Wednesday, March 25, 2015

குறுந்தொகை-203




தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று பிரிந்த தலைவனுக்குத் தூதாகப் வந்த தோழியைநோக்கி, “தலைவர் உடனுறைந்து அன்பு பாராட்டற்குரிய நிலையினராகஇருந்தும் அயன்மை தோன்ற ஒழுகுகின்றார்; அவர்பால் முன்புபரிவுடையேன்; இப்பொழுது அது நீங்கியது” என்று தலைவி மறுத்துக்கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் நெடும்பல்லியத்தன்

இனி பாடல்-
   
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
   
மரந்தலை தோன்றா வூரரு மல்லர்
   
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
   
கடவு ணண்ணிய பாலோர் போல

ஒரீஇ யொழுகு மென்னைக்குப்
   
பரியலென் மன்யான் பண்டொரு காலே.

                      -நெடும்பல்லியத்தன்
’.

 தோழி, தலைவர் மலைகள் இடையிடுவதனாற் சேயதாகிய நாட்டினருமல்லர்; தன்னிடத்துள்ள மரங்கள் நமக்குத் தோன்றாத சேய்மையிலுள்ள ஊரினரும்அல்லர்;  கண்ணாலே காணும்படி,  விரைவில் வருதற்குரிய அணிமையிடத்திலிருந்தும், முனிவரைஅணுகி வாழும் பகுதியினரைப்போல,  மனத்தால் நீங்கி ஒழுகுகின்ற என் தலைவர்பொருட்டு, யான் முன்பு ஒரு சமயத்தில், பரிதலையுடை யேனாயினேன்; அஃதுஇப்பொழுது கழிந்ததே!

 

    (கருத்து)இப்பொழுது என்னைப் புறக்கணித் தொழுகும் தலைவர்பால் யான் முன்பு பரிவுடையளாக இருந்தேன்.



    (முனிவரைக் கண்டார் தம் தூய்மையன்மை காரணமாக அஞ்சி விலகி யொழுகும் தன்மையைப் போல என்னிடத்தினின்றும் நீங்கி ஒழுகினா ரென்றாள். இவ்வுவமையால், தனது தூய்மையையும் தலைவனது விலைமகளை நாடிச் செம்ற தூய்மையன்மையையும் குறிப்பாலுணர்த்தினாள்.)

No comments: