தோழி கூற்று
(தலைவனைப் பிரிந்த காலத்து, “நம்பாலுள்ள விருப்பத்தினால் தலைவர் தாம் சென்ற வினையை நிறைவேற்றாமல் வந்து விடுவாரோ?”என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் விலங்கினமும் தமது கடமையை ஆற்றும் காட்சி கண்டு தாமும் தம் கடனாற்றத் துணிவராதலின் மீளார்”என்று தோழி கூறியது.)
பாலை திணை- பாடலாசிரியர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.
இனி பாடல்-
நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலி னொற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல்
ஒழியி னுண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயின் முனிநர் சென்ற வாறே.
-கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.
தலைவர் நின்பால் விருப்பம் மிக உடையவர்; நம்மோடு செய்யும் இனிய துயிலை வெறுத்துப் பிரிந்துசென்ற அவர், போன வழியில், விரைவாக, கிளைத்த கொம்பைஉடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான், காலால் உதைத்து, பசி நோயைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வளைத்த,பருத்த பெரிய மரப் பட்டை, தனது குட்டி உண்டபின் எஞ்சினால் தான் அதைஉண்டு, குற்றம் இல்லாத நெஞ்சினோடு, துள்ளி நடத்தலாகிய இயல்பினைஉடைய, தனது குட்டிக்கு நிழலாகி நின்று வெயிலை நீக்கும், என்று கூறுவர்.
(கருத்து) தலைவர் தம் கடமையை உணர்ந்து, மீளாது சென்றுபொருள் தேடி வருவர்.
தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுதலில் நாட்டம் இன்றித் தன் குட்டியின் பசியை முதலில் நீக்கியும், தன்மேல் படும் வெயில் வெம்மையைக் கருதாமல் குட்டிக்கு நிழலாகியும் செயபடும்.அதுபோல
“தலைவர் நசை நன்குடையரேயாயினும், தன்னலத்தையும் பேணாது , இல்லறம் புரியும் கடமையை நினைந்து அதற்கு உரிய பொருள் தேடச்சென்று அதூடிந்ததும் மீள்வர்” என்பது தோழியின் கருத்து.