Showing posts with label சிறுகதை - புனைவு. Show all posts
Showing posts with label சிறுகதை - புனைவு. Show all posts

Friday, August 27, 2010

விடுதலை (அரை பக்கக் கதை)




அந்த சிறிய அறைக்குள் ஐம்பது பேர் அடைக்கப் பட்டிருந்தனர்.

அறை திறக்கும் ஓசை..

இன்று அவர்களில் ஒருவனுக்கு விடுதலை..

அது நாமாக இருக்குமா..என ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு.

அவர்களில் இருந்து ஒருவன் வெளியே இழுத்து வரப்பட்டான்..அறை மீண்டும் மூடப்பட்டது.வெளியே வந்தவனுக்கு விடுதலை ஆகி விட்ட மகிழ்ச்சி.

ஆனால் அதற்குள்..அவன் தலை அந்த அறையின் வெளிப்பக்க சுவற்றில் வேகமாக உரசப்பட்டது.

தலை பளீரென நெருப்புப் பிடிக்க..அவனை பக்கவாட்டில் திருப்பி அருகில் இருந்த விளக்கை ஏற்றினான் அவனை விடுவித்தவன்.விடுதலை ஆனவன் தலை கருகி இறந்தான்.

அவன் நிலையை அறிந்த தீப்பெட்டிக்குள் இருந்த மற்ற தீக்குச்சிகள்..இனி நம்மில் யாருக்கும் விடுதலை வேண்டாம்..என எண்ணின.

Thursday, February 18, 2010

கொள்ளை..(ஒரு பக்கக் கதை)

காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும்.

கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில் ..ஏதேனும் ஒரு இடத்தில் பட்டப் பகலில் கொலை..கொள்ளை என்றிருக்கிறது.நாடே கெட்டுப் போச்சு..

நான் நினைத்தது சரி....'அசோக் நகரில் நேற்றும் பகல் கொள்ளை' என்றது தலைப்புச் செய்தி.அதைப் பார்த்ததும்..உடன் மனைவையைக் கூப்பிட்டேன்..'பார்த்தியா..நேற்றுக் கூட நம்ம ஏரியாவிலே திருட்டுப் போயிருக்கு..' என்றவாறு ..அவள் கழுத்தில் அணிந்திருந்த கிட்டத்தட்ட பத்து பவுன் சங்கிலியைப் பார்த்தேன்.

'மேல படியுங்க' என்றாள்.

'அசோக் நகர்..18 ஆம் தெருவில் உள்ள சுபிக்க்ஷா அடுக்குமாடி குடியிருப்பில்..இரண்டாம் தளத்தில் உள்ளது 8 ஆம் எண் உள்ள..ஃப்ளாட்.அங்கு வசிக்கும் கந்தசாமி என்பவரும்..அவரது மனைவி லட்சுமியும் வேலைக்குச் செல்லும் தம்பதிகள்.அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம்.நேற்றும்..அப்படிச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர்கள்..வீடு திறந்திருப்பதைப் பார்த்து..உள்ளே சென்று பார்த்த போது..பீரோவை உடைத்து 35 சவரன் நகைகள்..ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்'

படித்து முடித்து..'பார்த்தியா நாம ஜாக்கிரதையா இருக்கணும்' என்றேன்.

திடீரென ..'என்னங்க..நம்ம ஃப்ளாட்டும் 18ஆவது தெருதானே..' என்றாள் சகதர்மணி .

'சுபிக்க்ஷா' நம்ம ஃப்ளாட் தானே.'

'நம்ம வீட்டு நம்பர் 7..அப்போ 8..அடடே..நம்ம பக்கத்து வீடுங்க..' என்றாள் படபடப்பாக