Tuesday, May 30, 2017

நீயும் நானும் ஒன்னு - (சிறுகதை)


--------------------------------------
"முனுசாமி...முனுசாமி" என்று தனது குடிசைக்கு முன்னால் நின்று யாரோ அழைப்பதைக் கேட்டு வெளியே வந்தார் எழுபது வயது ஏழுமலை
தனது, வலது கையை, கண்களுக்கு மேல் வைத்துக் கொண்டு"யாரு?" என்றார்
"நான் மாட்டுத் தரகன் பொன்னுசாமி.உங்க வீட்டு மாடு பால் வத்திப் போச்சு..சரியா இப்போ பராமரிக்க முடியல.அதனால... அடிமாட்டுக்குன்னாக் கூடப் பரவாயில்லை, எதாவது கிராக்கியைப் பாரு " அப்படின்னு முனுசாமி சொன்னான்..ஒரு கிராக்கி மாட்டியிருக்கு..அதான்..மாட்டை ஓட்டிக்கிட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் வந்தவன்
எழுமலை..அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்த மாட்டைப் பார்த்தார்
அது, பல ஆண்டுகளுக்கு முன்னால், மாட்டுச் ச்ந்தையில் வாங்கிய மாடு.அந்த மாடு வாங்கியதும்..தனது நிலை சற்று உயர்ந்ததால் அம்மாட்டிற்கு லட்சுமி எனப் பெயரிட்டார்.தினமும் வஞ்சகமில்லாமல் பாலைக்கொடுத்தது. .தனது மகனுக்கும், மகளுக்கும்அவர்கள வளரக் கொடுத்த பாலைத் த்விர மீதத்தை வெளியே விற்றார்..அது வந்த பிறகு ராஜபோக வாழ்க்கை என சொல்ல முடியாவிட்டாலும்..வசதியான வாழ்க்கை வாழ்ந்தார் ஏழுமலை
தன் மகளுக்கு திருமணம் முடித்தார்.முனுசாமிக்கும் செங்கமலத்தை மனைவியாக்கினார்.
லட்சுமி, ஈன்ற கன்றுகளாலும் பயன் அடைந்தார்
.
கிட்டத்தட்ட அந்த வீடே அந்த லட்சுமியால் லட்சுமிகடாட்சத்துடன் இருந்தது
இந்நிலையில்..
எழுமலைக்கும் வயது ஆகிவிட்டபடியால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.
லட்சுமிக்கும் வயதாகியதால் பால் முற்றும் வற்றிவிட்டது.அக்குடும்பத்திற்கு அதனால் இப்போது பயனில்லை
வறுமை வாட்ட...முனுசாமியும், செங்கமலமும் கூலி வேலைக்குப் போகத் தொடங்கினர்
முனுசாமியும், தன் தந்தையை கவனிக்க ஆளில்லாததால் முதியோர் இல்லத்தில் சேர்க்க எண்ணினான்.லட்சுமியையு ம் அடிமாடாக விற்க த்யாரானான்
பொன்னுசாமி சொன்னவற்றைக் கேட்ட ஏழுமலை. வாசலில் கட்டியிருந்த லட்சுமியைப் பார்த்தார்
தன்னை வாங்கத்தான் பொன்னுசாமி வந்திருக்கிறான் என லட்சுமிக்கும் தெரிந்தது.இதுநாள் வரை தன்னால் முடிந்ததைக் கொடுத்துவிட்டோம்.இனி, தன் இறைச்சியை உண்டு மக்கள் பசியாற்ற சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி சற்று மகிழ்ந்தாலும்..அதன் கண்களில் கண்ணீர்
அதைப் பார்த்த ஏழுமலைக்கு, "இவ்வளவு நாள் உன் குடும்பத்துக்கு உழைத்த என்னை..இப்படி அனுப்புகிறாயே!" என்று லட்சுமி சொல்வது போலத் தோன்றியது
முனுசாமிவந்துவிட்டான்
பொன்னுசாமியைப் பார்த்து, "வாங்க..நீங்க இப்பவே மாட்டை ஓட்டிக் கிட்டுப் போகலாம்" என்றான்.
பின் , அவரிடமிருந்து பணத்தை வாங்கி்எண்ணினான்
அப்பாவைப் பார்த்து, "அப்பா..உன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டேன்..நாளைக்குப் போகலாம்" என்றான்
இப்போது லட்சுமியை, ஏழுமலைப் பார்த்தார்..
அது, இப்போதுஅவரது நிலையை எண்ணி கண்ணீர் விடுவதைப் போல இருந்தது

