Showing posts with label குறுந்தொகை -தமிழ் -இலக்கியம். Show all posts
Showing posts with label குறுந்தொகை -தமிழ் -இலக்கியம். Show all posts

Friday, November 21, 2014

குறுந்தொகை-161



தலைவி கூற்று
(தாய் உறங்காமல் விழித்திருந்தமையால் தலைவன் இரவில் வந்தும் அவனைக் காணுதற்கு இயலாத தலைவி மறுநாள் அவன் வந்து மறைவில் நிற்பதை யறிந்து, “நேற்று அன்னை விழித்திருந்தாள். தலைவன் வந்தா னென்பதை யான் உணர்ந்தும் பயனிலதாயிற்று” என்று தோழியை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் நக்கீரர்.

இனி பாடல்-
   
பொழுது மெல்லின்று பெயலு மோவாது
   
கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப்
   
புலிப்பற் றாலிப் புதல்வற் புல்லி
   
அன்னா வென்னு மன்னையு மன்னோ

என்மலைந் தனன்கொ றானே தன்மலை
   
ஆர நாறு மார்பினன்

   
மாரி யானையின் வந்துநின் றனனே.


                            -நக்கீரர்.

   

    (ப-ரை.) தோழி,  சூரியனும் விளக்கம் இலனாயினன்; மழையும்,  ஒழியாமல், பேய்கள் கண்ணை அடிக்கடி கொட்டி நடுங்கும்படி, வேகமாகப் பெய்யும்;  அதற்கு மேல்,  தாயும், புலிப்பற் கோத்த தாலியை யணிந்த, புத்ல்வனைத் தழுவி அன்னையே யென்று என்னை விளிப்பாள்; அப்பொழுது, தனது மலையில் விளைந்த சந்தனம் மணக்கின்ற மார்பையுடைய தலைவன்,  மழையில் நனைந்த யானையைப் போல, இவ்வீட்டுப்புறத்தே வந்து நின்றான்; !  அவன் எதனைச் செய்ய மேற் கொண்டானோ!

 

    (கருத்து) நேற்றுக் காப்புமிகுதியால் தலைவனைக் காணப்பெற்றேனில்லை.

   

   

Sunday, June 8, 2014

குறுந்தொகை - ஆறாம் பாடல்


தலைவன், பரிசப் பொருளை ஈட்ட தலைவியை பிரிந்து செல்கிறான்.இரவு நேரம்.ஊரே உறங்குகிறது.தோழியும் உறங்குகிறாள். ஆனால்..தலைவனை எண்ணி தலைவி சற்றும் கண் அயராது இருக்கிறாள்.அதை அடுத்த நாள் தோழியிடம் உரைப்பது போல பாடல் அமைந்துள்ளது.. இப்பாடலை எழுதியவர் பதுமனார்.

இனி அச் செய்யுள். (நெய்தல் திணை)
   
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
   
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
   
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
   
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

உரை -

பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்து ஆற்றாளாகிய தலைவி,நள்ளிரவில் உலகம் முழுதும் உறங்க நான் ஒருத்தி மட்டும் உறங்கவில்லை என தோழி உறங்கியதையும் சுட்டிக்காட்டி தோழியிடம் உரைக்கிறாள். 

Tuesday, February 15, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ்-24

காதல்...இந்த மூன்று எழுத்துச் சொல்லிற்குத்தான் எவ்வளவு வலிமை..
இந்தச் சொல் கோழையையும் வீரனாக்கியுள்ளது..வீரனையும் கோழை ஆக்கியுள்ளது.
சாம்ராஜ்யத்தையும் உருவாக்கி இருக்கிறது..சாம்ராஜ்யத்தையும் அழித்திருக்கிறது.
காதல்வசப்பட்டவர்கள்..ஓருயிர் ஈருடல் எனச் சொல்லிக் கொள்வர்..அப்படியாயின் இருவரில் ஒருவர் உயிர்விட்டால் மற்ற உடல் உயிரின்றி எப்படியிருக்கும்?
காதலைனையோ..காதலியையோ பறிகொடுத்தபின் மற்றவரால் எப்படி இருக்க முடியும்?இதையே திருவள்ளுவர் சொல்கிறார்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து (1209)

நாம் ஒருவரே.வேறு வேறு அல்லர் எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாய் போய்க்கோண்டிருக்கிறது..எனக் காதலி சொல்வதாகச் சொல்கிறார்.

ஆனால் குறுந்தொகையிலோ, நெய்தல் திணையில் சிறைக்குடி ஆந்தையார் என்னும் புலவர்..தலைவன் பிரிந்ததும் என்னுயிரும் போய்விடுவது மேலானது எனத் தலைவி சொல்வதாகக் கூறுகிறார்.அதற்கு அவர் அன்றில் பறவையைக் கூறுகிறார்.அன்றில் பறவை ஒரு நீர்வாழ்ப் பறவை.ஆணும்,பெண்ணும் ஒன்றையொன்று விட்டுவிடாது இணைந்தே தண்ணீரில் வலம் வரும்.இரண்டுக்கும் இடையில் பூ ஒன்று இடைப்பட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அதை நீண்ட காலப் பிரிவாய் எண்ணுமாம்.ஆகா..என்னவொரு அழகான சிந்தனை..

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன் உயிர் போகுதில்ல - கடன் அறிந்து
இருவேம் ஆகிய புன்மை நான் உயற்கே

குறுந்தொகை-57
சிறைக்குடி ஆந்தையார்
(காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழியிடம் கூறுவது)
நீர்வாழ்ப் பறவை அன்றில் , ஆணும்,பெண்ணுமாக ஒன்றை ஒன்று பிரியாமல் வாழ்வன.தமக்கிடையே பூ ஒன்று இடைபட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அந்தப் பிரிவை ஓர் ஆண்டு கால அளவிலான பிரிவாக எண்ணி வருந்தும் தன்மையன.அந்தப் பறவைகள் போல ஓருயிர் ஈருடலாக நானும், தலைவனும் வாழ்கிறோம்.தலைவன் பிரிந்த போது ஓருயிர் ஓர் உடலில் வாழும் இழிவு ஏற்படும்.அதற்குத் தலைவன் பிரிந்த உடன் என்னுயிரும் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.

Thursday, January 27, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ் - 23





நண்பர் ஒருவர் நம்மை 5 மணிக்கு சந்திப்பதாகச் சொல்கிறார்..ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச..ஆனால் 5-15 ஆகியும் அவர் வரவில்லை..பின் அவர் வருகிறார்.உடன் நாம் என்ன சொல்வோம்,,"ஏன் 15 மணித்துளி தாமதம்..ஒவ்வொரு மணித்துளியும் ஒரு யுகமாய் கழிந்தது' என்கிறோம்..

எதையோ எதிர்ப்பார்த்து காத்திருக்கையில்.. நேரம் போகாது..கடிகாரம் மெல்ல ஓடுவது போல இருக்கும்..

காதலன் காதலியை 6 மணிக்கு கடற்கரையில் சந்திப்பதாகக் கூறுகிறான்..காதலி வந்து வழக்கமான இடத்தில் அமர்கிறாள்.காதலன் வரக் காணோம். போவோர்,வருவோர் எல்லாம் அவளை ஒரு மாதிரி பார்த்துப் போகிறார்கள்...அவளுக்கு சங்கடமாய் இருக்கிறது..காதலன் 6-10க்கு வருகிறான்.."சாரி..டியர்..டிராஃபிக் அதிகம்..அதுதான்..'என்கிறான்..

காதலிக்கு கோபம் வருகிறது,,'உங்களுக்கென்ன ஏதோ ஒரு சாக்கு..ஆனால் இங்கு காத்திருக்கும் எனக்கல்லவா..தர்மசங்கடம்..போவோர் வருவோர் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை..10 நிமிடங்கள் கடப்பது பத்து மணிநேரம் கடந்தாற் போல் இருக்கிறது' என அவனிடம் ஊடல் கொள்கிறாள்

இது இன்று..நேற்றல்ல..அன்றிலிருந்து எப்போதும் நடப்பதுதான்..என்பதை குறுந்தொகையில் இந்த பாடல் மூலம் புலப்படுகிறது.

தலைவன் மறுநாள் காலை வருவதாக முதல்நாள் செய்தி வருகிறது.பகல் நேரத்தைக் கூட அவள் கடந்து விட்டாள்..ஆனல் இரவைக் கடப்பது என்பது கடலைக் கடப்பதைவிட பெரிதாக இருக்கும் போலிருக்கிறதாம்..என் உயிர் போவதற்குள்..'கடந்து விட முடியுமா?' என்கிறாள்.



எல்லை கழிய முல்லை மலர

கதிர்சினந் தணிந்த கையறு மாலை

உயிர்வரம்பு ஆக நீந்தின மாயின்

எவன் கொல்? வாழி தோழி!

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!!



-கங்குல வெள்ளத்தார் - முல்லைத் திணை-387

பகலின் எல்லை முடிந்து..முல்லைப் பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்.சூரியனின் சினம் தணிந்து வரும் இரவு நேரம்.இதை என் உயிர் போவதற்கு முன்னால் நீந்தி கடந்து விட முடியுமா? தோழி என்கிறாள்.இரவு வெள்ளம் கடலை விட பெரிதாக இருக்கிறதாம்..

அதாவது தலைவன் வரும் முன்னர் இரவை கடப்பது ..இரவு நீண்டுக் கொண்டேப் போகிறதாம்..அதற்குள் அவள் உயிர் போய்விடுமா? என்கிறாள்.

காத்திருப்பது சுகம் என்றாலும்..காத்திருக்கும் நேரம் நீண்டுக் கொண்டிருந்தால்..

அந்த துயரத்தின் வெளிபாட்டையே இந்த குறுந்தொகை பாடல் சொல்கிறது.

கங்குல் வெள்ளம்.என்பது .இரவு வெள்ளம்..

இப்பாடலை எழுதியவர் அதனால் கங்குல வெள்ளத்தார் எனப்பட்டார்.

Monday, October 11, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 22

சாதாரணமாக காதலன் தன் மனம் கவர்ந்தவளைக் காணும் இடம் இன்று பெரும்பாலும் கடற்கரைகளே..
கடல் இல்லாத இடங்களில்..பூங்காக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள். அவர்களுக்குத் தனிமை தேவைப்பட்டாலும்..இது போன்ற இடங்களுக்கு வருவோர் பெரும்பாலும்..தான், தன் துணை,தன் குடும்பம் தவிர வேறு பக்கங்களில் பார்வையை ஓட்டுவதில்லை.
காதலன் தன் காதலி எங்கு வருவாள்..அவளை எங்கு சந்தித்தால் உரையாடலாம் என்று தெரியாது அவளது நெருங்கிய தோழியிடம் கேட்கிறான்..'உன் நண்பியை எங்கு சந்திக்கலாம்..அவள் எங்கிருப்பாள்?' என்றெல்லாம்.
அந்தக் காதலியின் தோழி சற்று குறும்புக்காரியாய் இருப்பாள் போலிருக்கிறது..'நேரடியாக பதில் சொல்லாமல்..அவனை சற்று சுற்றியடிக்கக நினைக்கிறாள்..ஆகவே அவனுக்கான பதிலை ஒரு விடுகதையைப் போல சொல்கிறாள்.

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுபவள் பெரும்பே தையே

ஊருக்கு அருகே பொய்கை உள்ளது.சிறு காட்டாறு அப்பொய்கைக்குத் தூரத்தில் இல்லை (அருகே உள்ளது).அவ்வாற்றில் தன் இரையத் தேடும் நாரைகளைத் தவிர வேறு யாரும் வருவதில்லை (தனிமைப் பிரதேசம்)நாங்கள் எங்கள் கூந்தலுக்கு செங்கழுநீர் பூக்கள் பறிக்க அங்கு செல்வோம்.பெரும் பேதமைக் கொண்ட அவள் அங்கும் வருவாள்..என்கிறாள் தோழி.

அதாவது காதலி அந்த இடத்திலும். என உம் போட்டாலும்..அவள் அங்குதான் இவருக்காக காத்திருப்பாள் என பொருள் பட சொல்கிறாள்.ஆற்றங்கரைக்குச் சென்றால் அவளைக் காணலாம் என்ற பதிலை நேரடையாகச் சொல்லவில்லை.

இப்பாடல் குறுந்தொகையில் தோழிகூற்று (மருதம்)..113ஆம் பாடல்..ஆசிரியர்-மாதீர்த்தனார்)