Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, February 23, 2016

இருந்தால் நன்றாயிருக்கும்...(சிறுகதை)

தன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ்.
கிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர்
ஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி
செய்து..டாக்டர் பட்டம் வாங்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு
ஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
அவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா'
'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன்.
பிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்'
ஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான்
ஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக.
'சரி..உன் ஆசையைக் கெடுப்பானேன்..நீ முயற்சி செய்..ஆனால் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் இருந்து வரும்
நம்பிக்கை கடவுள் பக்தி.எந்த ஒரு காரியத்திற்கும்..அது முதல் நம்பிக்கை ஆகும்'
'இல்லை சார்..நீங்கள் சொல்லும் அந்த நூற்றாண்டுகளில்..அதைப்பற்றி அபிப்ராயபேதங்களும்..இருந்திருக்கின்றன'
'குமார்..எனக்குத் தெரிந்தவரை..சிவன் பெரியதா..சக்தி பெரியதா..சைவம் பெரியதா..வைஷ்ணவம் பெரியதா..இப்படித்தான்
அபிப்பிராய பேதங்கள் இருந்திருக்கின்றன.நீ சொல்லும்..அந்த அடிப்படையிலேயே மறுப்பு சென்ற நூற்றாண்டில்தான்
ஏற்பட்டிருக்கிறது என நினைக்கின்றேன்'
'சார்..இது சம்பந்தமாக அனேக புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.கடவுளை மறுத்த பெரியாரின்
சிந்தனைகளையும் படித்து வருகின்றேன்..நாயன்மார்கள்..ஆழ்வார்கள் சொன்னதை படிக்கிறேன்..'
பேச்சை..திசைதிருப்ப எண்ணிய பேராசிரியர்'சரி..இப்போ உன்னைப் பற்றி சொல்.உனக்கு திருமணமாகிவிட்டதா,
குழந்தைகள் உண்டா?'
'சார்..எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இது நாள் வரை குழந்தைகள் இல்லை..இப்போதுதான் என் மனைவி
7 மாத கர்ப்பம்'என்றான்.
'பாராட்டுகள்' என்றார் பேராசிரியர்.
'ஏன் சார்..நீங்கள் சொல்லும் கடவுள் இருந்திருந்தால்..அந்த ராமர் கடவுள்தானே..அவர் ஏன் சிவ பக்தனான ராவணனை
அழிக்க வேண்டும்.சிவ பக்தனான ராவணனுக்கு சிவன் ஏன் முதலிலேயே அறிவுறித்தி பிறன் மனை விழையாமையை
உணர்த்தி..அவனை சீதை மேல் ஆசை வராமல் தடுத்திருக்கலாமே'
'அது இதிகாசம்..மேலும்..ராமர்..சீதை இவர்கள் பூமியில் அவதரித்ததுமே மனிதர்கள்.இறைவன் இல்லை'
'சரி அது போகட்டும்.தன் மாமன் கம்சனைக்கொல்ல ..கிருஷ்ணன் அவதரித்தான்..பின் அவனே பாண்டவர்களுடன்
சேர்ந்து கௌரவர்களை அழித்தான்..திரௌபதியை துகில் உரித்தபோது உடன் காப்பாற்றவரவில்லை.நீ என்னை முற்றிலும்
நம்பாமல் கைகளால் மறைத்திக்கொண்டிருந்தாய்.எப்போது என்னை நம்பி..கைகளை உயர்த்தினாயோ அப்போது உதவிக்கு வந்தேன்
என்பது..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒரு sadist என்று ஆகவில்லையா?'
'கடவுளை முழுவதுமாக நம்ப வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது'
ஏன் சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..என்பதற்காக திரௌபதி அப்படி
செய்திருக்கலாம்..இல்லையா?'
பேராசிரியர் இதற்கு பதில் கூற வாயைத்திறந்த போது ..குமாரின் அலைபேசி ஒலித்தது.
அதை இயக்கினான் குமார்'என்ன..அப்படியா?..இப்போதே வருகிறேன்' என்றவன்..'சார் என் மனைவிக்கு திடீரென உடல்னலம்
சரியில்லை..அவள் வயிற்றில் கரு அசையவே இல்லையாம்..உடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.பிறகு சந்திக்கிறேன்'என
விரைந்தான்.
பேராசிரியர் தலை ஆட்டினார்.
**** **** **** ****
இரண்டு..மூன்று மாதங்கள் ஓடி விட்டன
திரும்ப ..ஒரு நாள் கிருஷ்ணகுமார் அவரைப் பார்க்க வந்தான்.தன் ஆராய்ச்சித் தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என
அறிந்துக்கொள்ள.
'அது இருக்கட்டும்..உன் மனைவி எப்படி இருக்கிறாள்?குழந்தை பிறந்து விட்டதா?'
'அந்த ஆச்சர்யத்தை ஏன் கேட்கிறீர்கள்?உங்களிடம் வந்த அன்று அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்.
வயிற்றில் இருந்த சிசுவிற்கு மூச்சே இல்லை.மருத்துவர்கள் இறந்துவிட்டது என்றனர்.ஆனாலும் ஒரிரு நாட்கள் பார்க்கலாம் என்றனர்
மருத்துவர்கள்.அழுதபடியே வீட்டிற்கு வந்தவள்..இளையராஜாவின் திருவாசகத்தை வி.சி.டி.யில் ஓட விட்டாள்.அது ஒலிக்க..ஒலிக்க..
சிசு அசையத்தொடங்கியது.மருத்துவருக்கு விஷயத்தைச் சொல்ல..ஆச்சர்யப்பட்ட அவர்..தினமும் என் மனைவியை அதைக்
கேட்கச் சொன்னார்.போன வாரம் சுகப்பிரசவம்.பையன்'என்றான் உற்சாகத்துடன்.
ஆச்சரியம் அடைந்தார்..பேராசிரியர்..'ஏம்ப்பா இது எதனால் என்று நினைக்கிறாய்?''இது கடவுளின் அருள் என்று உனக்குத்
தோன்றவில்லையா?கடவுள் காப்பாத்திட்டாரு'என்றார்.
'அப்போ அதற்கு முன்னால்..அந்த சிசுவிற்கு..அந்த நிலை ஏற்பட்டது யாராலே?'பதில் கேள்விக் கேட்டான்.
'குமார்..பிரபஞ்சம் தான் கடவுள்.நேற்று அறியாததை இன்று அறியலாம்.இன்று அறியாததை நாளை அறியலாம்.
ஆனால்..எப்போதுமே அறிய முடியாதது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்..அது பிரபஞ்ச ரகசியம்.புரிந்துக் கொள்'
என்றார்.சற்றே குழம்பியவன்..'சரி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..இறைவன் என்று ஒருவன் தானே இருக்க
முடியும்..நீங்கள் பல கடவுள்களை சொல்கிறீர்களே?'
'குமார்..நீ..ஒருவன்..ஆனால் உன் பேற்றோருக்கு நீ மகன்..மனைவிக்கு கணவன்..தம்பிக்கு அண்ணன்..அண்ணனுக்கு
தம்பி..இப்படி இருக்கும்போது..அந்த கடவுள் பலருக்கு பல பெயரில் இருப்பது என்ன தப்பு'
சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல்..யோசித்தான் அவன்.
அதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்'இப்ப நீ கடவுள் இருக்கிறதை நம்புகிறாய் இல்லையா'என்றார்.
'இருந்தால்..நன்றாயிருக்கும்'என்றான்.

Tuesday, September 17, 2013

அவரவர் பார்வையில்... (சிறுகதை)

அவள்:-

நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.

எனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.

ஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம்.

அம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று.

அவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.

இன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

ரவியின் தாயார்:-
-----------------
என் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த பெண்ணை திருமணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கிடணும்.

அவன்:-
----------
நான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28 வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.

திடீரென ஒருநாள் இரவு 9 மணிக்கு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால் அமர வைத்துவிட்டு 'இந்த தொடரை கொஞ்சம் பாரேன்'என்றாள்.
நானும் பார்த்தேன்.
பாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம் குடிகொண்டிருந்தது.
அம்மா கேட்டாள் 'டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம் வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி முடித்து விடலாமா?'

'வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால் இந்த பெண் எனக்கு வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.

Monday, January 21, 2013

விஸ்வரூபம்..

"பாலு..இங்கே வைச்சுட்டுப் போன ஆயிரம் ரூபாய் எங்கே? நீ எடுத்தியா?..இல்லையா..? சொல்லுடா...வாயில என்ன கொழுக்கட்டையா?..பதில் சொல்லேண்டா"

கல்லுளிமங்கன் போல பாலு நின்றுக்கொண்டிருந்தான்..சிவராமனின் பொறுமை மெல்ல விடை பெற்று கொண்டிருந்தது.

"பளார்" என பாலுவின் கன்னத்தில் அறை ஒன்று விழுந்தது.

பாலு..அப்பவும் ..வாயைத் திறக்காமல் ..அடி விழுந்த கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்தான்.

'இதோ பார்..உனக்கு அஞ்சு நிமிஷம் டயம் தரேன்..குற்றத்தை ஒத்துக்க..இல்ல..என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது..' என்றவாறு சிவராமன் கல்லாவில் வந்து அமர்ந்தார்.

ஹோட்டல் ராஜன்....உரிமையாளர் சிவராமன்..

நகரின் மையப் பகுதியில் இருந்தது.காலை நேரத்திலேயே கூட்டம் களை கட்டிவிடும்.அங்கு கிளீனராக வேலை செய்ய சிவராமனால் அழைத்து வரப்பட்டவன் தான் பாலு.

சிவராமனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்திலிருந்த பூங்குளம் கிராமத்தில் தான் பாலுவின் தாயார் சிவராமனின் வீட்டில் வேலை செய்து வந்தார்.

பாலுவிற்கு அப்பா கிடையாது.அவர் ஒரு பெயிண்டராக நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தார்.ஆனால்..எப்படியோ குடி பழக்கத்திற்கு ஆளாகி குடல் கெட்டு இறந்த போது குடும்பத்தை பரம ஏழையாகி விட்டு இருந்தார்.

நல்லவேளை..பாலு அவர்களுக்கு ஒரே மகன்.பாலுவின் தாய் சிவராமன் வீடு உள்பட சில வீடுகளில் வேலை செய்தவாறே பாலுவை படிக்க வைத்தாள்.

பாலு , பார்க்க சுமாராகத்தான் இருப்பான்.எப்போதும் தலை தரையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கும்.கருமையான நிறம்.சற்றே முன்னுக்கு வந்திருந்த பற்கள்.உடைகள் அழுக்காக இல்லாவிட்டாலும் தோய்த்து பழுப்பேறி கசங்கலாக இருக்கும்.அவற்றில் ஒட்டுப் போட்ட கிழிசல்கள் வேறு..சற்றும் அடங்காமல் வளர்ந்து காடாக இருக்கும் தலைமுடி..கண்களில் எப்போதும் ஒரு ஏக்கம்.தாழ்வு மனப்பான்மையால் யாரிடமும் பேச மாட்டான்.

உடன் படிக்கும் மாணவர்களுக்கும்..பாலுவைக் கண்டுவிட்டால் இளக்காரம்..அவனை சீண்டுவார்கள்.

வகுப்பில் ஏதேனும் காணாமல் போனாலும், ஆசிரியருக்கு சந்தேகம் முதலில் அவன் மீதுதான் வரும்.

அப்படித்தான்..ஒரு நாள்..பாஸ்கர் என்னும் பணக்கார மாணவன் ஒருவனின் பையிலிருந்த ஐம்பது ரூபாய் பணத்தைக் காணவில்லை.

