ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Thursday, May 16, 2013
யாகாவாராயினும்.....
என்னிடம் ஒரு குணமுண்டு..
அது வேடிக்கையாய் பேசுவது. நண்பர்களும் அவற்றை ரசிப்பதுண்டு.
உதாரணத்திற்கு, நண்பர் ஒருவர் தன் வீட்டில் செய்த இனிப்பு ஒன்றைக் கொடுத்தார்.நன்றாய் இருந்தது.நண்பர், 'எப்படி இருக்கிறது "என்றார். வழக்கமான நக்கல் தலைகாட்ட நான்,'நன்றாய் இருக்கிறது..ஆனால் சற்று உப்பு குறைவு' என்றேன்.சுற்றியிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.நண்பரின் முகமும் சுருங்கிவிட்டது.
மற்றொரு நண்பர் டிரட் மில் வாங்கியிருந்தார்.ஒருநாள் எங்கள் அனைவரையும் கூட்டிக் காட்டினார்.என்னால் காலையில் வாக் போக முடிவதில்லை.ஆகவே வீட்டிலேயே செய்திடுவேன் என்றார்.ஆனால்..அவர் அப்படி செய்யவில்லை.ஒரு சமயம் ஊரிலிருந்து வந்த அவர் உறவினர், 'டிரட் மில்லில் தினம் நடக்கிறாயா?' என்றார்.நான் சும்மா இருக்கக் கூடாது.அதுதான் நம் பழக்கம் இல்லையே , அதனால்' உங்களுக்குத் தெரியாதா? இந்த டிரட் மில் அதற்காக வாங்கவில்லை.அது வாங்கிய கடையில் இடமில்லாததால்..இதை இங்கே கடைக்காரர் போட்டு வைத்துள்ளார்.' என்றேன்.நண்பர் நெளிந்தார்.
இப்படி எனது நா காக்காததால்..பல நண்பர்களை இக்கட்டில் ஆழ்த்தியுள்ளேன்..நகைச்சுவை என்ற பெயரில்.
ஒருநாள் ஒருவரிடம் இப்படி செய்யப்போக அவர் மிகவும் வருந்தினார்.அப்போதுதான் எனக்கு தெரிந்தது.இது போல எவ்வளவு நண்பர்களை வருத்தப்பட வைத்திருக்கிறேன் என்று.
நாம் நகைச்சுவை என்று நினைத்து சொல்வது, பிறரை வருத்தப்பட வைத்துள்ளதே ..அது கூட எனக்குத் தெரியவில்லையே! என.வருந்தினேன்.
இனி யாரிடமும் இப்படி நடக்கக்கூடாது என தீர்மானித்து விட்டேன்.
சமீபத்தில் ஒரு நண்பர், 'வர வர உங்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை' என்றார்..கீழே வாழைப்பழத்தோல் வழுக்கி(!!) விழுந்தவரைக் கண்டு நான் நகைக்காததால்..பிறர் துயர் நமக்கு நகைச்சுவை என அவர் எண்ணியதால்.
பிறர் புண்பட பேசுவது, பிறர் துயர் கண்டு நகைப்பது, பிறர் செயலை எள்ளி நகையாடுவது போன்றவை நகைச்சுவை என்றால்..அந்த உணர்வு என்னை விட்டு சாகட்டும்.
யாரையும் புண் படுத்தாத நகைச்சுவை உணர்வு நம் அனைவரிடமும் வளரட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வேடிக்கை நகைச்சுவை ....
Post a Comment