1967ல்..பாமா விஜயம் என்னும் நகைச்சுவைப் படம் பாலசந்தர் கதை, வசனம், இயக்கத்தில் வந்து சக்கைப் போடு போட்டது.இப்படத்தில் டி.எஸ்.பாலையா,நாகேஷ்,முத்துராமன், சுந்தரராஜன், காஞ்சனா,சௌகார் ஜானகி, ராஜஸ்ரீ, ஜெயந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.
நிம்மதியாக வாழ்ந்து வந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில். அவர்கள் இல்லத்தின் அருகே வரும் ஒரு நடிகையின் பிரவேசம்..அந்த வீட்டின் மூன்று மகன்களையும், மருககள்களையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை சிரித்து..சிரித்து மகிழுமாறு கொடுத்திருந்தார் இயக்குநர்.தவிர்த்து, பேராசை பெரு நஷ்டம் என்ற படிப்பினையையும் இப்படம் உணத்தியது.
பாலசந்தர் படங்களில் எல்லாமே, வெளியே தெரியாமல். சற்று ஆழ்ந்து பார்த்தால் சமுதாயத்திற்கு ஒரு செய்தி இருக்கும்.அவற்றை அவ்வப்போது அந்தப் படங்கள் பற்றி எழுதுகையில் பார்க்கலாம்.
பாமாவிஜயத்தில் குடும்பத்தின் தலைவனாக பாலையாவின் நடிப்பு மிகவும் பாராட்டுதலைப் பெற்றது.தவிர்த்து, வீட்டு குழந்தைகளுடன் அவரும் "வரவு எட்டணா..செலவு பத்தணா" பாடலில் குரல் கொடுத்ததும், அதன் படப்பிடிப்பு நேர்த்தியும் அருமை.இப்படத்தின், மற்றொரு சிறந்த பாடலாக"ஆனி முத்து வாங்கி வந்தேன்' என்பதையும் குறிப்பிடலாம்.
இதே ஆண்டு வெளிவந்த மற்றொரு நகைச்சுவைப் படம் "அனுபவி ராஜா அனுபவி"
பாலசந்தருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சில தலைவர்களுடன் பரிச்சயம் இருந்தது.அவர்களில் குறிப்பித்தக்க ஒருவர் அரங்கண்ணல்.அவர் கதை எழுதி தயாரித்த படம் "அனுபவி ராஜா அனுபவி". இதற்கான திரைக்கதையும், இயக்கமும் நம் பாலசந்தருடையது.
இப்படத்தில் நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்தார்.அவரது நகைச்சுவை நடிப்பிற்கு ஈடு கொடுத்து முத்துராமன் நாயகனாக நடித்தார்.மற்றும், ராஜஸ்ரீ, மனோரமா ஆகியோரும் இருந்தனர்.இப்படப்பாடல்களும் புகழ் பெற்றன.இப்படிச் சொன்னதும் இசை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
டி.எம்.சௌந்தரராஜனும், மனோரமாவும் இணைந்து .தூத்துக்குடி தமிழில் பாடியிருந்த "முத்துக் குளிக்க வாரீயளா?" அனைத்து ரசிகனையும் பல ஆண்டுகள் முணுமுணுக்க வைத்தது.
தவிர்த்து, "அழகிருக்குது உலகிலே, ஆசை இருக்குது மனசுலே .அனுபவி ராஜா அனுபவி' என்ற பாடல்..
அன்றைய மதராஸில் இருந்த ஏமாற்று பேர் வழிகள், போலி வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கும் வகையில் கவியரசு எழுதிய "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பாடல்...இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்தன என்றால் மிகையில்லை.
மொத்தத்தில் இரண்டு நகைச்சுவை படங்களும் பாலசந்தருக்கு பெரும் வெற்றியைத் தந்தன எனலாம்.