காதற் விலைமகள் கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட விலைமகள் தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழியை நோக்கிக் கூறுவாளாய், “தலைவி குறை கூறுதற்குரிய குற்றம் உடையேமெனின் எம்மைக் கடல் வருத்துக” என்று சொல்லியது.)
மருதம் திணை-பாடலாசிரியர் மாங்குடி மருதன்
இனி பாடல்-
கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூன் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வ மணங்குக தோழி
மனையோண் மடமையிற் புலக்கும்
அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே.
-மாங்குடி மருதன்.
தோழி. தலைவி தன் அறியாமையாற் புலப்பதற்குக் காரணமாகிய அத் தன்மையேமாக, தலைவன் மகிழ. நாம் ஆயினோமாயின், திரண்ட கொம்பையுடைய வாளை மீனினது, நிறைந்த கருப்பத்தையுடைய மடப்ப மிக்க பெண்ணானது, கொத்தையுடைய தேமாவினது, உதிர்ந்த இனிய பழத்தை, கவ்வுதற்கிடமாகிய, மிகப் பழைய வேளிருக்குரிய, குன்றூருக்குக் கிழக்கின் கண்ணுள்ளதாகிய, தண்ணிய பெரிய கடல், எம்மை வருத்துவதாக.
(கருத்து) தலைவி அறியாமையால் எம்மைக் குறைகூறுகின்றாள்.