அந்த பையன் ஆசிரியரிடம் முறையிட்டதுடன் அல்லாமல், தனக்கு பாலுவின் மீதுதான் சந்தேகம் என்றான்..

ஆசிரியரும் ...பாலுவைக் கூப்பிட்டு விசாரித்தார்.அவன் மௌனமாக இருக்கவே..கையை நீட்டச் சொல்லி தன் கையிலிருந்த பிரம்பால்..'சுளீர்' என இரண்டு அடி அடித்தார்.

அப்படியும் பாலு வாயைத் திறக்கவில்லை.அவனை வகுப்பின் வெளீயே முட்டி போடச் சொல்லி விட்டார் ஆசிரியர்.

பாஸ்கரன், அடுத்த வகுப்பிற்கான சரித்திரப் புத்தகத்தை எடுத்து புரட்டுகையில், ஐம்பது ரூபாயை அதில் வைத்திருந்ததைப் பார்த்தான்..

ஆசிரியரிடம், 'சார்..பணம் கிடைச்சுடுத்து.நான் புத்தகத்திற்கு உள்ளே வைத்திருக்கிறேன்' என்றான்.

ஆசிரியரும் அவனிடம் பவ்யமாக, 'பாஸ்கர்..நாம அநாவசியமா ஒருத்தர் மேல பழியைப் போடக் கூடாது' என்று சொல்லிவிட்டு..குற்ற உணர்ச்சியுடன் பாலுவை வகுப்பிற்குள் வரச் சொன்னார்.

தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் பாலுவுடன் சற்று நெருங்கிப் பழகி அந்த மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என அந்த ஆசிரியருக்குத் தெரியவில்லை.

தவிர்த்து..அவரும் அவனை சந்தேகக் கண்ணோடுதானே பார்த்தார்..காரணம்..

அவனது வறுமை....

இடைவேளையின் போது, பாஸ்கர் பாலுவிடம், 'நீ எடுக்கவில்லைன்னு வாத்தியார் கிட்ட சொல்லியிருக்கலாமே..ஏன் வாயைத் திறக்காம அடி வாங்கின..?' என்றான்.

'வாத்தியார் கிட்ட நீ..என் மேல சந்தேகம்னு சொன்ன..அப்போ நான் எடுக்கலைன்னு சொன்னா வாத்தியார் நம்புவாரா? உடனே உன்னைக் கேட்பார்..நீ என்ன சொன்னாலும் உன்னைத்தான் நம்புவார்.எனக்கு இன்னும் இரண்டு அடி அதிகம் கிடைத்திருக்கும்' என்றான்.

அன்று பள்ளியில் நடந்ததை அம்மாவிடம் வந்து சொன்னான் பாலு.பின்னர், 'அம்மா..இனிமே நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.எது காணும்னாலும் என் மேலதான் சந்தேகப் படறாங்க' என்றான்.

அம்மாவும், தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாது என எண்ணி, பாலுவை அழைத்துக் கொண்டு சிவராமனின் வீட்டிற்குச் சென்றாள்.

சிவராமனின் தந்தை ராஜன், 'விமலா..நீ கவலைப் படாதே..இவன் படிச்சது போதும்.என்னோட பையன் சென்னையில பெரிய ஹோட்டல் ஒன்னு வைச்சிருக்கான்.அதுல இவனுக்கு கிளீனர் வேலை போட்டுத் தரச் சொல்றேன்.இவனுக்கான சாப்பாடும் இலவசமாகக் கிடைக்கும்.வருஷத்திற்கு நாலு ஜோடி டிரஸ் கிடைக்கும்.துணி செலவும் மிச்சம்.மாசம் ஏதாவது சம்பளம் போட்டு..அதை அப்படியே உனக்கு அனுப்பச் சொல்றேன்' என்றார்.

விமலாவின் வறுமையும் அதற்கு 'சரி' என சொல்ல வைத்துவிட்டது.

$$$$$    $$$$$$      $$$$$    %%%%

அன்று கல்லாவில் ஒரு வாடிக்கையாளர் கொடுத்த ஆயிரம் ரூபாயை மேசை மீது வைத்து விட்டு, அவரது பில் பணத்திற்கான பணம் போக , மீதியை கல்லாவிலிருந்து எடுத்துக் கொடுத்த சிவராமன் ,ஆயிரம் ரூபாயை நோட்டை எடுத்து சட்டைப் பைக்குள் வைக்க நினைக்கையில்..

சர்வர் ஒருவன் கொண்டுவைத்த காஃபியில் ஈ ஒன்று விழுந்து விட்டது என ஒரு வாடிக்கையாளர் சப்தமிட..அவரிடம் ஓடினார் சிவராமன்.

அவரை ஒரு மாதிரி சமாதானப் படுத்திவிட்டு , அவருக்கு வேறு ஒரு காஃபி கொடுக்கச் சொல்லிவிட்டு கல்லாவிற்கு வந்தவர்..மேசையில் வைத்திருந்த பணத்தைக் காணாமல் தேடினார்.

ஆனால்..அருகில் கையில் கிளீனிங் வாளியுடன், மறு கையில் அழுக்குத் துணியுடன் 'திரு..திரு' என விழித்துக் கொண்டிருந்த பாலுவின் மீது அவர் பார்வைச் சென்றது.

@@@@    @@@@@      @@@@@    @@@@@@

சிவராமன் கொடுத்திருந்த நேரம் கழிந்தும், கண்களில் கண்ணீர் முட்ட..கன்னத்தைத் தடவியவாறு..வாயைத் திறக்காமல் நின்றிருந்த பாலுவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் சிவராமன்.

இரவு பத்து மணி..

கடையை மூடிவிட்டு..பணி புரிபவர்கள் ..அவரவர் பாதை நோக்கிச் செல்லும் போது..வாயிலில் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த பாலுவை, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாது பசியால் வாடி வதங்கியிருந்த அந்த இளம் பிஞ்சை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

கடைசியாக வெளியே வந்த சர்வர் மணி பாலுவைப் பார்த்துவிட்டு குற்ற உணர்ச்சியுடன்..'சாரிடா..பாலு..பணத்தை நான் எடுத்தேங்கிறதை முதலாளியிடம் நீ சொல்லியிருக்க்லாமே' என்றான்.

அதற்கு பாலு,' மணி..நீ அந்த பணத்தை எடுத்ததை நான் பார்த்தேன்.நீ உங்க அம்மாவிற்கு மருந்து வாங்க அவசரமா பணம் வேணும்னு கார்த்தால சொல்லிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன்.நீ தான் பணத்தை எடுத்தேன்னு நான் சொல்லியிருந்தா..முதலாளி உன்னிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டு வெளியே அனுப்பி இருப்பார்.அதனால உங்கம்மாவிற்கு உன்னால மருந்து வாங்க முடியாது.அவங்களும் கஷ்டப்படுவாங்க.வேலை செய்ய முடியாத உங்கம்மா..வேலை இல்லாத நீ..என்ன செய்வீங்க? எனக்கோ..வேலையில்லேன்னாலும்..என் அம்மா..ஏதாவது வீட்டு வேலை செஞ்சு சாப்பாடு போடுவாங்க.' என்றான்.

பாலுவின் விஸ்வரூபத்தைப் பார்த்த மணிக்கு "ஓ' வென அவனை கட்டி அழ வேண்டும் போல இருந்தது.

அன்றைய கணக்கை சரிபார்த்து கல்லாவை பூட்டிக் கொண்டிருந்த சிவராமன் காதுகளில் பாலு சொன்னவை அனைத்தும் கேட்டது.

தீர விசாரிக்காமல் பாவம் ஒரு சிறு பையனை தண்டித்து விட்டோமே..அவனுக்குத்தான் எவ்வளவு உயர்ந்த உள்ளம்..என்று எண்ணியபடியே தலை நிமிர்ந்தவருக்கு, எதிரே மாட்டிவைத்திருந்த படத்தில் "ஓம்" என்ற பிரவண மந்திரத்தின் பொருளை தந்தைக்கு உணர்த்திய பாலமுருகன் சிரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

Wednesday, January 2, 2013

8 - சிறுகதை

தனக்கு இதுபோன்றதொரு நிலைமை வரும் என தர்மலிங்கம்..அந்த நிமிடம் வரை நினைக்கவில்லை.

அந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு ஆசிரியர் அவர்.கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம்.

அவரிடம் படித்த மாணவர்கள் பலர்..இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக இருக்கின்றனர்.ஆனால் அந்த தர்மலிங்கம் என்ற ஏணியோ எட்டாம் வகுப்பிலேயே நிரந்தரமாக இருக்கிறது.

கண்டிப்புக்குப் பெயர் போனவர் அவர்.அவரைக் கண்டால் அத்தனை மாணவர்களுக்கும் பயம்.அவர் வகுப்பிற்கு படிக்காமலேயோ..வீட்டுப்பாடங்களைச் செய்யாமலோ எந்த மாணவனும் வரமுடியாது.அப்படி வந்தால்..அந்த மாணவனின் அரைக்கைச் சட்டையை சற்றே தூக்கி 'எட்டு' போடுவது போல..ஒரு கிள்ளு..கிள்ளி விடுவார்.உயிரே போய்விடும்.

அந்த மாணவன் வீட்டில் போய் சொன்னாலும்..அவனைப் பெற்றோரும் தங்கள் பிள்ளைக்கு ஆதரவாகப் பேசமாட்டார்கள்.'நீ என்ன தப்பு செஞ்சியோ..வாத்தியார்கிட்டே அடி வாங்கிக் கிட்டு வந்து நிக்கறே..அடியாத மாடு படியாது..நல்லா அடி வாங்கு..' என்று கூறிவிடுவார்கள்.

ம்..அதெல்லாம்..அந்தக்காலம்.

இப்ப..கொஞ்சம் கோபமாக பேசினாலும்..கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்.

தர்மலிங்கத்திற்கு ..அன்று போதாத காலம் போலிருக்கிறது.அவர் வகுப்பில் படிக்கும் விக்ரம் என்னும் மாணவன்..முதல் நாளன்று கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யவில்லை.

அந்த மாணவனை கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.அவன் நடவடிக்கை சரியில்லை.அவனை இப்போது திருத்த முயற்சிக்கவில்லை என்றால் அவனது எதிர்காலமே கேள்விக் குறி ஆகிவிடும் என அவரது உள்மனம் சொல்ல..அவனுக்கு எட்டு போட்டு விட்டார்.மாணவனும் மயங்கி விழுந்து விட்டான்.

பள்ளியே..அல்லோலகலப்பட்டது.ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொன்னார்கள்.அவனை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள்.மாணவனின் பெற்றோருக்கும்..காவல் துறையினருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

என்ன செய்வது..என்று அறியாது..தர்மலிங்கம் தானே சரணடையும் நோக்கத்தில் காவல் நிலயத்திற்கு சென்றார்.அங்கு காவல்துறை அதிகாரி இல்லாததால்..இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வர..எழுந்து நின்று தர்மலிங்கம் பள்ளியில் நடந்தவற்றை அவரிடம் கூறினார்.

பொறுமையாக...எல்லாவற்றினையும் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரி..தன் அரைக்கை சட்டையின் கைகளை சற்றே உயர்த்தி..அந்த கருமை நிற வடுவைக் காண்பித்தார்.