Monday, May 22, 2017

கிறுக்கல் கவிதைகள்

1)நான் கோடு போட்டா
ரோடு போடுவாள்
நான் புள்ளி வைச்சா
கோலம் போடுவாள்
நான் காதலிச்சேன் - அவள்
திருமணம் செய்துச் சென்றாள்

2)இரயில் நிலையத்தில்
வரவேற்க வந்தவரின் 
பார்வையோ 
என் கை மஞ்சள் பையில்

3)பிஞ்சுக் கைகளில்
பிடிக்கு அடங்கா மூங்கில்
பஞ்சு பாதங்களை
பதம் பார்க்கும் கயிறு
கழைக்கூத்தாடி சிறுமி

4)அவசர அவசரமாக 
செல்லும் போதும்
எதிரில் வருபவரை
குசலம் விசாரிக்கும்
எறும்பு வரிசை

5)விடியலின் 
பனித்துளிகள்
போதையில்
மலர்கள்

6)உயிர்மெய் எழுத்தென்ன
கேட்டதும் சொன்னது
காகம்

Wednesday, May 17, 2017

இன்னா நாற்பது - பாடல்கள் 1,2,3

பாடல்: 01 (பந்தம்...)
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின்.


சுற்றமில்லாத மனையின் அழகு துன்பம். தந்தையில்லாத மகனின் அழகு துன்பம். துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிடில் துன்பம்.

பாடல்: 02 (பார்ப்பார்...)
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு.

பார்ப்பாருடைய வீட்டில் நாயும், கோழியும் இருத்தல் துன்பம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பம்.

பாடல்: 03 (கொடுங்கோல்)
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.

கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பம்.

தமிழ் இலக்கியம் - இன்னா நாற்பது



உள்ளே புகுமுன்...

தமிழில், தமிழையும், புலவர்களின் பாடல்களையும் சுவைக்க பல நூல்கள் உள்ளன.அவற்றில், என்னால் முடிந்தவற்றை அனைவரும் ரசிக்கும் வகையில், ருசிக்கும் வகையில், புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதே இத்தொடர்

இதில் நான் பதியும் பாடல்களை படியுங்கள், ரசியுங்கள்...

முதலில்  "இன்னா நாற்பது:

நாற்பது என்னும் எண் தொகையில் குறிக்கப் பெறும் நூல்கள் நான்கு.. அவை...

கார் நாற்பது,களவழி நாற்பது,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகும்.

இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பவை.இரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளையும், இன்பம் தரும் செயல்களையும் உரைக்கின்றன.

இன்னா நாற்பதில், கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.ஒவ்வொரு பாடலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, அவை இன்னா எனக் கூறுதலால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.

இந்நூல் ஆசிரியர் கபில தேவர்

கடவுள் வாழ்த்தில், சிவபெருமான், பலராமன்,திருமால், முருகன் என அனைத்து கடவுளையும் குறிப்பிட்டுள்ளது சிறப்பு..

இனி கடவுள் வாழ்த்து...

கடவுள் வாழ்த்து

முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.



முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்குத் துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திருமாலை மறத்தல் துன்பம் தரும். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்குத் துன்பம் உண்டாகும்.

இனி அடுத்த பாடல்கள் அடுத்த பதிவில்.