Tuesday, August 28, 2012

வீணாகும் உணவுகள்....




இன்று பல திருமணங்களில் தங்கள் வசதியைக் காட்ட 30 வகை உணவுகள்..40 வகை உணவுகள் என பரிமாறப்படுகின்றன.ஆனால் இவர்கள் மறந்துவிட்டது..உண்பவர்க்கு இருப்பது ஒரு வயிறு என்பதை.

ஆகவே..பலர்..பல உணவுவகைகளை வீணடிக்கின்றனர்.இனிப்பு வகைகள் உண்ணக்கூடாது என்பவர்கள் அவற்றை அப்படியே ஒதுக்கி விடுகின்றனர்.ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து ரத்தக் கண்ணீர் விடுவது மத்தியத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்வீட்டார்..போலி  கௌரவம்..பல லட்சக்கணக்கான பணத்தை வீணடிக்கிறது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நியோ20 என்ற பெயரில் ஜி20 நாடுகளின் மாநாடு நடந்தது.அதில் வெளியிடப்பட்ட ஐ.நா., அறிக்கையில்..

'உலகம் முழுதும் ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு வீணாகிறதாம்.உணவுப் பொருட்கள் அவை உற்பத்தியாகும் விளை நிலத்தில் தொடங்கி போக்குவரத்து, சேமிப்புக் கிடங்கு சந்தை எனத் தொடர்ந்து வீட்டின் உணவு மேசைவரை வீணடிக்கப்படுகிறது.

இதில் அமெரிக்கா மட்டும் உணவில் 25 விழுக்காடுகளை குப்பையில் எறிகின்றதாம்.ஐரோப்பாவில் சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 300 கிலோ உணவை வீணடிக்கிறார் என்றால்..இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் இது 170கிலோவாக உள்ளதாம்.இந்தப் புள்ளி விவரங்கள் ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவால் திரட்டப்பட்டவை.

டிஸ்கி - நாட்டில் ஒரு வேளை உணவிற்குக் கூட வழியில்லாமல் வாடும் மக்களும் கோடிக் கணக்கில் உள்ளனர்..
 உணவுப் பொருட்கள் வீணானாலும் பரவாயில்லை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்னும் பிரதமர்களும் உள்ளனர்.

Friday, August 24, 2012

பதிவர் சந்திப்பும்..நானும்..




வலைப்பதிவர்களுக்கு ஒரு சங்கம் வேண்டும் என எண்ணிய முதல் பதிவர் கேபிள் ஆவார்.பின்னர் அவர் பல பிரபல பதிவர்களுடன் சேர்ந்து குழுமத்தை ஆரம்பித்தார்.கோவை, ஈரோடு,திருப்பூர் என அனைத்து ஊர்களிலிருந்தும் பல பதிவர்கள் வந்திருந்தனர்., டிஸ்கவரி பேலஸில் கூட்டம் நடந்தது.

ஆர்வமுள்ள பதிவர்கள் அனைவரும்...கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாய் நடந்தும்..சில பதிவர்களின் ஈகோ வால்...ஆரம்பித்த நிலையிலே சங்கம் நிலைகொண்டு  மேலே நகரவில்லை.

பின்..இப்போதுதான் மீண்டும் புதியதாக பதிவர் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது.

அன்று தொடங்கிய சங்கத்தையும்..அன்றைய நிர்வாகிகளையும் ஆலோசித்து..அதன் தொடர்ச்சியாக இந்த மாநாடு நடத்தப் பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.ஏனெனில்..அன்று இச் சங்கத்தை வளர்க்க பல கனவு கண்டவர்கள் அன்று கூட்டத்திற்கு பொறுப்புவகித்த  பல மூத்த பதிவர்கள்.

உடனே..நான் குறை கூறுவதாக எண்ண வேண்டாம்..

மாநாடு சிறப்புற அமைய என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை..

சென்ற ஆண்டு நான் மேடையேற்றிய 'கருப்பு ஆடுகள்' நாடகத்திற்காக எனக்கு சிறந்த ஆல்ரவுண்டர் என்னும் விருதை மைலாப்பூர் அகடெமி நாளை வழங்க இருக்கிறது.

