Showing posts with label தமிழகம் -தேர்தல். Show all posts
Showing posts with label தமிழகம் -தேர்தல். Show all posts

Sunday, November 22, 2015

வரும் தேர்தலில் திமுக முதல்வரா? அ தி மு க முதல்வரா?



பீஹார் தேர்தல் குறித்தும், அங்கு அமைந்தக் கூட்டணிக் குறித்தும், விழுந்த வாக்கு விழுக்காடு விவரங்களையும் படித்தவாறு இருந்தேன்...

எப்போது கண் அயர்ந்தேன்..தெரியவில்லை..

அப்போது....

கலைஞர், ஜெ..இருவரும் வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்..

கலைஞர் _  ஆயிரம் வேறுபாடுகள் உண்டு நம்மிடையே..இதை உபயோகப் படுத்திக் கொண்டு அந்நியர் ஆட்சியைப் பிடிக்க விட்டுவிடக் கூடாது..

ஜெ- இந்த விஷயத்தில் நான் எண்ணியதையே...நீங்களும் கூறியுள்ளீர்கள்...என்ன செய்யலாம்?

கலைஞர்- நான் கூறினால்...அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா எனத் தெரியவில்லை..

ஜெ- நம்மிடையே விரோதத்தை உண்டாக்க பலர் முயலுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.நீங்கள் அரசியல் சாணக்கியர் என்பது மறுக்க முடியாத உண்மை.நீங்கள் எது சொன்னாலும்
     அதை பரீசலிக்கிறேன்

கலைஞர்- வரும் தேர்தலில், நாம் இருவரும் கூட்டணி வைத்துக் கொள்வோம்.ஒவ்வொருவரும் 117 தொகுதிகளில் போட்டியிடுவோம்.நம்மில், யார் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெறுகிறோமோ, அவர்கள்
          கட்சி முதல்வர் பொறுப்பேற்கட்டும்.மற்றவர் துணை முதல்வர். என்ன சொல்கிறீர்கள்

.ஜெ_ அருமையான யோசனை.இதனைக் கேள்விப்படும் மற்ற கட்சியினர் கும்பி கருகட்டும்..குடல் வேகட்டும்..

கலைஞர்- நன்றி ஜெ

கலைஞர்- நன்றி என்ற பெரிய வார்த்தையெல்லாம் ஏன்..உங்கள் அன்பு சகோதரி நான்.

கலைஞர் ..ஜெ -(இருவரின் மைன்ட் வாய்ஸ்) இடத்தேர்தல் ஃபார்முலாவை..நமக்கு ஒதுக்கப்பட்ட எல்லா தொகுதியிலும் நடத்திட நமக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா..என்ன்?)


தமிழக மக்கள்- அப்பாடா...இனி இவர்களை அவர்கள், அவர்களை இவர்கள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் ஆட்சியை நமக்காக நடத்தட்டும்

.(இருவருக்கும் நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டு..ஒருகட்சி..கோடாரியும் கையுமாக மரங்களைத் தேடிப் போக, மற்றொரு கட்சியினர்..தன் தலைவன் அடி தலைமேல் படாதிருக்க ஹெல்மெட் அணைந்து அலைய..அகில இந்தியக் கட்சிகள்..அண்டை மாநிலம் நோக்கி கூட்டணிக்கு விரைகிறார்கள்.)

Tuesday, April 19, 2011

கூடுதல் வாக்குப்பதிவு..யாருக்கு சாதகம்...





1971முதல் 2006 வரை நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் சராசரியாக 60 விழுக்காடு வாக்குகளே பதிவாகி..அதில் 32 அல்லது 33 விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சிகள் ஆட்சி அமைத்து வந்திருக்கின்றன.

இந்நிலையில் 2011க்கான தேர்தலில் பெருவாரியான மாவட்டங்களில் 80 விழுக்காடுகளுக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கான காரணம் என்ன..

ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன..என்று வாக்குப் பதிவு நாளன்று ஒரு நாள் விடுமுறைக் கிடைத்தது என மகிழ்ந்து வாக்களிக்காமல் இருந்த மக்கள் இம்முறை வாக்களித்துள்ளனரா?

அல்லது இலவசங்களால் மனம் மகிழ்ந்த வாக்காளர்கள் வாக்குப் பதிவு விழுக்காடை அதிகரித்துள்ளனரா?

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால்..மனம் மகிழ்ந்து..சுதந்திரமாக அதிக நேரம் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கலாம் என்று பலர் வாக்குச் சாவடி சென்றுள்ளனரா

இந்த முறை 18 வயதை அடந்த முதன் முறை வாக்காளர்கள் காரணமா?

எது எப்படியாயினும்..வாக்குப் பதிவு விழுக்காடு யாருக்கு சாதகமாக அமையும் என இரு அரசியல் கட்சிகளும் புரியாமல் விழித்து வருகின்றனர்.

நான் கடைசியாகச் சொன்ன புது வாக்காளர்கள் கணிசமாய் உயர்ந்துள்ளனர்..இவர்கள் வாக்கு...தொகுதியில் போட்டியிடும் சிறந்த வாக்காளர்களுக்கே போய்ச் சேர்ந்திருக்கும்..அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராய் இருந்தாலும் ஓகே தான்..ஆகவே இம்முறை சுயேச்சைகள் சற்று கூடுதலாய் வாக்குகள் பெற்றிருப்பர்.

'ராமன் ஆண்டால் என்ன.." வாக்குபதிவர்கள்..தங்கள் கடமையை இம்முறை கண்டிப்பாய் ஆற்றவேண்டிய நிலை இருப்பதை உணர்ந்து வாக்களித்திருப்பர்..இவர்கள் வாக்குகளை இரு திராவிடக் கட்சிகளுமே பெற்றிருக்கும்.

இலவசங்கள் ..அரசின் கடமை என்று மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டதால்..யார் வந்தாலும் இலவசங்கள் கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டதால், இம்முறை இலவச அறிவிப்புகள் குறிப்பிட்ட கட்சியின் வாக்குகளை அதிகரிக்கும் என்று தோன்றவில்லை.

கடைசியில் என்னதான் சொல்லவருகிறாய் என்கிறீர்களா..?

கூடுதல் வாக்குப்பதிவால் இரு கட்சிகளின் கூட்டணிகளுக்கும் கணிசமாய் வாக்குகள் அதிகரித்திருக்கக் கூடும்..ஆதலால்..இரு கட்சிகளுமே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்..ஆகவே ஆட்சி அமைப்பதில் இழுபறி தொடரும்..அப்படியே ஆட்சி அமைக்கும் கூட்டணிக்கும்..எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கும் 10 முதல் 20 வரையிலுமான அளவிலேயே மெஜாரிட்டி இருக்கும்..

இதுவரை தமிழகம் சந்தித்து இராத நிலைகள் ஏற்படக்கூடும்.

அடுத்து மக்கள் 2016 வரை அடுத்த சட்டசபத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை மாறி..அதற்கு முன்னரே சந்திக்கக் கூடும்.

இதற்கிடையே..ஆட்சி அமைக்கையில் கூட்டணி கட்சிகளும் கூட்டணி மாறலாம்.

Monday, April 11, 2011

நான் தி.மு.க., தான் ..ஆனாலும் நான் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை...



நான் தி.மு.க., அனுதாபி..

இது நாள் வரை தி.மு.க., விற்கே வாக்களித்து வந்துள்ளேன்.

இம்முறை..தி.மு.க., பல தவறுகள் இழைத்திருந்தாலும்... காமன் மேன் அதனால் பாதிக்கப் படவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னையில்...கலைஞரை..வரலாறு மன்னிக்காது..

ஆனாலும்...அவரைத்தவிர முதல்வர் பதவியில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள்.

பதவியில் தொடர்ந்து இருக்க காங்கிரஸ் கட்சியை விரோதித்துக் கொள்ள கலைஞர் தயாராய் இல்லை..ஏனெனில் அடுத்தக் கட்சி..வடையைக் கவ்வ வாயைத் திறந்து காத்துக் கொண்டிருந்தது.

காங்கிரஸ் மட்டுமே இலங்கைப் பிரச்னையில் தமிழர்களை காப்பாற்றி இருக்க வேண்டும்.காப்பாற்றி இருக்க முடியும்..

அவர்கள் செய்த துரோகத்தை மன்னிக்க முடியாது..

ஆகவே..காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ..காங்கிரஸை தோற்கடிப்போம்..

வள்ளுவனின்..'குணம் நாடி..குற்றம் நாடி' குறள் படி பார்த்தால்..குற்றத்தைவிட குணம் தி.மு.க., பக்கம் சற்று அதிகமாகவே சாய்வதால்..தி.மு.க.,வையே நான் ஆதரிக்கிறேன்.

ஆனாலும் நான் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை..

காரணம்..

நான் சார்ந்துள்ள வேளச்சேரி தொகுதியில் பா.ம.க., நிற்கிறது..

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் தன் கலரை மாற்றிக்கொண்டிருக்கும் அக்கட்சிக்கு வாக்களிக்க மனம் ஒப்பவில்லை.

ஆகவே இம்முறை என் வாக்கு வீணாகப்போகிறது.

Monday, March 28, 2011

FLASH NEWS - குள்ளநரிக் கூட்டம் (சினிமா விமரிசனமல்ல)





சட்டசபைத் தேர்தலில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி மனுதாக்கல் செய்திருந்தார்.அவர்மனு சரிவர நிரப்பப்படாததால் நிராகரிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தொகுதியில் மாற்று வேட்பளராக தங்கபாலு மனுதாக்கல் செய்திருந்தார்.

அவரது மனைவி மனு நிராகரிக்கப்பட்டதால் மயிலை வேட்பாளராக தங்கபாலு போட்டியிடுகிறார்.

ஜயந்தியின் மனு வேண்டுமென்றே தவறாக நிரப்பப்பட்டதா..தற்செயலாக நடந்ததா என்ற கேள்விக்குள் போக நான் விரும்பவில்லை.

தங்கபாலுவின் மனைவிக்கே எதிர்ப்பு இருந்த நிலையில்..தங்கபாலுவே வேட்பாளரென்றால்..காங்கிரஸ்காரர்கள் எப்படியெடுத்துக் கொள்வார்வார்கள் எனத் தெரியவில்லை.

இத்தொகுதியில் தங்கபாலுவின் தோல்வியை இன்றே எழுதிவைத்துக் கொள்ளலாம்

Saturday, March 19, 2011

வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்







வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.

1967ல் காங்கிரஸ் பதவியை பறிக்கொடுத்தது முதல் திராவிடக் கட்சிகள் தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றன.

காங்கிரஸில் மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் இன்று இல்லை.பழிவாங்கும் உணர்ச்சியைக் கொண்டவர்கள் பிடியில் இன்றைய காங்கிரஸ்..அன்று அந்நியனை விரட்டியடித்த காங்கிரஸ் இன்று.....???!!!!

காங்கிரஸ் சப்போர்ட் இல்லையெனில்..உங்கள் திராவிடக் கட்சிகள் வெல்ல முடியாது..என காங்கிரஸ்காரர் எனப்படுபவர் சொல்லலாம்..

அந்த வார்த்தை உண்மைதான்..ஆனால்..அதற்கும் காரணம்..திராவிடக் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மை.

காங்கிரசை பொறுத்தவரை தமிழனை ஒரு இந்தியனாக அவர்கள் எண்ணுவதில்லை..

பங்களாதேஷ் மக்களை பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுவித்து..தனி நாடாக்கிய காங்கிரஸ்..

கிட்டத்தட்ட அதே சூழலில்..இலங்கைத் தமிழர்களை சிங்களர்களிடமிருந்து விடுவிக்க முன்வரவில்லையே..ஏன்..

காரணம்..சிங்களத்தில் அவதிப்படுவது தமிழன்..

இஸ்லாமிய சமுதாய நண்பர்களுக்காக மற்றொரு இஸ்லாம் நாட்டுடன் போட்டியிட்ட அந்த காங்கிரஸின் மனிதாபிமானம் இன்று எங்கே?

இந்தியத் தலைவன் ஒருவன் கொல்லப்பட்டான்..உண்மைதான்..

அதற்காக பழிவாங்க..இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டுமா..

பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்..பல்லாயிரக்கணக்கானோர்..கணவன், குழந்தை,ஆடு,மாடுகள்,வீடு வாசல் எல்லாம் இழந்து தவிக்கின்றனர்..கைகால்களை இழந்து..தன் முன்னே இருண்ட எதிர்காலத்தைக் காண்போர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கு.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல..காயத்தில் உப்பைக் கொட்டுவது போல..நடந்த காமன்வெல்த் போட்டி விழாவில் சிறப்புவிருந்தினர்..அந்த நாட்டு கொடுங்கோலன்..

ஆணவச் சிரிப்பு சிரித்திருப்பர் சம்பந்தப் பட்டவர்கள்..

ஆனால் காலம் என்றாவது சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்கும்..அப்போது தன் தவறை தாமதமாக உணர்ந்து வருந்துவார்கள் இவர்கள்..அதற்கு இவர்கள் கொடுக்கும் விலையும் அதிகமாய் இருக்கும்.

சரி அது போகட்டும்..தமிழத்தில் உள்ள தமிழனின் நிலையைப் பார்ப்போம் எனில் ..அதுவும் இதைப்போலத்தான்..

தமிழக மீனவர்கள்..தன் வயிற்று பசியைத் தீர்க்க கடல் கடந்து..மீன் பிடிக்கப் போய்..சிங்கள ராணுவத்தால் சுடப்பட்டு மரணமும்..சிறைவாசமும் அடைவது..இந்நாள்வரை தொடர்கதையாய் இருக்கிறது.

வெளிநாட்டில்..இந்தியன் டர்பன் கட்டமுடியாது எனில்..விரைந்து செயல்படும் அரசு..

அமெரிக்காவில் இந்திய மாணவர்களை கண்காணிக்க காலில் கண்காணிப்பு கருவியை பூட்டியதை கண்டு உடன் நடவடிக்கை எடுக்கும் அரசு..

ஆஸ்திரேலியாவில்..இந்தியர்கள் படும் அவதிக்கு உடன் தீர்வு காணும் அரசு..

தமிழக மீனவர்கள் விஷயத்தில் மௌனியாய் இருப்பதோடு..நிலமை கட்டுக் கடங்காமல் போகையில்..வன்மையாய் கண்டிக்கிறோம் என்றும்..இது தொடராது என உறுதிமொழியும் வாரி வழங்கி வருதுடன் உருப்படியாய் இப்பிரச்னைக்கு முடிவு எடுப்பதில்லை.காரணம்..அவதிப்படுபவன்..மீனவத் தமிழர்கள்...மீனவ இந்தியர்கள் இல்லை என்பதுதான்.

ஆகவே ..நண்பர்களே!..நமக்கு முன்னால் பீகார் வாக்காளர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்..

அவ்வழியைப் பின் பற்றுவோம்..

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலெல்லாம் ..எதிர்க் கட்சி வேட்பாளர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாக்களிப்போம்.

யார் ஜெயிக்கிரார்கள் என்பதை விட யார் தோற்கிறார்கள் என்பதே முக்கியம்.

Thursday, March 3, 2011

காங்கிரஸுக்கு 50 சீட்களுக்கு மேல் வாய்ப்பில்லை

திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள இடங்கள் போக மீதம் 182 தொகுதிகள் மட்டுமே உள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு 50 சீட்களுக்கு மேல் ஒதுக்கப்படக் கூடிய வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று தெரிய வருகிறது.

இந்த 50 என்பது கூட ஒரு யூகம்தான். கடந்த முறை ஒதுக்கப்பட்டது போல 48 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படக் கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. இதனால்தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கடும் அதிருப்தியுடன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில், காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் சில உதிரிக் கட்சிகள் உள்ளன.

இதில் பாமகவுக்கு 31, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10, கொங்கு நாடுக் கட்சிக்கு 7, முஸ்லீம் லீக்குக்கு 3, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு சீட் என மொத்தம் 52 சீட்களை முடித்து விட்டது திமுக.

இவை போக தற்போது 182 தொகுதிகளே மிச்சம் உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 132 தொகுதிகளிலும், காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

தற்போது 182 தொகுதிகளே திமுக வசம் உள்ளது. இதில் திமுக நிச்சயம் 132 தொகுதிகளுக்குக் கீழ் போட்டியிட வாய்ப்பில்லை. எனவே காங்கிரஸுக்கு மீதமுள்ள 50 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இது கூட யூகம்தான். திமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்தால் இந்த 50 என்பது 48 ஆகக் கூட குறையலாம். அதாவது கடந்த முறை பாமக வாங்கிய அதே 31 தொகுதிகளே இந்த முறையும் ஒதுக்கப்பட்டது போல.

தற்போதைய நிலவரப்படி கட்டக் கடைசியாக காங்கிரஸ் கட்சி வந்து நிற்கிறது. இதனால் அனைவருக்கும் போக எஞ்சிய சீட்களே அதற்குக் கிடைக்கக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் 100 தொகுதிகள் வரை கேட்டுக் கொண்டிருந்தது. பின்னர் அதைக் குறைத்து 90 என்றார்கள். தற்போதும் கூட அதே ரேஞ்சில்தான் அவர்கள் பேசி வருவதாக தெரிகிறது. ஆரம்பத்தில் திமுக 65 தொகுதிகள் வரைத் தயாராக இருந்தது. ஆனால் விடாப்பிடியாக 80 தொகுதிகளாவது தர வேண்டும் என்று பேசி வந்தது காங்கிரஸ்.

இந்த இடத்தில்தான் கருணாநிதி தனது பாலிட்டிக்ஸை ஆரம்பித்தார். கொங்கு நாடு கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என பிற கட்சிகளுக்கு அடுத்தடுத்து சீட்களை ஒதுக்கி, காங்கிரஸை கடும் நெருக்கடிக்கும், எரிச்சலுக்கும் உள்ளாக்கி விட்டார்.

தற்போது மிச்சம் இருக்கிற 50 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என காங்கிரஸிடம் திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை இதை காங்கிரஸ் ஏற்க மறுத்தால், காங்கிரஸே தேவையில்லை என்ற முடிவுக்கு திமுக வரத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸுக்குக் கடுப்பேற்றும் வகையில்தான் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு நேற்று திமுக தரப்பில் 7 சீட்களை ஒதுக்கியதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகளான தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரபு உள்ளிட்டோர் படு தோல்வி அடைய இந்த கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் கட்சியும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்சிக்கு இடத்தை ஒதுக்கிக் கொடுத்து விட்டு அதன் பிறகு குலாம் நபி ஆசாத்துடன் முதல்வர் கருணாநிதி பேச்சுவார்த்தையில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலும் காங்கிரஸ் எரிச்சலடைந்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் நமக்குத் தேவையில்லை. உண்மையான வாக்கு வங்கிகளை வைத்துள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் துணையும், திமுகவுக்கென்றே உள்ள விசேஷ வாக்கு வங்கியும், அரசின் மக்கள் நலத் திட்டங்களுமே போதும். ஓசி சவாரி செய்வதற்கு ஏகப்பட்ட பந்தா செய்யும் காங்கிரஸை விட்டு விட்டு தேர்தலை சந்திக்கலாம். தேர்தல் முடிவுக்குப் பின்னர் தேவைப்பட்டால் காங்கிரஸை அணுகலாம் என்று திமுக முன்னணியினர் கருணாநிதியிடம் தெரிவித்திருப்பது நினைவு கூறத்தக்கது.

எனவே 50 சீட்டா அல்லது கூட்டணியை விட்டு 'கெட் அவுட்'டா என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டத்திற்கு தற்போது காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது.

(நன்றி தட்ஸ்தமிழ்)   

Sunday, November 21, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல்..தி.மு.க., விற்கு பின்னடைவா

ஸ்பெக்ட்ரம் ஊழல் வரலாறு காணாத ஊழல் என்று சொல்லப் படுகிறது.அதே சமயம் அது நாட்டிற்கு உண்டான இழப்பு என்பதும்..அந்த இழப்பினால் கோடி கணக்கில் சம்பாதித்த தனி நபர்கள் விவரங்களும்..அவர்களுக்குக் கிடைத்த பங்கும் வெளிக்கொணர முடியுமா? எனத் தெரியவில்லை.



சாதாரணமான மனிதன் சில நூறு ரூபாய் கட்டவில்லையென்றாலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வருமானத் துறை.பல ஆண்டுகளூக்கு முன்னரே...ஒரு மத்திய அமைச்சராய் இருந்தவர் 10 லட்சத்திற்கு மேல் வருமானவரி கட்ட வேண்டியதிருந்தும்..அவர் அதை தான் மறந்து விட்டதாகக் கூறிய போதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.மக்களும் அதை சட்டை செய்யாமல் அவரை துணை பிரதமராக்கினர்.அப்படி ஒரு நிலை நாட்டில் தொடரும் போது..இந்த ஊழலிலும் வருமானவரித் துறை செயல்படுமா எனத் தெரியவில்லை.



அப்படியே செயல்பட்டாலும்..அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து..வருஷக்கணக்கில் தண்டனைக்குக் காத்திருக்க வேண்டியுள்ளது.நம் நாட்டு சட்ட திட்டங்கள் அப்படி.அதற்குள் அடுத்த தலைமுறை ஊழல் சாம்ராஜ்யத்தில் முடி சூட்டிக் கொள்ள தயாராய் விடும்.எனக்குத் தெரிந்து இது நாள் வரை ஊழல் செய்த அரசியல்வாதிகள் யாருக்கும் சட்டப்படி தண்டனைக் கிடைத்ததில்லை.



சரி..தலைப்புக்கு வருவோம்..



தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில்..தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜா மீது வரலாறு காணா ஊழல் குற்றச்சாட்டு.இது அக்கட்சியை பாதிக்குமா என்றால்..



கண்டிப்பாக பாதிக்காது..ஏனெனில்..இன்று அனைத்து வாக்காளர்களுக்கும் தெரியும்..நாட்டில் ஊழல் இல்லாத கட்சியும்..ஊழல் செய்யா அரசியல்வாதியும் கிடையாது என்று.ஆகவே ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஊழல் பெரிய காரணமாய் அமையாது என்றே தோன்றுகிறது.



என்ன..இந்த அளவில் வரலாறு காணா உழல்தானே தவிர நாட்டை அயலார்க்கு விற்றுவிடும் அளவு ஊழல் இல்லையே என மக்கள் ஆறுதல் அடைவர்.



நம் நாட்டில் இன்று ஊழல் செய்பவர்,லஞ்சம் கொடுப்பவர்,லஞ்சம் வாங்குவோர்,பேராசைக்காரர்கள் ஆகியோர் பெரிகிவிட்டனர்.இவர்கள் செய்யும் காரியங்களைக் கண்டு..இவர்கள்தான் வெட்கப்படவில்லையென்றாலும்..அப்படிப்பட்டவர்களையே தேர்ந்தெடுக்கும் மக்களுக்கும் வெட்கமில்லை . என்ன செய்வது..



காலப்போக்கில்..ஊழல் செய்யாத நபர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால்..அவர் பிழைக்கத் தெரியாதவர் என மக்களால் புறக்கணிக்கும் காலம் வந்துவிடும் போலயிருக்கிறது.ஊழல் வேட்பாளர்களின் பிரதான தகுதி ஆகிவிடும் போல இருக்கிறது.


ஆகவே..மக்களே..ஊழலில் அரசியல்வாதிகளின் பங்கு போக சிறிதளவு உங்கள் வாக்கிற்கு என அவர்கள் அளிக்கக் கூடும்.அதைப் பெற்றுக்கொண்டு..மனசாட்சிக்கு பயந்து,யார்  அதிகம் கொடுக்கிறார்களோ  அவர்களுக்கே நீங்கள்  வாக்களியுங்கள்.