Wednesday, September 30, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் -4" (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)

 



மூத்த இருளன் நிகழ்ச்சி பற்றி சொல்லி முடித்ததும்..இளைஞன் ஒருவன் மேலத்தைத் தட்டி நிறுத்தினான்.


அனைவர் கண்களும் அந்த இளம் பேரழகியின் மீது.


பாவம் என்ற கண்கள், பச்சாதாபக் கண்கள், இரக்கக் கண்கள், பாசக் கண்கள்,காமக் கண்கள் என பலரின் கண்கள் பல செய்திகளைக் கூறியபடி அப் பெண்ணின் மீது நிலைத்திருந்தது.


சபையினருக்கு நடுவே வந்து நின்ற பெண், அனைவருக்கும் தன் இரு கரங்களைக் கூப்பி வணங்கினாள்..பின்..


"கர கர" என மூங்கிலின் உச்சிக்கு ஏறிச் சென்றாள்.


வள்ளல் மூச்சியப் பிடித்துக் கொண்டார்.


காதணியை கழற்றி எறிந்தாள். பின் பறந்து வந்து அக் காதணி தரையைத் தொடுமுன் கையில் பற்றினாள்.மீண்டும் மூங்கிலின் முனைக்குச் சென்றாள்.


எல்லாமே..சில கண் இமைக்கும் நேரங்களில் நடந்து முடிந்தது.மக்கள்..விடாது கரவொலி எழுப்பி..தங்கள் மகிழ்ச்சியினையும்,பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.


சடையநாத வள்ளல்..மனம் மகிழ்ந்து பலப்பல பரிசுகளைத் தந்தார்.


பின் இருளர் கூட்டம் அவரிடம் இருந்து விடைப் பெற்றது.நெகிழ்ந்து போன வள்ளல்..அப்பெண்ணை நோக்கி.."தாயே! உனக்கு அந்த சரஸ்வதி கடாட்சம் இருப்பதால்..உன் கவி புனையும் ஆற்றலை வளர்த்துக் கொள்.கூடிய விரைவில் மீண்டும் இங்கு வா.வருகையில் நீ புனைந்த கவிதைகள் அனைத்தினையும் ஒரு தனி வண்டி மூலம் எடுத்து வர வேண்டும்..புரிந்ததா..?"என வாஞ்சனையுடன் வழி அனுப்பினார்.


அப்பெண்ணும் அவரிடமிருந்து கண்ணீருடன் விடை பெற்றாள்.


வள்ளலின் அன்பும், தமிழ் போற்றும் குணமும் அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்து இருந்தது.


அடுத்து அந்த கூட்டம் பாண்டிய நாடு செல்லத் தீர்மானித்தது.மதுரையில் வழுதிப் பாண்டியனிடம் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்தி..பரிசினைப் பெற வேண்டும் என்பது அக்கூட்டத்தினரின் நீண்ட நாள் ஆசையாகும்.


மதுரை வந்ததுமே..விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ச்சியும் நடத்த முடிவானது.


மக்கள் திரளாகக் காத்திருந்தனர்.


நிகழ்ச்சி ஆரம்பிக்கு முன் வழக்கம் போல மூத்த இருளன் நிகழ்ச்சி பற்றி அறிவித்தார்.மேளம் தட்டப்பட்டது.


இளம் பெண் வந்து அனைவரையும் வணங்கினாள்.


மன்னன்..தனது அரசியுடன் வந்திருந்தான்.அரசி தொழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.மன்னன்..அந்தப் பெண்ணைப் பார்த்த விழிகளை அவளிடமிருந்து அகற்றாமல், அவளது பேரழகை ரசித்துக்கொண்டிருந்தான்.


தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த ராணி அதனைப் பார்த்து..விரைவாக வந்து மன்னனின் அருகே அமர்ந்தாள்.விரக தாபத்துடன் மன்னன் அப்பெண்ணியப் பார்ப்பதை அவள் விரும்பவில்லை.


நடந்த நிகழ்வுளை அப்பெண்ணும் ஓரளவு புரிந்து கொண்டாள்.


மேளம் தட்டி முடிக்கப் பட்டதும் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போகீறது..


பாவம்..அந்தப் பெண் நிகழ்ச்சிக்குப் பின் தனக்கு ஆகப் போகும் நிலையை உணரவில்லை.


மூங்கிலின் உச்சிக்குச் சென்று பாய்ச்சலுக்குத் தயாரானாள்.    

Tuesday, September 29, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் - 3 (ஓருகழைக்கூத்தாடி பெண்ணின் கதை)

 



"விச்சுளிப் பாய்ச்சலா?" அது என்ன வித்தை?" வள்ளல் ஆர்வத்துடன் கேட்டார்.


"சாமி..விச்சுளிப் பாய்ச்சல் மிகவும் ஆபத்து நிறைந்த வித்தை.ஒரு நெடிய மூங்கிலின் உச்சிக்கு இவள் ஏறி அந்தரத்தில் நிற்பாள்.அங்கிருந்தபடியே தன் காதணியைக் கழட்டி நிலத்தில் எறிவாள்.அல்லது யாராவது கையில் ஒரு மோதிரத்தை வைத்திருப்பார்கள்.."


"அப்புறம்.." வள்ளலுக்கு ஆவல் அதிகமானது.


"எறியப்பட்ட காதணி..நிலத்தில் விழு முன்னர்..மின்னலாய்க் கீழே பாய்ந்து..அதை கைக் கொண்டு ஒரு நொடியுள் மீண்டும் மூங்கில் உச்சிக்கு பழையபடி சென்றிருப்பாள்.அல்லது, மோதிரம் வைத்திருப்பவர் கையில் உள்ள மோதிரத்தைப் பறித்து மேலே மீண்டும் சென்றிடுவாள்'


"அதெப்படி சாத்தியம்?"



"உச்சத்தில் ஏறிய பின், ஒரு யோகப் பிரயோகத்தினால் மூச்சை அடக்கி தன் உடலை ஒரு இறகைப் போல லேசாக எடுத்துக் கொள்வாள்"


"ஆச்சர்யம்...கொஞ்சம் ஆபத்தான வித்தைதான்.."வள்ளல் ஒப்புக் கொண்டார்.


'ஆபத்து கொஞ்ச நஞசம் இல்லை சாமி.உயிரையே பறித்து விடும் அபாயம் உண்டு.ஒருமுறை செய்வதற்கு ஆறு மாத காலம் மூச்சடக்கும் யோகப் பயிற்சியை கடுமையாகச் செய்ய வேண்டும்.ஒருமுறை இப்பாய்ச்சலை செய்து விட்டால் மீண்டும் இந்த வித்தையை ஆறு மாதத்திற்குப் பின்னர்தான் செய்ய வேண்டும்.அப்படியில்லாமல் உடனே செய்யத் துணிந்தால் அந்தக் கணமே மரணம் உண்டாகும்" என்றார் இருளன். 


'இந்த விச்சுளிப் பாய்ச்சலுக்கு மட்டுமே இவளைத் தயார் செய்து, வேறொன்றிற்கும் லாயக்கில்லாமல் செய்து விட்டாயா?"


"இல்லை சாமி! இவள் வயது பெண்கள் கற்க முடிந்ததெல்லாம்..இவளும் கற்று வந்திருக்கிறாள்.அதுமட்டுமல்ல..பாக்கள் புனைவதிலும்..முறையாக தமிழாசாங்களிடம் பாடம் பயின்றிருக்கிறாள்"


"ஓஹோ...பாபுனையவும் தெரியுமோ? அதைச் சொல்லு.நீங்கள் அனைவரும் இன்று என் விருந்தினர்.விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள்.நாளைமுதல் காலை வேளைகளில் சிறிது நேரம் இவளின் தமிழைனை ரசிக்கிறேன்"


"சாமி..விச்சுளிப் பாய்ச்சலை எப்போ வைத்துக் கொள்ளலாம்?"


"சொல்கிறேன்.."என்ற வள்ளல்..அன்று முதல் அந்தப் பெண்ணின் செய்யுளியற்றும் வேகத்திலும், செறிவான கருத்துகளிலும் தன்னை மறந்தார்.அந்தப் பெண்ணின் மேல் அவருக்கு அபிமானமும், அளவற்ற வாஞ்சையும் ஏற்பட்டது.அவளைத் தன் மகளைப் போலவே நடத்த முற்பட்டார்.


பின் ஒருநாள்..இருளன் மீண்டும் கேட்டுக் கொண்டதால்  "வருகின்ற வெள்ளிக் கிழமை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.


அன்றே பறை மூலம் ஊர் முழுதும் அறிவித்து..வெள்ளியன்று மக்கள் அந்த வித்தையினைக் காணக் கூடினர். 


இருளன் கணீர்க் குரலில், பாய்ச்சல் நிகழும் விதம் குறித்து அறிவித்தார்..


"மாபெரும் மக்கள் கூட்டமே..இச்சிறு பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே பாய்ந்து,ஒரு நொடியில் கீழே விழும் தன் காதணியை கைக் கொண்டு மீண்டும் மூங்கில் உச்சிக்கே சென்றிடுவாள்.ஆகவே அனைவரும் அவளதுகவனம் சிதறாமல் இருக்க மௌனமாகவும்அதே நேரத்தில் தக்கையில் வைத்த கண்களைப் போல பாய்ச்சலையும் கண்டு ரசியுங்கள்" என்றார்.

Monday, September 28, 2020

விச்சுளிப் பாய்ச்சல் - 2(ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)


 

தொண்டை மண்டலம் 24 கோட்டங்களைக் கொண்டதாகத் திகழ்ந்தது.அதில் ஒன்று புழல் கோட்டம்.அக்கோட்டத்தில் அயின்றை (இன்றைய சென்னையில் அயனாவரம் பகுதி) எனும் சிற்றூரில் வேளாண் குடிப் பிறந்த சடையநாத வள்ளல் என்பவர் விறலியர் வகுப்பினரை ஆதரித்து வந்தார்.

ஒருநாள் கிட்டத்தட்ட பத்து இருளர்கள் அவரது இல்லத்திற்கு வந்தனர்.

வள்ளலின் கணக்குப் பிள்ளை அவர்களைக் கண்டு, "நீங்களெல்லாம் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றார் .

கூட்டத்தில் சற்று வயதான் இருளன், "ஐயா..நாங்க எல்லாம் கழைக் கூத்தாடிங்க.உங்க புழல் கோட்டம் பார்த்திராத வித்தையெல்லாம் செய்து காட்ட வந்தோமுங்க..ஒருமுறை வள்ளல் ஐயாவைப் பார்த்துட்டுப் போயிடறோம் சாமி"என்றான்.

"ஐயாவை..இந்த நேரத்திலா.."எனத் தயங்கினார் கணக்கு.

ஆனால் அதே நேரம் தந்த வேலைப்பாடுகள் செய்யப் பெற்ற பெரும் கதவினைத் திறந்து வெளியே வந்தார் சடையநாத வள்ளல்.

கலியுகக் கர்ணனாய், கேட்போருக்கு அள்ளி வழங்கி வருபவர் அவர்.புலவர்களும், கலைஞர்களும் அவரை நாடி வந்து..ஆதரவினைப் பெற்று வந்தனர். 

"யார் இவர்கள்?"என்றவர் முன், அனைவரும் வணங்கி எழுந்தனர்.

மூத்த இருளன் சொன்னார், "அய்யா..நாங்க கழைக் கூத்தாடிங்க.இந்தக் களையின் குறைந்து வரும் சில கரணங்களை என் மகள் மிகவும் அநாசயமா செய்வாள் சாமி.உங்க முன் ஒருமுறை அவ திறமையைக் காட்ட சந்தர்ப்பம் கொடுக்கணும்"

அப்போதுதான் அவர்களுடன் நின்று கொண்டிருந்த அந்தச்சின்னப் பெண்ணைப் பார்த்தார் வள்ளல்.பதினாறு வயதே நிர்ம்பியவள்கொள்ளை அழகு.மினு மினுக்கும் கருப்பு நிறம்.அடர்ந்த கரு கரு கூந்தல்..காந்தக் கண்கள்..வண்டினம் நம் இனம் சேர்ந்த இருவர் அவள் கண்களில் புகுந்து விட்டனரோ..என எண்ணும் கருவண்டு கண்கள்.நீங்கள் எள்ளுப் பூவினைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில்  அது  இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும்..கூர்மையான நாசி.மேல் தோல் பிரிந்தாற் போன்ற நாவல் பழ உதடுகள்.அதனுள் முத்துப் பரல்களா? மாணிக்கப் பரல்களா என வியக்க வைக்கும் வெந்நிற பற்கள்.இவள் கழுத்தினைப் பார்த்த பின்னர்தான் கழுத்திற்கு சங்கு என்ற சொல் வந்திருக்குமோ? என்ற சந்தேகத்தை உருவாக்கும் கழுத்து.தாமரை மொக்கு போன்ற மார்பகங்கள்..மொத்தத்தில்  அழகுச் சிலையாய் இருந்தாள் அவள்.

அந்தப் பெண்ணைப் பார்த்து வள்ளல்,"இந்த சிறு பெண்ணா?.இவளுக்கு என்ன வித்தைத் தெரியும்?"என்றார்.

"கழைக்கூத்தில் மிகக் கடினமான விச்சுளிப் பாய்ச்சல் எனும் வித்தையை சிறுவயதிலேயே இவளுக்குக் கற்பித்திருக்கிறோம் "

"விச்சுளிப் பாய்ச்சலா? அது என்ன வித்தை?"என்றார் வள்லல் ஆர்வத்துடன்.

(தொடரும்)

 

Sunday, September 27, 2020

"விச்சுளிப் பாய்ச்சல்" - 1 (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)



முகலாய மன்னர் ஜஹாங்கீர்..ஒரு சமயம் கயிறு ஒன்று செங்குத்தாக நிற்க அதில் ஒரு பையன் எறிக் காட்டும் கயிறு வித்தையைப் பார்த்து வியந்ததாகக் குறிப்பொன்று சொல்கிறது.

இன்று அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானதானது இந்தியாவில் தோன்றிய யோகா வாகும்.

தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் அற்புதங்கள் ஏராளம்..ஏராளம்...அத்தோடு தமிழகத்தில் பெரும் கலைஞர்கள் ஜலஸ்தம்பனம்,வாயு ஸ்தம்பனம் ஆகிவற்றுள் தேர்ச்சிப் பெற்று அவற்றின் அடிப்படையான வித்தைகளை செய்து காட்டி,வியக்க வைத்தனர்.

அப்படிப்பட்ட ஒன்றுதான் விச்சுளி வித்தை.

விச்சுளி...அம்பு விரைந்து பாயும் பாய்ச்சல்.

வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு விச்சுளி என்பது.அவ்வாறு பாய்ந்து செல்லும் பறவை விச்சுளிபறவை.அதாவது நாமெல்லாம் அறிந்த மீன் குத்திப் பறவையின் பெயர்.சுள் என்றால்..விரைந்து எனப் பொருள்.

கழையாட்டத்தில் ஒரு ஆட்டமாகத் திகழ்வது விச்சுளிப் பாய்ச்சல்.ஓரிடத்தில் இருந்து வெளியேறி மீண்டும் விண்ணேறி ஓரிடத்தில் தாவிப் பிடித்து பற்றுவது விச்சுளிப் பாய்ச்சல்.

கழைக்கூத்து என்பது தமிழகத்தில் சிறந்து விளங்கிய கூத்து எனும் கலை.பழைய பாரம்பரியம் மிக்க கூத்துகளில் கழைக்கூத்தும் ஒன்று.

வலிமையும்,உயரமும் வாய்ந்த இரண்டு மூங்கில்களை நட்டு ,அவற்றிற் கிடையே உறுதியான கயிற்றை இணைத்துக் கட்டி ஆடவரும், பெண்களும் அதன் மீது நின்று அந்தரத்தில் ஆடிச் சாகசங்கள் செய்வதேக் கழைக்கூத்தாகும்.

இந்தக் கழைக்கூத்தினுள் "விச்சுளிப் பாய்ச்சல்" இருந்ததாக தனிப்பாடல்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.விச்சுளிப் பாய்ச்சல் வித்தை மரண அபாயம் மிக்கது.உயிரைப் பெரிதாக மதிக்காதவர்கள் மட்டுமே நிகழ்த்திபடக் கூடியதாகும்.

கூத்தாடுபவர் கழை மீது ஏறி அதிலிருந்த படியே பல வித்தைகள் செய்து காட்டுவர்.பின் யோகப் பயிற்சியால் மூச்சினை அடக்கித் தம் உடலின் பளுவை கயிற்றின் பளுவிற்கு சமன் செய்து கொண்டு வர வேண்டும்.பின்னர், கயிற்றினின்று மேலே தாவி,பறவை போல சிறகு விரித்து..முப்பது இமைப்பொழுதுகளில் அந்திரத்தில் நிலைத்துக் காட்டிய பின்னர் கணப்பொழுதும் யோசிக்காமல் கயிற்றுக்கு வந்து விட வேண்டும்

இந்த அபாய வித்தையை எந்தக் காரணம் கொண்டும், ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் செய்யக் கூடாது.மீறிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்பது இவ்வித்தையப் பயிற்றுவிக்கும் ஆசான்களின் முதல் எச்சரிக்கையாக இருக்குமாம்.

இந்த எச்சரிக்கையையும் மீறி.பெண் ஒருத்தி..மன்னரின் ஆணையால்..இரண்டாம் முறையாக அந்த வித்தையை நிகழ்த்தி..உயிரினைத் தியாகம் பண்ணிய வரலாறும் தனிப்பாடல் ஒன்றின் மூலம் சொல்லப் படுகிறது.

நினைத்துக் கூட பார்க்க முடியாத கலை.இப்படி விச்சுளி வித்தையைச் செய்து காட்டுபவர்கள் பலர் தமிழகத்தில் இருந்தார்கள் என்பதே நமக்கு ஆச்சரியத்தினைத் தருகிறது.

அடுத்தப் பதிவில் அந்தப் பெண்ணினைக் குறித்துப் பார்க்கலாம்.