தலைவி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்தது கண்டு கவன்ற தலைவியை, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்திய தோழியை நோக்கி, “முல்லை மலர்ந்தது; கார்காலம் வந்து விட்டது; அவர் வந்திலர்; யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன்?” என்று தலைவி கூறியது.)
முல்லை திணை - பாடலாசிரியர் உறையூர் முதுகொற்றன்
இனி பாடல்-
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை யிடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே.
-உறையூர் முதுகொற்றன்
முல்லைகளும்மலர்ந்தன; பறியோலையை உடையகையினை உடையார், குட்டிகளைஉடைய ஆட்டின் திரளோடு சென்று தங்க, பாலைக் கொணர்ந்து வந்து பாற்சோற்றைப் பெற்று மீண்டு செல்கின்ற, ஆடுகளை உடைய இடையன், தன் தலையில் அணிந்து கொண்டன யாவும், சிறிய செவ்வியை உடைய அம்முல்லையின் அரும்புகளே ஆகும்; அத்தலைவர் இன்னும் வாராராயினர்.
(முடிபு) முல்லையும் பூத்தன; இடைமகன் சூடியவெல்லாம்முகையே; அவர் வாரார்.
(கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.
முல்லை பூத்தல் கார் காலத்திற்குஅடையாளம்.
மாலைக் காலத்தில் ஆட்டை மேய்ப்பவர்கள் மேய்ச்சல் நிலத்தில்தங்க இடையன் பாலை வீட்டிற்குக் கொணர்ந்து கொடுத்து அவர்களுக்குப் பால் சோற்றைக் கொண்டு சென்றான். பாலை விற்கும் பொருட்டு வந்த இடையன் ஊரில் அதனை விற்று விட்டு அதற்கு விலையாக உணவுக்குரிய தானியத்தைப் பெற்றுச் சென்றானெனலும் ஒன்று. இடையர் பாலை விற்றல் வழக்கம்; அவன் செல்லும் வழியில் பூத்த முல்லைப் பூக்களைப் பறித்துத் தன் தலையில் சூடினான்.