Showing posts with label ஒரு பக்கக் கட்டுரை - TVR. Show all posts
Showing posts with label ஒரு பக்கக் கட்டுரை - TVR. Show all posts

Tuesday, February 27, 2018

வெற்றியை அடையும் வழி

எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.
எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும்.
ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள்.
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்..
என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள்.
ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும்.
எடுத்தக் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது.
எந்த வழியைப் பற்றியேனும் வெல்ல வேண்டும் என எண்ணினால்..அப்படிப்பட்ட வெற்றியைக் காணும் உடன் இருப்போர் மெல்ல மனம் மாறி நம்மை விட்டு விலகும் அபாயம் உள்ளது.இப்படிப்பட்ட வெற்றி உதறித் தள்ள வேண்டும்.
வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இருக்க வேண்டும்.சிறந்த வழியின் மூலம் கிடைக்கும் பலன் சிறிதானாலும்..அது ஞாலத்தின் மாணப் பெரிதாகும்.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை
(புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்)
பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.
வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.அத்னால் தான் வள்ளுவனும்..
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார்.

Saturday, July 30, 2016

ஒரு பக்கக் கட்டுரைகள்- 4

காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

ஆதலினால் காதல் செய்வீர்
--------------------------------------------------

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

Friday, July 29, 2016

ஒரு பக்கக் கட்டுரைகள் 3

பேசும் முன் யோசியுங்கள்
--------------------------------------------

தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..

தவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...

உதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...

வழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றிவிட்டது.

அடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி?' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக்கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.

அடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை ஒரு ரூபாய் இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் ஒரு ரூபாயை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.

இப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.

முடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.

Sunday, September 22, 2013

தவறு செய்பவரா நீங்கள்...

மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா?

வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.

ஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..

நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.

சில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.

வாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.

நான்..ஒரு சமயம்...ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.

ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.

தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.

Sunday, September 15, 2013

எல்லாம் இன்ப மயம்..(ஒரு பக்கக் கட்டுரை)

நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்...பின்  .........பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

Thursday, September 12, 2013

ஆதலால் அன்புடன் இருப்பீர்..

காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு (79)

அன்பு எனும் அகத்துறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாய் இருந்து என்ன பயன்?

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (80)

அன்பு நெஞ்சகத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்.இல்லையேல் அது எலும்புத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்

Monday, September 9, 2013

நலம்..நலம் அறிய ஆவல்...

பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகள்லே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்தோட நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா.

Friday, March 15, 2013

வெற்றியும், சாதுர்ய பேச்சும்..(ஒரு பக்கக் கட்டுரை)

ஒரு மனிதனின் வெற்றி..அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை.ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
கதையாய் இருந்தாலும்..சாவித்திரியின் சாதூர்யம் தான் அவளது கணவனது வாழ்வை காப்பாற்றியது.
பலமுறை அரசரின் மரணதண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்கு சாதூர்யம் காப்பாற்றியிருக்கிறது.
பீர்பாலின் சாதூர்ய பேச்சு கதைகளையும் நாம் அறிவோம்.ஹேமனாத பாகவதரை மதுரையிலிருந்து துரத்தி அடித்தது சிவனின்(?)சாதூர்யம்.
நம் ஊர்களில்..குப்பை பொருள்களையும்..சாதூர்யமாகப் பேசி நம் தலையில் கட்டிவிடும் விற்பனை பிரதிநிதிகளை நாம் அறிவோம்.
நம்மை பற்றி நம் பெற்றோர்கள் கவலைப்படும்போது சொல்லக்கூடிய வார்த்தை'கொஞ்சம் கூட சாமர்த்தியம் போறாது இவனுக்கு" என்பதுதான்.

இப்போது ஒரு சிறு கதை.

ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?'என்பதுதான்.
கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..
தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.
கடைசியில் ஒருவன் கேட்டான்
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.
'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.
இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'
அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

சாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும்

Thursday, March 7, 2013

உன்னோடு வாழ்தல் அரிது..(ஒரு பக்கக் கட்டுரை)

பராசக்தி படத்தில்..எஸ்.எஸ்.ஆர்., பர்மாவிலிருந்து இந்தியா வந்து இறங்கியதுமே..கேட்கிற முதல் குரல்..'ஐயா..பசிக்குது..'ங்கற பிச்சைக்கார குரல் என்பார்.

