Friday, May 22, 2015

குறுந்தொகை-215



தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி உறுதி கூறியது.)


பாலை திணை- பாடலாசிரியர் மதுரையளக்கர் ஞாழர்  மகனார் மள்ளனார்

இனி பாடல்-

 
படரும் பைபயப் பெயருஞ் சுடரும்
   
என்றூழ் மாமலை மறையு மின்றவர்
   
வருவர்கொல் வாழிதோழி நீரில்
   
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை

குறும்பொறை மருங்கி னமர்துணை தழீஇக்
   
கொடுவரி யிரும்புலி காக்கும்
   
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே.

                      -மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்



    துன்பமும் மெல்ல மெல்ல நீங்கும்;  ஒளி விடுகின்றசூரியன்,  பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின், நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள் ,குறிய குண்டுக் கற்களுக்கு அருகில், தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி,வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும், பாதுகாக்கின்ற,  உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள,  பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய, தலைவர், இன்று வருவர். நீ வாழ்வாயாக!


    (கருத்து)தலைவர் இன்று வருவர்.

    

No comments: