Thursday, September 16, 2010

பொருளாதார வளர்ச்சி மட்டுமா? ஊழலும்தான் பெருகுகிறது!




காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாதான் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பிடம் பிடித்திருக்கிறது என்ற செய்திகள் நம் காதில் தேனாகப் பாயும் அதே வேளையில் சுதந்திர இந்தியாவின் ஊழலும் விண்ணை முட்டிக்கொண்டிருக்கிறது என்ற எட்டிக்காயையும் நாம் சீரணித்துதான் ஆகவேண்டுமா?

வாஷிங்டனில் உள்ள 'உலக நிதியியல் நேர்மை' (குளோபல் ஃபினான்சியல் இன்டெக்ரிட்டி) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் 2000ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கறுப்புப் பணம் 125 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி ரூபோய்) என்று மதிப்பிட்டுள்ளது.

இந்தப் பணம் இந்தியாவில் சம்பாதிக்கப்பட்டு அயல்நாட்டுக்க்கு சட்டவிரோதமாக, கறுப்புப் பணமாகச் சென்றுள்ளது. என்று கார்லி கர்சியோ என்ற பொருளாதார நிபுணர் தனது வலைப்பதிவில் கூறியுள்ளார். இவர் உலக நிதியியல் நேர்மை அமைப்பில் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு புறம் புறப்பொருளாதார வளர்ச்சி இருந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் மறுபுறம் இணைப்பொருளாதாரமாக இந்த கள்ளபொருளாதாரமும் நிழல் பொருளாதரமும் இதனை விட துரித கதி வளர்ச்சியடைந்துள்ளது.

பணம் பெரிய அளவில் வந்தாலும், ஏழைகள் ஏழ்மையிலேயே தொடர்ந்து நீடிக்கின்றனர். ஊழல் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணமும் கார்ப்பரேட் நிறுவனக் கறுப்புப் பணங்களும் மக்களின் ஏழ்மையைப் போக்க உதவ வேண்டி மைய நீரோட்ட பொருளாதாரத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பணமே. ஆனால் இது அரசியல் மற்றும் தனியார்துறை மேட்டுக்குடி மக்களின் சூறையாடலுக்குட்பட்டுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது.

பொருளாதாரம் வளர்கிறது, ஆனால் வறுமைச்சாவு அதிகரிக்கிறது. பொருளாதாரம் வளர்கிறது ஆனால் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவால் சாவு அதிகரிக்கிறது. ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி ஆகியவை இன்னும் முழுமையடையவில்லை. வடமாநிலங்களின் பல கிராமங்களுக்கு இன்னமும் மின்சாரம் கிடைக்கவில்லை. போக்குவரத்து வசதிகள் கிடையாது. சாலை, மருத்துவமனை வசதிகள் கிடையாது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஆனால் பெருநகரங்களில் கட்டப்பட்டும் பாலங்களும் பளபள வாழ்க்கை முறையும் இந்தியர்களை நாம் ஏதோ பயங்கரமாக வளர்ந்து விட்டோம் என்ற மாயையைகு உட்படுத்தி வருகின்றன.

காரணம் ஊழல். சுவிஸ். வங்கியில் வேறு எந்த நாட்டினரின் கறுப்புப் பணத்தை விட இந்தியர்களின் கறுப்புப் பணமே அதிகமாக உள்ளது என்று செய்திகளெல்லாம் கூறிவருகின்றன. தலை கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப்பணம் முடங்கியுள்ளது.

இந்தக் கறுப்புப் பணம் விவகாரத்தை அவ்வப்போது வெளியே கொண்டுவரப்போவதாக அரசியல் கட்சிகள் சூளுரைக்கும் ஆனால் எதுவும் நடக்காது. பிரதமரும் இது குறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.

சில விஷயங்கள் இந்த நாட்டில் ஒரு போதும் நடைபெறாது என்பதில் நாம் தெளிவாக இருக்கலாம். ஏழமைக்குக் காரணம் எதுவென்று யோசிக்கவேண்டிய அவசியமில்லை. நிச்சயம் கறுப்புப் பணம் எனும் அரக்கன் இதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஒரு சில நாடுகள் கூட்டாக இணைந்து சுவிஸ். வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற முடிவு செய்து முயற்சி செய்தாலும் அந்த விவரங்கள் எந்த அளவுக்கு பொதுமக்களிடத்தில் வெளியிடப்படும் என்பதெல்லாம் உறுதியாகத்தெரியாத விஷயங்கள்.

(நன்றி வெப்துனியா )

6 comments:

Vidhya Chandrasekaran said...

சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்கள வெளியிட்டா நிறைய பேர் ஹார்ட் அட்டாக்ல போய்டுவாங்கன்னு வெளியிடமாட்டாங்க. ஏன்னா அரசாங்கம் மக்கள் நலன்ல பயங்கர அக்கறை காமிக்கிது பாருங்க:)

vasan said...

வ‌ள‌ர்ச்சி ஆம் மிக‌ப்பெரிய‌ வ‌ள‌ர்ச்சி.
இந்திராவின் ந‌க‌ர்வாலா 60 லட்ச‌ம்
ராஜிவ் போப‌ர்ஸ் ஊழ‌ல் 69 கோடி
ஸ்பெக்ட்ர‌ம் 60000/100000 கோடி.
காம‌ன்வெல்த் விளையாட்டு துவ‌ங்கும் முன்பே
ஊழ‌ல் தொட‌ங்கி விட்ட‌து.
கிரிக்கெட், ஐபிஎல் ஒரே விளை‌யாட்டு ப‌ண‌ம்தான்.
16 உச்ச‌நீதிப‌திக‌ளில் நிச்ச‌ய‌மாய் ஆறு போர்தான் யோக்கிய‌மாம்,
முன்னாள் ம‌த்திய‌ ச‌ட்ட‌ அமைச்ச‌ர் கூறுகிறார் (ப‌த‌வில் இருக்கும் போது என்ன‌ செய்து கொண்டிருந்தார்?).எம்.பி க‌ளுக்கு நான்கு ம‌ட‌ங்கு ச‌ம்ப‌ள‌ உய‌ர்வு.
வ‌றுமையிலும், நாம் ஆப்பிரிக்க ஏழைக‌ளை முந்தி இருப்ப‌தாய் யுஎன் சொல்லுகிற‌து. ஆஹா....என்னே வ‌ள‌ர்ச்சி!! வாங்க‌ எல்லாரும் டாஷ்மாக்கில் இன்னோரு ஆஃப் அடிக்க‌லாம்.
அரை லூசுங்க‌தானே இந்திய‌ர்க‌ள்.

சிநேகிதன் அக்பர் said...

இதெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்கள வெளியிட்டா நிறைய பேர் ஹார்ட் அட்டாக்ல போய்டுவாங்கன்னு வெளியிடமாட்டாங்க. ஏன்னா அரசாங்கம் மக்கள் நலன்ல பயங்கர அக்கறை காமிக்கிது பாருங்க:)//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி vasan