாது..மனத்திற்குள் அவ்வடு காயப்பட்டவர் மனதில் ரணமாய் ஆறாமல் என்றுமிருக்குமாம்.

தீக்காயம் ஆறும் ஆனால் வடு மறையாது
மனக்காயம் வடு இன்றி மறைந்தாலும், அதனால் ஏற்பட்ட ரணம் உள்ளே ஆறவே ஆறாது.

ஆகவே..மறந்தும்எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவர் மனது புண்படும் வார்த்தைகளை பேசிவிடக் கூடாது.

Thursday, March 19, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 84

பயனற்ற சொற்களைத் தவிர்ப்போம்
------------------------------------------
அவன் வேலைசெய்யும் நிறுவனம் பெரியது.ஆனாலும் நான் இல்லாவிடில் அந்த நிறுவனமே இயங்காது..என்பான்.
ஏதேனும் விவரம் அவனைக் கேட்டால்..அதற்கு பதில் சொல்வதற்கு..தேவையில்லாமல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு..நாம் கேட்ட விவரத்தை சரியாக சொல்ல மாட்டான்.
தான் அதி புத்திசாலி..மற்றவர்கள் முட்டாள்கள் என்பது அவன் எண்ணம்.
ஒருமுறை அவன் வேலைசெய்யும் நிறுவனத்தின் அதிபர்..ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து..நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கான காசோலையை வாங்கிவரச் சொல்லி அவனை அனுப்பினார்.அவனும்..பயனில்லாமல்..தேவையில்லா இடங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு..அந்த வாடிக்கையாளர் இருப்பிடம் சேர்ந்த போது..அவர் நீண்ட நேரம் இவனுக்காகக் காத்திருந்துவிட்டு வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
நிறுவன அதிபர் இவனை நீ எப்போது அங்குப் போனாய்? என்றார்.
இவனும் நேரத்தைச் சொன்னான்.
நான் உன்னைக் காலையிலேயே போகச் சொன்னேனே..என்றவரிடம்..இவன் ஊர் சுத்திய உண்மையைக் கூற முடியுமா? அதனால்..
"அது சார்..காலைலேயே கிளம்பினேனா..அண்ணா சாலையில் ஒரு அரசியல் கட்சி ஊர்வலம்..டிராஃபிக்ல மாட்டிக் கிட்டேன்.அங்கிருந்துத் தப்பி ராயப்பேட்டை போனேனா அங்கு ஒரு ஆக்ஸிடெண்ட்..டிராஃபிக் திருப்பி விட்டாங்க..மந்தவெளிக்கு ராஜா அண்ணாமலைபுரம் வழியா வந்து சேர்ந்தேன்.." இப்படி சொல்லிக் கோண்டே போனான்..
எது எப்படியோ..நிறுவனத்திற்கு வர வேண்டிய பணம் வரவில்லை.அந்தக் கோபத்தில் இருந்த அதிகாரி..இவனது பயனற்ற சொற்களை கெட்க விரும்பவில்லை.அவனை ஒரு உபயோகமற்றவன் என்று முடிவெடுத்தார்.
அவன் அவரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான்.
சொன்னக் காரியத்தை முடிக்காமல் பயனற்றவற்றைகளைப் பற்றி ஒருவன் பேசிக் கொண்டிருப்பானாயின் அது அவனையே பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை (193)
தவிர்த்து..பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவனை எல்லோரும் இகழ்வர்
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும் (191)

Wednesday, March 18, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 83

ஐம்புலன்களையும் அடக்குக
-------------------------------------------
ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்.அதாவது உணவைக் குறை என்று பொருள். (புலன் -வாய்)
கண் போன போக்கில் எல்லாம் மனிதன் போகலாமா? என்று ஒரு பாடல் உண்டு.அதாவது, நம் கண்கள் பார்த்து, ஆசைப்பட்டு அதன் வழியில் எல்லாம் நடந்தால், அது சிக்கலில்தான் கொண்டு விடும். கண்கள் பார்த்தாலும், மனம் சிந்தித்து நல்லது, கெட்டது உணர்ந்து செயல் பட வேண்டும்.(புலன் - கண்)
நம்மில் கோபம் ஏற்பட்டால் , இடம் மறந்து..வாயில் வந்ததை எல்லாம் உரக்கக் கூறி, அதுவரை நம்மைப் பற்றி நல்லபடியே நினைப்பவர்கள் எண்ணங்களை மாற்றி விடுவோம்.அது சரியா? பிறர் பற்றி புறம் கூறுவோம்..அது சரியா(புலன்-மெய்)
கெட்டவற்றைக் கேட்காத செவி வெண்டும்.நல்லவற்றையே நாளும் கேட்க வேண்டும்.(புலன்-செவி)
வாசனையைத் தரும் பொருள்கள், உணவு போன்றவைக்கூட ஆசையைத் தூண்டும்.ஆனால் அவை உடலுக்கும், உள்ளத்திற்கும் கேடு விளைவிப்பவை என உணர வேண்டும். (மூக்கு -புலன்)
நமக்கு புலனடக்கம் இல்லாவிடில், நம் பெயர், புகழ், வாழ்வு எல்லாம் கெடும்.மனிதனாய் பிறந்தோர் அனைவருமே..தங்கள் ஐம்புலன்களை அடக்கினால், வையத்தில் சந்தோசமாக வாழ்வாங்கு வாழலாம்.
இப்படிப்பட்ட ஒரு அருமையான கருத்தை..ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவனைத் தவிர வேறு யாரால் தரமுடியும்?
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கி ஆளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும் .

Tuesday, March 17, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 82

நன் மக்கட்பேறு
----------------------------

இல்வாழ்க்கையில் சிறந்த பேறு அறிவில் சிறந்த பிள்ளைகளைப் பெறுவது என்னும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்..

அப்படிப்பட்ட பிள்ளைகள் பண்புடையவர்களாக இருப்பார்களேயானால் ஏழேழு தலைமுறைக்கும் எந்தத் தீமையும் தீண்டாதாம்.

அப்படிப்பட்ட நம் குழந்தைகள் தங்கள் கைகளால் கூழினைக் கொடுத்தாலும் அது அமிழ்தம் போலவாம்.அந்தக் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது,உடலுக்கு இன்பத்தையும், அவர்கள் மழலை செவிக்கு இன்பத்தையும் தருமாம்.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தந்தை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் (67)

தந்தை தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய நல்லுதவி அவர்கள் அறிஞர் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே யாகும்.
 அப்படி செய்கையில், தம் பிள்ளைகள் தங்களைவிட புத்திசாலியாக இருப்பின் அது அக மகிழ்ச்சியினை அளிக்கும்.

ஆனால்..பெற்ற தாய்க்கோ..அவள் அவனைப் பெற்றெடுத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட,ஊரார் பாராட்டும்போது அதிக மகிழ்ச்சி ஏற்படுமாம்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (69)

பெற்றோர்கள் தன் கடமையினை முடித்து விட்டார்கள்.ஆனால்  இதற்கெல்லாம் மகன் செய்யும் கைம்மாறு என்னவாம் தெரியுமா?

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல் (70)

ஆஹா..இவனை மகனாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பேறு என் அஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்

Monday, March 16, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 81

மனைவி அமைவதெல்லாம்..
-------------------------------------------

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.

வள்ளுவர் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய நற்பண்புள்ள மனைவி வேண்டும் என்கிறார்.

நல்ல பண்புள்ள மனைவி அமைந்துவிட்டால் இல்வாழ்க்கை சிறப்புடையதாக இருக்கும்...எனும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்..

இல்லறத்துக்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம்  நடத்துபவள், கணவனின் வாழ்விற்குப் பெருந்துணையாவாளாம்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (51)

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின்  சிறப்பாகும்.அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (60)

வாழ்க்கைத் துணைநலம் எனும் அதிகாரத்தில் இல்வாழ்க்கை நன்கு அமைய நற்பண்புள்ள மனைவி அமைய வேண்டும் என வள்ளுவர் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லியுள்ளார் 

Sunday, March 15, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 80

இல்லறமே நல்லறம்
---------------------------
உலகத்தில், வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்,தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான் என்னும் வள்ளுவர் ..

ஒருவர் பழிப்புக்கு இடம்கொடாத இல்வாழ்க்கையே இல்லறம் எனப் போற்றப்படும் என்கிறார்.

இல்வாழ்க்கை  பண்புடையதாகவும், பயனுள்ளதாகவும் விளங்க என்ன வேண்டும் எனச் சொல்கிறார் தெரியுமா?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)

என்கிறார்.

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை

சரி..இல்லறம் நல்லறம் என போற்றப்பட வேண்டுமானால், இல்வாழ்க்கை நடத்துபவனுக்கு என்று சில கடமைகள் உண்டாம்..

அவை என்ன?

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)

பெற்றோர்,வாழ்க்கைத் துணை,குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

இல்லறமே நல்லறமாகும்.

Saturday, March 14, 2020

வள்ளவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 79

சிக்கனம் தேவை
-----------------------------------------

படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா? பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா? என்றொரு திரைப்பாடல் உண்டு.

ஆம்...

பொருள் படைத்தவர்கள் கருத்துகள் தவறானாலும்..அதை கூடியிருக்கும் சபையினர் அக்கருத்தினை ஏற்றுக் கொள்வார்கள்.

பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும்..இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலகத்து நடப்பாக உள்ளது.

இது வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது.அதானால் இக்குறளை அவர் சொல்லியுள்ளார்.

 இல்லாரை எல்லாரும் எள்ளுவர்  செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு (752)

பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.

அவர் மேலும் சொல்கிறார்..

மதிக்கத் தகுதியில்லாதவர்களையும் பணம் படைத்தவர் என்றால் உலகு மதிக்குமாம்.


பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் (751)

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவிற்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர எதுவும் இல்லை.

அதனால்  செல்வம் ஈட்டும் காலத்தில் தேவைக்கு அளவிற்கு மட்டுமே செலவு செய்து சேமித்து வைக்க வேண்டும்.

வருமானமே குறைவாக உள்ளது என்கிறீர்களா?

அதற்கு வள்ளுவர் என்ன கூறுகிறார்..

வருவாய் எவ்வளவு குறைவானாலும் கவலையில்லை..செலவு அதைவிட அதிகமாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்கிறார்.

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை (478)

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை

Friday, March 13, 2020

ஒரு பக்கக் கட்டுரைகள்

பட்டாம்பூச்சி..

மனதில் நினைக்கும் போதே படபடக்கிறது..

மண்ணில் பறக்கும் வானவில் எனலாம்.

வானவில்லிலோ எழே நிறங்கள்.

ஆனால் கணக்கற்ற நிறங்களில் பட்டாம்பூச்சிகள்.

பட்டாம்பூச்சி என்றாலே..நினைவில் வருபவர் ரஜினி..மீனாவிடம்..அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்க..அவர் பட்டாம்பூச்சியை கை காட்ட...அதைப் பிடிக்க அதன் பின்னாலேயே ஓடி..வேஷ்டி நழுவியதும் தெரியாமல்...வேடிக்கைப் பார்ப்பவர்களையும் சட்டை செய்யாது..சகதியில் விழுந்து..வெற்றிகரமாக அதைப் பிடிப்பது.

அடுத்து "ஓ பட்டர்ஃபிளை" பாடல் காதில் ரீங்காரமிடுகீறது

சிறு வயதில்..நானும் பட்டாம்பூச்சியைப் பிடித்து அதை இம்சை படுத்தியதுண்டு.அதன் இரு சிறகுகளையும் சேர்த்துப் பிடித்து வேடிக்கை பார்த்ததுண்டு.பின் ஒரு பக்க சிறகை விட்டுவிட்டு..அது மற்ற ஒன்றால் பட..பட..என அடிப்பதை ரசித்ததுண்டு..

இப்போது நினைக்கிறேன்...நான் எப்படிப்பட்ட sadist என்று.

அந்த பட்டாம்பூச்சியை விட்டதும்..கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் நிறத்தை..முகர்ந்து பார்த்து..மகரந்த மணத்தை அனுபவித்ததுண்டு.

பெண்கள் கல்லூரியில்...கல்லூரி விட்டு...பல வண்ண ஆடைகளில்...ஆடியும்..பாடியும் கவலைகள் ஏதுமின்றி மகிழ்வுடன் வெளியே வரும்...மாணவிகள்..எனக்கு பட்டாம்பூச்சியை நினைவு படுத்துவர்.

உடனே கொந்தளிக்க வேண்டாம்..

Play School பக்கம் போகும் போது..ஆடி..ஓடி..விளையாடும்..மழலைகளும் எனக்கு பட்டாம்பூச்சியை நினைவுபடுத்தியதுண்டு.

மனம் பட்டாம்பூச்சியாய் இருந்திட்டால்..தொல்லை ஏதுமில்லை.

எழுதுகோல்

மஞ்சள்
சிறகொன்றை
உதிர்த்திருந்தது
ஒரு புறவை
எழுது மை
குப்பியில்
அச்சிறகு
அமர்ந்து கொண்டு
எழுது..
எழுது
என்றது என்னை!
வாழ்நாள் சாதனைகளும்..இயக்குநர் சிகரமும்
-----------------------------------------------------------------------
ஒவ்வொருவர் வாழ்நாளில் சாதித்தன ஏராளமாய் இருக்கும்.

