Tuesday, May 8, 2018

தமிழ் நாடக மேடையும் யூஏஏவும் - 1

தமிழ் நாடக மேடையும் யூஏஏவும்
-------------------------------------------------------------
சங்ககாலம் முதல், தமிழ் நாடகங்கள் வேறு, வேறு நிலையில் வளர்ச்சியினைக் கண்டு வந்தன.
பல மன்னர்கள் ஆதரவில் நடிப்புக் கலை வளர்ந்தது.கலைஞர்கள் வளர்ந்தனர்.நாடமேடைக்கான அளவுகள், நடிகர்கள் நடிக்கும் போது மேடையில் இருக்க வேண்டிய நிலை.பேசப்படும் வசனங்கள், பேச வேண்டிய முறை என ஒவ்வொன்றான வரையறுக்கப் பட்டன.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதிவரை, பல நாடகக் குழுக்கள் செயல்பட்டு வந்தன.கிட்டத்தட்ட அனைத்துமே குருகுல வாசம் எனலாம்.அனைவருமே தொழில் முறை நடிகர்கள் ஆவார்கள்
சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், கன்னையா, பாலாமணி, கந்தசாமி முதலியார்,நவாப் ராஜமாணிக்கம்,டி.கே.ஷண்முகம் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவ்ர்கள் ஆவர்
இந்த நாடகக் குழுக்கள் தவிர்த்து, மேலும் என்.எஸ் கே., கே ஆர் ராமசாமி , சஹஸ்ரநாமம் போன்றவரும் நாடகங்கள் நடத்தினர்.
சுதந்திரத்திற்கு முன், தேசிய உணர்வை மக்கள் மத்தியில், நாடகங்கள் மூலம் இவர்கள் பரப்பினர்
ஆனால், சென்ற நூற்றாண்டின் இரண்டாம் பாதி,, அதாவது 1950க்குப் பின்னர் "தமிழ் நாடக மேடையின்"பொற்காலம் தோன்றியது எனலாம்
பல நாடகக் குழுக்கள் தோன்றின.பல சபாக்கள் தோன்றின.இந்த சபாக்கள், அங்கத்தினர்களைச் சேர்த்து.அவர்களிடம் இருந்து சந்தா வசூலித்து, அவர்களுக்கு மாதந்தோறும் நாடகங்கள் நடத்தி , இந்த நாடகக் குழுக்களுக்கு நாடகம் நடத்த சந்தர்ப்பம் அளித்தனர்.
திடீரென பல நாடகக் குழுக்கள் எப்படித் தோன்றின.அவ்வளவு தொழில் முறை நடிகர்களா? என்றால்..
இல்லை..பெரும்பாலானோர் அமெச்சூர்கள்.
அதிகாரிகளாகவும், வங்கி ஊழியர்களும்,தொழிலாளர்களும் என நடிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள்.
ஆனால்...அமெச்சூர் குழுக்கள் தோன்ற, முதன் முதல் வித்திட்டவர் யார்? என சற்று எண்ணிப்பார்த்தால்...
அந்த மாபெரும் நாடக ஆர்வலர் ஒய் ஜி பார்த்தசாரதி என சொல்லலாம்.
மத்திய அரசில், முக்கியமான துறை ஒன்றில் அதிகாரியாய் பணிபுரிந்த இவர், தில்லியிலிருந்து மாற்றலாகி சென்னை வந்தார்.
1952ல் தன் நண்பர் பத்மநாபன் என்று அழைக்கப் பட்ட பட்டு என்ற நண்பரை தன்னுடன் இணைத்துக் கொண்டு "யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்" என்ற பெயரில் நாடகக் குழுவைத் தொடங்கினார்.
இனி வரும் அத்தியாயங்களில், அக்குழுவின் வளர்ச்சியும், ஆலமரமாய் மாறிய அக்குழுவிலிருந்து விழுதுகளாய் நிலத்தில் வேரூன்றிய குழுக்கள் பற்றியும் பார்ப்போம்

தமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2



1917 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் பிறந்தவர் ஒய் ஜி பார்த்தசாரதி அவர்கள்
1948ல் திருமதி ராஜம்மாளுடன் திருமணம்.
1950ல் பிறந்தார் மகேந்திரன்
அந்நாள் ஆணாதிக்கம் அதிகம் இருந்த நாட்கள்..ஆனால் அந்நாளிலேயே, ஒய்ஜிபி எவ்வளவு பரந்த மனப்பான்மையுட ன் இருந்தார், பெண்கள் முன்னேற வேண்டும் என நினைத்தார் என்பதற்கு ஒரு உதாரணம்

திருமணம் ஆகி வந்ததுமே, ராஜம்மாவிடம், "நீ சமையல் வேலையே செய்ய வேண்டாம்.சமையல் அறைக்குப் போக வேண்டாம்.வேண்டுமானால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பி.சமூக சேவை செய்" என கூறினார்.இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமதி ஒய்ஜிபி யே சொன்னார்.அத்துடன் மட்டுமல்லாது, "இதுநாள் வரை சமையல் அறைக்குச் சென்றதில்லை"என்றும் கூறினார்.

ஒய்ஜிபியின் பரந்த மனதினைப் பாருங்கள்

1952ல் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் குழுவினை ஆரம்பித்தார் என முன்னமேயே சொன்னோம்.அப்போது மகேந்திரனின் வயது இரண்டு.அந்த இரண்டு வயதில் ஆரம்பித்த குழுவினை, இன்று மகேந்திரன் கட்டிக் காத்து வ்ருகிறார் என்பதே சிறப்பு

ஒய்ஜிபிக்கு ஒழுக்கம், நேர்மை தவறாத  குணம் இருந்தது.அதையே, தன்  குழுவினரிடமும் எதிர்பார்ப்பார்.
யாராவது, நாடக ஒத்திகைக்கு தாமதமாக வந்தால், அவரை கண்டபடி திட்டிவிடுவார்.ஆனால், அடுத்த நிமிடமே,  வந்த கோபம் மறைந்து குழந்தையாய் ஆகிவிடுவார்.

அவரைப் புரிந்து கொண்டவர்கள்,ஒருநாள் ஒய்ஜிபி தங்களைத் திட்டவில்லையென்றால், அவருக்கு உண்மையிலேயே நம் மீது கோபமோ? என எண்ணிவிடுவர்

யூஏஏவில் நடித்து வெளியே வந்த பிரபலங்கள் பலர்..உதாரணமாக...ஜெயலலிதா, அவரது தாயார் சந்தியா, வித்யாவதி(சந்தியாவின் சகோதரி), லட்சுமி,நாகேஷ்,சோ, மௌலி,ஏ ஆர் எஸ்., விசு, ராதாரவி இப்படி நீண்டுக் கொண்டே போகும் பட்டியல்

ஒருசமயம் ஒய்ஜிபி ., மகேந்திரனிடம், ;"என் காலத்திற்குப் பிறகு, இக்குழுவினை நீ விடாமல் நடத்த வெண்டும்" என்ற உறுதிமொழியைப் பெற்றார்.அன்று தந்தைக்கு அளித்த உறுதிமொழியம், மகேந்திரன் காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது

300க்கும் மேல் பட்ட படங்களில் நடித்திருந்தும், வருடம் 30 படங்கள் என்ற நிலை இருந்த போதும், தவறாமல், நாடகங்களை அவர் நடத்தி வந்தது/ வருவது பாராட்டுக்குரியது ஆகும்.

இனி வரும் அத்தியாயங்களில், யூஏஏவின் நாடகங்களைப் பார்ப்போம்


அத்தியாயம் - 3

  (பெற்றால்தான் பிள்ளையா//பார் மகளே பார் என திரைப்படமாக வந்தபோது மனோரமாவுடன் சோ)
யூஏஏ ஆரம்பித்த ஆண்டு மகேந்திரனின் வயது இரண்டு என்பதை முன்னரே சொன்னோம்

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் நாடகத்தில் அடியெடுத்து வைத்த இவரின் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து 48 ஆண்டுகள் ஆகின்றது

அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 300க்கும் மேல்

மகேந்திரன் நடிப்பில் மட்டுமின்றி படிப்பிலும் சிறந்து விளங்கினார்.பிடெக்., எம்.பி ஏ., படித்த இவர், அந்நாளில் படித்த விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்

1961ல், அதாவது மகேந்திரனின்பதினொன்றாம் வயதில், யூஏஏ அரங்கேற்றம் செய்த "பெற்றால்தான் பிள்ளையா?" என்ற  நாடகத்தில் நடித்தார்.இந்நாடகமே பின்னாளில் நடிகர்திலகம் நடிக்க :பார் மகளே பார்" என்று திரைப்படமாக வந்தது.நாடகத்தில் நடித்த வேடத்திலேயே சோ அவர்கள் இப்படம்  மூலம் திரைப்படத்திலும் அறிமுகமானார்.

