Monday, January 12, 2015

குறுந்தொகை-187



தலைவி கூற்று
(திருமணத்திற்காக பொருளீட்ட பிரிந்த தலைவன் வராததால்,தலைவி தோழியை நோக்கி, “அவர் தாம் சென்றவினையை நிறைவேற்றிக் கொண்டு விரைவில் வரும் வன்மையையுடையார்” என்று கூறியது.)

குறிஞ்சி திணை -பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-


செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி
   
சுரைபொழி தீம்பா லார மாந்திப்
   
பெருவரை நீழ லுகளு நாடன்
   
கல்லினும் வலியன் றோழி

வலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே.

                                     -கபிலர்.

  உரை-

 செவ்வியமலைப் பக்கத்தின் கண் தங்குதலை யுடைய,  எண் கால் வருடையினது குட்டி,  தன் தாயின் மடியினின்றும் சுரக்கின்ற இனிய பாலை, வயிறு நிறைய உண்டு, பெரிய மலைப் பக்கத்திலுள்ள நிழலில், துள்ளுதற் கிடமாகிய நாட்டையுடைய தலைவன்;  கல்லைக் காட்டிலும் வன்மையை உடையவன்;என் நெஞ்சு , அவன் வன்மையையுடையா னென்று கருதாமல்,  அவன் திறத்துமெலிவை அடையும்.

 (கருத்து) தலைவன் வரைபொருள் பெற்று விரைவில் மீள்வான்.

    (வி-ரை.) வரை பொருளுக்காகப் பிரிந்த தலைமகன் நீட்டித்தானாக,தலைவி அன்பு மிகுதியினால் ஆற்றாளாயினாள்; அது கண்ட தோழி,அவளை ஆற்றுவிக்க எண்ணி, “தலைவன் தான் நினைந்து சென்றபொருளைப் பெற்றிலன் போலும்! உரிய காலத்தே அதனைப் பெற்றுவருதற்குரிய வன்மையிலன் போலும்!” என்று தலைவனுக்கு இழிபு தோன்றக் கூறினாள். அதுகேட்ட தலைவி, தலைவனைக் குறைகூறுவதைக் கேட்கப் பொறாத கற்புடையவளாதலின், “அவன் வலியன்;தான் நினைந்த பொருள் பெற்று மீள்வன். என் நெஞ்சு அவன் வன்மையை நினையாது அறியாமையால் வருந்துகின்றது. என் ஆற்றாமைக்குக் காரணம் தலைவன் செயலன்று; எனது நெஞ்சின் அறியாமையே” என்று தலைவன் திறத்திற் குற்றம் சாராதவாறு மொழிந்தாள்.

 (வருடை - எட்டுக் காலையுடையது ஒரு விலங்கு;இதற்கு முதுகிற் கால்கள் இருக்கும் என்பர்; )

    

Friday, January 2, 2015

குறுந்தொகை-186


தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி துயருறுவாள் என்று வருந்திய தோழியை நோக்கி, “தலைவனை நினைந்து துயிலேன் ஆயினேன்” என்று தலைவி கூறியது.)

முல்லைத் திணை- பாடலாசிரியர் ஒக்கூர் மாசாத்தி

இனி பாடல்-
 
ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த
   
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
   
எயிறென முகைக்கு நாடற்குத்
   
துயிறுறந் தனவாற் றோழியென் கண்ணே.


                                  -ஒக்கூர் மாசாத்தி.

    என் கண்கள்,  மிக்க முழக்கத்தையுடைய இடியேற்றோடு,மேகம் மழைபெய்து கலந்த, முல்லை நிலத்திலுள்ளனவாகிய,  மெல்லிய முல்லைக் கொடிகள்,  பற்களைப் போல அரும்பும் நாட்டையுடையதலைவன் பொருட்டு, உறக்கத்தையொழிந்தன.

 

    (கருத்து) தலைவன் இன்னும் வாராமையின் நான் துயிலொழிந்து வருந்துகின்றேன்.

Thursday, January 1, 2015

தேன் உண்ணும் வண்டு

                     

தேனை உண்டதும்

பறந்திடும் வண்டு

மலரோ

வண்டை எண்ணி

வாடிடும்

இதழ்களை உதிர்த்து

மண்ணோடு

மண்ணாகிடும்


குறுந்தொகை-185



தலைவி கூற்று
(தலைமகன் இரவில் வந்து தலைவியோடு அளவளாவி வருங்காலத்தில் ஆற்றின் ஏதம் அஞ்சி வேறுபட்ட தலைவியை நோக்கி, “நீவேறுபட்டாயால்!” என்ற தோழிக்கு, “யான் வேறுபட்டமையைத்தலைவனுக்குச் சொல்லிப் பரிகாரம் தேடுவாயாக” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் இளவேட்டனார்

இனி பாடல்-

 
நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி
   
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடிநெகிழ்ந்
   
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச்
   
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப்
   
பாம்புபை யவிந்தது போலக் கூம்பிக்
   
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்
   
கன்மிசைக் கவியு நாடற்கென்
   
நன்மா மேனி யழிபடர் நிலையே.


                            -இளவேட்டனார்.)

உரை-

 பல பத்திக்கீற்றுக்களையுடைய பாம்பினது,  படம் ஒடுங்கியதைப் போலக் குவிந்து, கீழ் காற்றால் வீழ்த்தப்பட்ட, ஒள்ளிய செவ்விய காந்தள் மலர்,  பாறையின்மேல்,  கவிந்து கிடக்கும்,  நாட்டையுடையதலைவனுக்கு,  எனது நல்ல மாமையையுடைய மேனியினது,  மிக்க துயரை உடைய நிலையை,  நெற்றி பசலைபரந்து, தேமல் ஒளியிழந்து, நெடிய மெல்லிய பருத்த தோள்கள்,மெலிந்து,  வளைகள் நெகிழப்பெற்று,  இத்தகைய வேறுபாட்டையுடையளாகுதல்,  உம்மால் ஆகியதென,விளங்கச் சொன்னால் என்ன குற்றம் உளதாகும்?



    (கருத்து) தலைவன் இராவந் தொழுகுவதனால் நான் வேறுபட்டமையை அவனுக்கு நீ அறிவிப்பாயாக.

    (“இரவிலே தலைவன் வந்து அளவளாவும் பொழுதுஅதனால் மனமகிழ்ந்து இருத்தற்கு மாறாக நீ இங்ஙனம் வேறுபட்டாயே!”என்ற தோழியை நோக்கி, “இங்ஙனம் என்னிடம் கூறுவதினும் என்நிலையைத் தலைவனிடம் கூறுதல் நலம்” என்று தலைவி கூறினாள்.)