தலைவன் கூற்று
(தலைவன் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் வந்ததைக் குறிப்பால் அறிவித்த காலத்தில் தலைவி வாராதொழிய, வருத்தமுற்ற தலைவன், “தலைவி நன்மையை உடையாள் என்பதை அறிந்தது போலப் பெறுதற் கரியாள் என்பதையும் இதுகாறும் அறிந்திலையே!” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் பரணர்
இனி பாடல்-
இல்லோ னின்பங் காமுற் றாஅங்
கரிதுவேட் டனையா னெஞ்சே காதலி
நல்ல ளாகுத லறிந்தாங்
கரிய ளாகுத லறியா தோயே.
- பரணர்
உரை- பொருளில்லாத வறியவன் இன்பத்தை விரும்பினாற்போல, பெறுதற்கரியதை நீ விரும்பினாய். தலைவி நமக்கு நன்மை தருபவளாதலை அறிந்தது போல நாம் நினைக்கும் பொழுதெல்லாம் நமக்கு எளியளாய் வருவதின்றிப் பெறற்கரியளாதலையும் அறியவில்லை.
(கருத்து)தலைவி பெறுதற்கரியவள்.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் தலைவியைப் பிரிந்து, ‘ இனி இவளைக் காணுமாறு எங்ஙனம்!” என்று மயங்கி, “இதுகாறும் நமக்கு நல்லளாகிய இவள் இனி அரியளன்றே!” என்று நெஞ்சை நோக்கிக் கூறியது.