ஆனால், அது திரைப்படமான போது செய்யப்பட்ட சிறு சிறு மாற்றங்களால் மகேந்திரனுக்கு இத்திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை

நாடகத்தில் நடிக்கத் தொடங்கியது முதல், இவர் நடிப்பில் முன்னேற வேண்டும் என த்ந்தை விரும்ப, தாயோ படிப்பில் முன்னேற வேண்டும் என விரும்பினார்.

நாளைக்குப் பரீட்சைக்கு படி என தாயார் கூறி சென்றால்..த்ந்தையோ "டேய்..நாளைக்கு நாடகம் இருக்கு.சரியாக அஞ்சு மணிக்கு தியேட்டருக்கு வந்து விடு" என்பார்.

தாய், தந்தை இருவர் ஆசையையும் பூர்த்தி செய்த மகனாகத் திகழ்ந்தவர் மகேந்திரன்

படித்துக் கொண்டிருந்த போதே நாடகங்களில் நடித்து வந்த இவர், தனது நண்பர் மௌலியுடன் சேர்ந்து, ஃப்ளைட் 172, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, பத்மவியூகம், குருக்ஷேத்திரம் ஆகிய நாடகங்கள் மூலம் புகழ் பெற்றார்

இவரது நாடகக்குழுவிற்காக வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "நலந்தானா" என்ற நாடகத்தில் அரைக்கிறுக்கு வேடம் ஏற்று நடித்தார் ஒய்ஜிஎம்., இந்த நாடகத்தில் பிரதான வேடத்தில் நடித்து வந்த ஏ ஆர் ஏஸ் என அறியப்பட்ட ஏ ஆர் ஸ்ரீனிவாசன் , அலுவலக வேலை நிமித்தம் ஒருமுறை நடிக்க இயலாத போது, அவர் வேடத்தை ஸ்ரீகாந்த் ஏற்று மேடையில் நடித்தார்.அப்போது அரைகிறுக்கு வேடத்தில் மகேந்திரனின் நடிப்பைக் கண்டு வியந்தவர், இயக்குநர் சிகரம் கே பாலசந்தரிடம் ,மகேந்திரனைப் பற்றிக் கூறினார்

அச்சமயம் "நவக்கிரகம்" படத்தயாரிப்பில் இருந்த பாலசந்தர், அப்படத்தில் நடிக்க மகேந்திரனுக்கு சந்தர்ப்பம் அளித்தார்.இப்படம் மூலம் 1970ல்மகேந்திரனின் திரைப்பட பிரவேசம் ஆரம்பமானது

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நாடகம், திரைப்படம் என இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாக வலம் வருபவர் இவர் ஒருவரே எனலாம்

மகேந்திரனைப் பற்றி  மேலும் விவரங்கள், அவர் காதல் திருமணம் ஆகியவை அடுத்துக் காணலாம் 