இந்த வடுவைப் பார்த்தீங்களா..இது எனக்கு நீங்க போட்ட எட்டு...என்னைத் தெரிகிறதா உங்களுக்கு..நான்தான் அருணாசலம்..உங்க பழைய மாணவன்.ஒருநாள்..நான்..பக்கத்து பையன் பையிலிருந்து பணத்தைத் திருடிட்டேன்.அதைத் தெரிஞ்சுக்கிட்ட நீங்க கொடுத்த பரிசு 'டேய்..அருணாசலம்..இனிமே நீஒரு தப்பும் செய்யக்கூடாது.ஏதாவது செஞ்சா..அந்த நேரம் இந்த காயம் எப்படி ஏற்பட்டதுங்கற எண்ணம் உனக்கு வரணும்..இந்த காயத்தால ஏற்படப் போகும் வடு..உன்னை ஒரு நேர்மையானவனாக மாற்றும்' என்று சொன்னீங்க...அன்னிக்கு நீங்க எனக்கு இந்த தண்டனை கொடுக்கலைன்னா..நான் இன்னிக்கு இப்படி ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாய் மாறியிருப்பேனான்னு தெரியாது.

'நீ...நீ.. நீங்க..அருணாசலமா ..இப்படி..ரொம்ப மகிழ்ச்சி...ரொம்ப ..ரொம்ப..மகிழ்ச்சி' தர்மலிங்கத்தின் கண்களில் கண்ணீர்...ஆனந்தக் கண்ணீர்.

'ஐயா..அன்னிக்கு நான் நடந்துகிட்ட மாதிரி..ஒரு மாணவன் தப்பா நடந்துகிட்டு இருக்கான்..நீங்களும் அன்னிக்கு ..எனக்கு கொடுத்த அதே தண்டனையைக் கொடுத்திருக்கீங்க.அவன் பயத்திலே மயங்கி விழுந்துட்டான்.இது பெரிய தவறா எனக்குத் தெரியலை..உங்க மேல எதாவது புகார் வந்தா..நான் பார்த்துக்கறேன்..நீங்க போங்க...கான்ஸ்டபிள்..சாரை..நம்ம ஜீப்ல கொண்டுபோய் வீட்டில விட்டுட்டு வா' என்றார்.

தர்மலிங்கம்..இரு கைகளையும் கூப்பி விடை பெற்றார்..'இன்று..இந்த ஆசிரியரின் தண்டனையைப்பெற்ற மாணவன் நாளைக்கு நிச்சயம் என்னைப்போல நேர்மையானவனாக வருவான்.ஏனெனில் அந்த மாணவன் என் ரத்தம்' என்று எண்ணியவாறே..வேறு யாரும் பார்க்காதபடி..தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் அருணாச்சலம்.

Friday, November 9, 2012

இலவசம்..இலவசம்..தேவையா?

பக்கத்து வீட்டிற்கு வந்த செய்தித்தாளை இரவல் வாங்கி படிக்கும் போதுதான்..அந்த போட்டி பற்றிய அறிவிப்பை படித்தேன்.இலவசங்கள் தேவையா? என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதச் சொல்லி இருந்தார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை யாக வேறு இருந்ததால்..என்னை நண்பன் ஒருவன் சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்..அவனுடன் சாப்பிட்டவாறே இப்போட்டியைப் பற்றிக் கூறினேன்.அவன் கண்டிப்பாகக் கலந்துக் கொள் என்றான்..அப்போதுதான் மேசையில் கிடந்த பேனாவைப் பார்த்தேன்.அதைக் கையில் எடுத்து அதையும், நண்பனையும் மாறி மாறி பார்த்தேன்.வேணுமானால் வைத்துக் கொள் என்றான்.பதிலுக்கு 'நன்றி' என்றவாறே என் சட்டையில் அப்பேனாவைக் குத்திக்கொண்டேன்.

அடுத்த நாள்..அலுவலகம் வந்ததும்..மேசையைத் திறந்து இரண்டு வெள்ளைத்தாள்களை எடுத்தேன்.

'இலவசம்' பற்றி என்ன எழுதுவது..என்று யோசித்த படியே..பக்கத்து மேசை ரகுவைப் பார்த்தேன். தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து ஆடாக மாறி இருந்தான்.அவனிடம் சென்று..இரண்டு வெற்றிலையையும்,சீவலையும் எடுத்து வாயில் போட்டு மென்றவாறே என் இருப்பிடம் வந்து கற்பனை ஆமையை (எவ்வளவுநாள் குதிரை என்று சொல்வது..மேலும்..எனது கற்பனை மெதுவாகவே வருவதால்..ஆமை என்பதே சரி) தட்டிவிட்டேன்.

பொங்கலுக்கு அரசு இலவசமாகத் தரும் வேஷ்டி..சட்டைப் பற்றி எழுதலாமா? இல்லை நண்பகல் இலவச உணவு பற்றி..வேண்டாம் ..வேண்டாம் ..அது குழந்தைகளுக்கு..அதில் கை வைக்க வேண்டாம்.இலவச சைக்கிள் ,இலவச டி.வி., இலவச நிலம் ..எதைப் பற்றி எழுதுவது?

ஆமை ஓட மறுத்தது..

அந்த சமயம் அலுவலகம் கொடுக்கும் இலவச தேநீர் வந்தது.அதைக் குடித்துவிட்டு..வெளியே வந்தேன்..வெளியே நண்பன் ஒருவன் புகைத்துக் கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிகரெட் ஓசி வாங்கினேன்..அவனே பற்றவும் வைத்தான்.சிறிது நேரம் அரட்டை அடித்தேன் அவனிடம்.திரும்ப மேசைக்கு வந்தேன்.

எண்ணம் இலவசம் பற்றியே இருந்ததால்..அலுவலக வேலை ஓட மறுத்தது..மதியம் ஒரு மணி..

பக்கத்து மேசை ரகு..சாப்பிடப் போகலாமா? என்றான்.உடன் தலையாட்டினேன்.ஏனெனில்..அவன் யாரிடமும் எதையும் இலவசமாக பெறமாட்டான்..நான் ஹி..ஹி..ஹி..

அதைத் தவிர ரகு..அவனோடு யார் வந்தாலும்..அவர்களுக்கு செலவு செய்வான்..(பிழைக்கத் தெரியாதவன்)

சாப்பிட்டுவிட்டு..வந்ததும் மேலதிகாரி கூப்பிட்டு வங்கிக்குச் சென்று..கவனிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றைச் சொன்னார்.'மிகவும் அவசரம்..வண்டியில் சென்று விடுங்கள்'என்றார்.

'சார்..நான் இன்று வண்டி கொண்டுவரவில்லை' என ஒரு சின்ன பொய்யைச் சொன்னேன்.'சரி..சரி..ஆட்டோவில் சென்று விடுங்கள்' என்றார்.அப்பாடா..நூறு ரூபாய் கிளைம் பண்ணலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.வங்கி வேலைகளை முடித்துவிட்டு..திரும்ப மணி நாலாகிவிட்டது.இனி எழுதினாற்போலத்தான்..என எண்ணிய போது..நண்பன் ஒருவன் தொலைபேசினான்.அன்று மாலை திரைப்படம் ஒன்றிற்கு இரண்டு டிக்கட் இருப்பதாகவும்..வருகிறாயா? என்றான்..

கரும்பு தின்னக் கூலியா? 'சரி' என்றேன்.அலுவலகம் விட்டு கிளம்பும் போது ஞாபகமாக வெள்ளைத்தாள்களை எடுத்துக் கொண்டேன்.

சினிமா..இரவு டின்னர் எல்லாம் நண்பன் செலவில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததும்..எழுதத் தொடங்கினேன்...

"ஏழைகளுக்கு..இலவசம்..இலவசம் என்று கொடுத்து அரசு அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டது..' என ஆரம்பித்தேன்....

Saturday, September 15, 2012

அறிமுகம்..(அரை பக்கக் கதை)

காலை அலுவலகம் கிளம்பும் வரை குழந்தை அனு எழுந்திருக்கவில்லை .
குழந்தைக்குத் தேவையான பால்,டயப்பர்,மாற்று உடை எல்லாம் எடுத்து வைத்தாள் கீதா.
சேகர்..அவளையையும், தூங்கும் அனுவையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
கிரச் சில் குழந்தையை விட்டு விட்டு..வந்த கீதாவை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் அலுவலகம் சென்றான் சேகர்
மாலை தான் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரம் ஆகும் என்ப
தால்..கீதாவை மாலை ஒரு ஆட்டோ பிடித்து கிரச் சிற்குப் போய் அனுவையும் தூக்கிக் கொண்டு வீடு செல்லச் சொல்லிவிட்டான்.
அனுவும்..மாலை கிரச் சில் ஆட்டோவை நிறுத்திவிட்டு..குழந்தையை அழைத்துவரச் சென்றாள்.
குழந்தை ஆயாவின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது.இவள் கூப்பிட்ட போது வர மறுத்து அழுதது.
"அனுகுட்டி..இது உன் அம்மாடா..சமர்த்தா அம்மா கிட்ட போ' என கொஞ்சினாள் ஆயா..
கீதாவிற்கு விழியோரம் நீர்..
'அப்பாவையே..அம்மாதான் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறாள்..என்பார்கள்..ஆனால்..இன்று கிரச் ஆயா குழந்தைக்கு அதன் அம்மாவை அறிமுகப் படுத்துகிறாளே'என்று மனதிற்குள் விம்மினாள்

Monday, January 9, 2012

பிரணவ மந்திரம்....(சிறுகதை)

Saturday, October 22, 2011

நில அபகரிப்பு (சிறுகதை)

(வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி!)

'நாளைக்கு வாசக்கால் வைக்கறோம்..விட்டு ஓனருங்கமுறையிலே நீங்க அம்மாவையும் அழைச்சுண்டு ஒம்பது மணிக்கு வந்துடுங்க' என்றான் மேஸ்திரி கண்ணாயிரம்.
'என்ன..பர்வதம்..நாளைக்கு காலையிலே போகமுடியுமா' - ஈஸ்வரன்
'நல்லாயிருக்கு..நீங்க கேக்கறது..நம்ப எஞ்சிய காலத்தை இனிமே அங்கத்தான் கழிக்கப்போறோம்..நம்ம பிள்ளைங்க
..அப்பறம் பேரப்புள்ளைங்க எல்லாம் அங்கேதான் வாழப்போறாங்க..அதனாலே ஸாஸ்திரப்படி எல்லாம் செய்யணும்.
நாம கண்டிப்பா போகலாம்'என்றவள் ..மேஸ்திரியைப் பார்த்து'என்ன ..மேஸ்திரி நிலைப்படி வைக்கறதுக்கு முன்னாலே கீழே ஏதேதோ போடணும்னு சொல்வாங்களே..'என்றாள்.
'அந்த கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம்மா...இந்த கண்ணாயிரம் எல்லாத்தையும் ஒயிங்கா செஞ்சுடுவான்.
நீங்க தங்கக்காசு இருந்தா மட்டும் ஒன்னு கொடுங்க..அட..அரை கிராம் கூட போதும்..'பர்வதம் ஈஸ்வரனின் முகத்தைப்பார்க்க..'அட..இல்லேன்னாலும் பரவாயில்லைம்மா..நானே போட்டுக்கறேன்..என் வூடு மாதிரி நினைச்சுத்தாம்மா கட்டறேன்' மேஸ்திரி கிளம்ப... ஈஸ்வரனின் முன்னால் ஒரு கொசுவத்திச் சுருள்.
**** ***** *****
கடந்த சில மாதங்களாகவே ஈஸ்வரனுக்கு..தனக்கென்று ஒரு வீடு இல்லையே..இப்போதெல்லாம் வங்கிகள் வரிந்துக்கட்டிக் கொண்டு வீடுகட்ட லோன் கொடுக்கும்போது..நாமும் நமக்கேத்தாற்போல ஒரு வீடு கட்டிக் கொண்டால் என்ன? என்ற எண்ணம் இருந்தது.
ஒரு நாள் இரவு சாப்பாடு முடிந்ததும்..அந்த புறாக்கூண்டுப் போன்ற அவர் ஃப்ளாட்டில்..சிகப்பு ரெக்சின் கிழிந்து ..ஸ்பிரிங்க் கம்பிகளும்,தேங்காய் நாரும் பிதுங்கிக்கொண்டிருந்த ஷோஃபாவில் அமர்ந்து கோலங்கள் பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் தன் ஆசையைத் தெரிவித்தார்.
உள்ளே படுக்கும் அறை கம் படிக்கும் அறையில் கணினியில்.. இண்டர்னெட்டில் மேய்ந்துக் கொண்டிருந்த ஈஸ்வரனின் மகன் காதுகளில் இது விழ..அவனும் கணினியை மறந்து அப்பாவிடம் வந்தான்.
'இதோ பாருங்க..நாம ஏதோ வாடகைக் கொடுக்கிறோம்..இந்த புறாக் கூண்டு ஃப்ளாட்லேயே இருக்கோம்..
வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்கோம்...வாசக்கதவைத் திறந்தா ..பக்கத்துவீட்டு ஹால் தெரியுது.
நம்ம வீட்டு பரணில் எந்த அடசலும் இல்லை...பக்கத்துவீட்டுக்காரன் அடசலை வைச்சிருக்கான்.அங்கிருந்து தினமும் எலிகள் வந்து வாக் பண்ணிட்டு போறது நம்ம் வீட்டில...வாசல்ல ஒரு பண்டிகை நாள்லயோ..விசேஷத்திற்கோ ஒரு கோலம் கூட போட முடியவில்லை...கொஞ்சம் பெரிய கோலம்னா அடுத்தவீட்டுக்காரன் வாசல் வந்துடுது.
அதனால நமக்குனு வாங்கறது கண்டிப்பா தனி வீடாத்தான் இருக்கணும்.இது போல ஃப்ளாட் எல்லாம் வேண்டாம்'என்றாள் பர்வதம்.
ஆமாம் ப்பா ஒரு தனி வீடு தான் வேண்டும்..எனக்குனு தனி படிக்கிற ரூம்..அதிலேயே கம்பூட்டர் வைச்சுப்பேன்..ஒரு கட்டில் வாங்கி போட்டுடுட்டா.. அங்கயே படித்துவிட்டு படுத்துப்பேன் ' என்றான் மகன் பரமசிவம்.
ஹாஸ்டலில் இருக்கிற பசங்க ரூம்க்கு அடிககடி போய்ட்டு வர்ரான் போலிருக்கு.தனக்கும் ஹோட்டல் ரூம் போல கேட்கிறான்..என்று ஈஸ்வரன் நினைத்தார்.ஆனாலும் கிண்டலாக,"தனி வீடுன்னா அட்டாச்டு பாத்ரூம் இருக்காதே"என்றார் மகனிடம்.
"தனிவீட்டிலேயும் ..இதுபோல வைச்சுக்கலாம்பா..நீங்க இன்னும் கிராமத்துபக்கம் இருக்காப்போல அரைக்கிலோ
மீட்டர் தள்ளிதான் கக்கூஸ் இருக்கணும் என்று நினைக்கிறதே தப்பு." என்றான் மகன்.
"பர்வதம் நீயும் பரமசிவமும் சொல்றதுவாஸ்தவம் தான். ஆனா இன்னிக்கி இருக்கிற விலைவாசிக்கு தனி வீடுங்கிறது நமக்கு குதிரைக்கொம்பு...அதனால இதோட கொஞ்சம் வசதி அதிகமாக இருக்கிற ஃப்ளாட்டைப்ப்பார்க்கலாம்."
முடியாதுன்னா முடியாது..வேணும்னா நாங்க இந்த ஃப்ளாட்டிலே இருந்திடறோம்"என்று அவள்"என்னடா சொல்ற பரமசிவம்" என மகனை துணைக்கு இழுத்துக்கொண்டாள்.
"ஆமாம்மா.நீ சொல்வது சரி தான் " என்றான் மகன்.
ஈஸ்வரனுக்கு கோபம் வர "இனி இந்த டாபிக்கே வேண்டாம்" என்று கூறிவிட்டு டிவீயை பார்க்கலானார்.
டீவியிலும் அந்த சீரியலின் கதாநாயகி குற்றால அ ருவி போல் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் பர்வதம் தன் மௌன விரதத்தை ஆரம்பித்தாள்.அந்தந்த நேரத்துக்கு காபி,டிபன் என மௌனமாகவே
வந்துக்கொண்டிருந்தது.
ஓரிரு நாள் கழிந்தது.பர்வதம் தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளவில்லை.
இந்த விஷயத்தை மெதுவாக..அவர் தன் அலுவலக நண்பனிடம் சொல்ல அவன்'ஈஸ்வரன்..உங்க மனைவி சொல்றது..உண்மைதானே!நாந்தான் மூளை இல்லாமல் ஒரு ஃப்ளாட்டை வாங்கிட்டு திண்டாடிக்கிட்டு இருக்கேன்.பக்கத்து வீட்ல ஒருத்தன் குளிச்சா அந்த தண்ணீ சத்தம் எங்க ஃப்ளாட் ல கேட்குது.அவ்வளவு ஏன் யாராவது நண்பர்கள் வீட்டுக்கு வந்தாக்கூட அவங்க முன்னாலே வீட்ல டாய்லட் யூஸ் பண்றதுக்குக் கூட கூச்சமா இருக்கு.'என்றான்.
தனி வீடு கட்டணும்னா இப்ப முடியுமா?'
'ஏன் முடியாது..சிடியிலே நரக வாழ்க்கைத்தான்.சிடியை விட்டு சற்று தள்ளிப்போனால் கிரவுண்ட் 2லட்சத்திலே வாங்கிடலாம்"
ஈஸ்வரன் மனம் கணக்குப் போட்டது.கையில் உள்ள சேமிப்பு..பர்வதத்தின் நகைகள் எல்லாம் சேர்த்தால் 2லட்சம் தேறும்..என்று தோன்றியது.நண்பனின் குரல்..அவரை தன்னிலைக்கு கொண்டு வந்தது.
'என்ன சொல்லுங்க..எனக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் தரகன் ஒருவன் இருக்கிறான்.சொல்லிவிடட்டுமா"
சரி என தலை ஆட்டினார்.ஈஸ்வரன்.
அடுத்த நாள் முதல் .. 'தரகர் வரேன்னு சொல்லியிருக்கார்..கிளம்புங்கன்னு விடுமுறை நாட்களில் இடங்களை பார்க்க ஆரம்பித்தனர் ஈஸ்வரன் குடும்பத்தினர்.
அன்றும்..அப்படித்தான்..ஒரு புது தரகர் வந்தார்.
நெற்றியில் சந்தனம்..அதன் கீழே குங்குமப்பொட்டு..சற்று சின்னாதான பிடித்தத்துடன் ஒரு சட்டை போட்டிருந்தார்.லுங்கி கட்டி இருந்தார்.சட்டை சிறியதாக இருந்ததால்..அவரின் மேடிட்ட வயிறு தெரிந்தது.ஈஸ்வரனுக்கு அவரைப் பார்த்ததும்..ஏனோ..கூவாகம் நினைவு வந்தது.
தரகர் சைக்கிளில் செல்ல..இவர்கள் ஆட்டோவில் பின் தொடர்ந்தனர்.
'இதோ பாருப்பா..பார்க்கிற இடத்திலே..கோவில்,பள்ளிக்கூடம்..பேங்க்,சூப்பர் மார்க்கெட்,மாவுமில்ல் எல்லாம் இருக்கணும்'என்றாள் பர்வதம்.
தரகர் இதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.
அன்றும் அவர் காட்டிய இடம் திருப்தி இல்லை.
அடுத்த வாரம்..ஒரு கிராமம் போன்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்.அந்த இடத்தைப் பார்த்ததுமே ஈஸ்வனுக்கு பிடித்துப்போயிற்று.இவ்வளவு அழகான கிராமம்..சென்னைக்கு அருகிலா..ஈஸ்வரன் வியந்தார்.
இங்கொன்றும்..அங்கொன்றுமாக வீடுகள் அப்போதுதான் முளைத்தது போல இருந்தது.வெண்மை நிற கற்கள்
அந்தந்த மனையின் அளவிற்கேற்ப நடப்பட்டிருந்தது.சில மனைகளில் புதர்களும்..செடிகளும் மண்டிக் கிடந்தது.
இன்னும் அந்த ஏரியாவிற்கு ஆர்காட் வீராசாமி வரவில்லை...அதாங்க மின்சாரம்.
'எல்லா மனையும் வித்துப்போச்சு..இன்னும் அஞ்சு வருஷத்திலே இந்த இடம் இன்னொரு தி.நகராய் ஆகிடும்'என்ற தரகர் ஒரு வெற்றிடத்தைக்காட்டி'அங்கே பஸ் ஸ்டாண்ட் வருது..பக்கத்திலே சூப்பர் மார்க்கட் சாங்க்ஷன் ஆகிடுச்சு'என்று சொன்னவாறு'ஒரு வேப்பமர நிழலை ஒட்டியவாறு இருந்த மனையைக்காட்டி'இதுதான் உங்களுடையது'என்றார்.
அவர்களுக்கு அந்த இடம் பிடித்ததா ..இல்லையா ..என்பதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல்..அவர்.. அந்த இடத்தை பத்திரம் போட்டு அவர்கள் பெயரில் பதிவு செய்திடுவார் போல இருந்தது.
ஈஸ்வரனுக்கு அந்த இடம் பிடித்திருந்ததோ..இல்லையோ..அந்த வேப்ப மரம் பிடித்திருந்தது.அதை அடுத்து சற்று தள்ளி இருந்த அரசமரம் பிடித்திருந்தது.வேப்பமரத்தில் ஓடி..பிடித்து விளையாடும் அணில்களைப் பிடித்திருந்தது.பின்னங்கால்களை ஊன்றிக்கொண்டு வேப்பம் பழத்தை கொறித்துக்கொண்டிருந்த அணில்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.மரத்தில் அமர்ந்துக்கொண்டு விசிலடித்த பறவைகளைப் பிடித்திருந்தது.மரத்தில் இருந்த பறவைகளீன் கூடுகளைப் பிடித்திருந்தது.சென்னை நகரிலிருந்து வெளியேறியிருந்த குருவிகளைப் பார்க்க முடிந்தது.
அவருக்கு..மனசுக்குள் மழை பெய்தது.திடீரென வெண்மேகங்கள் சூரியனை மறைத்தன.யானை போல தோற்றம் அளித்த மேகம் ஒன்று கிழக்கு நோக்கி நகர்ந்தது.தீடீரென அது உரு மாற்றம் அடைந்து சிறு சிறு மேகங்களாக மாறின.
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்..மயில் குயில் ஆனதடி என்ற திருப்பாவை ஈஸ்வரனுக்கு ஞாபகம் வந்தது.இயற்கையை ரசிக்க வேண்டுமென்றால்..அதற்கென்று தனி உணர்வு வேண்டும்.இயற்கையின் படைப்புகளை மனிதர்கள் எவ்வளவு தூரம் தன் சுயநலத்திற்கு அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன் தோள்களை யாரோ உலுக்குவதை உணர்ந்தவர்...தன் நிலைக்கு வந்தார்.'என்னங்க இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.இதையே வாங்கிடலாம்'என்றாள் பர்வதம்.
அதற்குள்..தரகர்..ஓடிப்போய்..அங்கு கட்டிக்கொண்டிருந்த ஒரு வீட்டுக் கிணற்றிலிருந்து ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.
'தண்ணீ குடிச்சுப் பாருங்க..கல்கண்டு போல இருக்கும்.பத்து அடியிலேயே தண்ணிர் இருக்கு..'என சொம்பை பர்வதத்திடம் கொடுத்தார்.அவள் தண்ணீரைக் குடித்துப்பார்த்துவிட்டு..'ரொம்ப நல்லாயிருக்கு..'என சொம்பை ஈஸ்வரனிடம் கொடுத்தாள்.சுவையாகவே இருந்தது.அதற்குள் அவரது மகன் தெரு நாய் இரண்டுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.அவை அவனிடம் வாலாட்டிக்கொண்டிருந்தன.
இந்த இடம் இவர்களுக்கு பிடித்துப் போயிற்று என உணர்ந்துக்கொண்டார் தரகர்.
'என்னங்க முடிச்ச்டலாமா?சென்னை முழுக்க தேடினாலும் இப்படி ஒரு இடம் கிடைக்காது...'என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.
மரத்தில் ஏதோ பறவை கிக்கி..கிக்கி என கூவிக்கொண்டிருந்தது.மரங்கொத்தியாய் இருக்குமோ..இல்லை குயிலாகத்தான் இருக்கக்கூடும்..ஈஸ்வரனுக்கு சரியாகத்தெரியவில்லை.ஆனால் அதன் கிக்கி..கிக்கி..ஓசை..இந்த இடத்தை முடித்து விடு..இந்த இடத்தை முடித்துவிடு..என அவர் காதில் ஒலித்தது.
அந்த இடம்..சுவையான நீர்,காற்று வசதி,அப்புறம்..அந்த அரச மரம்,வேப்பமரம்..அதில் வாழும் பறவைகள்..அவற்றின் சுதந்திரத்தன்மை..இங்கும் அங்கும் அவை பறக்கும் போது ஏற்பட்ட இறக்கைகளின் சப்தம்..குக்கூ என கூவும் ஓசை...அந்த இடம் அடுத்த சில தினங்களில் அவருக்கு சொந்தமானது.வீடுகட்டும் வேலை தொடங்கியது.தாராளமாக வங்கியில் கடன் கிடைத்தது.திருப்பிச் செலுத்துவது பற்றி வாங்கும்போது யாருக்கு கவலை இருக்கிறது.
*** **** ****
வீடு பாதி வேலை முடிந்ததும் ...சம்பிரதாயப்படி கிரகப்பிரவேசம் செய்துவிட்டார் ஈஸ்வரன்.கிரகப்பிரவேசத்தன்று விருந்து நண்பர்களுக்கு மட்டுமல்ல ...பறவைகளுக்கும் கூடத்தான்....அவை பயந்து பய்ந்து இலை அருகே வந்து
கொத்தி எடுத்துக்கொண்டு போய் சாப்பிட்டன.
ஒருவருடம் முடிந்துவிட்டது.வீடு முழுமை பெற்று சாவி அவரிடம் தரப்பட்டது.
ஈஸ்வரன் தன் குடும்பத்தினருடன் அந்த புது வீட்டுக்கு குடித்தனம் போக தீர்மானித்தார்.லாரியை வரவழைத்து சாமான்களை எடுத்துப்போக ஏற்பாடு செய்தார்.
அவரும் மனைவியும்,மகனும் முன்னதாக ஆட்டோவில் ஏறினர்.
வேப்பமரத்தை அடையாளம் வைத்து வீட்டை தேடியவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.அது வெட்டப்பட்டு இருந்த இடம் தெரியவில்லை.சற்று தள்ளி இருந்த அரசமரமும் வெட்டப்பட்டு அதில் வேறொருவர் வீடு கட்டிக்கொண்டிருந்தார்.
ஈஸ்வரனுக்கு திடீரென்று ஒரு குற்ற உணர்ச்சி..
அந்த அணில்களெல்லாம் இப்ப எங்கே போயிற்று?
அந்த மரத்தில் கூடு கட்டி வாழ்ந்துகொண்டிருந்த பலதரப்பட்ட பறவைகள் இப்போது எங்கே குடி போயிருக்கும்.
அந்த சின்னஞ்சிறு குக்கூ குருவிகள் எங்கே..அவற்றின் கதி என்ன?
அவ்வளவு பறவைகளின் கூடுகளையும் அழித்துவிட்டு நாம் வாழ நமக்கு ஒரு கூடா? அவற்றை கலைக்க நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
நாம் பேசத்தெரிந்தவர்கள் என்பதற்காக...பேசத்தெரியாத அந்த வாயில்லாத ஜீவன்களை விரட்டிவிட்டு......
ஈஸ்வரனுக்கு கண்களில் கண்ணீர் கொப்பளித்தது..
சொந்த வீட்டிற்கு வந்த மகிழ்ச்சியால் வந்த ஆனந்தக் கண்ணீர் அல்ல அது.

Friday, September 23, 2011

அறிமுகம்..(அரை பக்கக் கதை)

காலை அலுவலகம் கிளம்பும் வரை குழந்தை அனு எழுந்திருக்கவில்லை .
குழந்தைக்குத் தேவையான பால்,டயப்பர்,மாற்று உடை எல்லாம் எடுத்து வைத்தாள் கீதா.
சேகர்..அவளையையும், தூங்கும் அனுவையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
கிரச் சில் குழந்தையை விட்டு விட்டு..வந்த கீதாவை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் அலுவலகம் சென்றான் சேகர்
மாலை தான் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரம் ஆகும் என்ப
தால்..கீதாவை மாலை ஒரு ஆட்டோ பிடித்து கிரச் சிற்குப் போய் அனுவையும் தூக்கிக் கொண்டு வீடு செல்லச் சொல்லிவிட்டான்.
அனுவும்..மாலை கிரச் சில் ஆட்டோவை நிறுத்திவிட்டு..குழந்தையை அழைத்துவரச் சென்றாள்.
குழந்தை ஆயாவின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது.இவள் கூப்பிட்ட போது வர மறுத்து அழுதது.
"அனுகுட்டி..இது உன் அம்மாடா..சமர்த்தா அம்மா கிட்ட போ' என கொஞ்சினாள் ஆயா..
கீதாவிற்கு விழியோரம் நீர்..
'அப்பாவையே..அம்மாதான் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறாள்..என்பார்கள்..ஆனால்..இன்று கிரச் ஆயா குழந்தைக்கு அதன் அம்மாவை அறிமுகப் படுத்துகிறாளே'என்று மனதிற்குள் விம்மினாள்.

(மீள் பதிவு) 

Sunday, May 22, 2011

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..(போஸ்ட் கார்ட் சிறுகதை)

தனது ஆறாவது வகுப்பு படிக்கும் மகன் ரமேஷ் தான் சொல்வதையெல்லாம் கேட்பதில்லை என அவனது தந்தை கருணாகரனுக்கு மன வருத்தம்.

ஒரு நாள் அவனை அருகில் அமர்த்தி வைத்துக் கொண்டு..'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்றும்..தந்தை சொல்லை குழந்தைகள் மதிக்க வேண்டும் என்றும்..தந்தை சொல் மிக்க மந்திரமில்லையென்றும்..அவரது சொல்படி கேட்டால் வாழ்க்கையில் நன்கு முன்னேறலாம்' என அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தான் கருணாகரன்.

ஆனால் அவன் சொல்லிக் கொண்டிருந்தானேத் தவிர மகன் ரமேஷின் கவனமெல்லாம்...டீ.வி.யிலேயே இருந்தது.

அப்படியென்ன டீ.வி.யி. என கருணாகரன் பார்த்தபோது ..டி.வி.யில் கலைஞர்..'சன் டீவி.பங்குகள் விற்று தயாளுவிற்கு வந்த பணத்தில்..கனிமொழிக்கு இரண்டுகோடி கொடுக்கப்பட்டது.அந்த பணத்தை ஒரு தந்தை என்ற முறையில் கலைஞர் டீவியில் முதலீடு செய்யச் சோன்னேன்.நான் அன்று சொன்னதை என் மகள் கேட்டதே..இன்று அவள் திகார் சிறைக்கு கொண்டுச் சென்றுவிட்டது' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

கருணாகரன் சொன்ன அறிவுரையைக் கேட்டுவிட்டு..இச் செய்தியையும் கேட்ட ரமேஷ்..தந்தை ஏறிட்டு நோக்க ..அந்த பார்வை பல அர்த்தங்களை தந்தையான கருணாகரனுக்கு உணர்த்தியது.

Wednesday, November 3, 2010

போனஸ் (அரை பக்கக் கதை)

கடந்த பத்து நாட்களாக தீபாவளி போனஸ் கேட்டு..வேலை நிறுத்தம் செய்து, வெற்றி பெற்றனர் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள்..அந்த வெற்றி அந்நிறுவன யூனியன் தலவர் சச்சிதாநந்தனையேச் சேரும் என்றும்..ஊழியர்கள் படும் துன்பங்களை அவர் உணர்ந்து..அவர்கள் நலன் மீது கொண்டுள்ள அன்பையும் பாராட்டி ஊழியர்கள் ஒரு கூட்டம் நடத்தி அன்பளிப்பாக ஒரு பணமுடிப்பும் கொடுத்தார்கள்.
வீட்டிற்குத் திரும்பிய சச்சிதாநந்தன் ..தன் கழுத்தில் கிடந்த மாலையையும்..பணமுடிப்பையையும் மனைவியிடம் கொடுத்தார்.
மனைவி..'என்னங்க ஒரு விஷயம்' என்றாள்.
'என்ன' என அவளை ஏறிட்டார்.
'நம்ம வீட்ல வேலை செய்யறாளே சிவகாமி..அவ தீபாவளிக்கு ஏதாவது பணம் கேட்கறாங்க"
'அடி செருப்பால..அவள் செய்யற வேலைக்கு பணமா..பெரிய கம்பெனில வேல செய்யறா..போனஸ் கேட்குதாக்கும்..பைசா கொடுக்க முடியாது.வேணும்னா வேலையிலிருந்து நின்னுக்கிடட்டும்.நாம வேற ஆள தேடிக்கலாம்' என்றார்.

Sunday, October 10, 2010

வெல்டன்..காமினி (சவால்-சிறுகதை)

நியோ டிடெக்டிவ் ஏஜென்சி என்னும் போர்டை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தாங்கி நின்றது அந்தக் கட்டிடம்.
அதன் முன் பிரபல நடிகர் கார் ஒன்று வந்து நின்றது.
அவர் மகளுக்குத் திருமணம்..அடுத்த மாதம் வைத்திருந்தார்..அதற்கான அழைப்பிதழ் கொடுக்க வந்திருக்கக் கூடும் என வாயிலில் அவரைக் காணக் கூடியிருந்தக் கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.

*** ***** **** ****

வந்ததிலிருந்து சிவா சரியில்லை..காமினி உணர்ந்துக் கொண்டாள்.அவனுடன் அவளுக்கு ஒரு வாரம் தான் பழக்கம்.சிவாவிடம் தான் எதிர்பார்த்ததைக் கூறியிருந்தாள்.அதனால் தான் அவன் அப்செட்டோ என எண்ணினாள்.
'காதலும் காமமும் ஆண் பெண் இணைப்புக்கு அடிப்படை..காதல் இல்லா காமம் ருசிக்காது.அதுபோல காமம் இல்லா காதலும் இனிக்காது.காதல் மட்டும் போதுமெனில் அதற்கு ஒரு பிராணி போதும்..காமம் மட்டும் போதுமானால் அதற்கு ஒரு விலைமகள் போதும்' என்றவாறே காமினியை அணைக்கப் பார்த்தான் சிவா.
'நிறுத்து..சிவா,,நிறுத்து..என்னா ஆச்சு இன்னிக்கு உனக்கு' என்ற காமினியின் கண்களில் அது பட்டது.சிவாவிற்கு உடன் ஒரு செல்லிடை பேசி வர..அவன் எழுந்து நின்று அவளுக்குத் தெரியாமல் ஏதோ பேசினான்.
இருவரும் பெசண்ட் நகர்..எலியட்ஸ் பீச்சில் அமர்ந்துக் கொண்டிருந்தனர்.சிவாவின் கண்களில் காமத்துடன், குரோதமும் கலந்திருந்தது.அவன் பார்வை அவளது உடலின் கவர்ச்சி பிரதேசங்களை விழுங்கிக் கொண்டிருந்தது.
'நோ சிவா..இன்னிக்கு நீ சரியில்லை..நான் கிளம்பறேன்'
அப்போதுதான் தான் செய்யவிருந்த செயலை மறந்தது ஞாபகம் வந்தது அவளுக்கு.
அது எப்படி பெண்களுக்கு உடனே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி வந்து விடுகிறது.
காமினியின் பின்னாலேயே..'காமினி..காமினி..ஐ ஆம் சாரி' என ஓடினான் சிவா..அப்போதும் அவனது செல்லிடைபேசி அலறியது.அதை எடுத்துப் பேசப் பேச அவன் முகம் மாறியது.
அந்த நேரம் பார்த்து சுண்டல்காரப் பையன் 'சார் சுண்டல் என்றான்"
'டேய்..என் பொழப்பு உனக்கும் கிண்டலாப் போச்சு இல்ல" என அவன் மீது எரிந்து விழுந்து விட்டு..தனது பைக் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தான்.காமினி மௌனமாக அதன் மீது அமர்ந்திருந்தாள்.
'சாரி, காமினி..மன்னிச்சுடு..இனிமே இப்படி நடக்க மாட்டேன்'
'சரி..சரி..வண்டியை எடு 'என்றாள் காமினி.
சிவா..வண்டியை ஸ்டார்ட் செய்ய..தன் உடல் அவன் மீது படாமல் ஜாக்கிரதையாக இருந்தாள்.ஆனால்..சென்னை நகர வீதி அந்த ஜாக்கிரதை உணர்வை சட்டை செய்யவில்லை.
தன் கோபத்தையெல்லாம் சிவா..வண்டியில் காட்ட வண்டி சீறிப் பாய்ந்தது.
அடையாறு சிக்னலில் வண்டி திரும்பும் போது..எதிரே வந்த லாரியின் மீது பைக் பயங்கரமாக மோத..இருவரும் வீசி எறியப்பட்டனர்.
சிவாவை ஹெல்மெட் காப்பாற்ற ..காமினி விழுந்த வேகத்தில் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
விபத்தை வேடிக்கைப் பார்த்த கும்பலிலிருந்து ..ஒருவர் காமினியையும்,சிவாவையும் ஆட்டோவில் ஏற்றி..பக்கத்திலிருந்த மருத்துவ மனைக்கு அழைத்து வந்தார்.
சிவாவிற்கு புற நோயாளிப் பிரிவில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த நேரத்தில்..காமினி ICU வில் அனுமதிக்கப் பட்டாள்.பின் ICUவெளியே வந்து அமர்ந்தான் சிவா.....
நடு இரவு நெருங்கிக் கொண்டிருந்தது..ஜன சந்தடி அடங்கியது..
திடுமென காமினி கண் விழித்தாள்..'காமினி..உன்னைக் காப்பாற்றிக் கொள்..காப்பாற்றிக் கொள்..' என மனதில் ஒரு குரல் எச்சரித்தது..
இரவு டூட்டி டாக்டர் உள்ளே நுழைந்து..நோயாளிகளின் கேஸ் ஷீட்டுகளை நோட்டம்விட்டு விட்டு..தன் கடமை முடிந்ததாக வெளியேறினார்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்....கொரியன் பச்சை பஞ்சு மெத்தையாய் தாங்கிக் கொண்டது அவளை.
எழுந்து ஓடத் தொடங்கினாள்..ஆங்காங்கே நாய்கள் குரைக்கத் தொடங்க..திடீரென விழித்தான் சிவா..
ஓடிக்கொண்டிருந்த காமினியைப் பார்த்துவிட்டு , அவளை துரத்த ஆரம்பித்தான்..இரவு ரோந்து போலீஸ் வேன் ஒன்று அவர்களைப் பார்த்துவிட்டது..யாரோ பெண் ஓட ஆண் துரத்துகிறான்.கண்டிப்பாக ரேப் கேஸ் தான் என ஜீப்பைத் திருப்பச் சொன்னார் அதிலிருந்த காவல் அதிகாரி.
அடையாறின் ..சின்னச் சின்ன சந்துகளில் காமினி ஒட..சிவா துரத்த..அவர்கள் நுழைந்த தெருவில் எல்லாம் போலீஸ் ஜீப் நுழைய முடியாததால் போலீஸ் அதிகாரியும் இறங்கி ஓட..ஆங்காங்கே தென்பட்ட மக்கள் சினிமா சூட்டிங் என எண்ணினர்.
அவளைப் பிடித்துவிட்டான்...தன் பையிலிருந்த ரிவால்வரை எடுத்து.."சாரி..எனக்கு வேற வழி தெரியலை' என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.'என்னைப் பற்றி எல்லா விஷயமும் உனக்குத் தெரியும் என நான் அறிவேன்..நாம் கடற்கரையில் இருக்கையில் என் நண்பன் ஒருவன் செல்ஃபோனில் தெரிவித்து விட்டான்..நீயாரென"
டெலிஃபோன் மணி போல அந்த நேரமும் சிரித்தாள் காமினி..'சிவா.. நீ திருடி வந்த டைமண்ட் விஷயம் எனக்குத் தெரிந்துவிட்டது..நீ கடற்கரையில் என் மீது காம வயப்பட்டிருந்த போது..உன் பையிலிருந்த ரிவால்வர் கீழே விழ..அப்போது உனக்கு செல்லிடைப்பேசி வந்தது.உன் கால்சட்டையிலிருந்து விழுந்த ரிவால்வரைலிருந்து குண்டுகளை எடுத்து விட்டு மீண்டும் உன்னிடம் வெறும் ரிவால்வரைக் கொடுத்தேன்.அதை நீ கவனிக்க வில்லை.பின் நீ பிதற்ற ஆரம்பித்ததும்..நான் மன்னித்தது போல நடித்தேன்.கோபித்து வந்து உன் பைக்கில் அமர்ந்த நான் சைட் பேக்கில் இருந்த டயமண்ட் கற்களையும் எடுத்துக் கொண்டேன்' என்றாள்.
ஒரு நிமிடம் அதிர்ந்தான் சிவா..உடன் தன் பலத்தை உபயோகித்து அவளை துன்புறுத்த ஆரம்பித்தான்..அப்போது ஒரு கார் வர ஒடி ஒளிந்தான் சிவா.துரத்தி வந்த போலீஸ் அதிகாரியைக் காணோம்.இதைவிட பெரிய வேட்டைக் கிடைத்து விட்டதோ?அல்லது..இவர் ரேப் செய்ய கேஸ் கிடத்துவிட்டதோ..தெரியவில்லை
வந்த கார் அருகே நிற்க காமினி காரில் ஏறிக் கொண்டாள்.
**** **** **** ****
டயமண்டை திருடிய என் உறவுப் பையனிடமிருந்து..திரும்பிப் பெற்று என்னிடம் ஒப்படைத்தற்கு நன்றி என்றார் பிரபல நடிகர்.என் மகள் திருமணத்திற்கு வைர மாலைக்காக நான் வாங்கிவைத்திருந்த வைரங்கள் அவை..இந்த திருட்டு போலீசிற்குத் தெரிந்தால்..என் உறவு பையன் பெயர் கெடுவதோடு..எனக்கு வருமான வரியினரிடமிருந்து தேவையில்லா சிக்கல்கலும் வந்திருக்கும்..உங்களுக்கு நன்றி..என்றார் நடிகர் நியோ டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர் பரந்தாமனிடம்.
அந்த பாராட்டு காமினிக்குத்தான்..சிவாவிடமட்டுமல்ல ,போலீசாரிடம் இருந்தும் டயமண்டை காப்பாற்றி இருக்கிறாள், 'வெல்டன் காமினி.போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டயமண்டைக் கொண்டு வந்துவிட்டியே!" என பாராட்டினார் பரந்தாமன்

Monday, July 26, 2010

கதையான போதிலும்....கருத்துள்ள பாடமே...

ஒரு ஊரில் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி இருந்தது...அதைப்பார்த்த ஓநாய் ஒன்று அதை இரையாக்கிக்கொள்ள தீர்மானித்தது.

ஒரு நாள் அந்த ஆட்டுக்குட்டி..ஓடிவரும் ஆறின் சரிவில் நீர் அருந்திக் கொண்டிருந்தது.மேல் பகுதியில் வந்து தண்ணீர் அருந்துவது போல பாவனை செய்த ஓநாய்..திடீரென ஆட்டைப் பார்த்து 'ஏன்..இப்படி தண்ணீரை கலக்குகிறாய்"என்று அதட்டிக் கேட்டது.

ஓநாயைப்பார்த்து பயந்த ஆடு..'நான் எப்படி தண்ணீரை கலக்க முடியும்..நீங்கள் குடித்த பின்னர் தானே நீர் எனக்கு வருகிறது?" என்றது.

ஆட்டின் பதிலைக்கேட்டதும்..ஓநாய்..'நீ கலக்கா விட்டால் என்ன?..முன்னர் உன் அப்பன் கலக்கி இருப்பான்...அதற்கும் முன்னால் உன் பாட்டன் கலக்கி இருப்பான்..உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாது'என்றபடியே ஆட்டின் மேல் பாய்ந்து, அதை அடித்துக் கொன்றது.

நீதி - நம் நியாயம்..எடுபடாது..என்ற நிலையில்..ஒதுங்கி செல்வதே..நல்லது.

Tuesday, May 11, 2010

கத்தியின்றி..ரத்தமின்றி.. (சிறுகதை)

தன்னுடைய திட்டம் பூமராங்காக தன்னையேத் தாக்கும் என சுந்தரம் நினைக்கவே இல்லை.

அவனுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன.

அவனது தாயார் மதுரமும்..மனைவி உமாவும் சென்ற வாரம் வரை ஒரு நாள் கூட தகராறு செய்யாமல் இருந்ததில்லை..

மருமகள் எது செய்தாலும் ..அதில் குறைகள் கண்டு பிடிப்பதே மாமியாரின் வேலையாகவும்..மாமியார் சொல்லும் சாதாரணமான விஷயத்தில் கூட உள்ளர்த்தம் இருப்பதாக மருமகளுக்கும் தெரிந்தது.

மாலை..அலுவலகத்திலிருந்து திரும்பும் சுந்தரம் நீதிபதியாக மாறி அவர்கள் வாதங்களைக் கேட்டு சமாதானப் படுத்த முயலுவான்..

பெரும்பாலும் அவன் தீர்ப்பு சாலமன் பாப்பையாவின் தீர்ப்புப் போலவே இருக்கும்..ஆனால் ..போன வாரம்..வந்த அமாவாசை அன்று சாதாரணமாக புகைந்துக் கொண்டிருந்த ..மாமியார்..மருமகள் சண்டை தீப்பற்றி எரியவே ஆரம்பித்து விட்டது..

அமாவாசை இரவுகளில்..தன் கணவன் இறந்தது முதல் டிஃபன் மட்டுமே சாப்பிடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தாள் மதுரம்.

ஆனால்..அன்றைய தினம் எந்த டிஃபனுக்கும் மாவு அரைத்து வைக்கவில்லை..அது தெரிந்ததும்..அவளைக் கடுமையாகக் கண்டித்த மதுரம்..'சரி..சரி..பொங்கல் செய்து விடு' என்றாள்.

பொங்கலை ஒரு டிஃபனாக ஒப்புக் கொள்ளாத உமா' அரிசியும், பருப்பும் சேர்ந்து வெந்த பொங்கல் ஒரு டிஃபன்னா..சாதமும்..சாம்பாரும் கூட டிஃபன் தான்' என்றாள் நக்கலாக.

அவ்வளவுதான்..

எல்லைக்கோட்டைத் தாண்டிவிட்ட எதிரிப்படைகள் போல அவர்களுக்குள் சண்டை மூண்டது.

அவர்களது இந்த வழக்கிலும் ..சுந்தரம் புகுந்து சமாதானப் படுத்தியதுடன்..மனைவியைத் தனியாக அழைத்து..'உமா.. அம்மா ஏதாவது சொன்னால்..அதற்கு பதில் சொல்லாமல்..வாயை மூடிக் கொண்டு இருந்து பாரேன்..அப்புறம்..அம்மா..என் மருமகள் போல உண்டான்னு உன்னை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு புகழ்வார்' என்றான்.

உமாவிற்கு..அப்போது சுந்தரத்தைப் பார்க்க பரிதாபமாக இருந்ததால்..'சரி, இனி நான் வாயை திறக்கவே மாட்டேன்' என்றாள்..

ஒரு வாரம் ஓடி மறைந்தது..வீட்டில் அமைதியோ..அமைதி..

சுந்தரத்திற்கோ அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தால்..நிம்மதி..ஆனால் அந்த நிம்மதி அன்றுடன் முடியப் போகிறது என அவன் அறியவில்லை.

மாலை..விடு திரும்பியவனிடம்..அவனது அம்மா..'எனக்கு எப்படி ஒரு மருமகள் வந்து வாய்ச்சிருக்காள் பாரு..நான் எதைச் சொன்னாலும்..ஒரு பதிலைக் கூடச் சொல்லத் தெரியாத ஒரு மண்டூகம்..உடம்பில ஒரு சூடு ..சுரணை வேண்டாம்..?உப்புப் போட்டுத்தான் சாப்பிடறாளோ..? இல்லை.." என்றாள்.

சுந்தரத்திற்கு..இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை..

ஆனால்..

அடுக்களையில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமா..பாத்திரங்களை உருட்டி..தான் போருக்கு தயாராவதை உணர்த்தினாள்.

Saturday, December 26, 2009

இலவசம்..இலவசம்..தேவையா?

பக்கத்து வீட்டிற்கு வந்த செய்தித்தாளை இரவல் வாங்கி படிக்கும் போதுதான்..அந்த போட்டி பற்றிய அறிவிப்பை படித்தேன்.இலவசங்கள் தேவையா? என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதச் சொல்லி இருந்தார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை யாக வேறு இருந்ததால்..என்னை நண்பன் ஒருவன் சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்..அவனுடன் சாப்பிட்டவாறே இப்போட்டியைப் பற்றிக் கூறினேன்.அவன் கண்டிப்பாகக் கலந்துக் கொள் என்றான்..அப்போதுதான் மேசையில் கிடந்த பேனாவைப் பார்த்தேன்.அதைக் கையில் எடுத்து அதையும், நண்பனையும் மாறி மாறி பார்த்தேன்.வேணுமானால் வைத்துக் கொள் என்றான்.பதிலுக்கு 'நன்றி' என்றவாறே என் சட்டையில் அப்பேனாவைக் குத்திக்கொண்டேன்.

அடுத்த நாள்..அலுவலகம் வந்ததும்..மேசையைத் திறந்து இரண்டு வெள்ளைத்தாள்களை எடுத்தேன்.

'இலவசம்' பற்றி என்ன எழுதுவது..என்று யோசித்த படியே..பக்கத்து மேசை ரகுவைப் பார்த்தேன். தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து ஆடாக மாறி இருந்தான்.அவனிடம் சென்று..இரண்டு வெற்றிலையையும்,சீவலையும் எடுத்து வாயில் போட்டு மென்றவாறே என் இருப்பிடம் வந்து கற்பனை ஆமையை (எவ்வளவுநாள் குதிரை என்று சொல்வது..மேலும்..எனது கற்பனை மெதுவாகவே வருவதால்..ஆமை என்பதே சரி) தட்டிவிட்டேன்.

பொங்கலுக்கு அரசு இலவசமாகத் தரும் வேஷ்டி..சட்டைப் பற்றி எழுதலாமா? இல்லை நண்பகல் இலவச உணவு பற்றி..வேண்டாம் ..வேண்டாம் ..அது குழந்தைகளுக்கு..அதில் கை வைக்க வேண்டாம்.இலவச சைக்கிள் ,இலவச டி.வி., இலவச நிலம் ..எதைப் பற்றி எழுதுவது?

ஆமை ஓட மறுத்தது..

அந்த சமயம் அலுவலகம் கொடுக்கும் இலவச தேநீர் வந்தது.அதைக் குடித்துவிட்டு..வெளியே வந்தேன்..வெளியே நண்பன் ஒருவன் புகைத்துக் கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிகரெட் ஓசி வாங்கினேன்..அவனே பற்றவும் வைத்தான்.சிறிது நேரம் அரட்டை அடித்தேன் அவனிடம்.திரும்ப மேசைக்கு வந்தேன்.

எண்ணம் இலவசம் பற்றியே இருந்ததால்..அலுவலக வேலை ஓட மறுத்தது..மதியம் ஒரு மணி..

பக்கத்து மேசை ரகு..சாப்பிடப் போகலாமா? என்றான்.உடன் தலையாட்டினேன்.ஏனெனில்..அவன் யாரிடமும் எதையும் இலவசமாக பெறமாட்டான்..நான் ஹி..ஹி..ஹி..

அதைத் தவிர ரகு..அவனோடு யார் வந்தாலும்..அவர்களுக்கு செலவு செய்வான்..(பிழைக்கத் தெரியாதவன்)

சாப்பிட்டுவிட்டு..வந்ததும் மேலதிகாரி கூப்பிட்டு வங்கிக்குச் சென்று..கவனிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றைச் சொன்னார்.'மிகவும் அவசரம்..வண்டியில் சென்று விடுங்கள்'என்றார்.

'சார்..நான் இன்று வண்டி கொண்டுவரவில்லை' என ஒரு சின்ன பொய்யைச் சொன்னேன்.'சரி..சரி..ஆட்டோவில் சென்று விடுங்கள்' என்றார்.அப்பாடா..நூறு ரூபாய் கிளைம் பண்ணலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.வங்கி வேலைகளை முடித்துவிட்டு..திரும்ப மணி நாலாகிவிட்டது.இனி எழுதினாற்போலத்தான்..என எண்ணிய போது..நண்பன் ஒருவன் தொலைபேசினான்.அன்று மாலை திரைப்படம் ஒன்றிற்கு இரண்டு டிக்கட் இருப்பதாகவும்..வருகிறாயா? என்றான்..

கரும்பு தின்னக் கூலியா? 'சரி' என்றேன்.அலுவலகம் விட்டு கிளம்பும் போது ஞாபகமாக வெள்ளைத்தாள்களை எடுத்துக் கொண்டேன்.

சினிமா..இரவு டின்னர் எல்லாம் நண்பன் செலவில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததும்..எழுதத் தொடங்கினேன்...

"ஏழைகளுக்கு..இலவசம்..இலவசம் என்று கொடுத்து அரசு அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டது..' என ஆரம்பித்தேன்....

Tuesday, December 15, 2009

என்னவாயிற்று ஹுசைனிற்கு? (ஒரு பக்கக் கதை)

நான் ஒரு இந்தியன் என வார்த்தைக்கு வார்த்தைக் கூறி பெருமைப்பட்டுக் கொள்பவன் ஹுசைன்.

அரசின் தாராளமயமாக்கல் கொள்கையில் பல வெளிநாட்டுப் பொருள்கள் இந்தியாவில் கிடைத்தாலும்..ஹுசைன் தரம் பற்றிக் கூடக் கவலைப் படாமல் இந்திய பொருள்களையே வாங்குவான்.கேட்டால்..இது இந்திய தயாரிப்பு..என் சகோதரன் ஒருவன் கையால் உருவாக்கப்பட்டது..பி இந்தியனாய் இருந்தால் மட்டும் போதாது..பை இந்தியனாய் இருக்க வேண்டும் என்றும் கூறுவான்.

அப்படிப்பட்டவனுக்கு திடீரென என்னவாயிற்று என்று தெரியவில்லை..'நான் ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்றிருக்கிறது..நான் பாகிஸ்தானில் பிறந்திருக்கக் கூடாதா ?' என்று சிறிது நாட்களாக புலம்ப ஆரம்பித்திருந்தான்.

'சுதந்திரம் கிடைத்ததும் ..என் முன்னோர் பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு குடி உரிமை பெற்றிருக்கலாமே..தவறு செய்து விட்டார்கள்' என்றான் ஒருநாள் என்னிடம்..கண்களில் முட்டிக் கொண்டிருக்கும் கண்ணீருடன்.

இவ்வளவு நாட்களாக இந்தியன் என்று பெருமையாகப் பேசியவனை எது மாற்றியது..என அறியாது திகைத்தேன் நான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை..

ஹுசைனைப் போய் பார்க்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல..பெரம்பூர் ஜமாலியாவிற்குச் சென்றேன்.

வாசல் வழியாகவே வந்து என்னை வரவேற்றான்..அவன் மனைவி ரஷீதாவிற்கு குரல் கொடுத்தான்'ரஷீதா குமரன் பாயி வந்திருக்கார் பாரு".ரஷீதா வந்து 'கைசே ஹோ பாயி?'என்றாள் கையில் சாய் உடன்.

அவனது இரண்டு வயது மகன்..ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் குட்டிப்பையனைப் போல..அப்படியே சாப்பிடுவேன் போல..இருந்தான்.அவனுடன் சிறிது நேரம் விளையாட ஆரம்பித்தேன்.

'குமரா..இவனுக்கு இதயத்தில் கோளாறு..ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யணுமாம்..கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் செலவாகுமாம்..அதற்குத்தான் என்ன செய்யறதுன்னு தெரியலை" என்று மனம் திறந்தான் ஹுசைன் என்னிடம்.

அப்படியா? என்று கேட்டுவிட்டு..அவனது வருத்தம் தோய்ந்த முகத்தைப் பார்க்க முடியாது என் பார்வையை டீபாய் மீது இருந்த ஒரு பழைய செய்தித்தாள் மீது செலுத்தினேன்.

'பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தை ஒன்றுக்கு இலவச இருதய மாற்றுச் சிகிச்சை..சென்னை மருத்துவர்கள் சாதனை' என்று கொட்டை எழுத்துக்களில் இருந்த செய்தி கண்ணில் பட்டது.

ஹுசைனின் திடீர் மன மாற்றத்திற்கான காரணம் புரிந்தது.

Thursday, November 12, 2009

ஃபோன் அழைப்பும் ..அஞ்சு லார்ஜும்

காலை மணி எட்டு

இரவு முழுதும் தூக்கம் வரவில்லை.குமட்டிக் கொண்டே இருந்தது.கண்களில் எரிச்சல்...கண் மூடிக் கிடந்தேன்..சற்று விழித்தாலும் இமைகளின் பாரம் கண்களை அழுத்தியது.

நடு ஹாலில் மனைவியின் பேச்சுக் குரல் கேட்டது. 'அடிப்பாவி..காலங்கார்த்தால ஃபோன் போட்டு வரவழைச்சுட்டாளோ'

உள்ளே கொஞ்ச நஞ்ச மிச்சமிருந்த போதையும் திடீரென இறங்கியது.தலைக்குமேல் மின் விசிறி சுற்றியும்..வியர்த்தது.

எப்படிப் போய் அவர் முகத்தில விழிப்பது.எழுந்ததும் வேகமாக அவசர வேலை இருக்கிறது என கிளம்பிடலாமா?..அதுவும் முடியாதே..ஞாயிற்றுக்கிழமை ஆயிற்றே!

சே..

கீதா உள்ளே வந்தாள்.'உங்க கிட்டே அவங்க பேசணுமாம் ..' என்றாள்.

படுத்தவாறே சற்று கண்களைத் திறந்து..'என்ன திடீர்னு வந்திருக்கார்?' என்றேன்..ஏதும் தெரியாதவன் போல.கடுமையாக என்னைப் பார்த்தாள் கீதா..அவளது கண்கள் சிவந்திருந்தன..அவளும் தூக்கமில்லாமல் இருந்திக்க வேண்டும்..அல்லது அழுதிருக்க வேண்டும்..கன்னம் சற்று வீங்கி இருந்தது.

'நான் தான் ஃபோன் போட்டு வரவழைத்தேன்' என்றாள்..என் முகம் இறுக..'சீக்கிரம் வாங்க டிபன் சாப்பிட ' என்றபடியே வெளியேறினாள்.

எழுந்து பாத்ரூமிற்குப் போனேன்..

இப்போது என்ன ஆகி விட்டது என பஞ்சாயத்துக் கூட்டியிருக்கிறாள்.நேற்று உடன் வேலை செய்பவர் ஒருவர் வீட்டு திருமண ரிஷப்சன் சென்றிருந்தேன்.உடன் வந்த நண்பர்கள்..ஆசையைத் தூண்டிவிட..ஒரு லார்ஜ்..இரண்டு லார்ஜ்..என மட மட வென ஐந்து லார்ஜ் பொன்னிற திரவத்தை குடித்துவிட்டேன்.வெறும் வயிற்றில் சாப்பிட்டிருக்கக் கூடாது.தொடர்ந்து கல்யாண வீட்டு டின்னர் முடிந்ததும்..வயிறு கடமுடா பண்ண..தலை கனக்க..குமட்டல்..வாந்தி வருவது போல இருந்தது.

எப்படியோ..ஒரு ஆட்டோவைப் பிடித்து..ஆட்டோவிற்கு எவ்வளவு பணம் கொடுத்தேன்..50 ஆ 100 ஆ..

வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியதும்..கீதா கதவைத் திறந்தாள். அதற்கெனவே காத்திருந்தது போல 'குபுக்' என வாந்தி..மதுவாடை..யுடன்.

'குடித்துவிட்டு வந்திருக்கீங்களா" என அலறினாள் அவள்.அத்துடன் நில்லாது..என்னை பரம்பரைக் குடிகாரான் போல எண்ணி அழ ஆரம்பித்தாள்.

'சீ..வாயை மூடு..'என கன்னத்தில் பளாரென அடித்தது லேசாக ஞாபகம் இருக்கிறது..பின் அவள்..'கார்த்தால உங்களுக்கு வெச்சுக்கிறேன்' என்றாள்..

பாவி அதற்காக இப்படியா செய்வாள்.

ஷவரை திறந்து நின்றேன்..வந்தவர் முகத்தில் எப்படி விழிப்பேன்..ஏதாவது கேட்டால்..கோபம் வந்து எதுவும் சொல்லிவிடக் கூடாது.அது ஒரு பெண்ணின் வாழ்வையே பாதிக்கலாம்.வார்த்தையில் சற்றுக் கடுமையைக் காட்டினால்..வேண்டாம்..வேண்டாம்..என் பர்சனல் மேட்டர்ல தலையிடாதீர்கள் என்றால்...

இப்படி பலவற்றை எண்ணியபடியே..குளித்து முடித்தேன்..உடலில் சற்று தெம்பு வந்தாற் போல இருந்தது.

டைனிங் டேபிள் பக்கம் வந்த நான்..அங்கு தயாராய் அமர்ந்திருந்தவரிடம்..'வாங்க..எப்போ வந்தீங்க? என்ன திடீர்னு?' என்றேன்.

பதிலுக்கு ஒற்றைவரியில் 'நல்லா இருக்கீங்களா" என்று மட்டுமே கேட்டார்.

சூடான பொங்கல்..வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது. இறுக்கமான சூழ்நிலை..

அதைக் கலைத்தவராக..'ஒண்ணுமில்ல..நேர்த்திக் கடன் ஒன்னு பாக்கி இருக்கு..அதை முடிச்சுடணும்னு' என்றார்.

'என்ன நேர்த்திக் கடன்..' என்றவாறே கீதாவின் முகம் பார்த்தேன்.முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

'கல்யாணம் முடிந்ததுமே..குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரணும்னு..அதுதான்..உங்களுக்கு லீவ் கிடைக்கும்னா நாளைக்கே போயிட்டு வந்துடலாம்..நேத்திக்கே அத்தைக் கிட்ட கேட்டேன்..இன்னிக்கு காலைல ஃபோன் பண்ணி..உங்க கிட்ட சொல்லச் சொன்னாங்க..நான் தான் ஞாயிற்றுக் கிழமை ஆச்சேன்னு..நேர்ல வந்தேன்'

'அதனால என்ன மாப்பிள்ள..நல்ல காரியம் நாளைக்கே போகலாம்..'இன்னும் கொஞ்சம் பொங்கல் வைச்சுக்கங்க' என்றபடியே கீதாவை பார்க்க..

அவள் என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.

Saturday, October 24, 2009

காதலாவது ...கத்திரிக்காயாவது...(சிறுகதை)

தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

Sunday, October 18, 2009

பூவா...தலையா...(சிறுகதை)

தன் வீட்டின் படுக்கையறையின் கதவுகளைத் திறந்தாள் உமா.,வெளியே விளையாட்டுத்திடல்.

அங்கே சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட இரு குழுக்களாகப் பிரிந்தனர்.

ஒரு சிறுவன் தன் கையில் வைத்திருந்த காசை பூவா..தலையா போட்டு எந்தக் குழு முதலில் விளையாடுவது என்பதைத் தீர்மானித்தான்.

இரு சிறுவர்கள் நடுவர்களாக நிறுத்தி வைக்கப் பட்டனர்.பூவா தலையாவில் வென்ற குழுத்தலைவரான சிறுவன் மற்றவனிடம்..'டேய்..நீ சச்சின்..நான் சேவாக், நாம தான் ஆரம்ப ஆட்டக்காரர்கள்' என்றான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உமாவின் கண்களில் கண்ணீர் கொப்பளித்தது.அந்தச் சிறுவர்கள் கூட்டத்தில் தன் பையனும் இடம்பெறும் நாள் வராதா...அவன் மனம் ஏங்கியது.

கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஓடி விட்டன.இந்தக் கேள்வி இப்பொழுதெல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டது.

உமா...அந்த நாளை நினைத்தாள்.

நந்திதா மகப்பேறு மருத்துவ நிலையம்

'பாராட்டுக்கள்...'உமாவை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் கூறினார்..'இரண்டு மாதம் முடிந்துவிட்டது.'

உமாவிற்கும்..அவள் கணவன் சிவாவிற்கும் பகீரென்றது.

சுவரில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை உதட்டில் விரலை வைத்து 'சூ...சப்தம் போடாதீர்கள்' என்றது.

எதை வேண்டாம்...வேண்டாம் என கல்யாணமாகி ஒரு வருடம் வரை தள்ளிப்போட்டார்களோ அது நடந்துவிட்டது.

'மாதம் தவறாமல் பரிசோதனைக்குக் கூட்டிக்கிட்டு வந்திருங்க' என்ற மருத்துவரிடம் 'சரி' என்பது போல தலையை அசைத்தான் சிவா.

பின் உமாவிடம் சில ஆலோசனைகளைக் கூறினார் மருத்துவர்.

அவர்கள் திரும்பிவரும்போது வழக்கத்துக்கு விரோதமாக எதுவுமே பேசாமல் வந்தனர்.

வீட்டை அடைந்ததும்..உமாவை இறக்கிவிட்டுவிட்டு 'நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்' என அவள் பதிலுக்குக் காத்திராமல் விரைந்தான்..

வீட்டுக்குள் சென்று..சோர்வுடன் அமர்ந்த உமாவின் கைகள் அனிச்சையாகத் தொலைக்காட்சியை இயக்கியது.

'பொதிகை' தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவர் ஒருவர் மகப்பேறு பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.

'இரண்டாம் மாதம் வெறும் சதைப்பிண்டமாகத்தான் இருக்கும்' அவர் சொன்ன இந்த வரிகளைத் தவிர வேறு ஏதும் அவள் காதுகளில் விழவில்லை.

சிவா வண்டி திரும்பும் ஓசை கேட்டது.

அவள் எழுந்து விளக்குகளைப் போட்டாள்.குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பாலை எடுத்து காபி போடத் தயாரானாள்.சிவா எப்போதும் வெளியே சென்று வந்தால் காபி சாப்பிடுவது வழக்கம்.

நேரே சமையலறைக்கு வந்தவன் 'உமா..இப்போது நமக்குத் தேவையா?' என்றான்.

இன்னும் இரண்டு வருடங்களாவது தள்ளிப் போடணும்னு நினைச்சோம்...என்றவளின் குரல் தழுதழுத்தது.

'நான் சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே..' என்றான். 'கலைச்சுடலாம்' என்றான்.பின்னர் மெதுவாக 'என்னுடைய மருத்துவ நண்பன் ஒருவனிடம் சொல்லி இந்த மாத்திரைகளை வாங்கி வந்தேன்.மூன்று வேளை சாப்பிட்டால் போதும்...'

இரண்டாம் மாதம் வெறும் சதைப்பிண்டம் தானே என அவளும் இதற்கு சம்மதித்தாள்.

எட்டு மாதங்கள் கழித்து...கைகளையும்..கால்களையும் ஆட்டி...அழுது..சிரித்து.. பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஊட்ட வேண்டிய அந்த உயிர் சிதைந்தது.

பத்து வருடங்கள் பறந்துவிட்டன..

கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

'அன்று அப்படி சம்மதித்தது தவறோ...?' தவறு எனில் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எந்தக் குழந்தையும் தவழ்ந்து விளையாடாத காலி மைதானமாகவா ஆகவேண்டும் வீடு..

நீண்ட நேரம் யோசித்தாள்.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் நடுவே ஒரு விளம்பரம்..

'சென்னை அருகே இருந்த குழந்தைகள் குருகுலம் ஒன்று பற்றிச் சொல்லிவிட்டு...வர இருக்கும் பண்டிகையை நாம் இவர்களுடன் கொண்டாடுவோம்' என்றார் அந்தப் பிரபல நடிகர்.

அவர் நடுவில் இருக்க..அவரது வலப்புறமும்..இடப்புறமும் நிற்கும் குழந்தைகளைக் காட்டிக்கொண்டிருந்தது ஒளிக்கருவி.

திடீரென..இதில் ஒரு முகம் உமாவிற்கு பிடித்துப் போயிற்று.எவ்வளவு அகன்ற கண்கள்...தான் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் கைகளை...இங்கும்..அங்கும் வீசிக்கொண்டு அவன் என்ன செய்கிறான்..?

கிரிக்கெட்டா விளையாடுகிறான்?

ஓங்கி அவன் பந்தை அடிப்பதுபோல இருந்தது உமாவிற்கு.

உமா ஒரு முடிவிற்கு வந்தாள்.

பூவா...தலையா...போட்டாயிற்று..

அவளது வீட்டில் விளையாட..தொடக்க ஆட்டக்காரன் ஒருவனைத் தேர்வு செய்துவிட்டாள்

Wednesday, September 30, 2009

நீங்க போட்ட எட்டு..(சிறுகதை)

(மீள்பதிவு)