பிறவி எடுத்ததன் பயன், நம் மறைவிற்குப் பிறகும், நம்மை இந்த சமுதாயம் பேச வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சாதனையை செய்து விட்டு நம்மை விட்டு பிரிந்தவர் இயக்குநர் சிகரம்.

அவரது,தமிழ் நாடகமேடை சாதனைகள்..தமிழ் நாடகங்கள் இருக்கும் வரை பேசப்படும்.

இவரது திரையுலக சாதனைகள், இவரது திரைப்படைப்புகள் ,இவரது தயாரிப்புகள் ஆகியன வெள்ளித்திரை உள்ளவரை பேசப்படும்.பல இளைஞர்கள் ஆராய்ச்சி செய்ய இவரது படைப்புகள் உதவும்.

காலமெல்லாம் இவர் பேசப்படுவார்.

அப்படிப்பட்ட இம்மகானின் பிறந்தநாள் இன்று.
அவரைப் பற்றியும், அவர் திரைக்கதைகள் பற்றியும்,அவரது இயக்கத்தில் வந்த படங்கள் பற்றியும் ஒரு நூலாக எழுத எனக்கு வாய்ப்பு கிடத்தமை என் வாழ்நாளில் என்னைப் பொறுத்த மட்டில் ஒரு சாதனையாக எண்ணுகின்றேன்.

அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனக்குக் கிடைத்த ஒரு பேறு.

கேபி புகழ் நானிலத்தில் இருக்கும் வரை எனது இந்நூலும் நாட்டின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு நூலகத்தில் ஒருவர் படித்துக் கொண்டிருக்கக் கூடும்

என்ன தவம் செய்தேனோ நான்..?


வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 78

ஆக்கமும் கேடும் ஒருவருக்கு அவர் பேசும் பேச்சால் வருகிறது என்கிறார் வள்ளுவர்.

அது எப்படி,,

சற்று யோசனை செய்தால்,யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம், பேசுவது சரியா தவறா என்றெல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும் என்பதை உண்ர்வோம்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லிங்கட் சோர்வு (642)

ஆக்கமும், அழிவும் சொல்லால ஏற்படும் என்பதால், எந்த ஒரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்
ஆக்கமும் கேடும் சொல்லின் சோர்வால் வரும் என்பதால் அதை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும்.

இப்படிச் சொல்லும் வள்ளுவர்..

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்கும் இல்லை என்பதுடன், கீழ் சொல்லியுள்ள குறளில்..சொல்வன்மையே செல்வங்களில் எல்லா சிறந்த செல்வம் என்கிறார்.

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று (641)

செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் சொல்வன்மை என்பவர்..கேள்வி எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ்ம் அச்செல்வஞ்
செல்வத்த் ளெல்லாந் தலை (411)

என்கிறாரே!

சற்று யோசித்தால் விளங்கும்..

சொல்வன்மை ஒருத்தரின் திறமை.அப்படிப்பட்ட திறமையினைப் பெற்றவன் செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் பெற்றவன்.

அதேநேரம்..அப்படிப்பட்டவனின் செழுமையான கருத்துகளை செவி வழியாகப் பெறுபவன் அடையும் செல்வம் , கேட்பவனின் தலையாய செல்வமாகும் என்று சொல்வது புரியும்.

நல் விஷயங்களைக் கேட்போம்..நன்மை அடைவோம்.



Thursday, March 12, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -77

இன்சொல் என்றால் என்ன?
---------------------------------------
ஒருவரை புகழ்வது, அல்லது அவரைப் பற்றி நல்லபடி கூறுவது,ஒருவருக்கு சொல்லும் அறிவுரை அல்லது ஆறுதல் மொழி இவற்றில் எது இன்சொல் ?

வள்ளுவர் இதற்கும் பதில் தருகிறார் 

இன்சொல் என்பது

பொய்யாய் சொல்லாமல், வஞ்சனையில்லாமல்,உண்மை அறிந்தவர்கள் வாயில் இருந்து வரும் சொல்லாம்

"இன்சொலால் ஈரம் அளையிப் படிநிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் (91)


மேலும் சொல்கிறார்...

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு "நட்பில் வறுமை" எனும் துன்பமில்லையாம்.

"துன்புறூஉம் துவ்வாமை இல்லார்க்கும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு"

இனிமையான சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகுமாம்.

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று(100)"

இனிய சொற்களையேப் பேசுவோம்.