Monday, March 30, 2015

கலைஞர் எனும் விநாடி முள்

சமுதாயத்தில் ஒருவர் அலுவலகப் பணிகளிலிருந்து ஒய்வு பெற்றதும்...60 வயதை எட்டியதும், தனக்கு வயதாகிவிட்டது...இனி தன்னால்
 எந்த பயனுமில்லை..இனி தான் வாழும் ஒவ்வொரு நாளும் இறைவன் எனப்படுபவன் அளிக்கும் போனஸ் நாட்கள்..என்ற அங்கலாய்ப்புடன்...உடலில் உண்டான வியாதிகளுடனும்..இனி வேறு வியாதிகள் வந்திடுமோ! என்ற பயத்துடனும் பயந்து..பயந்து வாழும் மக்கள் நிறைந்த நாடு நம் நாடு.

ஒரு விவாதத்திற்காக சொல்கிறேன்..இனி ஒவ்வொரு நாளும் போனஸ் நாட்கள் என்று எண்ணும் நீங்கள்..ஏன் அந்த நாட்களை சமுதாயத்திற்கோ..இலக்கிய உலகிற்கோ செலவிடக் கூடாது?

உண்மையில், முதுமைதான் , வாழ்வில் அனைத்துக் கடமைகளையும் முடித்துவிட்டு..இன்பமயாக கழிக்க வேண்டிய நாட்கள் முதியோர்க்கு,அதைவிடுத்து, மரணத்தை எண்ணி ஏன் கவலைப்பட வேண்டும்.

"மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே
நீ இருக்கும் போது அது வரப்போவதில்லை
அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை" என்கிறார் விவேகானந்தர்,

சரி...விஷயத்திற்கு வருவோம்...இப்போது நான் சொல்லப் போவது 91வயது இளைஞன் பற்றி..

உழைப்பிற்கு தேனீயை உதாரணம் சொல்வார்கள்.ஆனால் அதைவிட இறக்கும் வரை விடாது உழைப்பது "விநாடி முள்" ஆகும்.அது நின்றுவிட்டால் அந்தக் கடிகாரம் வேலை செய்யாமல் நின்றுவிட்டது எனப் பொருள்.

கலைஞரும் விநாடி முள் போலத்தான்.வாழ்வில் ஒரு விநாடி கூட வீணாக்காது உழைப்பவர்.

உழைப்பு...உழைப்பு..உழைப்பு அதன் மறுபெயர் கலைஞர் எனலாம்.

இதுவரை 75 படங்களுக்கு கதை வசனம்..அவற்றிற்கு 100க்கும் மேற்பட்ட பாடல்கள்.ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர்.ரஷ்ய இலக்கிய மேதை எழுதிய காவியத்திற்கு தமிழில் .கவிதை வடிவில் நவீனம் (தாய்), தொல்காப்பியம், திருக்குறளுக்கு கலைஞர் உரை....இப்படி இலக்கியத் தொண்டிற்கு ஆற்றிய பணிகளை சொல்லிக் கொண்டே போகலாம் என்றால்....

அரசியல் வாழ்வு என்னை மறந்து விட்டாயே என்கிறது.ஐந்து முறை முதல்வர், அப்படி இல்லா காலத்தில் எதிர்க் கட்சித் தலைவர் எனத் தொடரும் பொதுப்பணி...இவை போதாது என அகவை 91 வயதிலும் "இராமானுஜர்" தொலைக் காட்சித் தொடருக்கு கதை, வசனம் எழுதப் போகிறார்.அதற்காக ராமானுஜர் பற்றிய புத்தகங்களை மீண்டும் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்.அவர் படிக்கத் துவங்கியுள்ள புத்தகங்கள்.

ராமகிருஷ்ணானந்தர் வங்க மொழியில் எழுதி கா.ஸ்ரீ.ஸ்ரீ யால் மொழிபெயர்க்கப்பட்ட ராமானுஜர் வாழ்க்கை வரலாறு, கவிஞர் வாலி எழுதிய 'ராமானுஜ காவியம்". டி.என்.சுகி சுப்ரமணியன் எழுதிய "ஸ்ரீ இராமானுஜர்", சாண்டில்யன் எழுதியுள்ள "மதப் புரட்சி செய்த மகான் இராமானுஜம்', பி.ஸ்ரீ.எழுதிய "ஸ்ரீ ராமானுஜர்"., கங்கா ராமமூர்த்தியின்','ஸ்ரீராமானுஜர் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்..ஆகியவை.

இன்று புத்தகத்தின் பத்து பக்கங்களைக் கூட படிக்க இயலாது, ஆன் லைனில் அவற்றைத் தேடுவோர் நடுவே...எழுத்தையும்,படிப்பையும், பொது வாழ்வையும் விடாது தொடரும் 91 வயது இளைஞன் கலைரை..விநாடிமுள்ளிற்கு அன்றி வேறு எதற்கு ஒப்பிட முடியும்.


Wednesday, March 25, 2015

குறுந்தொகை-203




தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று பிரிந்த தலைவனுக்குத் தூதாகப் வந்த தோழியைநோக்கி, “தலைவர் உடனுறைந்து அன்பு பாராட்டற்குரிய நிலையினராகஇருந்தும் அயன்மை தோன்ற ஒழுகுகின்றார்; அவர்பால் முன்புபரிவுடையேன்; இப்பொழுது அது நீங்கியது” என்று தலைவி மறுத்துக்கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் நெடும்பல்லியத்தன்

இனி பாடல்-
   
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
   
மரந்தலை தோன்றா வூரரு மல்லர்
   
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
   
கடவு ணண்ணிய பாலோர் போல

ஒரீஇ யொழுகு மென்னைக்குப்
   
பரியலென் மன்யான் பண்டொரு காலே.

                      -நெடும்பல்லியத்தன்
’.

 தோழி, தலைவர் மலைகள் இடையிடுவதனாற் சேயதாகிய நாட்டினருமல்லர்; தன்னிடத்துள்ள மரங்கள் நமக்குத் தோன்றாத சேய்மையிலுள்ள ஊரினரும்அல்லர்;  கண்ணாலே காணும்படி,  விரைவில் வருதற்குரிய அணிமையிடத்திலிருந்தும், முனிவரைஅணுகி வாழும் பகுதியினரைப்போல,  மனத்தால் நீங்கி ஒழுகுகின்ற என் தலைவர்பொருட்டு, யான் முன்பு ஒரு சமயத்தில், பரிதலையுடை யேனாயினேன்; அஃதுஇப்பொழுது கழிந்ததே!

 

    (கருத்து)இப்பொழுது என்னைப் புறக்கணித் தொழுகும் தலைவர்பால் யான் முன்பு பரிவுடையளாக இருந்தேன்.



    (முனிவரைக் கண்டார் தம் தூய்மையன்மை காரணமாக அஞ்சி விலகி யொழுகும் தன்மையைப் போல என்னிடத்தினின்றும் நீங்கி ஒழுகினா ரென்றாள். இவ்வுவமையால், தனது தூய்மையையும் தலைவனது விலைமகளை நாடிச் செம்ற தூய்மையன்மையையும் குறிப்பாலுணர்த்தினாள்.)

Sunday, March 22, 2015

குறுந்தொகை- 202



தலைவி கூற்று
(விலைமகளிடமிருந்து பிரிந்துவந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி, “தலைவர் இப்பொழுது எனக்கு இன்னாமையைத் தரும் ஒழுக்கத்தினராதலின் என் நெஞ்சு வருந்தும்; அவரை ஏற்றுக் கொள்ளேன்” என்று தலைவி கூறியது.)

மருதம் திணை-பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
   
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
   
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
   
கினிய செய்தநங் காதலர்

இன்னா செய்த னோமென் னெஞ்சே.

                           -அள்ளூர் நன்முல்லை.

 
தோழி, என் நெஞ்சுவருந்தும்;  முல்லைநிலத்தின் கண், நெருங்கி முளைத்த, சிறிய இலைகளையுடைய நெருஞ்சியினது, முன்னர்த் தோன்றிக் கண்ணுக்குஇனிய புதியமலர், பின்னர் இன்னாமையைத்தரும் முள்ளைத் தந்தாற்போல, முன்பு நமக்கு இனியவற்றைச் செய்தொழுகிய நம் தலைவர்,  இப்பொழுது இன்னாதனவற்றைச் செய்தொழுகு தலால், என் நெஞ்சு நோம்--.



    (கருத்து) தலைவர் இன்னாராகி ஒழுகுதலால் என் நெஞ்சம் வருந்தும்.

   ( நோமென்னெஞ்சே நோமென்னெஞ்சே யென்ற அடுக்குஇடைவிடாது நோதலைக் குறித்தது;

    “தலைவர் நின்மாட்டு இனிய பல செய்தவரன்றே; அவரை நீஏற்றுக்கோடல் வேண்டும்” என்ற தோழியை மறுப்பவளாதலின், “அவர் இனியராயிருந்தது முன்பு; இப்பொழுது இன்னாராயினர்” என்றாள்.)

Wednesday, March 18, 2015

குறுந்தொகை-201




தலைவி கூற்று
(தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும் மனைக்கண் சென்ற தோழி, “வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்” என்று கூற, “நான் அங்ஙனம் ஆற்றியிருக்கும் வண்ணம் அயன்மனைக் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள்; அவள் வாழ்க!” என்று தலைவி சொல்லியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர்  யார் எனத் தெரியவில்லை

இனி பாடல்-
 
அமிழ்த முண்கநம் மயலி லாட்டி
   
பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு
   
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை
   
நெல்லி யம்புளி மாந்தி யயலது

முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும்
   
கழைநிவந் தோங்கிய சோலை
   
மலைகெழு நாடனை வருமென் றோளே.

 அயன்மனைக்கிழத்தி, பாலைக் கலந்தாற்போன்றஇனிமையையுடைய,  தேமாம்பழத்தைத் தின்று,  கரிய மெல்லியசிறகுகளையும்,  கூரிய நகங்களையும்உடைய வௌவால், நெல்லியினதுபுளித்த காயை உண்டு, அயலிலுள்ளதாகிய, முள்ளில்லாதஅழகிய பருத்த மூங்கிலின் கண்ணே தொங்குகின்ற, மூங்கிற் கோல்கள் உயர்ந்துவளர்ந்த சோலைகளையுடைய, -மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனை, வரைவுக்குரியவற்றோடு வருவானென்றுகூறினாள்; ஆதலின், அவள் அமிழ்தத்தைஉண்பாளாக!



    (கருத்து) தலைவன் வரைவொடு வருதலை முன்பு கூறி எனக்கு உறுதி யுண்டாக்கிய அயலிலாட்டி வாழ்வாளாக!



    தேமாம்பழத்தை உண்ட வௌவால் பின்பு மாறுபட்ட சுவையையுடைய நெல்லிக்காயை உண்டு சிறிதும் ஊறு உண்டாக்காத முள்ளில்மூங்கிலிற் றூங்கியதுபோல, களவுப் புணர்ச்சியின்கண் இன்பந் துய்த்ததலைவன் அவ்வின்பத்துக்கு மாறாகிய இடையீடுகளையும் ஏற்றுப் பின்வரைந்து கொண்டு சிறிதும் ஏதமின்றி இன்பம் துய்க்கும் நிலையினனாயினன் என்பது குறிப்பு.

Monday, March 16, 2015

குறுந்தொகை-200



தலைவி கூற்று
(பருவம் வந்தகாலத்துக் கவன்ற தலைவியை நோக்கி, “இது காரன்று; வம்பு” எனக்கூறிய தோழிக்கு, “கார்ப்பருவத்துக்குரிய மேகமுழக்கமும் புதுவெள்ளமும் உள்ளன; இக்காலத்தும் தலைவர் வந்திலர்; அவர் நம்மை மறந்தார் போலும்!” என்று தலைவி கூறி வருந்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் அவ்வையார்

இனி பாடல்-


பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
   
மீமிசைத் தாஅய வீஇ சுமந்துவந்
   
திழிதரும் புனலும் வாரார் தோழி
   
மறந்தோர் மன்ற மறவா நாமே

கால மாரி மாலை மாமழை
   
இன்னிசை யுருமின முரலும்
   
முன்வர லேமஞ் செய்தகன் றோரே.

                    - அவ்வையார்

  தோழி, கார்ப்பருவத்துப்பெய்தற்குரிய மழையையுடைய, மாலைக்காலத்து வரும் கரிய மேகங்கள்,  வித்தி வானோக்கும் புலமுடையாருக்கு இனியஒலியையுடைய இடியேற்றையுடையனவாகி முழங்கும்; முன்பு மழைபெய்த குன்றத்தின்கண், மலர் மணக்கின்ற தண்ணியகலங்கலின்மேலே, பரவிய, மலர்களைச் சுமந்து வந்து,  அருவிப்புனலும் வீழும்; கார்ப்பருவத்திற்கு முன்னரே வருவேமென்ற பாதுகாப்பைச்செய்து அகன்ற தலைவர்,  இன்னும் வாராராயினர்;அவர் நிச்சயமாக நம்மை மறந்தார்;  நாம் அவரை மறத்தல் செய்யாம்.


  (கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்தாரல்லர்.

Sunday, March 15, 2015

திரைப்படங்களுக்கான வரிவிலக்கு..



முன்பெல்லாம் ஒரு திரைப்படத்திர்கு வரிவிலக்கு அரசு அளிக்கிறது என்றால்...அப்படத்திற்கான திரையரங்கு நுழைவுக் கட்டிணம் குறையும்.அதிக மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால்..இப்போதெல்லாம்..வரிவிலக்கு அளிக்க, படத்தின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும், ஆங்கிலத்தில் வசனங்கள் இருக்கக் கூடாது..இப்படி..இன்னும் பிற விதிகள் அவ்வப்போது அரசாளும் கட்சிக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது.குறிப்பாக ஆளும் கட்சிக்கு, எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் திரைப்படம் எனில் வரிவிலக்கு கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்படுகிறது.

லட்சக்கணக்கில், (கோடி?) படமெடுப்பவர்களுக்கு இப்போது அளிக்கப்படும் விலக்கு போய்ச் சேருகிறது.இது ஏன்? அநாவசியமாக கதாநாயகனுக்கும்'..படப்பிடிக்கும் (வெளிநாட்டில் தேவையில்லாமல் காதல் காட்சிகள், கனவுக் காட்சிகள் படப்பிடிப்பு) செலவு செய்பவர்களுக்கு,..பொது மக்கள் வரிப்பணத்தை வரிவிலக்கு என்ற பெயரில் ஏன் கொடுக்க வேண்டும்.

வரிவிலக்கு ஒருபடத்திற்கு அளித்தால், அரசின் நோக்கம் அப்படத்தை அதிக மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்க வேண்டும்.மக்களுக்குக் குறைந்தக் கட்டணத்தில் அப்படம் காண்பிக்கப்பட வேண்டும்.ஆனால் இன்று அப்படி ஒரு நடைமுறை இல்லை.அது ஏன்...

பல லட்சம் மக்கள் உழைத்துக் கொடுக்கும் வரிப்பணம், சினிமாவைத் தொழிலாகக் கொண்டுள்ள ஒரு சில தயாரிப்பாளர்களுக்குப் போய் ஏன் சேர வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான நடவடிக்கையை எடுப்பார்கள் என எதிப்பார்ப்போம். 

Friday, March 13, 2015

குறுந்தொகை-199



தலைவன் கூற்று
(தாய் முதலியோர் தலைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்லஎண்ணியிருப்பதைத் தோழியால் அறிந்த தலைவன், “இனி இவளைப்பெறுவது அரிது போலும்! ஆயினும் என் காமநோய் என்றும் அழியாதது;பிறவிதோறும் தொடர்ந்து வருவது” என்று நெஞ்சை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்-

 
பெறுவ தியையா தாயினு முறுவதொன்
   
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
   
கைவள் ளோரி கானந் தீண்டி
   
எறிவளி கமழு நெறிபடு கூந்தல்

மையீ ரோதி மாஅ யோள்வயின்
   
இன்றை யன்ன நட்பி னிந்நோய்
   
இறுமுறை யெனவொன் றின்றி
   
மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே.


