யானையின் பலம் எதிலே
தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே
நம்பிக்கையிலே
இப்படி ஒரு சினிமா பாடல் உண்டு.மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்..அப்போதுதான் அவனால் வாழ்வில் முன்னேற முடியும்.எந்த காரியத்தையும் செய்ய என்னால் முடியும் என்ற எண்ணம் வேண்டும்.ஒரு சின்னக் கதை
இரண்டு தவளைகள்..ஒரு பெரிய அடுக்கில் இருந்த பாலில் விழுந்து விட்டன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்கமுடியாது என்று நம்பியது ஒரு தவளை.இது அவ நம்பிக்கை கொண்ட தவளை.
பாலில் அடிப்பாகம் சென்று அங்கேயே செத்து மடிந்தது.
ஆனால் அடுத்த தவளையோ நம்பிக்கை உள்ளது.
பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்தது.உதைத்தது.நீச்சல் போட்டது.உந்தி உந்தி கலக்கியது.பால் கலங்க ஆரம்பித்து ஆடை படர்ந்தது.மேலும் மேலும் நீந்தியது.சிறிது சிறிதாகத் திரண்ட வெண்ணெய் பாலில் மிதந்தது.
நம்பிக்கை இழக்கா தவளை வெண்ணெய் மீது அமர்ந்துக் கொண்டது.வெளியே தாவி பாய்ந்து தப்ப சிறிது ஓய்வு கிடைத்தது.
பால் பாத்திரத்தை விட்டு தாவி குதித்து ஓடியது..இது நம்பிக்கை.
பாலின் அடியில் சென்றது செத்து மடிந்தது அவநம்பிக்கை.
நம்மை ஒரு துன்பம் சூழும் போது துவண்டுவிடாமல்..அதிலிருந்து வெளிவரும் நம்பிக்கை இருந்தால் வாழ்வில் நமக்கு வெற்றியே கிடைக்கும்.
இதையே வள்ளுவர்..
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்
என்கிறார்..
துன்பம் சூழும் போது துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்