ஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப் பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.
அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன். 'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும் முயற்சிக்கிறேன்'னான். 'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட 'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?" ன்னாரு.
மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு "சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி தெரியலை' ன்னான்.
அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?' என்றார்.
மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு தெரியலை' ன்னான்.
சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?' என்றார்.
மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும் சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.
அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம் என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு, 'உன் அறிவை மெச்சுகிறேன்..இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை' னு பரிசளித்தான்.
ஆனா மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத் தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு இப்போ தோணுது' என்றான்.
அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே இல்லையே.." என்றார்.
அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான் இருந்தாலும் அந்த ஒளியைப் பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா? அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட உயர்வானதுன்னு தோணுது.
கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா? கிடைச்சாலும் தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட அதுதான் உயர்வானதுன்னு தோணுது..
தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்தி மலர்தான்.ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும் ஆடைகள்த்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில் மக்களுக்கு பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்
அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.