எல்லாமே வயத்துக்குத்தான்..வயிறு..இதனால்தான் இனச்சண்டை..ஏற்றத்தாழ்வு, லஞ்சம்,சுரண்டல் எல்லாம்..இரண்டாம் உலகப் போர் முடிந்ததும்..நாட்டில் எங்கும் பஞ்சம்..உண்ண உணவில்லை..ரேஷன் முறை அறிமுகப் படுத்தப்பட்டு..கோதுமை வழங்கப்பட்டதாம்..அதைத்தான் அப்போது ஒரு படத்தின் பாடலில் கூறும் விதமாக...

ஒரு ஜான் வயிறே இல்லாட்டா..இந்த உலகினில் ஏது கலாட்டா..உணவுப் பஞ்சமே வராட்டா..உயிரை வாங்குமா பரோட்டா...என்று பாடியிருக்கிறார்கள்.

பசி வந்திட பத்தும் போம்..என்பது பழமொழி...கல்யாண வீடுகளில்..பந்திக்கு முந்திக் கொள்..என்பார்கள்..பிந்திக் கொண்டால்..முன்னால் முந்தியவர்கள் மீதம் வைத்திருந்தால் உண்டு.கலைகளில் சிறந்தவன் ராமன் என்பார்கள்..அதுபோல் சாப்பிடுவதில் எக்ஸ்பர்ட் சாப்பாட்டு ராமன் ஆவான்.

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

வயிற்றுப் பிரச்னைதான் எல்லா நோயின் மூலகாரணமாயும் அமைகிறது..நல்ல ஜீரண சக்தி வேண்டும்.நம் மார்புக்கும்..வயிற்றுக்கும் இடையே உள்ளது உதரவிதானம்..இது ஒரு தசை..இதன் கீழ் உணவுக்குழாயில் இருந்துதான் வயிறு ஆரம்பிக்கிறது.அதன் கீழ் மறுமுனை சிறுகுடலில் இணைகிறது.வயிற்றுக்குள் உணவு வந்ததுமே..அது இயங்க ஆரம்பித்து விடுகிறது.அதில் சுரக்கும் அமிலம் சத்துக்களை பிரித்தெடுத்து..நம் நம் உடலின் தேவையான உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

முறையான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களுக்கு நெஞ்சு எரிச்சல்,அஜீரணம்,வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் வந்து உணவுப்பாதையை பாதிக்கும்..உடலில் சுறு சுறுப்பு இருக்காது..

அளவுக்கு மீறிய உணவு,ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை,கண்ட நேரத்தில் உணவு உண்ணும் வழக்கம்..ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்றை மட்டும்தான் திருப்தி படுத்த முடியும் எனக் கூறுவார்கள்.ஒரு வேளைக்கு அதிகமான உணவை அது ஒரே சமயத்தில் எதிர்ப்பார்க்காது..அதனால் தான்..ஔவை ஒரு பாடலில் கூறினார்..

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும்
எந்நோய் அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது

இன்று நல்ல உணவு கிடைக்கிறது..நாளைக்கு கிடைக்குமோ..கிடைக்காதோ..அதற்கும் சேர்த்து உண்டுவிடலாம் என்றால் முடியாது.சரி இன்று உணவுகிடைக்கவில்லை..பொறுத்துக்கொள் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றால் பொறுத்துக்கொள்ளாது.எனது நிலை அறியாமல்..எனக்கு துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் என் வயிறே..உன்னுடன் வாழ்வது மிகவும் கடினம்..என்று பொருள் படும்.

Monday, February 25, 2013

வெற்றியை அடையும் வழி..(ஒரு பக்கக் கட்டுரை)

எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.

எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும்.

ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள்.

கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்..

என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள்.

ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும்.

எடுத்தக் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது.

எந்த வழியைப் பற்றியேனும் வெல்ல வேண்டும் என எண்ணினால்..அப்படிப்பட்ட வெற்றியைக் காணும் உடன் இருப்போர் மெல்ல மனம் மாறி நம்மை விட்டு விலகும் அபாயம் உள்ளது.இப்படிப்பட்ட வெற்றி உதறித் தள்ள வேண்டும்.

வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இருக்க வேண்டும்.சிறந்த வழியின் மூலம் கிடைக்கும் பலன் சிறிதானாலும்..அது ஞாலத்தின் மாணப் பெரிதாகும்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை

(புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்)

பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.

வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.அதனால் தான் வள்ளுவனும்..

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார்.