                                  -பரணர்

   

நெஞ்சே. திண்ணிய தேரையுடைய, கைவண்மையையுடைய ஓரியினது, கானத்தைத் தீண்டி,  வீசுகின்றகாற்றைப் போல, மணக்கின்ற, நெறிப்பு அமைந்த கூந்தலாகிய,மையைப்போன்ற தண்ணிய மயிரையுடைய, .மாண்மையை உடையோளிடத்து,  இன்றை நிலையைப் போன்று என்றும் உள்ளநட்பையுடைய இந்தக் காமநோயானது, அழியுமுறை என்பது ஒன்று இல்லாமல். மறுமையில் வாழ்தற்குரிய உலகத்திலும்,  நிலைபேற்றை அடையும்; ஆதலின்,  தலைவியை இப்பிறவியின்கண் பெறுதல் நம்மாட்டுப் பொருந்தாதாயினும், மறுமை யுலகத்துப் பெறுவதாகியநாம் அடையும் பயன் ஒன்று உண்டு.

 

    (கருத்து) இனி இப்பிறப்பில்  தலைவியைக் காணமுடிவதில்லை

Tuesday, March 10, 2015

குறுந்தொகை-198



தோழி கூற்று
(“இனி நாங்கள் தினைப்புனங் காக்கச் செல்கின்றேம்; நீ அங்கு வருக. இங்கு எம்முடைய தாய் வருவாளாதலின் வரவேண்டாம்” என்று தோழிதலைவனுக்குக் கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-

 
யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற்
   
கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை
   
மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு
   
கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற்

படுகிளி கடிகஞ் சேறு மடுபோர்
   
எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்
   
தார நாறு மார்பினை
   
வாரற்க தில்ல வருகுவள் யாயே.



   
                                   -கபிலர்.



 யாமரத்தை வெட்டிய,மரங்களைச் சுட்ட வழியில்,  கரும்பைப் போன்ற அடியை யுடையனவாகிய, பசிய காம்பையுடைய சிவந்த தினையினது,  மடமை மிக்க பிடியினதுவளைந்த கையைப் போன்றனவாகி,  பால்நிரம்பி,  கரியை எடுக்கின்ற குறட்டைப்போல வளைந்த, செறிந்த குலையையுடைய பசிய கதிர்களில், தின்னும் பொருட்டுவீழ்கின்ற கிளிகளை, ஓட்டுவேமாகிச் செல்வேம்; இவ்விடத்தில் தாய் வருவாள்;பகைவரைக் கொல்லும் போர்க்குரிய,  வேற்படை விளங்குகின்ற பெரிய கைகளையுடைய, மலையனது முள்ளூர்க்கானத்தில் வளர்ந்த,  சந்தனம் மணக்கின்ற மார்பினையுடையை யாகி,  வருதலையொழிக; இஃது எங்கள் விருப்பம்.

   

    (கருத்து) இனித் தினைப் புனத்தே வந்து தலைவியோடுஅளவளாவுவாயாக.

Thursday, March 5, 2015

குறுந்தொகை-197



தலைவி கூற்று
(பருவ வரவின் கண், “தலைவர் வருவர்; நீ வருந்தற்க” என ஆறுதல் கூறிய தோழியை நோக்கி, ‘‘என் உயிரைக் கொள்ள வருவது போல இக்கூதிர்ப் பருவம் வந்தது; இனி என் செய்வேன்?” என்று தலைவி கூறியது.)


நெய்தல் திணை- கச்சிப்பேட்டு நன்னாகையார்

இனி பாடல்-


யாதுசெய் வாங்கொ றோழி நோதக
   
நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை
   
ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய
   
கூதி ருருவிற் கூற்றம்

காதலர்ப் பிரிந்த வெற்குறித்து வருமே.

                             கச்சிப்பேட்டு நன்னாகையார்
                            -
 நோதல் பொருந்தும்படி, நீரை ஏற்றுக் கொண்ட மின் முதலியதொகுதியை யுடையனவாகிய,  கார்காலத்தை ஏற்றுக் கொண்ட கிளைத்த மழையையுடைய, ஊதைக் காற்றினது குளிர்ச்சியோடு, மிக மயங்கிக் கலந்த,  கூதிர்க் காலமாகிய உருவத்தையுடைய கூற்றம், தலைவரைப் பிரிந்திருக்கும்என்னைக் கொல்லுதல் குறித்து வாரா நின்றது; யாதுசெய்வாம்--!



    (கருத்து) தலைவர் கூதிர்க் காலத்தும் வந்திலராதலின் இனி உயிர்வாழேன்.

குறுந்தொகை-196



தோழி கூற்று
(ஊடியிருந்த தலைவியின் உடம்பாடு பெறுவதற்குத்துணை புரியும்வண்ணம் தலைவன் தோழியை வேண்டியபொழுது, “நீர் முன்பு எம்தலைவிபால் அன்புடையராயினீர்; இப்பொழுது அதனை நீங்கினீர்;ஆதலின் நும்மை ஏற்றுக் கொள்ளுமாறு எங்ஙனம்?” என்பது

மருதம் திணை - பாடலாசிரியர் மிளைக்கந்தன்

இனி பாடல்-


வேம்பின் பைங்காயென் றோழி தரினே
 
தேம்பூங் கட்டி யென்றனி ரினியே
 
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
 
தைஇத் திங்கட் டண்ணிய தரினும்

வெய்ய வுவர்க்கு மென்றனிர்
 
ஐய வற்றா லன்பின் பாலே.


                           -மிளைக்கந்தன்.

 

 என் தோழியாகியதலைவி, வேம்பினது பசிய காயை, முன்பு தந்தால்,  இனிய பொலிவுபெற்ற வெல்லக்கட்டி,  என்று பாராட்டிக் கூறினீர்;இனி - இப்பொழுது, பாரி யென்னும்வள்ளலுக்குரிய பறம்பென்னும் மலையிடத்திலுள்ள,  தை மாதத்திற் குளிர்ந்தனவாகிய,  குளிர்ச்சியையுடைய சுனையிலுள்ளதெளிந்த நீரைத் தந்தாலும், வெப்பத்தையுடையனவாகி உவர்ப்புச் சுவையைத்தருமென்று கூறினீர்;  நுமது அன்பின் பகுதி, அத்தகையது.



    (கருத்து) முன்பு நீர் தலைவியிடம் அன்புடையராயிருந்து இப்போது அவ்வன்பு இல்லாதவராயினர்.

Wednesday, March 4, 2015

Monday, March 2, 2015

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு வேண்டுகோள்



இப்போதெல்லாம் வாரத்திற்கு நான்கும் அதற்கும் மேலாகவும் படங்கள் வெளியாகின்றன.குறைந்த பட்ஜெட் படங்களே இவை.வேண்டுமான அளவிற்கு இவற்றுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில்லை.இப்படி சமீபத்தில் வெளிவந்த ஒரு படம் திரையிட சில காட்சிகளே..ஒரு வாரத்திற்குக் கிடைத்தது.படமும் சுமாரான படம்.ஒழுங்காகத் தியேட்டரில் வந்திருந்தால் கண்டிப்பாக டீசண்ட் கலெக்க்ஷன் கிடைத்திருக்கும்.

முன்பு, தொடர்ந்து ஆங்கிலத் திரைப்படங்களே வெளியான திரையரங்குகளில், வருடத்திற்கு  மூன்று மாதங்களாவது தமிழ்த் திரைப்படம் போடவேண்டும் என அரசு அறிவித்தது.(இப்போது அது நடைமுறையில் இல்லை.அதற்கான அவசியமும் இல்லை.ஏனெனில் பல மல்டிபிள் காம்பெளெஃக்ஸ் வந்துவிட்டது.)

அதுபோல இப்போது...ஒரு பெரிய நடிகர்/பட்ஜெட் படம் வந்தால் 600, 700 காட்சிகள்( ஒரே நாளில் திரையிடப்பட்டு, வசூலும் ஆகி தயாரிப்பாளர்களை நஷ்டத்திலிருந்து காப்பாற்றியும் விடுகிறது.அதுபோல சிறுபட்ஜெட் படத் தயாரிப்பாளர்களும் காக்கப்பட வேண்டும்.அதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்கு உரிமையாளர்களுடன் பேசி, வாரம் குறைந்தது 50 முதல் 100 காட்சிகளாவது குறைந்த பட்ஜெட் படங்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும்.அப்போதுதான், குறைந்த , தரமான பட்ஜெட் படங்கள் வெற்றிபெற முடியும்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதில் இந்தத் தயாரிப்பாளர்கள் பங்கும் உண்டு என்பதை மறக்காமல் இவர்களுக்கு ஆவண செய்து..இவர்கள் தயாரிப்பாளர்களாக நீடிக்க சங்கம் உதவ வேண்டும்..

செய்வார்களா?