Sunday, November 29, 2015

பயனில சொல்பவன்



அவன் வேலைசெய்யும் நிறுவனம் பெரியது.ஆனாலும் நான் இல்லாவிடில் அந்த நிறுவனமே இயங்காது..என்பான்.
ஏதேனும் விவரம் அவனைக் கேட்டால்..அதற்கு பதில் சொல்வதற்கு..தேவையில்லாமல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு..நாம் கேட்ட விவரத்தை சரியாக சொல்ல மாட்டான்.
தான் அதி புத்திசாலி..மற்றவர்கள் முட்டாள்கள் என்பது அவன் எண்ணம்.
ஒருமுறை அவன் வேலைசெய்யும் நிறுவனத்தின் அதிபர்..ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து..நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கான காசோலையை வாங்கிவரச் சொல்லி அவனை அனுப்பினார்.அவனும்..பயனில்லாமல்..தேவையில்லா இடங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு..அந்த வாடிக்கையாளர் இருப்பிடம் சேர்ந்த போது..அவர் நீண்ட நேரம் இவனுக்காகக் காத்திருந்துவிட்டு வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
நிறுவன அதிபர் இவனை நீ எப்போது அங்குப் போனாய்? என்றார்.
இவனும் நேரத்தைச் சொன்னான்.
நான் உன்னைக் காலையிலேயே போகச் சொன்னேனே..என்றவரிடம்..இவன் ஊர் சுத்திய உண்மையைக் கூற முடியுமா? அதனால்..
"அது சார்..காலைலேயே கிளம்பினேனா..அண்ணா சாலையில் ஒரு அரசியல் கட்சி ஊர்வலம்..டிராஃபிக்ல மாட்டிக் கிட்டேன்.அங்கிருந்துத் தப்பி ராயப்பேட்டை போனேனா அங்கு ஒரு ஆக்ஸிடெண்ட்..டிராஃபிக் திருப்பி விட்டாங்க..மந்தவெளிக்கு ராஜா அண்ணாமலைபுரம் வழியா வந்து சேர்ந்தேன்.." இப்படி சொல்லிக் கோண்டே போனான்..
எது எப்படியோ..நிறுவனத்திற்கு வர வேண்டிய பணம் வரவில்லை.அந்தக் கோபத்தில் இருந்த அதிகாரி..இவனது பயனற்ற சொற்களை கெட்க விரும்பவில்லை.அவனை ஒரு உபயோகமற்றவன் என்று முடிவெடுத்தார்.
அவன் அவரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான்.

சொன்னக் காரியத்தை முடிக்காமல் பயனற்றவற்றைகளைப் பற்றி ஒருவன் பேசிக் கொண்டிருப்பானாயின் அது அவனையே பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

தவிர்த்து..பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவனை எல்லோரும் இகழ்வர்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

Saturday, November 28, 2015

வள்ளுவரும்...இன்பத்துப்பாலும்



உனதழகு

வாட்டுது
என்னை

வண்ண
மயிலாள்

உனைக்
காணின்

மயங்கா
மனமும்

மயங்கிடும்
எனில்

நான்
எம்மாட்டு

இது
சாதாரணன் எழுதுவது...

இதைத்தான்
வள்ளுவன் இன்பத்துப் பாலில் முதல் அதிகாரமான தகை அணங்குறுத்தல் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்லியுள்ளார்.


அணங்குகொல் ஆய்மயில்  கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

(எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ!! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்)

Friday, November 27, 2015

கொஞ்சி விளையாடும் தமிழ்



நண்பர் ஒருவர் நம்மை 5 மணிக்கு சந்திப்பதாகச் சொல்கிறார்..ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச..ஆனால் 5-15 ஆகியும் அவர் வரவில்லை..பின் அவர் வருகிறார்.உடன் நாம் என்ன சொல்வோம்,,"ஏன் 15 மணித்துளி தாமதம்..ஒவ்வொரு மணித்துளியும் ஒரு யுகமாய் கழிந்தது' என்கிறோம்..

எதையோ எதிர்ப்பார்த்து காத்திருக்கையில்.. நேரம் போகாது..கடிகாரம் மெல்ல ஓடுவது போல இருக்கும்..

காதலன் காதலியை 6 மணிக்கு கடற்கரையில் சந்திப்பதாகக் கூறுகிறான்..காதலி வந்து வழக்கமான இடத்தில் அமர்கிறாள்.காதலன் வரக் காணோம். போவோர்,வருவோர் எல்லாம் அவளை ஒரு மாதிரி பார்த்துப் போகிறார்கள்...அவளுக்கு சங்கடமாய் இருக்கிறது..காதலன் 6-10க்கு வருகிறான்.."சாரி..டியர்..டிராஃபிக் அதிகம்..அதுதான்..'என்கிறான்..

காதலிக்கு கோபம் வருகிறது,,'உங்களுக்கென்ன ஏதோ ஒரு சாக்கு..ஆனால் இங்கு காத்திருக்கும் எனக்கல்லவா..தர்மசங்கடம்..போவோர் வருவோர் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை..10 நிமிடங்கள் கடப்பது பத்து மணிநேரம் கடந்தாற் போல் இருக்கிறது' என அவனிடம் ஊடல் கொள்கிறாள்

இது இன்று..நேற்றல்ல..அன்றிலிருந்து எப்போதும் நடப்பதுதான்..என்பதை குறுந்தொகையில் இந்த பாடல் மூலம் புலப்படுகிறது.

தலைவன் மறுநாள் காலை வருவதாக முதல்நாள் செய்தி வருகிறது.பகல் நேரத்தைக் கூட அவள் கடந்து விட்டாள்..ஆனல் இரவைக் கடப்பது என்பது கடலைக் கடப்பதைவிட பெரிதாக இருக்கும் போலிருக்கிறதாம்..என் உயிர் போவதற்குள்..'கடந்து விட முடியுமா?' என்கிறாள்.



எல்லை கழிய முல்லை மலர

கதிர்சினந் தணிந்த கையறு மாலை

உயிர்வரம்பு ஆக நீந்தின மாயின்

எவன் கொல்? வாழி தோழி!

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!!



-கங்குல வெள்ளத்தார் - முல்லைத் திணை-387

பகலின் எல்லை முடிந்து..முல்லைப் பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்.சூரியனின் சினம் தணிந்து வரும் இரவு நேரம்.இதை என் உயிர் போவதற்கு முன்னால் நீந்தி கடந்து விட முடியுமா? தோழி என்கிறாள்.இரவு வெள்ளம் கடலை விட பெரிதாக இருக்கிறதாம்..

அதாவது தலைவன் வரும் முன்னர் இரவை கடப்பது ..இரவு நீண்டுக் கொண்டேப் போகிறதாம்..அதற்குள் அவள் உயிர் போய்விடுமா? என்கிறாள்.

காத்திருப்பது சுகம் என்றாலும்..காத்திருக்கும் நேரம் நீண்டுக் கொண்டிருந்தால்..

அந்த துயரத்தின் வெளிபாட்டையே இந்த குறுந்தொகை பாடல் சொல்கிறது.

கங்குல் வெள்ளம்.என்பது .இரவு வெள்ளம்..

Thursday, November 26, 2015

வள்ளூவரும்...கண்ணழகும்-1


கயல்விழி,மான்விழி,குவளைக் கண் என கண்களைப் பாடாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் ஏற்பட கண் பிரதான உறுப்பாய் அமைந்து விடுகிறது.காதலுக்கு கண்ணில்லை,கண்டதும் காதல் என்றெல்லாம் சொல்லப் படுகிறது.

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..கண்கள் இரண்டும் உன்னைத் தேடுதே..கண்ணுக்குள் சிக்கிக் கொண்ட..கண்களும் கவி பாடுதே..கண்கள் இரண்டால்.. என்றெல்லாம் கவிஞர்கள் காதலுக்கும்..கண்ணிற்கும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். அவ்வளவு ஏன்..காதலியின் இதயத்தில் காதலன் நுழையும் வாசல் அவளின் கண்களே..என்பதை கவியரசு..'இதயத்தின் வாசல் விழியல்லவா?' என்கிறார் ஒரு பாடலில்..

இவர்களுக்கெல்லாம் முன்னோடி யார்..என்றால்..வழக்கம் போல வள்ளுவனே முன் நிற்கிறான்..கண்ணழகு பற்றி அவர் இன்பத்து பாலில் பல குறள்களில் சொல்கிறார்.முதலில் தலைவனைக் கவர்வதும்..கடைசிவரை நிற்பதும் தலைவியின் கண்ணழகே என்கிறார்.

