ஒருவர் திடீரென காரணமில்லாமல் இளைத்து விட்டால், சாதாரணமாக, "உங்களுக்கு சுகர் இருக்கிறதா?" என விசாரிப்போம்..
அதுபோல தமிழ் இதழ்களும் இன்று இளைத்து விட்டன..
தமிழ் வார இதழ்கள், தங்களுக்கே உரிய அளவுடன்..அதிகப் பக்கத்துடன், நிறைய கதைகள், தொடர்கதைகள், அரசியல், சினிமா, இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் என அனைத்தையும் தாங்கி வந்து, வாசகர்களை அவை என்று வருகிறது என ஆவலுடன் எதிர்ப்பார்க்க வைத்த காலங்கள் உண்டு.
ஆனால்...என்று விகடன், தன் அளவை அதிகரித்தானோ, அன்றே தரத்திலும் சற்று குறைந்து விட்டது. ஆனாலும் சில இலக்கியத் தரம் வாய்ந்த கட்டுரைகள், விமரிசனம் என சுவாரஸ்யம் சற்று இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.ஆனால்..144 பக்கங்கள் வரை வந்த அது, இன்று மிகவும் இளைத்து விட்டது.
அடுத்து அதிகம் வருத்தப்பட வைத்துள்ளது கல்கி. நல்ல பாரம்பரியத்துடன், ஜன ரஞ்சகப் பத்திரிகையா அல்லது இலக்கியமா அல்லது பொது அறிவா என்று அதிசியப்படும் அளவிற்கு வந்த பத்திரிகை.இன்று மிகவும் இளைத்து 48 பக்கங்களே தாங்கி வருகிறது.இப்படியே போனல், கல்கி..வரும் தலைமுறையினரிடம் ஒரு காலத்தில் வந்த பத்திரிகை என்ற பெயர் எடுத்துவிடுமோ என அஞ்சப்பட வேண்டியுள்ளது.
தன் பங்குக்கு கலைமகளும், அமுதசுரபியும் கூட இளைத்து விட்டன.
ஓரளவு, குமுதமும், குங்குமமுமே இன்று சிறப்பாக வருகிறது எனலாம்.(குமுதத்தில் இன்று வரும் செய்திகளில் நாம் உடன்படுகிறோமா , இல்லையா இன்பது வேறு விஷயம்)
இதற்குக் காரணம் என்ன? சர்குலேஷன் குறைந்து விட்டதா? என்றால், அப்படியும் சொல்ல முடியாது.
வேறு என்ன காரணம்..
நான் அறிந்த வரை..அவற்றில் வரும் விளம்பரங்கள் தான் காரணமாய் இருக்கக் கூடும்.
முன்பெல்லாம் இதழுக்கு, இருபது , முப்பது பக்கங்கள் விளம்பரம் வரும்.அதனால் விஷயங்களும் அதிகப் பக்கங்கள் வந்தன.இன்றோ வார இதழ்களில் விளம்பரங்களை அதிகம் காணமுடிவதில்லை.
சென்ற வார 'கல்கி' யில், வெளியார் விளம்பரம் என மூன்று பக்கங்கள் தான் வந்துள்ளது.தவிர்த்து, விளம்பரங்கள் இல்லாததாலும்,காகித விலை உயர்வு, நிர்வாகச் செலவு என கட்டுக்கடங்காத செலவுகள் அதிகரித்ததாலும் இந்நிலை என நிர்வாகிகள் கூறக்கூடும்.
ஆனால்
இனி பழைய தரத்தில் கல்கியையோ, விகடனையோ பார்க்க முடியாதா..என..தமிழ் வாசகர்கள் வருத்தமே அடைகின்றனர்.
1 comment:
மிக உண்மை தரமான இதழ்கள் வராதோ என்றுதான் நாம் எதிர்பார்க்கிறோம்
Post a Comment