Wednesday, April 8, 2015

குறுந்தொகை-207





தலைவி கூற்று
(தலைவர் சொல்லாமற் பிரிந்து செல்வதைத் தோழி கூறிய பொழுது,“இங்ஙனம் சொல்லிய ஆர்வலர் பலர்; அவரைப் போல நீயும் சொன்னாய்; தலைவரைத் தடுத்தாயல்லை” எனத் தலைவி இரங்கிச் சொல்லியது.)

பாலை திணை- பாடலாசிரியர் உறையன்

இனி பாடல்-
   
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்
   
றத்த வோமை யங்கவட் டிருந்த
   
இனந்தீர் பருந்தின் புலம்புகொ டெள்விளி
   
சுரஞ்சென் மாக்கட் குயவுத்துணை யாகும்

கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி
   
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
   
சென்றெனக் கேட்டநம் மார்வலர் பலரே.



   

 நம்முடைய செலவைத்தலைவியினிடத்துச் சொல்லிச் செல்வேமாயின்,  செல்லுதல் அரிதாகும்,  என்று கூறி, பாலைநிலத்திலுள்ள ஓமைமரத்தினது,  அழகிய கிளையின்கண் இருந்த,  இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது, தனிமையைப் புலப்படுத்தலைக் கொண்ட தெளிந்த ஓசை,  அருவழியிற்செல்லும் மனிதர்களுக்கு,உசாத்துணையாக அமைதற்கு இடமாகிய,  கற்களையுடைய மலையினது அயலதாகிய,  யாவரும் நடக்கும் பழையதாகிய சிறியவழியில்,- தம் நல்ல அடிகள் சுவடு செய்ய,தாவி, சென்றாரென்று,  கேட்ட நம்முடைய அன்பர் பலராவர்.


    (கருத்து) தலைவர் செலவை யான் முன்னரே அறிந்தேன்.



    (“என்பால் அன்புடையார் பலர் கேட்டு இதனை எனக்கு முன்னரேதெரிவித்தனர். நீ இப்பொழுது தெரிவித்தலால் ஆகும் பயன் யாது?எல்லோரையும் போல நீ கேட்டாயன்றி அவன் செல்லாமல் தடுக்கவில்லை" எனத் தோழியின் இயலாமையைச் சுட்டித் தலைவி இரங்கினாள்.)

No comments: