Showing posts with label தங்கம் -தகவல்கள். Show all posts
Showing posts with label தங்கம் -தகவல்கள். Show all posts

Saturday, October 6, 2012

பாக்டீரியா உருவாக்கும் சுத்தத் தங்கம்!




 


தங்கம் என்ற மஞ்சள் உலோகம் இன்றைக்கு அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. மண்ணில் சுரங்கம் அமைத்து தோண்டி பின்னர் சுத்திகரிக்கப்பட்டுதான் தங்கம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மிகத் தூய்மையான தங்கமான 24 கேரட் தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக்குகிறது என்ற ஆச்சரியமான தகவலை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகலத்தின் மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்யூலர் ஜெனடிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை கண்டறிந்தனர். இந்த பாக்டீரியாவுக்கு ‘குப்ரியாவிடஸ் மெட்டாலிடியுரன்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.
தங்களின் கண்டுபிடிப்பை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற ‘பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரானிக்கா' என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். ‘த கிரேட் ஒர்க் ஆஃப் மெட்டல் லவ்வர்' என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய தங்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த மைக்ரோ பயாலஜி விஞ்ஞானிகள் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
ஆய்வு முடிவு பற்றி பல்கலைக்கழக மைக்ரோபயாலஜி பேராசிரியர் கசம் கஷேபி கூறியதாவது: பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களில் வளர்வதில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத்தன்மையுள்ள தங்க குளோரைடு என்ற வேதிப்பொருளில் வளர்கிறது. இந்த தங்க குளோரைடு நீர்ம தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தங்க குளோரைடில் வளர்த்தபோது ஒரே வாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது தங்கக்கட்டியாக மாற்றமடைந்தது. இயற்கையில் தங்கம் எப்படி உருவாகிறதோ, அதேபோன்ற ரசாயன வினை இங்கும் நடந்திருக்கிறது என்று கூறினார்.
24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தில் தங்கத்தை உருவாக்குவது சவாலானது, அதிக செலவு ஏற்படுத்தக்கூடியது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது செலவு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தொழில் ரீதியான உற்பத்திக்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படுத்தலாமா?. சுரங்கம் அமைத்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை பாக்டீரியாவை கொண்டு உருவாக்கினால் உலக அளவில் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா.. என பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஆராய்ச்சி

(தட்ஸ்தமிழ்)

Thursday, August 18, 2011

தங்கம் பற்றி தங்கமான செய்திகள்..




1) உலகளவில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2000 முதல் 2250 டன் வரை தங்கம் வெட்டி எடுக்கப்படுகின்றது.இதில் மூன்றில் ஒரு பகுதி தங்கத்தை இந்தியா மட்டுமே பயன்படுத்துகிறது.

2) கடந்த ஆண்டு 2060 டன் தங்கம் எடுக்கப்பட்டது.இதில் 746 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்தது.

3)உலகளவில் 50 சதவிகிதம் தங்கம் நகைகளுக்கும், 40 சதவிகிதம் முதலீடுகளுக்கும், 10 சதவிகிதம் தொழிற்சாலைகளில் கருவிகளை தயாரிக்கவும் பயன்படுகிறது.

4)இந்தியாவில் உள்ள பெண்களில் 75 சதவிகிதம் பேர் புதுப்புது நகைகளை நாடிச் செல்வதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாம்.

5)தங்கத்தின் விலை விண்ணை நோக்கி பறந்துக் கொண்டிருக்கிறது.தீபாவளிக்குள் ஒரு கிராம் தங்கம் 3000 த்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் தங்கம் விற்பனையாளர்கள்

6)உலகத் தங்க கவுன்சில் லண்டனில் உள்ளது.இங்குதான் தினமும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.அமெரிக்க டாலரின் மதிப்பில் ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கத்திற்கு விலை வைக்கப்படும்.காலை 10 மணிக்கு ஒருமுறையும், பிற்பகல் 3 மணிக்கு ஒருமுறையும் விலை அறிவிக்கப்படும்.

7) கடந்த ஆண்டு இந்தியா 745.70 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.சைனா 428 டன்,அமெரிக்கா 128.61 டன் என்ற அளவில் வாங்கின.

8) ஒரு பவுன் தங்கம் அதாவது 8 கிராம்  வாங்கச் சென்றால், 9 கிராம் அளவிற்கு பணம் கொடுக்க வேண்டும்.ஏனெனில் 1  கிராம் சேதாரமாக எடுத்துக் கொள்ளப் படும்.தவிர்த்து செய்கூலியும் கொடுக்க வேண்டும்.

9)உலகில் அதிகமாக தென் ஆப்ரிக்காவில்தான் தங்கம் கிடைக்கிறது வைரமும் இங்குதான் அதிகம்.இந்தியாவில் 100 இடங்களில் தங்கப்படிவு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவை ஆழமான பகுதியில் இருப்பதால், கிடைக்கும் தங்கத்தை விட வெட்டியெடுக்கும் செலவு அதிகம்.

10)ஒவ்வொரு சராசரி இந்தியரின் குடும்பச் சொத்தில் 20 சதவிகிதம் தங்கம் இர்ப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் -தேவி வார இதழ்