காதலில் அடையும் ஐம்புலவின்பத்திலும் ..கண்டு, கேட்டு எனக் கண்,காது ஆகியவற்றலாகும் இன்பத்தை முதலில் குறிக்கிறார்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

தலைவி வீசும் விழிவேலுக்கு எதிராக தலைவன் அவளை நோக்க..அக்கணமே அவள் பார்வை..அவள் மட்டுமே தாக்குவது போதாது என்று தானையுடன் தாக்குவது போல இருந்ததாம்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

எமனைப் பற்றி தலைவன் ஏதும் அறிந்ததில்லை..ஆனால் எமன் எனப்படுபவன் பெண்ணுருவில் வந்து போர்த்தொடுக்கக் கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை தலைவியின் பார்வையால் அறிகிறானாம்.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்

பெண்மையின் வார்ப்படமாக திகழும் தலைவியின் கண்பார்வை மட்டும் மாறுபட்டு உயிரைப் பறிப்பது போலத் தோன்றுகிறதாம்.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்

தலைவியின் புருவம் மட்டும் கோணாமல் நேராக இருக்குமே யாயின்..அவள் கண்கள் அவனுக்கு நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யாதாம்.

இன்னுமொரு இடத்தில்..

பிணயேர் மடநோக்கும்.. என்கிறார்..பெண் மானைப் போன்று இளமைத் துள்ளும் பார்வையாம்...

Wednesday, November 25, 2015

நாராயணனால் பலமிழந்த ஹிரண்யகசபு

தன் மகன் பிரகலாதனை..'ஹிரண்யகசபுவே நம..' என்று சொல்லச் சொல்லி..அது முடியாமல்..பிரகலாதனும் 'நாராயணாய நம' என மாறி..மாறி சொன்னதால் மனம் வெறுத்து..கோபத்துடன்..'பிரகலாதா நீ சொல்லும்..அந்த நாராயணன் எங்கிருக்கிறார்' என்கிறான் ஹிரண்யகசபு..

'தந்தையே..அந்த நாராயணன்..தூணிலும் இருப்பார்..துரும்பிலும் இருப்பார்"

'அப்படியெனில் நீ சொல்லும் அந்த நாராயணன்..இந்த.. தூணில் உள்ளானா?'

ஒரு தூணைக்காட்டி ஹிரண்யன் கேட்க..'ம்''இருக்கிறார் ' என்றான் பிரகலாதன்.

ஹிரண்யன் தன் கதாயுதத்தால்..தூணை பிளக்க ..அது பிளந்து..நரசிம்மன் வெளிப்பட்டு.. ஹிரண்யனை வதம் செய்கிறார்..

ஆனால் இன்று.

ஹிரண்யன் கேட்கிறார்..'பிரகலாதா..நீ சொல்லும் நாராயணன்..இந்த தூணில் இருக்கின்றானா?'

'தந்தையே! அந்த நாராயணன்..எல்லாத் தூணிலும் இருப்பார்"

ஹிரண்யன் தன் கதாயுதத்தால்..தூணை..தாக்க..தூண் பிளக்க வில்லை..

ஹிரண்யனுக்கு ஆச்சரியம்..தான் பலம் இழந்தோமா என..

பிரகலாதன் சிரித்துக் கொண்டே சொல்கிறான்..'தந்தையே..உங்களால் தூணை உடைக்க இயலாது ஏனெனில் அதனுள் இருப்பது 'நாராயணா முறுக்கு கம்பிகள்' என்கிறான்..

@@@@@ ##### @@@@@@ ####

சந்தானத்தைப் பார்த்து..'சபாஷ்...விளம்பரம் அருமையாக எடுத்துள்ளீர்கள்..' என்றார் நாராயணா முறுக்குக் கம்பி தயாரிப்பாளர்.

தான் எடுத்த முதல் விளம்பர படம் அருமையாய் வந்ததால் அந்த வருடம் தான் விஷுவல் மீடியம் படித்து வெளிவந்த சந்தானம் மனம் மகிழ்ந்தான்.

Tuesday, November 24, 2015

கொஞ்சி விளையாடும் தமிழ்


பழி ஓரிடம்..பாவம் ஓரிடம் என்பார்கள்...
ஒருவன் ஏதேனும் தவறிழைத்து விட தண்டனையை வேறொரு அப்பாவி அனுபவிப்பான்..
அப்படிதான் கண்கள் செய்த பாவத்தை தோள்கள் அனுபவிக்கின்றன..இந்த முத்தொள்ளாயிரம் பாடலில்..
பாண்டிய மன்னன் நகர் வலம் வருகிறான்.அவனை ஒரு கன்னிப் பெண் காண்கிறாள்.உடன் அவன் மீது காதல் கொள்கிறாள்.அதன் காரணமாக பசலை படர்ந்தது அவள் உடல் முழுதும்.தன் உடலில் பசலைப் படரக் காரணம் தன் கண்களால் அவனைக் கண்டதால்தானே..ஆனால் ஒரு பாவமும் அறியா அவள் தோள்கள் அல்லவா தண்டனை பெற்றன.உண்மையில் தண்டனை பெற வேண்டியது கண்களல்லவா? இது எப்படியிருக்கிறது எனில் உழுத்தஞ் செடி வளர்ந்துள்ள வயலில் ஊரில் உள்ள கன்றுகள் நுழைந்து மேய்ந்து அழிக்க...ஆனால் அங்கிருந்த ஒன்றுமறியா கழுதையைப் பிடித்து காதை அறுத்து தண்டித்தது போல இருக்கிறதாம்.
உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவி அரிந்தாற்றால் - வழுதியைக்
கண்டநம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு
(முத்தொள்ளாயிரம் - பாண்டிய நாடு -60)
(இப்பாடலில் கண்களை..ஊர்க்கன்று ஆகவும்...பசலை படர்ந்த தோள்களை கழுதைக்கும் ஒப்பிட்டுள்ளார் கவிஞர்.)
முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளைக் காதலேயாகும்.

Monday, November 23, 2015

'ஆகாறு அளவிட்ட தா யினும் (ஒரு பக்கக் கட்டுரை)



நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்...  ..

Sunday, November 22, 2015

வரும் தேர்தலில் திமுக முதல்வரா? அ தி மு க முதல்வரா?



பீஹார் தேர்தல் குறித்தும், அங்கு அமைந்தக் கூட்டணிக் குறித்தும், விழுந்த வாக்கு விழுக்காடு விவரங்களையும் படித்தவாறு இருந்தேன்...

எப்போது கண் அயர்ந்தேன்..தெரியவில்லை..

அப்போது....

கலைஞர், ஜெ..இருவரும் வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்..

கலைஞர் _  ஆயிரம் வேறுபாடுகள் உண்டு நம்மிடையே..இதை உபயோகப் படுத்திக் கொண்டு அந்நியர் ஆட்சியைப் பிடிக்க விட்டுவிடக் கூடாது..

ஜெ- இந்த விஷயத்தில் நான் எண்ணியதையே...நீங்களும் கூறியுள்ளீர்கள்...என்ன செய்யலாம்?

கலைஞர்- நான் கூறினால்...அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா எனத் தெரியவில்லை..

ஜெ- நம்மிடையே விரோதத்தை உண்டாக்க பலர் முயலுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.நீங்கள் அரசியல் சாணக்கியர் என்பது மறுக்க முடியாத உண்மை.நீங்கள் எது சொன்னாலும்
     அதை பரீசலிக்கிறேன்

கலைஞர்- வரும் தேர்தலில், நாம் இருவரும் கூட்டணி வைத்துக் கொள்வோம்.ஒவ்வொருவரும் 117 தொகுதிகளில் போட்டியிடுவோம்.நம்மில், யார் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெறுகிறோமோ, அவர்கள்
          கட்சி முதல்வர் பொறுப்பேற்கட்டும்.மற்றவர் துணை முதல்வர். என்ன சொல்கிறீர்கள்

.ஜெ_ அருமையான யோசனை.இதனைக் கேள்விப்படும் மற்ற கட்சியினர் கும்பி கருகட்டும்..குடல் வேகட்டும்..

கலைஞர்- நன்றி ஜெ

கலைஞர்- நன்றி என்ற பெரிய வார்த்தையெல்லாம் ஏன்..உங்கள் அன்பு சகோதரி நான்.

கலைஞர் ..ஜெ -(இருவரின் மைன்ட் வாய்ஸ்) இடத்தேர்தல் ஃபார்முலாவை..நமக்கு ஒதுக்கப்பட்ட எல்லா தொகுதியிலும் நடத்திட நமக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா..என்ன்?)


தமிழக மக்கள்- அப்பாடா...இனி இவர்களை அவர்கள், அவர்களை இவர்கள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் ஆட்சியை நமக்காக நடத்தட்டும்

.(இருவருக்கும் நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டு..ஒருகட்சி..கோடாரியும் கையுமாக மரங்களைத் தேடிப் போக, மற்றொரு கட்சியினர்..தன் தலைவன் அடி தலைமேல் படாதிருக்க ஹெல்மெட் அணைந்து அலைய..அகில இந்தியக் கட்சிகள்..அண்டை மாநிலம் நோக்கி கூட்டணிக்கு விரைகிறார்கள்.)