தவிர்த்து மாலை ஏழு மணி அளவில்..எனது புதிய திரில்லர் நாடகம் 'மழையுதிர் காலம்' நாரத கான சபாவில் நடைபெறுகிறது.

இக்காரணங்களால் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது என எண்ணுகிறேன்..

மீறி, நேரம் கிடைக்குமாயின்..வந்து தலை காட்டலாம்  என்ற எண்ணமும் உள்ளது.

மீண்டும் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து வரும் அனைத்து பதிவர்களுக்கும்..என் வாழ்த்துகள்.

Thursday, August 23, 2012

தீக்குளித்ததைப் பார்த்து தீக்குளித்த 4ம் வகுப்பு மாணவன்



மேலூர் அருகே டிவியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தீ்க்குளிப்பதைப் பார்த்த 4ம் வகுப்பு மாணவன் தன் உடலில் மண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த முத்துபோஸ் என்பவரின் மகன் சக்திவேல்(10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். இந்த கால சிறுவர், சிறுமியர் வெளியே சென்று ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறார்கள். அதில் பார்க்கும் பலவற்றை தானும் செய்ய முயற்சிக்கிறார்கள்.
அப்படித் தான் வீட்டில் இருந்த சக்திவேல் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை எதிர்த்து ஆட்டோ டிரைவர் கணேசன் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தனது வீட்டின் மொட்டைமாடியில் இருந்து கீழே குதித்த காட்சி வந்தது. அதைப் பார்த்த சக்திவேலுக்கு நாமும் தீக்குளித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.
நினைத்ததை செயலாக்க நினைத்த அவன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தான். உடலில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததும் சிறுவன் அலறத் துவங்கினான். அவனது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவனை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரது மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்ப்டடான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்துவரும் போதிலும் அவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

(நன்றி -தட்ஸ்தமிழ்)

Sunday, August 19, 2012

காதலும்..திருமணமும்...




ஓரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்..

அதற்கு அந்த ஞானி, 'அது இருக்கட்டும்..முதலில் நீ ரோஜா தோட்டத்திற்குப் போ..அங்கு உயரமான ரோஜாச் செடி எது என எண்ணுகிறாயோ, அதை எடுத்துக்கொண்டு வா..ஆனால் இரு நிபந்தனை, நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக்கூடாது' என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

ஞானி, 'எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?' என்றார்.

சீடான் சொன்னான். 'குருவே..வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னை கவர்ந்தது.அதைவிட உயரமான செடி இருக்கக் கூடும் என தொடர்ந்து நடந்தேன்.ஆனால்..பின் தென்பட்டவை அனைத்தும் குட்டையான செடிகளே..வந்த வழியே திரும்பிவரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியை கொண்டுவர முடியாமல் போய் விட்டது'

இப்போது ஞானி சொன்னார், 'இதுதான் காதல்'..பின்னர் ஞானி சொன்னார், 'சரி போகட்டும்.அதோ அந்த வயலில் சென்று உனக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரியகாந்திச் செடியை பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலான ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது'

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரியகாந்திச் செடியுடன் வந்தான்.

ஞானி கேட்டார், 'இதுதான் அந்த தோட்டத்தில் அழகான சூரியகாந்திச் செடியா?'

சீடன் சொன்னான், 'இல்லை.இதைவிட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் இம்முறை முதல்முறை கோட்டை விட்டதுபோல இந்த முறையும் விட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியை பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப் படி ஒரு செடியை பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன்பிறகு இதைவிட அழகான செடிகளை நான் பார்த்த போதும் பறிக்கவில்லை'

இப்போது ஞானி சொன்னார், 'இதுதான் திருமணம்'

(ஓஷோ)  

Friday, August 17, 2012

ராமனும்..மன்மோகனும்




ராமாயணத்தில் ஒரு கதை உண்டு..
ராமன் ஒரு சமயம் தாகம் எடுக்க தன்னிடம் இருந்த தனுசை கரையில் ஊன்றிவிட்டு சுனையில் தண்ணீர் பருகிவிட்டு..பின் ஊன்றிய தனுசை எடுக்கையில்..அதனடியில் ஒரு தவளை தனுசு தன் மீது ஊன்றியதால் மரணப்போராட்டத்தில் இருந்தது.அதைக்கண்டு வருந்திய ராமன்.."ஏ..தவளையே..நான் தனுசை ஊன்றும் போது நீ குரல் கொடுத்திருக்கலாமே' என்றார்.

அதற்கு..தவளை''ராமா..எனக்கு யாரேனும் தீங்கிழைத்தால்..'ராமா எனைக்காப்பாற்று' எனக் குரல் கொடுக்கலாம்..ஆனால் செய்வது ராமனே என்னும் போது நான் யாருக்கு குரல் கொடுக்கமுடியும்?' என்றதாம்.

காமன்வெல்த் ஊழல், 2ஜி 176000 கோடி ஊழல் என்றெல்லாம் சேதி வந்தபோது சம்பந்தப்பட்ட நபர்/அமைச்சர்களை பதவி விலகச்சொன்ன பிரதமர்..நிலக்கரி சுரங்க உழல் 186000 கோடி என்றபோது அச்சமயம் அத்துறையை தன்னிடம் வைத்திருந்ததால் பதவி விலக வேண்டாமா?

உனக்கொரு நீதி..மற்றவனுக்கு ஒரு நீதியா?


Wednesday, August 15, 2012

தீக்குள் விரல்..



வாழ்த்துச் சொல்லி

பூங்கொத்து கொடுக்கையில்

விரல்கள் தீண்டின

பூவினும் மெல்லிய

மலர் ஒன்றை


2) உனக்கு என்ன வேண்டும்

என்றேன்

கூலிங் கிளாஸ் என்றாய்

ஏறிட்ட என்னிடம்

என்னை நீ பார்க்கையில்

நீ அறியாது

உன்னை நான் பார்க்கலாமே

என்றன உன் கண்கள்


3)பிரியும் நாள்

கண்களின் நீர் துடைத்த

கைக்குட்டையை யாசித்தேன்

வரும் நாட்களில்

என் கண்ணீர் துடைக்க


4)தினமும் ஒருமுறை

உன்னை தழுவிட

அனுமதித்தாய்

அப்போது உணரவில்லை

சாவையும் ஒருநாள்

தழுவிட வேண்டுமென

Tuesday, August 14, 2012

விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடி






 அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று 66வது சுதந்திர தினம் கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது முகாமிட்டுள்ள இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடி பறந்து புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அப்போது சுனிதா குறிப்பிட்டார். சுனிதாவின் தந்தை குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். அவரது தாயார் ஸ்லோவேனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு மாத கால ஆய்வுப் பயணமாக தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார் சுனிதா என்பது நினைவிருக்கலாம். இது அவரது 2வது விண்வெளி பயணமாகும்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் சுனிதா வில்லியம்ஸ் பேசுகையில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்தி தினத்தைக் கொண்டாடும் இந்தியாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒரு அருமையான நாடு. அந்த நாட்டின் ஒரு அங்கமாக நானும் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்.
நான் ஒரு அரை இந்தியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனது தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். எனவே இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் எனக்குத் தெரியும். இந்த நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நானும் என்னை இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றார் சுனிதா.

உபரி தகவல்
இந்திய தேசியக் கொடி 22-7-1947 அன்று. தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது.நீள் சதுர அளவில் உள்ள கொடியில் காவி,வெள்ளை,பச்சை ஆகிய மூவண்ணங்கள் உள்ளன.கொடியின் நடுவில் நீல வண்ணத்தில் அசோக சக்கரம் 24 ஆரத்துடன் உள்ளது.இக்கொடியை உருவாக்கியவர் பிங்கிலி வெங்கையா என்பவர் ஆவார்.கொடியை கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும்

Monday, August 13, 2012

ஊழல் ஒழிப்பு போராட்டங்களால் பயன் ஏதுமில்லை




 ஊழலுக்கு எதிரான ராம்தேவ், அன்னா ஹசாரே போராட்டங்களால் ஒரு பலனும் கிடைக்காது என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே, யோகா குரு ராம்தேவ் ஆகியோரின் உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த போராட்டம் காற்று நிரப்பப்படாத ஒன்று. இன்னும் 15 ஆண்டுகளுக்கு நாட்டில் ஊழல் நிறைந்திருக்கும். இந்தக் காலமாற்றத்தில் எந்தவிதமான நன்னெறியையும் எதிர்பார்க்க முடியாது.
இத்தகைய காலமாற்றத்தைக் கடந்து நாடு முன்னேறிச் செல்ல அறிவியல் சார்ந்த, நவீன கருத்துகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவச் செய்ய வேண்டும். இதில் ஊடகங்கள் ஒன்றுக்கொன்று சமநிலையிலும், நவீனமயத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றார் கட்ஜு.

டிஸ்கி - இதைத்தான் பட்டுக்கோட்டையார் அன்றே சொல்லிவிட்டார்..'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என.

Saturday, August 11, 2012

இ‌ந்‌தியாவு‌க்கு ‌நிதான‌ம் தேவை - அறிவுரை சொல்கிறார் ராஜபக்க்ஷே



''அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும்'' எ‌ன்று இல‌ங்கை அ‌திப‌ர் மஹிந்த ராஜபக்சே கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்திய ஊடகமொன்றுக்கு  அளித்த பே‌ட்டி‌‌யி‌ல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே எட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

ஜனநாயக ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்படவில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் ஆராயப்பட்டு அதன் பின்னர் அமுல்படுத்தப்படும்.

70 வீதமான இராணுவத்தினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.எனினும், இந்தப் பிரச்சாரத்தில் உண்மையில்லை. 2009ம் ஆண்டு டிசம்பரில் 27000 படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 15000 மாக குறைக்கப்பட்டுள்ளது. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்ந்தும் வடக்கிலிருந்து மீட்கப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாக நெருங்கி உறவு பேணப்பட்டு வருகின்றது. அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பில் இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை தொடர்பில் அவர் இத்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது செய்தி....

இனி நாம்...

இந்த விஷயத்தில் அறிவுரைக் கூற இவர் யார் என்ற கோபம் நமக்கு எழுந்தாலும்...

அடப்பாவிகளா..ஆமையைவிட நிதானமாய் செயல்படும் மைய அரசைப் பார்த்து..இன்னும் நிதானம் தேவை என்கிறாரே..இதற்குமேல் எப்படி...என்று அதிசயிக்கிறோம்.

இது சம்பந்தமாக மைய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒரு நாயரையோ..மேனனையோ அனுப்பும் என பட்சி சொல்கிறது.

Tuesday, August 7, 2012

படிக்க வேண்டிய தினமணி தலையங்கம்




ஏனிந்தபோலித்தனம்

லாட்டரிச் சீட்டு வாங்காமலேயே தனக்குக் கோடி ரூபாய் பரிசு விழ வேண்டும் என்று நினைப்பவரை எள்ளிநகையாடும் நாம், விளையாட்டில் எந்தவித ஆர்வமும் காட்டாமல், ஒலிம்பிக் போட்டியில் மட்டும் பதக்கங்களை இந்தியா அள்ளி வர வேண்டும் என்று பேராசைப்பட்டால் எப்படி?
ஒலிம்பிக் தடகளப் போட்டிக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 14-ஐத் தாண்டாதபோது, நிறையப் பதக்கங்களைக் கனவுதான் காண முடியுமே தவிர, நடைமுறையில் அது எப்படிச் சாத்தியம்?
இன்றைய தேதிவரை நாம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ககன் நரங், விஜயகுமார் இருவரது வெற்றியால் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி பெற்றோம். சாய்னா மூலம் ஒரு வெண்கலம் கிடைத்தது. மேரி கோம் அரையிறுதியில் நுழைந்துள்ளதால் வெண்கலம் உறுதி, தங்கம், வெள்ளி கிடைப்பது போட்டியைப் பொறுத்தது. ஆக, 13 விளையாட்டுகளில் பங்கேற்கச் சென்ற 83 பேர் கொண்ட இந்திய அணி இதுவரை பெற்றிருப்பது நான்கே நான்கு பதக்கங்கள்!
பாட்மிண்டன் போட்டியில் சாய்னா தங்கம் வெல்வார் என்று அவரது தரவரிசையைக் கருத்தில்கொண்டு நம்பிக்கை வைத்தோம். அவர் வெண்கலம்தான் பெற முடிந்தது. அடுத்த நம்பிக்கை கிருஷ்ணா பூனியா வட்டெறிந்து சாதனை நிகழ்த்துவார் என்று நம்பினோம். அவரால் ஏழாவது இடத்துக்குத்தான் வர முடிந்தது. இது இவர்களின் தவறு அல்ல. இவர்களது திறமையை மேலும் பட்டைதீட்டத் தவறிய இந்திய அரசின் தவறு. ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் இவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் மற்ற நேரங்களில் மறந்துவிடுவதும் இந்திய விளையாட்டுத் துறையின் தவறு.
ஒலிம்பிக்கில் மற்றவர்களோடு போட்டியிட்டு விளையாடி, தகுதித்தேர்வு நிலையிலேயே, அல்லது காலிறுதி, அரையிறுதியில் வெளியேறும் நம் இந்திய வீரர்களை, ஏதோ அவர்கள் தேசத் துரோகம் செய்துவிட்டதைப்போன்று கூனிக் குறுகிப் போகச் செய்கிறது நமது எதிர்பார்ப்புகள்.
அவர்கள் விளையாடத் தேவையான எதையும் செய்து கொடுக்காத இந்திய அரசை நாம் குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்காமல், உலகத் தரத்துக்கு இணையாக ஆட இயலாமல் பின்தங்கிப் போன இந்திய வீரர்களின் குற்றஉணர்ச்சியைத் தூண்டி, கண்ணீர் சிந்த வைப்பதால் என்ன பயன்?
ஒலிம்பிக் சென்ற இந்திய வீரர்கள் விருதுகள் பெறாமல் திரும்பினால் அது அவர்கள் குற்றமல்ல. உலகத் தரத்துக்கு இணையான வீரர்களை உருவாக்கத் தவறிய இந்திய அரசின் குற்றம். விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் செலுத்தாமல், ஆனால், விளையாட்டுக்கான நிதிஒதுக்கீட்டில் முறைகேடு செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகளின் குற்றம்.
தற்போது நான்கு விருதுகள் பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு ரொக்கப் பரிசை அள்ளி வழங்கும். இதே ஆர்வத்தை விளையாட்டு மேம்பாட்டுக்காக, பயிற்சிக்காக அரசுகள் செலவிடுவதில்லை. இந்த நான்குபேரில் துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் சொந்தத் திறமையால் அதைச் சாதித்தனர். அந்த ஏகலைவர்களுக்கு அர்ஜுனா விருது நிச்சயம்.
ஒலிம்பிக் தடகளத்தில் இதுவரை இறுதிச்சுற்றில் பங்கேற்றவர்கள் மில்கா சிங், பி.டி.உஷா, எஸ்.ஸ்ரீராம், குர்பஜன் சிங், அஞ்சு பாபி ஜார்ஜ். இப்போது ஆறாவது நபராக பூனியா. ஆறே ஆறு பேர் மட்டுமே!
இந்த நிலைமைக்காக வருத்தப்படவும், வேதனைப்படவும் செய்யாத இந்தியர்கள், பதக்கங்களை நாம் வென்றெடுக்கவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் நல்ல பயிற்சிக்களம், பயிற்சியாளர், விளையாட்டுக் கருவிகள் ஊக்கத்தொகை போன்ற எதையுமே வழங்காமல், அதிலும்கூட ஊழல் செய்தால், நாம் விருதுகளை எப்படிப் பெறமுடியும்? பொறியியல் கல்லூரியிலும் மருத்துவக் கல்லூரியிலும் இடம் பெறுவதற்காக மட்டுமே விளையாட்டைப் பயன்படுத்தும் ஊழல்களால் எப்படி சர்வதேச விருது கிடைக்கும்?
பொருளாதார ரீதியில் 9-வது இடத்திலும் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்திலும் உள்ள இந்தியாவினால் 4 பதக்கங்கள் மட்டுமே வெல்ல முடிந்ததை எண்ணி வருந்தும் இந்தியர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்; இத்தகைய நிலைமைக்கு அரசுக்கு எந்த அளவுக்குப் பொறுப்போ அதே அளவு மக்களுக்கும் உள்ளது.
இந்தியாவில் எந்த நாளிலும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விளையாட்டு, இந்தியர்களுக்கு எல்லா வீரர்களின் பெயரும் அத்துப்படியான விளையாட்டு கிரிக்கெட். நம் துரதிருஷ்டம், அந்த விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட் ஒன்றைத் தவிர, எந்த விளையாட்டைப் பற்றியும் என்றைக்கும் கவலைப்படாமல், ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் நமது வீரர்கள் தங்கப் பதக்கமும், வெள்ளிப் பதக்கமும் பெறவில்லையே என்று நாம் ஆதங்கப்படுவது போலித்தனம் அல்லாமல் வேறென்ன?
ஒவ்வொரு விளையாட்டிலும் பயிற்சிபெறத் தேவையான விளையாட்டுக் களம், சூழல், சிறந்த பயிற்சியாளர்கள் போன்ற அனைத்தையும் உறுதி செய்து, அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே வீரர்களைத் தயார்படுத்திட அரசாங்கத்தை வலியுறுத்துவது எப்படி நமது கடமையோ, அதேபோன்று தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்பி வைப்பதும் மக்களின் கடமை. குழந்தைகளுக்கு பல விளையாட்டுகளைக் காட்டி, அவர்களுக்கான விளையாட்டைத் தேர்வு செய்ய சுதந்திரம் தர வேண்டும். கிரிக்கெட்டும், செஸ்ஸýம் மட்டுமே விளையாட்டு என்கிற மனோபாவம் ஏற்பட்டிருப்பதில் பெற்றோருக்கும் பங்கு இருக்கிறது.
தங்கள் வீட்டுக் குழந்தைகளைப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யாத எந்த ஒரு இந்தியனுக்கும், லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் விருதுகளை அள்ளி வரவில்லையே எனக் குற்றம் சொல்லும் தார்மிக உரிமை இல்லை!

Monday, August 6, 2012

தொடர்கதை.. (சிறுகதை)


நுனி இலையில் சாதம் மலைபோல வெடித்து கொட்டப்பட்டிருந்தது. அதைச்சுற்றி விதவிதமான பதார்த்தங்கள்.ஆனால் எதிலும் உப்பில்லை.

லேமினேட் செய்யப்பட்டிருந்த..படத்தில்..மாலையுடன்..அந்த இலையையும்,அதனருகே ஏற்றிவைத்திருந்த குத்துவிளக்கையும் பார்த்துக் கொண்டிருந்தார் சபேசன்..

'சபேசனின் ஆவி வந்து..இந்த படையலை சாப்பிட்டுவிட்டு..போங்கடா..நீங்களும்..உங்க சாப்பாடும் என வெறுத்து பூஉலகை விட்டு ஒடிவிடும்..'என்று சாஸ்திரிகள் சொல்லியபடியே..'அம்மா..நீங்கக் கூட வந்து பரிமாறலாம்' என்றார் மதுரத்திடம்.

மாட்டேன்..என்று தலையை ஆட்டி..மறுப்பு சொன்ன மதுரம்..'என்னங்க..நான் எப்படி சமைச்சுப் போட்டாலும்..நல்லாயிருக்குன்னு..நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடுவீங்களே.. ..இப்படிப்பட்ட சாப்பாட்டை நான் போடமாட்டேன்'..ஆறடி சபேசனாக உலா வந்தவரான சபேஸனின்..ஓரடி படத்திடம் புலம்பினாள்.

சபேசனின்..காரியங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.சாஸ்திரிகள் யாருக்கும் புரியாத..சமஸ்கிருதத்தில்..மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்க..மகன்கள் இருவரும்..அரைகுறையாக அவற்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.அதற்குள்..சபேசன் பற்றி நாமும் சற்று தெரிந்துக் கொள்வோம்.

சபேசன்....ஒரு தனியார் நிறுவனத்தில்..எழுத்தராக வேலை செய்து வந்தார்.ஆண் குழந்தை ஒன்று..பெண் குழந்தை ஒன்று.போனால் போகிறது..வேண்டாம் என நினைத்தும்..கொசுறாக இன்னொரு மகனும் பிறந்தான்.

ஆக..மூன்று குழந்தைகளுடன்..அவருக்கு வரும் சொற்ப சம்பளத்தில்..வாய்க்கும்..வயிற்றுக்குமான சண்டையுடன் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.ஆனாலும்..தம்மால் குழந்தைகளுக்கு எந்த சொத்தும் வைக்க முடியாது..என்பதால்..கல்வி சொத்தையாவது கொடுக்கலாம்..என தன் தகுதிக்கு மீறி மூத்தவனை..இஞ்சினீரிங்க படிக்க வைத்தார்.

பி.ஈ., மூன்றாம் ஆண்டின் போதே..காம்பஸ் இண்டெர்வியூவில்..பெங்களுருவில் உள்ள மென்பொருள்துறை கம்பெனி ஒன்று..இவனைத் தேர்ந்தெடுத்தது.

கை நிறைய சம்பளம்..இனி வாழ்வில் சற்று வசதியாய் இருக்கலாம்..என அவர் எண்ணியபோது...அவனிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வந்தது.

அதில்..அவனுடன் வேலை செய்யும்..சுதாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும்..அவனை மன்னிக்கும் படியும் எழுதி இருந்தான்.மேலும்..இருவருக்கும் கிடைக்கும் சம்பளத்தை கணக்கிட்டு...அலுவலகம் அருகிலேயே..ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டதாகவும்..அதன் மாதாந்திர தவணைத்தொகையே 30000க்கு மேல் ஆவதால்..குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாக எழுதி இருந்தான்.

கடிதம் கண்ட மதுரம்..நிலைகுலைந்து விட்டாள்...சபேசனோ..'மதுரம் கவலைப்படாதே!..ஆண்டவன்..நமக்கு சோதனையைக் கொடுத்தாலும்...இரு கைகளையும் கொடுத்திருக்கிறான்..கடைசிவரை உழைக்க" என்றார்...மேலும்..'நம் கையிலேயே ஐந்து விரல்களும்..ஒன்றாகவா இருக்கின்றன..நம்ம கடமையைச் செய்தோம்..அதற்கு பலனை எதிர்ப்பார்த்தது தவறு'என ஆறுதல் கூறினார்.தன் மனவருத்தத்தை வெளிக்காட்டாது.

இப்போது..அவர் கவனம்..அடுத்த பையன் மீது சென்றது...அவனையும்..நன்கு படிக்கவைத்தார்.அவனும் ஐ.ஏ.எஸ்.,தேறினான்.தில்லியில் வேலை.ஆனால் அவன் நடத்தையும்..முதல் மகனே பரவாயில்லை என்பதாய் இருந்தது.

முதல் மகனாவது..கல்யாணத்திற்கு முன் தந்தைக்கு தெரிவித்தான்.ஆனால்..இவனோ..திடீரென ஒரு நாள்..ஒரு பஞ்சாபி பெண்ணுடன் வந்தான்.அவளைத் திருமணம் செய்துவிட்டதாகக் கூறி..அலுவலக வேலை நிமித்தம் சென்னை வந்துள்ளதாகவும்..உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறிவிட்டு , கிளம்பிவிட்டான்.

இந்நிலையில் சபேசன்..வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.தனது முடிவுக்கு முன்னால்..தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து..தனக்கு வந்த ஓய்வு ஊதியத்தில்..தன் மகளின் திருமணத்தை முடித்தார். 

பின்..தங்களில் எஞ்சிய வாழ்நாளை எப்படித் தள்ளுவது..என்ற கவலை ஏற்பட..ஒரு வக்கீல் இடத்தில் டைபிஸ்ட் வேலை கிடைத்தது.அதில் வரும் வருமானம்...இருவர் வாழ்க்கையை ஓட்டவே சரியாய் இருந்தது.

சிலநாட்களாக..சபேசனுக்கு..கண் மார்வை மங்க ஆரம்பிக்க..கண் மருத்துவர் ஒருவரிடம் சென்றார்.இவர் கண்களை பரிசோதித்துவிட்டு..கேடராட் இருப்பதாகவும்...உட்னே அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறினார்..அதற்கு சில ஆயிரங்கள் ஆகும் என்றும் கூறினார்.

கணவருக்குத் தெரியாமல்..இரு மகன்களுக்கும் கடிதம் எழுதினாள் மதுரம்..அதில்..உங்களுக்கு கல்வி ஒளி வழங்கியவருக்கு..கண்ணொளி வழங்குங்கள் என வேண்டினாள்.

வழக்கம் போல..இருவரும் ஏதேதோ சாக்கு கூறி..தங்களால் தற்போது இயலாது..என கூறிவிட்டனர்.

ஒருநாள் கண் சரியே தெரியாது..கத்திரி வெயிலில்..கால்கள் கொப்பளிக்க, வேக வேகமாக சாலையைக் கடக்கும் போது..வேகமாக வந்த பேருந்தில் அடிபட்டார்..மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே மரணம் அவரைத் தழுவியது.

அப்பா...உயிருடன் இருந்த போது..அவரை நல்லபடியாக..வைத்து காப்பாற்றத் தெரியாத..மக்கள்..அவர் இறந்ததும்..காரியங்களில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்று தீர்மானித்தனர்.

சபேசன் ஆவி போகும் வழியில்...தாகத்தால் தவிக்கக்கூடாது என கோ தானம் செய்யப்பட்டது..

வெயில் காலங்களிலும் வெறும் கால்களோடு நடந்தவரின் பாதங்களை கற்கள்..முற்களிடம் இருந்து காப்பாற்ற செருப்பு தானம் செய்யப்பட்டது.

உயிருடன் இருந்த போது கண்ணொளிக்கு உதவாதவர்கள்..போகும் வழியில் அவர் ஆவி தடுமாறக் கூடாது என விளக்குகள் தானம் செய்தனர்.

போகும் வழியில்..மழை ,வெயிலிலிருந்து காக்க..குடை தானம் செய்யப்படுகிறது..

போங்கடா..நீங்களும் உங்க தானங்களும்..எனக்கு ஏதும் தேவையில்லை..என படத்திலிருந்த அவர் சொல்வது மதுரத்திற்கு மட்டுமே கேட்டது.

இது போன்ற சபேசன் கதைகள்..என்றுமே தொடர்கதைகள்தான்.

Wednesday, August 1, 2012

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்: எஸ்.எம்.கிருஷ்ணா





கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கட்சியினருக்கு அறிவுரை கூறினார்.

 பெங்களூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், தொடர்ந்து 4-வது முறையாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கே.ரகுமான்கான் மற்றும் நேரு யுவகேந்திராவின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள சலீம் அஹமது ஆகியோருக்கு பாராட்டு விழா பெங்களூர் டவுன் ஹாலில் புதன்கிழமை நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்துகொண்டு, இருவரையும் பாராட்டி, கௌரவித்துப் பேசியது: கர்நாடக மக்கள் எதையும் எளிதில் மறக்கும் குணம் கொண்டவர்கள். அதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

 காங்கிரஸ் கட்சிக்கு மக்களை ஏமாற்றும் வேலைகளைச் செய்யத் தெரியாது. மத்திய அமைச்சரவையில் 6 முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறோம். ஆனால் மஜத ஒரு முஸ்லிமுக்கு எம்எல்சி பதவி அளித்துவிட்டு, தங்கள் கட்சி முஸ்லிம் மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள கட்சி என்று பறைசாற்றிக்கொள்கிறது. கர்நாடகத்தில முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.4 சவீதம் இடஒதுக்கீடு, நான் முதல்வராக இருந்தபோது தான் அமல்படு்த்தப்பட்டது.

 மஜத, பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கும். தொடர்ந்து பாஜகவை குறைகூறும். பின்னர் இவர்களை ஆட்சியில் அமர்த்தியதற்கு எங்களை மன்னித்துவிடுங்கள் என்று மக்களிடம் நாடகமாடுவார்கள். முஸ்லிம் மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அமீது ஹன்சாரி திறமையானவர். அவருக்கு துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் நிறுத்தியிருக்கிறோம். காங்கிரஸ் என்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கும். காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு பல்வேறு பதவிகளை அளித்து மகிழ்ந்துள்ளது. அதை மற்றக் கட்சிகளைப்போன்று வெளிப்படுத்திக்கொள்வதில்லை என்றார்.

மேலே சொன்னவை அமைச்சர் கிருஷ்ணா சொன்னது..

அவர் சொல்ல மறந்த அவரது சாதனை..

நான் கர்நாடக முதல்வராயிருந்த போது உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காது தமிழகத்திற்கு காவிரி நீர் கொடுக்க மறுத்தவன்.அந்த அளவு இந்திய மக்கள் மீது அக்கறை கொண்டவன்.இதையும் மக்களிடம் எடுத்து செல்லுங்கள்.