அத்தியாயம் - 4



ஒய்.ஜி.மகேந்திரனின்  திருமணத்துக்கும் நாடகமே உதவியது. மகேந்திரனின் பிரபலமான நாடகம் "பிளைட் 172.'' அந்த நாடகம் நடைபெறுகிறபோதெல்லாம், ஒரு பெண் தவறாமல் ஆஜராகி விடுவார்.
 ஒரு நாள் அவர் மகேந்திரனை சந்தித்து, "இந்த நாடகத்தை நான் தினமும் பார்ப்பது உங்களுக்காகத்தான்'' என்றார். அன்று பூத்த மகேந்திரன் - சுதா காதல், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது.
சுதாவின் அண்ணன்  ரவிராகவேந்தர், நடிப்புத்திறமை உள்ளவர். "இவர் நன்றாக நடிப்பார் அப்பா'' என்று அவரை தன் தந்தை ஒய்.ஜி.பி.யிடம் அறிமுகப்படுத்தினார், மகேந்திரன். இதன் விளைவாக ராகவேந்தருக்கு நல்ல நல்ல வேடங்கள் கிடைக்கலாயின. ஏற்கனவே மகேந்திரன் மீது சுதா கொண்டிருந்த அன்பு மேலும் அதிகமாகியது.
மகேந்திரன் - சுதா திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர். 1975 செப்டம்பரில் இவர்கள் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் குடும்பத்தோடு வந்து வாழ்த்தினார்கள். நடிகர்-நடிகைகள், பட அதிபர்கள், நாடக - திரை உலகப் பிரமுகர்கள் பெருந்திரளாக வந்து வாழ்த்தினார்கள். மகேந்திரனின் குடும்பமே கலைக்குடும்பம். அனைவரும் நடிக்கக்கூடியவர்கள். அதற்கு சுதாவும் விலக்கல்ல.
ஒருநாள், "ரகசியம் பரம ரகசியம்'' என்ற நாடகத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கச் சென்றபோது, கதாநாயகி வேடத்தில் நடிக்க மனைவி சுதா மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருப்பதைப் பார்த்து திகைத்தார். அவர் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி சிரித்துக்கொண்டே, "இன்று வரவேண்டிய ஹீரோயின் வரவில்லை. அதனால் இவளை காலேஜிலே இருந்து அழைத்துக்கொண்டு வந்து, ஒத்திகை பார்த்து ரெடி பண்ணிவிட்டேன்'' என்றார்.
அதுமுதல், நாடகத்துக்கு எந்த நடிகையாவது வராவிட்டால், சுதாவே அந்த வேடத்தில் நடித்து விடுவார். ஒய்.ஜி.பார்த்தசாரதி, கடைசி மூச்சு உள்ளவரை நாடகத்தை நேசித்தவர். அவர் நாடகங்களில் நடிக்காத காலக் கட்டத்தில், மகேந்திரனின் நாடகங்களைப் பார்க்க வருவார்.
"வேல் வேல் வெற்றி வேல்'' நாடகத்தை பார்க்க வந்தபோது, மேடையில் சிலர் பேசிக்கொண்டு நின்றனர். அதனால் கோபத்துடன் சத்தம் போட்டுவிட்டு, வீட்டுக்குப்போய் விட்டார். மகேந்திரன் நாடகத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார். இடைவேளையின்போது, பார்த்தசாரதிக்கு பக்கவாதம் வந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு "கோமா''வில் இருப்பதாக தகவல் வந்தது. அந்த இக்கட்டான நிலையில், மகேந்திரன் நாடகத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினார்.
நாடகம் முடிந்து, ஆஸ்பத்திரிக்குச் சென்று அப்பாவைப் பார்த்தார். அவர் உணர்வற்ற நிலையில் இருப்பதைப் பார்த்து கலங்கினார். மறுநாள் மகேந்திரனின் நாடகம் நாகர்கோவிலில் நடப்பதாக இருந்தது. நாடகத்துக்கு போவதா, வேண்டாமா என்று முடிவு செய்ய மகேந்திரனால் இயலவில்லை. அதை தந்தையின் முடிவுக்கே விட எண்ணினார்.
"உங்களை இப்படியே விட்டு விட்டு, ஒப்புக்கொண்டபடி நாடகத்துக்கு நான் போகலாம் என்றால், என் கையை அழுத்துங்கள். இல்லாவிட்டால் இங்கேயே இருக்கிறேன்'' என்று தந்தையின் காதருகே குனிந்து சொன்னார்.
ஐந்து நிமிடம், அசைவற்று இருந்தார், ஒய்.ஜி.பி. பிறகு உடல் லேசாக அசைந்தது. ஒய்.ஜி.பி. தன் கையால், மகேந்திரன் கையை அழுத்தினார். "கோமா'' நிலையிலும், நாடகத்தை குறிப்பிட்டபடி நடத்திவிட வேண்டும் என்பதில் தந்தை உறுதியாக இருப்பதைக் கண்டு, கண்ணீர் விட்டார், மகேந்திரன்.

அத்தியாயம் - 5

 (ஜெயலலிதாவுடன் மகேந்திரன், பார்த்தசாரதி)

தந்தை ஒய்ஜிபி தாய் ராஜம்மா மகன் மகேந்திரன் ஆகியவர்களின் நாடகப் பற்றிற்கு சற்றும் குறைந்ததில்லை மகேந்திரனின் மனைவியின் நாடகப் பற்று.
மகே ந்திரனின் குடும்பமும், சுதாவின் குடும்பமும் நீண்ட நாட்களாக குடும்ப நண்பர்கள்.
சுதாவும், சுதாவின் சகோதரி லதாவும் பத்ம க்ஷேசாத்ரி பள்ளியில் படித்து வரும் காலத்திலேயே, மகேந்திரன் நடத்திவந்த இசைக்குழுவின் பாடகர்கள்
பின் , திருமணம் முடிந்ததும், சுதாவிற்கு ஏர் இந்தியாவில் வேலை கிடைக்க, வசதியான அக்குடும்பத்திற்கு வேலை க்குப் போக வேண்டிய அவசியமில்லை.ஆனாலும், பெண்கள் சுதந்திரத்தில் தலையிட விரும்பாத ஒய்ஜிஎம், உனக்கு விருப்பமானால் வேலைக்குச் செல் என்றாராம்.

ஒய்ஜிபி , ராஜம்மாவிடம், திருமணமானதும், சமையலறை வேலையே வேண்டாம், வேறு சமுதாய நலப்பணி செய் என்று சொன்னது ஞாபகம் வருகிறதா?

மகேந்திரனும், பெண் சுதந்திரத்தில் அபப்டியே நடந்துக் கொண்டது..
"விதை ஒன்று விதைத்தால் சுரை ஒன்று முளைக்காது" என்ற சொலவடைக்கு ஏற்றார் போல் இருக்கிறது அல்லவா.

அதனால்தான் சுதாவினால் பின்னர் B.Ed., M.Ed., பட்டங்களை பின்னர் வாங்கி, பள்ளி நிர்வாகத்தில் திறம்பட பணியாற்ற முடிந்தது

பின், மலேசியாவில் ஒருசமயம் மகேந்திரனின் "ரகசியம் பரம ரகசியம்" நாடகம் நடைபெற்ற போது சுதாவும் அதில் நடித்தார்.குழ்ந்தை மதுவந்திக்கு ஒரு வயது
நாடகத்தன்று food poison ஆல் குழந்தைக்கு  உடல்நலம் சரியில்லாமல் போயிற்று.மருந்து, மாத்திரைகள்  கொடுத்து, குழ்ந்தையைப் பார்த்துக் கொண்டே , மேடைக்கு ஓடிப் போய் காட்சியில் நடித்து முடித்து, திரும்ப ஓடி வந்து குழந்தையைப்  பார்த்துக் கொண்டார் சுதா.
அவருக்கு நாடகங்களின் பால் உள்ள ஈர்ப்புக்கு இந்த ஒரு உதாரணம் போதும் அல்லவா?

நேர்மை, வேலையில் ஈடுபாடு, கடின உழைப்பு,முழுமையான சுதந்திரம் என பள்ளி நாட்கள் முதல் இன்றுவரை நடந்துவரும் மகேந்திரனையே , குடும்பமும் பின்பற்றிவருவதால்தான், மதுவந்தியும், பள்ளிநிவாகத்தையும், நாடக நடிப்பையும் இன்று வெற்றிகரமாக செய்து வருகிறார் 

அத்தியாயம் - 6


(ஓ..வாட் அ கேர்ள் நாடகத்தில் பட்டு, ராகினி)

யூஏஏ ஆரம்பித்து 66 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இதுவரை இக்குழு அரங்கேற்றியுள்ள நாடகங்கள் 66.அதாவது சராசரியாக வருடம் ஒரு நாடகம்
நாடகங்கள் நடத்த சந்தர்ப்பங்கள் அரிதாகி வரும் நிலையில், இக்குழுவினர் மட்டும் அரங்கேற்றம் செய்யும் நாடகங்கள் வெகு எளிதில் நூறு காட்சிகள் நடத்துகின்றனரே! அது எப்படி? என ஆச்சரியப்படுபவர்களுக்கு என் பதில்..

சும்மா கிடைத்துவிடவில்லை சுதந்திரம் என்பார்கள்.ஆம்., நம் நாடு சுதந்திரம் அடைய, எவ்வளவு தலைவர்கள் தியாகம் செய்துள்ளனர்?!

தியாகம், நாட்டுப்பற்று,நேர்மை, தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாத சேவை..இவையெல்லாம்தான் நம் நாட்டிற்கான சுதந்திரம் கிடைக்க மூலாதாராம்.

கிட்டத்தட்ட யூஏஏ வெற்றிக்கும் அதுதான் காரணம்.நாடகத்தின்பாற் பற்று, கடின உழைப்பு, குடும்ப நலனைவிட நாடக வளர்ச்சிக்கு அதிக நேரம் செலவிட்டது போன்ற தன்னலமற்ற சேவைகளே காரணம் எனலாம்  

இனி இவர்கள் அரங்கேற்றிய நாட்கங்களைக் காண்போம்..

முதல் நாடகமாக, ஏ டி கிருஷ்ணசாமி என்பவர் எழுதிய வரதட்சணை அரங்கேற்றினர்.என்ன ஒரு பொருத்தம்.

நாடகத்தைத் தனது இரண்டாவது மனைவியாக எண்ணிய ஒய்ஜிபிக்கு வரதட்சணை கொடுத்து மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டது யூஏஏ.,

இந்நாடகம் ஒருமுறை நடந்தது.வாழ்வில் திருமணமும் ஒரு முறைதானே நடக்கும்.

ஆனால், அந்நாளில், அமெச்சூர் குழுக்கள் , தங்களுக்குள் நாடகம் போட்டு, ஒருமுறை நடத்தித் திருப்தி அடைந்தனர்.அதற்கு இவர்களும் விதிவிலக்கல்ல.

இரண்டாவதாக அரங்கேறிய நாடகம் திரு டி.கே கோவிந்தன் என்பவர் எழுதிய.மனோரதம் ஆகும்.இந்நாடகம் 3 காட்சிகள்.

மூன்றாவது ஆர்.பார்த்தசாரதி என்பவர் எழுதிய, "கலை கொலை கேஸ்" அரங்கேற்றம் ஆனது.இந்நாடகம் பன்னிரெண்டு முறை நடந்தது

மேலே சொன்ன மூண்ரு நாடகங்களும் 1952ஆம் ஆண்டே அரங்கேறின.மூன்று நாடகங்களும் சேர்த்து அவ்வாண்டு 16 முறை இக்குழுவினர் மேடை ஏறினர்.

அடுத்து, பட்டு எழுதிய "It happened at Mid Night" என்ற திரில்லர் நாடகம்.48 காட்சிகள்.அடடா...என்னே ஒரு முன்னேற்றம்.

1954ல் பட்டுவும் ஏ டி கிருஷ்ணசுவாமியும் எழுதிய "Oh! What a Girl" 53 காட்சிகள் நடந்தது. 

அத்தியாயம் - 7

(மக்கள்திலகத்துடன் ஒய்ஜிபி, ராஜம்மா,சோ,ஏ ஆர் ஏஸ்., மற்றும் மகேந்திரன்) 

யூஏஏ நாடகக் குழுதான் முதன்முதலாக தமிழ் நாடகமேடையில் பேச்சுத் தமிழை அறிமுகப்படுத்தியவர்கள் எனலாம்.
தவிர்த்து,தமிழ் நாடகத்தில், பாத்திரங்களுக்கு ஏற்ப ஆங்கில வசனங்களை ஆங்காங்கே இவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்

இதற்காகவே, ஒய்ஜிபி-பட்டு கூட்டணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

1955ஆம் ஆண்டு இவர்கள் 3 நாடகங்களை அரங்கேற்றினார்கள்

பட்டு எழுதிய "dial Mr.Sanjeevi"  65முறை மேடையேறி இவர்களுக்கு ஒரு பெரும் வெற்றியைத் தந்தது எனலாம்

அடுத்து பட்டு எழுத இக்கூட்டணி நடிக்க அரங்கேறிய நாடகம் 27 முறை நடந்த "This is Heaven"

"எமன் ஏமாந்தால்" என்ற நாடகமும் 62 முறைகள் நடந்தது.ஆக இந்தாண்டு இவர்கள் அரங்கேற்றிய 3 நாடகங்களும் தொடர்ந்து154 காட்சிகள்.அதாவது கிட்டத்தட்ட வாரம் 3 காட்சிகள்

ஒரு அமெச்சூர் குழுவினருக்கு, இதற்கு மேல் ஒரு வெற்றியைப் பெற்றுத்தர யாரால் முடியும்

தொடர்ந்து 1956ல் "Never Say Die" பட்டுவின் இந்த நாடகமும் 38 முறைநாடகமேறியது

1957ஆம் ஆண்டு 3நாடகங்கள் அரங்கேறியது

அவை-

பாவம் பலராமன்.37 முறை நடந்த இந்நாடகம் பட்டு எழுதினார்.பள்ளிக்கூடத்திற்கான நிதி திரட்ட இந்நாடகம் நடநதபோது சாவித்திரி பெண்பாத்திரத்தில் நடிக்க, திருமதி ஒய்ஜிபி ஆண்வேடத்தில் நடித்தது இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று
அடுத்து அரங்கேறி 33 முறை நடந்த நாடகம் "திடீர் தர்மராஜன்"
பின் 3 காட்சிகள் நடந்தது "Fabulous Fools"

1958 ல் "Hut Chup Chup"  என்ற நாடகம் அரங்கேறி 3 முறை நடந்தது. 

"Fabulous fools" "Hut Chup Chup" இரு நாடகங்களுக்கும் பல காட்சிகள் நடத்த தேதி கொடுத்திருந்தார் ஒய்ஜிபி., ஆனால், நாடகங்கள் எதிர்பார்த்த அள்விற்கு இல்லை.அதனால் மேலும் அந்நாடகங்களை நடத்தாமல் ,கொடுத்த தேதிகளை ரத்து செய்தார் ஒய்ஜிபி.,
மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக  சரியாகவராத நாடகங்களை நடத்த விருப்பமில்லாத ஒய்ஜிபியை  இதன் மூலம் அறியலாம் 



அத்தியாயம் - 8


 (பெற்றால் தான் பிள்ளையா நாடகம் சிவாஜி நடிக்க பார் மகலே பார் என்ற பெயரில் திரைப்படமானது)
1961 ஆம் ஆண்டு யுஏஏவிற்கு மறக்கமுடியாத ஆண்டு.
ஆம், பட்டு எழுதிய "பெற்றால்தான் பிள்ளையா?" என்ற நாடகம் அரங்கேறியது.

27 காட்சிகள் இந்நாடகம் நடந்தது.அருமையான கதை, நடிப்பு, பாத்திரப்படைப்புகள்

பின் கேட்பானேன்..தமிழ்த்திரை ரசிகர்களும் இந்நாடகத்தைக் காண வேண்டும் என வெள்ளித்திரைக்குத் தயாரானது.ஆகவே நாடகம் நிறுத்தப்பட்டது.இல்லையேல் மேலும் பல காட்சிகள் நடந்திருக்கும்

ஒரு அமெச்சூர் குழுவின் நாடகம் திரைக்கு வருவதைவிட, அந்நாடகத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிக்கிறார் என்றால்...எந்தக் குழுவிற்கு அந்நாளில் இப்பேறு கிட்டியிருக்கும்? யுஏஏவிற்குக் கிடைத்தது.

"பெற்றால் தான் பிள்ளையா" பார்மகளே பார் என்ற பெயரில் திரைப்படமாக வந்து மாபெரும் வெற்றி பெற்றது

ஒரு சிறு சோகம் என்னவென்றால், இந் நாடகத்தில், தனது பதினோராம் வயதில் சிறுவனாக  காலடி எடுத்து வைத்த மகேந்திரனால் திரையில் நடிக்க முடியவில்லை.காரணம் வெள்ளித்திரைக்கென செய்யப்பட்ட சில மாற்றங்களால்.

ஆனால், அதே நேரம் குழுவினருக்கு பெருமை ஏற்படக் காரணம், நாடகத்தில் 'மெக்கானிக் மாடசாமி" என்ற வேடத்தில் ஒரு நடிகர் நடித்தார்.அந்நடிகரே திரையிலும் நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் நடிகர்திலகம்.
அப்படி சிவாஜி சொல்லி இப்படத்தில் அறிமுகமானவர் "சோ"ஆவார் 

ஆக, இவ்வாண்டு யுஏஏ மற்றும் தனிப்பட்ட முறையில் மகேந்திரன் ஆகியோருக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது

அத்தியாயம் - 9

                     (பூர்ணம் விஸ்வநாதன்)   

1962ல் அரங்கேறிய நாடகம் பட்டு எழுதிய "Hidden Truth" என்ற நாடகம்.14 காட்சிகள்

பின் சகுந்தலா என்ற பட்டு எழுதிய நாடகம் 

1964ஆம் ஆண்டு..யூஏஏ விற்கு மிகவும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்தது எனலாம்.

தில்லியில் ஒய்ஜிபி வேலை செய்துவந்த போது பூர்ணம் விஸ்வநாதன் நண்பர் ஆனார்.
பின்னர் அவர் எழுதிய "UNDER SECRETAY"  என்ற நாடகத்தை, திருமதி ஒய்ஜிபி அவர்கள் யூஏஏ நாடகமாக்க விரும்புவதாக பூர்ணத்திடம் சொல்ல அவரும் இசைந்தார்.

இந்நாடகம் பல காலம் பேசப்பட்ட வெற்றி நாடகமாக அமைந்தது எனலாம்.50முறை மேடையேறிய இந்நாடகத்தில் தனது 16ஆவது வயதில் ஜெயலலிதா அறிமுகமானார்.அதுமட்டுமல்ல, இந்நாடகத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, சித்தி வித்யாவதி ஆகியோரும் நடித்தனர். 

1965ல் அவர் வெள்ளித்திரையில்  "வெண்ணிற ஆடை" படம் மூலம் அறிமுகமானாலும், திரையுலகில் முழுமூச்சில் ஈடுபடும்வரை இவர்களது நாடகங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது

1965ல் யூஏஏ அரங்கேற்றிய நாடகம் P V Y ராமன் என்பவர் எழுதிய (IM)PERFECT MURDER .திரில்லர் வகையைச் சேர்ந்த இந்நாடகம் ஆசிரியருக்கு மட்டுமின்றி, யூஏஏ வின் தொப்பியில் நீண்ட சிறகாகவும் ஆனது.இப்போதும் இந்நாடகம் பார்த்தவர்களிடம் கேட்டால் இந்நாடகத்தினைப் பற்றிப் போற்றிக் கூறுவர்.1965லேயே 200 முறைகளுக்கு மேல் இந்நாடகம் நடந்தது என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்

அத்தியாயம் - 10

1966ல் அரங்கேறிய நாடகம் P V Y ராமன் எழுதிய "மாலதி ஒரு தொல்லை" .இந்நாடகம் 30முறை மேடை கண்டது.ஜெயலலிதாவும் நடித்திருந்தார்.
1967ல் ராமன் எழுதிய "சத்யமேவ ஜெயதே" 23 
காட்சிகள்"அண்ணி"சேது எழுதிய "Fortnight in Kailash"  37 முறைகள் மேடை ஏறியது

இக்காலகட்டத்தில் ஒய் ஜி பி தனது குழுவில் புதியதாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க எண்ணினார்.

அம்பத்தூரைச் சேர்ந்த ,மௌலி, விசு, ராஜாமணி, கணேஷ் போன்றவர்கள் அவ்வப்போது நாடகம் போட்டு வந்தனர்.அப்படி ஒருசமயம் மௌலி எழுதிய ""Bon voyage" என்ற நாடகத்தைக் காண ஏ ஆர் எஸ் வந்திருந்தார்.அதில் மௌலியின் நடிப்பைக் கண்டு அவர் ஒய்ஜிபியிடம் சொல்ல மௌலி  தன் நண்பர்களுடன் யூஏஏ வில் நடிக்க ஆரம்பித்தார்.

அச்சமயம் டன்லப் கம்பெனியில் வேலை செய்து வந்த சுந்தரம் என்பவர் எழுதிய "கண்ணன் வந்தான்" என்ற நாடகத்தை யூஏஏ அரங்கேற்றம் செய்தனர்.75 முறை இந்நாடகம் மேடையேறியது.குழுவின் புகழும் உச்சத்திற்குச் சென்றது.லட்சுமி மேடைக்கு அறிமுகமானார்.
இந்நாடகத்தில் ஒய்ஜிபி பாரிஸ்டர் ரஜினிகாந்தாகவே வாழ்ந்தார்.கண்ணனாக ஏ ஆர் எஸ் நடித்தார்.இந்நாடகமே பின்னாளில் நடிகர் திலகம் நடிக்க வெற்றி ப்படமான "கௌரவம்" ஆக வெளி வந்தது.
ஒய்ஜிபி, ஏ ஆர் எஸ் ஏற்ற வேடங்களை திரையில் இரட்டை வேடங்களில் சிவாஜி செய்தார்.மேடையில் லட்சுமி இரு வேடங்களில் நடிக்க திரையில் உஷா நந்தினியும் ரமாபிரபாவும் செய்தனர் 

"I am an university.Men may come and men may go., but I go on for ever" என்ற வசனத்திற்கும்
நான் வெளியே போனா யானைகூட குறுக்கே வராது, இன்னிக்கு பூனை இல்ல குறுக்கே வரது "என்ற வசனத்திற்கும்,ஒய்ஜிபி உயிரைக் கொடுத்தார்.

ஆனால்,  அதே சுந்தரம் எழுதிய "வியட்நாம் வீடு" என்ற நாடகத்தைப் போட ஒய்ஜிபி நிராகரித்தார்.
என்? அவரால் அந்நாடகம் குறித்து சரியான புரிதல் இல்லாததாலா? என்றால்..அதற்கான பதில், "அதிக பிராமண பாஷை" அதில்.குறிப்பிட்ட இனத்தைக் குறிக்கும் வகையில் எந்த நாடகத்தையும் போட அவர் விரும்பவில்லை என்பதே உண்மை 

No comments: