Wednesday, May 27, 2015

குறுந்தொகை-216



தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும்வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவிகூறியது.)


பாலை திணை - பாடலாசிரியர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

இனி பாடல்-

அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை
   
வாடா வள்ளியங் காடிறந் தோரே
   
யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப
   
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே

அன்ன ளளிய ளென்னாது மாமழை
   
இன்னும் பெய்ய முழங்கி
   
மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே.


                      -கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.

 

 தோழி, தலைவர், கேடில்லாத உயர்ந்த செல்வத்தை, கொணரும் பொருட்டு, பச்சை இலைகளை உடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்; நான்--,  தொகுதியார்ந்த விளக்கத்தைஉடைய வளைகள் நெகிழும்படி,  கவலையுற்று, படுக்கையின் கண் வீழ்ந்து,  துன்பம் மிக்கேன்;  இவள் இரங்கத் தக்காள், என்று எண்ணாமல், மாமழை இன்னும்மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து,  எனது இனிய உயிரைக் கொள்ளுதலைக்குறித்து,  மின்னா நின்றது.

.

    (கருத்து) கார்காலம் வந்தும் தலைவன் வராததால் நான் துன்புறு வேனாயினேன்.

   

Friday, May 22, 2015

குறுந்தொகை-215



தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி உறுதி கூறியது.)


பாலை திணை- பாடலாசிரியர் மதுரையளக்கர் ஞாழர்  மகனார் மள்ளனார்

இனி பாடல்-

 
படரும் பைபயப் பெயருஞ் சுடரும்
   
என்றூழ் மாமலை மறையு மின்றவர்
   
வருவர்கொல் வாழிதோழி நீரில்
   
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை

குறும்பொறை மருங்கி னமர்துணை தழீஇக்
   
கொடுவரி யிரும்புலி காக்கும்
   
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே.

                      -மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்



    துன்பமும் மெல்ல மெல்ல நீங்கும்;  ஒளி விடுகின்றசூரியன்,  பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின், நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள் ,குறிய குண்டுக் கற்களுக்கு அருகில், தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி,வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும், பாதுகாக்கின்ற,  உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள,  பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய, தலைவர், இன்று வருவர். நீ வாழ்வாயாக!


    (கருத்து)தலைவர் இன்று வருவர்.

    

Wednesday, May 20, 2015

குறுந்தொகை-214



காதலனைப் பிரிந்த காதலி ,பித்துப் பிடித்த நிலையில் இருக்கிறாள்.இதை அறியாத அவளது தாய் இது தெய்வக் குற்றம்.என எண்ணி அந்த முருகனுக்கு வேண்டுதலால் பயன் ஏது (வெறியாடுதல்...என்றால் ஆண்டவனை வேண்டி மாலையிடுதல் எனக் கொள்ளலாம்)

தோழி கூற்று
(தலைவியின் வேறுபாடு கண்டு தாய் முதலியோர் வெறி யாட்டெடுத்த இடத்து, “இவளுக்குத் தழையுடையுதவி அன்பு செய்தான் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியெடுப்பதனால் பயனில்லை” என்று தோழி கூறி உண்மையை வெளிப்படுத்தியது.)


குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கூடலூர் கொழார்

இனி பாடல்-

மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய
 
பிறங்குகுர லிறடி காக்கும் புறந்தாழ்
 
அஞ்சி லோதி யசையியற் கொடிச்சி
 
திருந்திழை யல்குற்குப் பெருந்தழை யுதவிச்

செயலை முழுமுத லொழிய வயல
 
தரலை மாலை சூட்டி
 
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே.


                    -கூடலூர் கிழார்.

’.

 மரங்களை வெட்டியகுறவன்,  கொல்லையை உழுதுவிதைத்த, விளங்குகின்ற கதிரைஉடைய தினையை,  காவல் செய்யும்,  புறத்தின் கண்ணே தாழ்ந்த அழகிய சிலவாகியகூந்தலையும், மெலிந்த சாயலையும் உடைய, தலைவியினது,  செவ்விதாகஅமைத்த ஆபரணத்தை அணிந்த,  பெரிய தழையாகிய உடையை அளித்து, அசோகினது பெருத்த அடி மரம் ஒழிந்துநிற்ப, அதனோடு தொடர்பு இன்றி அயலதாய்நின்ற,  அலரி மாலையை முருகனுக்குச்சூட்டி வெறியெடுத்து, இந்த ஆரவாரத்தைஉடைய ஊரானது,  மயக்க முற்றது.



    (கருத்து) தலைவிக்குத் தழையுடை அளித்த அன்பன் ஒருவன்உளன்.


 வெறியாடுவார் அரலை மாலையை முருகக் கடவுளுக்குச் சூட்டுதல்வழக்கம்  அரலை என்பது இப்போது அரளி என வழங்கும்.

 
    இதனால், ‘தலைவனொருவன் தலைவி தினைப்புனங் காக்கும் காலத்தில் அங்கு வந்து அசோகந் தழையுதவி அவளோடு அளவளாவிச் சென்றான்’ என்பதைத் தோழி உணர்த்தினாள்.