Showing posts with label நகைச்சுவை - புனைவு. Show all posts
Showing posts with label நகைச்சுவை - புனைவு. Show all posts

Monday, October 8, 2012

பேசும் போது ஜாக்கிரதை ..எச்சரிக்கை பதிவு


தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..

தவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...

உதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...

வழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றிவிட்டது.

அடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி?' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக்கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.

அடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை 50 காசு இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் 50 காசுகளை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.

இப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.

முடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.

இப்போது என்னதான் சொல்ல வருகிறாய்? என்கிறீர்களா?

வேண்டாம்..நான் ஏதாவது சொல்லப்போக..நீங்கள் ஏதாவது புரிந்துக் கொள்ளப்போக,,,,,ம்ஹூம்..வேண்டாம்.நான் சொல்ல வருவது..என்னுடனே இருந்துவிட்டு போகட்டும்.


Saturday, February 19, 2011

கருணாமூர்த்தியும்..மாருதியும்





வாசலில் வந்து நின்ற மாருதியைப் பார்த்து, 'என்னய்யா, என்ன விஷயம்' என்றார் கருணாமூர்த்தி.

'ஒன்றுமில்லை' என்றவாறே, பற்களை எல்லாம் இழந்து..ஏற்கனவே கட்டிக் கொண்டிருந்த முப்பத்தி இரண்டு பற்களில், ஒன்று உடைந்துவிட,பதின்மூன்றை இழந்து மீதமிருந்த பதினெட்டுப் பற்களைக் காட்டி இளித்தான் மாருதி.

வழக்கமாய் எல்லோரும் சொல்வது போல கருணாமூர்த்தியும், "ஏய்யா, முப்பத்தி இரண்டு பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கறே!' என்றார் கருணாமூர்த்தி.

'அதுதாங்க வேணும்' என்றான் மாருதி.

'போனதடவை வந்த போதும் இதைத்தான் கேட்ட, ஆனா பதின்மூன்றை இழந்துட்டியே'

'இல்லீங்க..இந்த முறை அப்படி ஆகாது..பல் டாக்டரை எல்லாம் பார்த்து Baseஐ ஸ்ட்ராங்க பண்ணி வைச்சிருக்கேன்'

'சரி..சரி..இந்த முறையும் 31 தரேன்..அதைவைச்சு உன் பெர்ஃபார்மென்ஸைப் பார்த்து இரண்டு வருஷம் கழிச்சு மீதி ஒன்னைத் தரேன்'

'நீங்க சொன்னா சரி' என்ற படியே..இவ்வளவு நாட்களாகக் காட்டிக் கொண்டிருந்த வீராப்பையும்..அவிழ்த்து விட்டிருந்த வாலையும் சுற்றிக் கொண்டு வந்தான் மாருதி.


Sunday, January 2, 2011

அஞ்சாநெஞ்சனுடன் உண்மைத்தமிழன் சந்திப்பு

உண்மைத்தமிழன் (த் இருப்பதை கவனிக்கவும்) மதுரை செல்லத் தீர்மானித்தார்.

அங்குச் சென்று அஞ்சா நெஞ்சனைச் சந்தித்து தனக்கு பதிவர்களாலும், வேண்டாத சிலராலும் இழைக்கப் படும் அநீதிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.இனி அவர்கள் சந்திப்பு

உ.த- வணக்கம்

அ.நெ-வணக்கம்..நீங்க

உ.த- என்னை உண்மைத் தமிழன்னு சொல்லுவாங்க..

அ.நெ- எங்களுக்குத் தெரியாமல் உண்மை பேசியா..(பக்கத்தில் ஒருவர் அவர் காதில் முணுமுணுக்கிறார்).ஓகோ..நீங்க தான் இணையத்தில 'தாத்தா..தாத்தா..'ன்னு

எழுதறவரா

உ.த- அது வேற..இப்போ சந்திக்க வந்தது வேற விஷயங்கள்

அ.நெ- என்ன விஷயம்..

உ.த- என் பதிவுக்கு சிலர் எதிர்த்து ஓட்டுப் போட்டுறாங்க....நமக்கு விழாத ஓட்டுகளை..நமக்கு எதிரான ஓட்டுகளை நமக்கு ஆதரவாக மாற்றுவது எப்படி? ன்னு யோசனை செய்தேன்..உடனே..இடைத் தேர்தல்கள் ஞாபகம் வந்தது..உங்க ஞாபகமும் வந்தது..

அ,நெ_ ஏன்..சிவகங்கை ஞாபகம் வரலியா

உ.த- மதுரை பக்கம்..சிவகங்கைன்னா தில்லிப் போகணுமே

அ.நெ- சரி..சரி..இப்போ உங்க எதிர்ப்பு ஓட்டை உங்களுக்கு சாதகமாக்க..(அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, காதில் ஏதோ சொல்கிறார்)

உ.த- அப்படியா..நன்றிங்க..அப்பறம் நம்மளுக்கு ஆதரவு ஓட்டை அதிகரிக்கணும்னா

அ.நெ-அதுக்கும் வழியிருக்கு (காதில் சொல்கிறார்)

உ.த- ரொம்ப நன்றிங்க..நான் வரேன்..

அ.நெ- நான் சொன்ன இந்த ரகசியங்களுக்கு குருதட்சணை கிடையாதா?

உ.த- என்னவேணும்னாலும் சொல்லுங்க..என் அப்பன் முருகன் மூலமா ஏற்பாடு பண்ணிடறேன்

அ,நெ-தேர்தல் சமயத்திலே சொல்லியனுப்பறேன்..பத்து தொகுதிகளுக்கு அழைச்சிட்டுப் போவேன்.அங்கெல்லாம் நம்ம ஆளுக்கு ஓட்டுப் போட்டுடணும்.

உ.த- இல்லேன்னா.. அல்லது இந்த ரகசியத்தை அம்மாகிட்ட சொல்லிட்டா

அ.நெ-கையிருக்க வேண்டிய இடத்திலே..கால் இருக்கும்..

(உ.த., பதற்றத்துடன் ஓட்டமெடுக்கிறார்)