Sunday, March 17, 2019

குறள் போற்றுவோம் - 1



ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்.அதாவது உணவைக் குறை என்று பொருள். (புலன் -வாய்)

கண் போன போக்கில் எல்லாம் மனிதன் போகலாமா? என்று ஒரு பாடல் உண்டு.அதாவது, நம் கண்கள் பார்த்து, ஆசைப்பட்டு அதன் வழியில் எல்லாம் நடந்தால், அது சிக்கலில்தான் கொண்டு விடும். கண்கள் பார்த்தாலும், மனம் சிந்தித்து நல்லது, கெட்டது உணர்ந்து செயல் பட வேண்டும்.(புலன் - கண்)

நம்மில் கோபம் ஏற்பட்டால் , இடம் மறந்து..வாயில் வந்ததை எல்லாம் உரக்கக் கூறி, அதுவரை நம்மைப் பற்றி நல்லபடியே நினைப்பவர்கள் எண்ணங்களை மாற்றி விடுவோம்.அது சரியா? பிறர் பற்றி புறம் கூறுவோம்..அது சரியா(புலன்-மெய்)

கெட்டவற்றைக் கேட்காத செவி வெண்டும்.நல்லவற்றையே நாளும் கேட்க வேண்டும்.(புலன்-செவி)

வாசனையைத் தரும் பொருள்கள், உணவு போன்றவைக்கூட ஆசையைத் தூண்டும்.ஆனால் அவை உடலுக்கும், உள்ளத்திற்கும் கேடு விளைவிப்பவை என உணர வேண்டும். (மூக்கு -புலன்)

நமக்கு புலனடக்கம் இல்லாவிடில், நம் பெயர், புகழ், வாழ்வு எல்லாம் கெடும்.மனிதனாய் பிறந்தோர் அனைவருமே..தங்கள் ஐம்புலன்களை அடக்கினால், வையத்தில் சந்தோசமாக வாழ்வாங்கு வாழலாம்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான கருத்தை..ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவனைத் தவிர வேறு யாரால் தரமுடியும்?

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு    (28)

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கி ஆளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும் .

No comments: