Saturday, February 24, 2018

நாச்சியார் திருமொழி= 2


பாடல் - 2

வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே

வெள்ளைநுண் மணற்கொண்டு - வெள்ளைநிறக் கோலப்பொடியைக் கொண்டு
வெள்வரைப்பதன் முன்னம்- வெள்ளென வெளிச்சம் வருவதற்கு முன்னர்
துறை படிந்து - குளத்தின் படித்துறைக்குச் சென்று.
முள்ளுமில்லாச் சுள்ளி எரி மடுத்து-முட்களற்ற மரக் குச்சிகள் எடுத்து
முயன்று உன்னை- முயன்று உன்னை
நோற்கின்றேன் காமதேவா-நோன்பு இருக்கின்றேன் காமதேவா
கள் அவிழ்- தேன் வடியும்
பூங்கணை- பூக்களால் செய்யப்பட்ட அம்பு தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி-கடலின் நிறம் கொண்ட நீலவண்ணன் பெயரெழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர்- பகாசுரன் என்ற அரக்கன் கொக்கு வடிவம் எடுத்து வந்த போது அவ்வரக்கன் வாய் பிளந்தவன் மீது
இலக்கினிற் பகவென்னை- இலக்கு வைத்து என்னை அவன் மேல்
யெய்கிற்றியே- எய்து விடேன்


தெருவில் அழகான வெள்ளை நிறக் கோலப்பொடிக் கொண்டு கோலமிட்டு ,வெளிச்சம் வரும் முன் குளத்தின் படித்துறைக்குச் சென்று குளித்து, முட்களற்ற சுள்ளிகளை பொறுக்கி எடுத்து தீ மூட்டி காமதேவா! உன்னை நோற்கின்றேன் (நோன்பு இருக்கின்றேன்).தேன் வடியும் பூக்களால் செய்யப்பட்ட கணைகள் கொண்டு தொடுத்து அதில் கடல் நிறம் கொண்ட நீலவண்ணனின்   பெயர் எழுதி.புள்ளெனவந்த அரக்கனின் வாய் பிளந்தவன் மார்பினை இலக்காகக் கொண்டு அடையுமாறு அதில் என்னையும் வைத்து எய்துவிடேன்

No comments: