Monday, September 22, 2014

குறுந்தொகை-112




தலைவி கூற்று
(தலைவன் மணந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாயின், “நான் ஊரார் பழிமொழிக்கு அஞ்சி மறைந்து ஒழுகுகின்றேன்;அதனால் என் காமம் மெலிகின்றது; அதனை முற்றும் விடும் நிலையைப் பெறும் ஆற்றலில்லை என்னிடம்
” என்று கூறித் தலைவி வருந்தியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஆலத்தூர்கிழார்

இனி பாடல்-
 
கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
 
எள்ளற விடினே யுள்ளது நாணே
 
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
 
நாருடை யொசிய லற்றே

கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.

                -ஆலத்தூர் கிழார்

உரை-

பிறர் கூறும் பழிமொழிக்கு அஞ்சினால், (என்) காமம் மெலிவடையும்.பிறர் இழித்தலுக்காக அக்காமத்தை விட்டு விட்டால், என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே! ஆகும்.தலைவன் அனுபவித்த எனது பெண்மை, பெரிய யானை உண்ணுவதற்காக வளைத்து, நிலத்தில் படாத பட்டையை உடைய ஒடிந்த கிளையை போன்றாற்போலது ஆகும்.



     (கருத்து) ஊரார் பழிக்கு அஞ்சிக் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் இருக்கின்றேன்.

 


     களிறு வளைத்துத் தழைகளை உண்டதனால் ஒடிந்த மரக்கிளை ஆனது தன்னுடைய இயல்பான நிலையை ஒழிந்து மீட்டும் அந்நிலையைப் பெறாத வண்ணம் இருப்பினும், முற்ற ஒடிந்து கீழே விழுந்து வாடி உலராமல் நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் நிலையில் இருத் தலைப்போல, தலைவனால் உண்ணப்பட்ட நலன் தன் பண்டை நிலைமையைப் பெறாத நிலையிலிருப்பினும், முற்றும் அழிந்தொழியாமையால் தலைவர் வரைவார் என்னும் கருத்தினால் பின் சிறக்கத்தக்க நிலையில் அமைந்துள்ளது..

No comments: