Friday, July 6, 2018

நாடகப்பணியில் நான் - 2

என் முதல் நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடித்தேன் என எழுதியிருந்தேன் அல்லவா?

அது பொய். நான் நடித்தேனா? நடிப்புப் பற்றி 11 வயதில் எனக்கு என்ன தெரியும்.? நான் என்ன கமல் ஹாசனா? எழுதிக் கொடுத்த வசனங்களை ஒப்புவித்தேன்.ஆங்காங்கே அதுவும் மறந்துவிட side ல் இருந்து prompt .அதை வாங்கிப் பேசினேன்.மொத்தத்தில் அன்றைய நாடகம்..இன்றைய மொழியில் சொல்வதானால் ஒப்பேற்றப்பட்டது

ஆனால், அதற்கே எவ்வளவு பாராட்டுகள்.என் அம்மாவிடம் ,பெண்கள், "உங்க பையனுக்கு சுத்திப் போடுங்க" என்றனர்.
என் தந்தையிடம் , அறிமுகமில்லாதவர்களும் வந்து தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தனர்

ஆனால், நானோ, அந்த நாடகக்கம்பெனி
கொடுத்த உப்புமாவை ருசித்துக் கொண்டிருந்தேன்.நான், ஒரு நடிகன் ஆகவில்லை..ஆகவே தான் பாராட்டுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை

ஒரு கலைஞனுக்கு, அவன் திறமைக்குக் கிடைக்கும் புகழ், பாராட்டுதல்கள் அளிக்கும் மகிழ்ச்சி அவனுக்கு அளிக்கப்படும் சன்மானத்தைவிட அதிகமானது..உயர்வானது என்பதை உண்மையாகவே நான் நடிக்க ஆரம்பிக்கையில் உணர்ந்தேன்.

ராகவேந்திர அண்ணனுக்கு போட்டியாக இன்னொரு நாடகக்குழுவும் அம்பத்தூரில் அன்று இருந்தது

போட்டிகள் இருந்தால்தானே திறமைகள் பளிச்சிடும்.

பாபு என்பவர் (அண்ணன் இல்லை uncle) நடத்தி வந்தார்.அவர் ஒருநாள் வழியில் என்னைப் பார்த்து, அவர் நடத்தப் போகும் ஒரு நாடகத்தில் நகைச்சுவை வேடம் ஒன்றில் என்னால் நடிக்க முடியுமா? என்றார்.

அதை அப்பாவிடம் நான் சொல்ல ,அவர் இந்த முறை தடை சொல்லவில்லை.(ஒருவேளை தன் மகன் ஒரு பெரிய நடிகன் ஆவான் என பகல் கனவு கண்டிருப்பாரோ? பாவம் அவர்)

"அடாது மழை" என்ற அந்த நகைச்சுவை நாடகம் பற்றி அதிகம் நினைவில் இல்லை.ஆனால் நான் பேசிய ஒரு நகைச்சுவை வசனம் பசுமரத்தாணிபோல நினைவில் உள்ளது.

அந்த நாளில் "சேமியா" 100 கிராம் 200 கிராம் என பழுப்புநிற காகிதத்தில் brand name உடன் சுற்றப்பட்டு pack செய்யப்பட்டிருக்கும்.அப்படி ஒரு பாக்கெட்டில் கம்பி ஒன்றினை நுழைத்துவிட்டு நான் பேசும் வசனம்,"வர வர நாட்டுல எல்லாவற்றிலும் கலப்படம் செய்யறாங்க இந்த சேமியா பாக்கெட்டில பாருங்கன்னு அதை உடைத்து அந்த கம்பியை எடுத்துக் காண்பிப்பேன்.

அந்த வசனம் சொன்னதும் அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

அன்று நாடகம் பார்த்த ஒருவர் என் தந்தையிடம், "இந்த வயசிலேயே பையன் சமுதாய ஊழல்களைப் பேசறானே..உங்க மகன் ராதா(கிருஷ்ணன்) எம்.ஆர் ராதா போல வருவான்" என சொல்லியிருக்கக் கூடும்.

ஏனெனில் என் தந்தையின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

(தொடரும்)

No comments: