Tuesday, July 30, 2013

ஒபாவிற்கு நாளைக்கு இப்படியும் கடிதங்கள் வரலாம்..


மோடிக்கு விசா வழங்கக் கூடாது என ஒபாமாவிற்கு கடிதம் எழுதிய எம்.பி.க்கள் நாளை இதெற்கெல்லாம் கூட கடிதம் எழுதினால் ஆச்சரியப்பட வேண்டாம்.

தமிழக எம்.பி.க்கள் _- கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும்

கேரளா - முதல்வர் மீதான சோலார் ஊழல் புகாரை FBI விசாரைக்க வேண்டும்.

நிதிஷ் குமார் - மதிய உணவில் 23 குழந்தைகம் இறந்ததிற்கு சர்வதேச சதி இருக்கிறதா..அல்லது பி ஜேபி போன்ற  எதிர்க்கட்சிகள் சதியா என விசாரிக்க வேண்டும்.

லாலூ - ராகுலும் வேண்டாம். மோடியும் வேண்டாம். அடுத்த பிரதமராக நீங்கள் வருவதானால் எங்கள் கட்சி ஆதரிக்கும்.

மன்மோகன் சிங்- அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் சோனியாவிடம் பேசி..பிரதமர் பதவியை எனக்கு வாங்கித் தர வேண்டும்.

கர்நாடக முதல்வர் - காவிரி தண்ணீரை துளியும் தரமுடியாது அன அறிவித்ததும் , அந்த அறிவிப்பை மழை கெடுத்தது.உங்கள் அனுமதியின்றி வந்த மழை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மோடி- பிரதமர் பதவி என் காருக்கு முன் ஓடும் நாய்க்குட்டி போல.அடிபட்டாலும் எனக்கு லாபம்.பிழைத்தாலும் எனக்கு லாபம்.இதற்கும் விசாவிற்கும் சம்பந்தமில்லை.வீடியோ கான்ஃபிரன்ஸிற்கு தடை போட வேண்டாம்.

அத்வானி - எனக்கு அழுகை அழுகையாய் வருது.ஏன் எனத் தெரிந்தால் உடனே தெரிவிக்கவும்.


Thursday, July 11, 2013

குறள் போற்றுவோம் - 4



மழை...வாழ்வாதாரங்களில் முக்கியமானது.

இயற்கை அளித்த கொடைகளில் முக்கியமானது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.இது மழைக்கும் பொருந்தும்.

மழை.....பெய்யத் தவறினால்....விவசாயம் மட்டுமா பதிக்கப்படும்? மக்களுக்கு அருந்த குடிநீரும் இல்லாது பஞ்சம் தலைவிரித்தாடும்.அதே..மழை..அளவிற்கு அதிகமாகப் பெய்தால்...நதிகள் வேண்டுமானல்..அந்நீரை...தன் புகலிடமான கடலில் கொண்டு சேர்க்கும்.ஆனால்..மக்கள் வாழும் பகுதிகளில்..வெள்ளம் புரண்டோடி உயிர்களில் வாழ்வைக் கெடுத்து..பல உயிர்களை பறித்துச் செல்லும்.

இக்கருத்தை வள்ளுவர் எப்படிக் கூறுகிறார்?

"கெடுப்பதூஉங்  கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
 எடுப்பதூஉம் எல்லாம் மழை"  - 15

பொருள் - பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்விற்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.


Wednesday, July 10, 2013

குறள் போற்றுவோம் - 3



இந்தியா...

தனது மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தீபகற்பம்.

ஆனால் கடல் நீரால் என்ன பயன்?.நதிகளில் தண்ணீர் இல்லை.கடல் நீர் விவசாயத்திற்கு பயன் படுமா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

ஆனால்..ஒரு அடிப்படை உண்மையை மறந்துவிடுகிறோம்.

அந்த கடல்தான் தன் நீரை ஆவியாக்கி, மழைமேகமாக்கி மழையை தருவிக்க மூல காரணமாய் உள்ளது.ஆனால் அந்த கடல் நினைக்கும் இடத்தில் மழை பொழிய வாய்ப்பில்லை.

ஆகவே..கடல் நீர்  சூழ்ந்த உலகமாயினும்..அதிலிருந்த்து தோன்றும் மழை தேவையான இடங்களில் பெய்யாது பொய்த்துவிடின் விளைச்சல் இல்லை...நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படுகிறது.

வள்ளுவரும்..வான்சிறப்பில் சொல்லுவது என்ன.....

'விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி'  - 13

பொருள் - கடல்நீர் சூழ்ந்த உலகமாய் இருந்தாலும், மழைநீர் பொய்த்து விட்டால், பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.


குறள் போற்றுவோம்..- 2



இன்று விளை நிலங்கள் எல்லாம் பட்டா போட்டு விற்கப்படுகின்றன.

அதற்கான காரணங்களில் ஒன்று விவசாயியின் வறுமை.

நமக்கு உணவை விளைவித்துத் தருபவன் வறுமையில் ஏன் வாட வேண்டும்.

காரணம்..அவன் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில்லை.அவன் விளைச்சலுக்கு அவனால் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை.அப்படியும் விவசாயம் செய்யலாம் என்றால், மழையில்லை. அதனால் நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.தண்ணீரிலும் அரசியல்.ஆகவே கிடைத்த விலைக்கு விளைநிலத்தை விற்று விட்டு, நகரம் நோக்கி நகர்கிறான்.நகரத்தில் கூலி வேலையாவது செய்து பிழைக்கலாம் என்று.

விவசாயியின் வளம் குறைய மழை பிரதானக் காரணம்.இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்..

 'ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
 வாரி வளங்குன்றிக் கால்'

இதன் பொருள்......

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத்தொழில் குன்றிவிடும்.

மழையை விவசாயியின் வருவாய் என அவர் குறிப்பிட்டது இக்குறளின் சிறப்பு.

Monday, July 8, 2013

குறள் போற்றுவோம்..- 1



திருக்குறள்..

ஒன்றே முக்கால் அடியில், பல கருத்துகளை தன்னுள் அடக்கியுள்ள நூல்..

உலகம் போற்றும் தமிழ் மறை..

அதில் இருந்து நாள் தோறும் ஒரு குறளுக்கு விளக்கம் சொல்ல முடிவெடுத்துள்ளேன்.

இன்று..

வான் சிறப்பு அதிகாரத்தில் இரண்டாம் குறள்..

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை....    -12

இது சாதாரணமாக...திருக்குறள் தெரியுமா?  எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
இக்குறளுக்கான பொருள் என்ன? பார்ப்போம்..

இது என்ன  துப்பாக்கி ..என்கிறீர்களா?

அந்தத் துப்பாக்கி ஏந்தி வரும் அர்த்தம் என்ன?..

இன்று  பருவ மழை பொய்த்ததால்..விளை நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.நெல் சாகுபடி செய்வது கடினம்...என்றெல்லாம் படிக்கிறோம்..பார்க்கிறோம்..

மழை...மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத் தர முக்கியமாய் பயன்படுகிறது.

அதே மழை தரும் நீர், மக்களுக்கு குடிநீராகவும் ஆகி..மக்களை வாழ்விக்கிறது.

இப்படி பெரிய தியாகத்தை செய்யும் அம்மழை...நான் அதைச் செய்தேன்..இதைச் செய்தேன் மக்களுக்கு என அரசியல் பண்ணுவதில்லை.இதைத்தான் இக்குறள் சொல்கிறது.

இனி....மேற் சொன்ன குறளுக்கான உரை-

மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,அவர்களுக்கே அம்மழை அருந்தும் உணவாகும் ஆகிய தியாகத்தையும் செய்கிறது.

(பின் குறிப்பு- இது அக்குறள் கூறும் பொருள். இதை ஒவ்வொரு சொல்லுக்குமான பொருள் கொண்டு நோக்க வேண்டாம் )


Wednesday, July 3, 2013

புற்றுநோயும்..விளம்பர படங்களும்....



இப்போதெல்லாம் விளம்பரங்களுக்கு என்னதான் செய்வது என்று இல்லாமல்..சற்று எல்லை மீறியே வருகின்றன.

குறிப்பாக, முடி கொட்டுவதற்கான ஒரு தைல விளம்பரத்தில், பெரியவர்களுக்குத் தெரியாத ஒன்றை..பள்ளி சிறுவர்களுக்குத் தெரிந்திருப்பது போல காட்டப்படுகிறது.

அதுவாவது பரவாயில்லை..பதினைந்தே வயது நிரம்பியுள்ளது போன்ற ஒரு பெண், தந்தைக்கு சாக்லேட் கொடுக்க, தந்தை அதற்காக மேலும் இரண்டு சுற்று ஓட வேண்டும் என்கிறார்.அவரை அனுப்பி விட்டு தனது பாய் ஃப்ரண்டுக்கு விசில் அடித்து கூப்பிடுகிறாள் அப்பெண்.இது பிரபல சாக்லெட் நிறுவன விளம்பரம்.(இந்த சாக்லேட் அப்பாவை ஏமாற்ற என்கிறார்களோ)

அதைவிட கொடுமை...

ஒரு தனியார் மருத்துவமனை விளம்பரப்படம்.

புற்று நோய்க்கு வைத்தியம் பார்க்கிறார்களாம் சிறப்பாக..அதற்கான விளம்பரத்தில்..

ஒரு சிறுவனுக்கு (அவனுக்கு பத்து வயதிருக்குமா) புற்று நோய் என குடும்ப வைத்தியர் கூறி, அந்த குறிப்பிட்ட மருத்துமனையை சிபாரிசு செய்கிறாராம்.

யாருக்கு உடம்பிற்கு வந்தாலும் வருத்தமே..ஆனால் ஒரு சிறுவனுக்கு (குழந்தை என்று சொல்லலாமா) புற்று நோய் வந்துள்ளது எனக்காட்டுவது..மனம் ஆறவில்லை.அவனை பெற்றோர் கவலையுடன், கண்கள் கலங்க அம்மருத்துவமனையில் சேர்க்கிறார்களாம்.அங்கு வைத்தியர்..புற்று நோய் தடுப்பு வீரன் என்ற பேட்ஜ் குத்திவிட..அவன் ஒரு போர் வீரனாக நடிக்கிறான்.அவனைப் பெற்றோர் கண் கலங்க கைதட்டுகின்றனர்.

இது என்ன விளம்பரம்.ஒரு மருத்துவ மனை , கிட்டத்தட்ட ஆட்கொல்லி நோய்க்கு... சிறந்த மருத்துவம் கொடுப்பது மகிழ்ச்சி.ஆனால் அதை விளம்பரமாக்கி, அதையும் ஒரு சிறுவனைக்காட்டுவது..

சே....கோபம் வருகிறது..கூடவே..விளம்பர நோக்குக் கொண்ட அந்த மருத்துவமனை மீது அருவெறுப்பும் வருகிறது.

Tuesday, July 2, 2013

தமிழுக்கு கொம்பு விளைவித்தவர்



தமிழில் 'எ' கரம்.'ஒ' கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய் எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.

உதாரணமாக..கெ,பெ,செ இவைகள் மீது புள்ளி வைத்தால் குற்றெழுத்துக்கள்

கெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதினால் நெட்டெழுத்துக்கள்..என உச்சரிக்கப் பட்டன.

தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி அமைத்தார்.

நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..(கே,பே,சே)

இந்த அருமையான சீர்திருத்தம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இந்த வீரமாமுனிவர் தான் தேம்பாவணி எழுதியவர்..தவிர்த்து, இன்று வரை பிரபலமாயுள்ள பரமார்த்தகுரு கதைகளை எழுதியவர் ஆவார்.

அதுபோல..தேவையில்லாத கொம்பை நீக்கியவர் தந்தை பெரியார் ஆவார்..

னை, லை,ணை ஆகியவை முன்னர் கொம்பு முளைத்து எழுதப்பட்டவை. அவற்றை மாற்றி..மற்ற எழுத்துகள் போல (கை,சை) எழுத்தில் கொண்டுவந்தார்.