Tuesday, February 23, 2016

இருந்தால் நன்றாயிருக்கும்...(சிறுகதை)தன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ்.
கிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர்
ஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி
செய்து..டாக்டர் பட்டம் வாங்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு
ஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
அவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா'
'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன்.
பிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்'
ஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான்
ஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக.
'சரி..உன் ஆசையைக் கெடுப்பானேன்..நீ முயற்சி செய்..ஆனால் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் இருந்து வரும்
நம்பிக்கை கடவுள் பக்தி.எந்த ஒரு காரியத்திற்கும்..அது முதல் நம்பிக்கை ஆகும்'
'இல்லை சார்..நீங்கள் சொல்லும் அந்த நூற்றாண்டுகளில்..அதைப்பற்றி அபிப்ராயபேதங்களும்..இருந்திருக்கின்றன'
'குமார்..எனக்குத் தெரிந்தவரை..சிவன் பெரியதா..சக்தி பெரியதா..சைவம் பெரியதா..வைஷ்ணவம் பெரியதா..இப்படித்தான்
அபிப்பிராய பேதங்கள் இருந்திருக்கின்றன.நீ சொல்லும்..அந்த அடிப்படையிலேயே மறுப்பு சென்ற நூற்றாண்டில்தான்
ஏற்பட்டிருக்கிறது என நினைக்கின்றேன்'
'சார்..இது சம்பந்தமாக அனேக புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.கடவுளை மறுத்த பெரியாரின்
சிந்தனைகளையும் படித்து வருகின்றேன்..நாயன்மார்கள்..ஆழ்வார்கள் சொன்னதை படிக்கிறேன்..'
பேச்சை..திசைதிருப்ப எண்ணிய பேராசிரியர்'சரி..இப்போ உன்னைப் பற்றி சொல்.உனக்கு திருமணமாகிவிட்டதா,
குழந்தைகள் உண்டா?'
'சார்..எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இது நாள் வரை குழந்தைகள் இல்லை..இப்போதுதான் என் மனைவி
7 மாத கர்ப்பம்'என்றான்.
'பாராட்டுகள்' என்றார் பேராசிரியர்.
'ஏன் சார்..நீங்கள் சொல்லும் கடவுள் இருந்திருந்தால்..அந்த ராமர் கடவுள்தானே..அவர் ஏன் சிவ பக்தனான ராவணனை
அழிக்க வேண்டும்.சிவ பக்தனான ராவணனுக்கு சிவன் ஏன் முதலிலேயே அறிவுறித்தி பிறன் மனை விழையாமையை
உணர்த்தி..அவனை சீதை மேல் ஆசை வராமல் தடுத்திருக்கலாமே'
'அது இதிகாசம்..மேலும்..ராமர்..சீதை இவர்கள் பூமியில் அவதரித்ததுமே மனிதர்கள்.இறைவன் இல்லை'
'சரி அது போகட்டும்.தன் மாமன் கம்சனைக்கொல்ல ..கிருஷ்ணன் அவதரித்தான்..பின் அவனே பாண்டவர்களுடன்
சேர்ந்து கௌரவர்களை அழித்தான்..திரௌபதியை துகில் உரித்தபோது உடன் காப்பாற்றவரவில்லை.நீ என்னை முற்றிலும்
நம்பாமல் கைகளால் மறைத்திக்கொண்டிருந்தாய்.எப்போது என்னை நம்பி..கைகளை உயர்த்தினாயோ அப்போது உதவிக்கு வந்தேன்
என்பது..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒரு sadist என்று ஆகவில்லையா?'
'கடவுளை முழுவதுமாக நம்ப வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது'
ஏன் சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..என்பதற்காக திரௌபதி அப்படி
செய்திருக்கலாம்..இல்லையா?'
பேராசிரியர் இதற்கு பதில் கூற வாயைத்திறந்த போது ..குமாரின் அலைபேசி ஒலித்தது.
அதை இயக்கினான் குமார்'என்ன..அப்படியா?..இப்போதே வருகிறேன்' என்றவன்..'சார் என் மனைவிக்கு திடீரென உடல்னலம்
சரியில்லை..அவள் வயிற்றில் கரு அசையவே இல்லையாம்..உடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.பிறகு சந்திக்கிறேன்'என
விரைந்தான்.
பேராசிரியர் தலை ஆட்டினார்.
**** **** **** ****
இரண்டு..மூன்று மாதங்கள் ஓடி விட்டன
திரும்ப ..ஒரு நாள் கிருஷ்ணகுமார் அவரைப் பார்க்க வந்தான்.தன் ஆராய்ச்சித் தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என
அறிந்துக்கொள்ள.
'அது இருக்கட்டும்..உன் மனைவி எப்படி இருக்கிறாள்?குழந்தை பிறந்து விட்டதா?'
'அந்த ஆச்சர்யத்தை ஏன் கேட்கிறீர்கள்?உங்களிடம் வந்த அன்று அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்.
வயிற்றில் இருந்த சிசுவிற்கு மூச்சே இல்லை.மருத்துவர்கள் இறந்துவிட்டது என்றனர்.ஆனாலும் ஒரிரு நாட்கள் பார்க்கலாம் என்றனர்
மருத்துவர்கள்.அழுதபடியே வீட்டிற்கு வந்தவள்..இளையராஜாவின் திருவாசகத்தை வி.சி.டி.யில் ஓட விட்டாள்.அது ஒலிக்க..ஒலிக்க..
சிசு அசையத்தொடங்கியது.மருத்துவருக்கு விஷயத்தைச் சொல்ல..ஆச்சர்யப்பட்ட அவர்..தினமும் என் மனைவியை அதைக்
கேட்கச் சொன்னார்.போன வாரம் சுகப்பிரசவம்.பையன்'என்றான் உற்சாகத்துடன்.
ஆச்சரியம் அடைந்தார்..பேராசிரியர்..'ஏம்ப்பா இது எதனால் என்று நினைக்கிறாய்?''இது கடவுளின் அருள் என்று உனக்குத்
தோன்றவில்லையா?கடவுள் காப்பாத்திட்டாரு'என்றார்.
'அப்போ அதற்கு முன்னால்..அந்த சிசுவிற்கு..அந்த நிலை ஏற்பட்டது யாராலே?'பதில் கேள்விக் கேட்டான்.
'குமார்..பிரபஞ்சம் தான் கடவுள்.நேற்று அறியாததை இன்று அறியலாம்.இன்று அறியாததை நாளை அறியலாம்.
ஆனால்..எப்போதுமே அறிய முடியாதது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்..அது பிரபஞ்ச ரகசியம்.புரிந்துக் கொள்'
என்றார்.சற்றே குழம்பியவன்..'சரி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..இறைவன் என்று ஒருவன் தானே இருக்க
முடியும்..நீங்கள் பல கடவுள்களை சொல்கிறீர்களே?'
'குமார்..நீ..ஒருவன்..ஆனால் உன் பேற்றோருக்கு நீ மகன்..மனைவிக்கு கணவன்..தம்பிக்கு அண்ணன்..அண்ணனுக்கு
தம்பி..இப்படி இருக்கும்போது..அந்த கடவுள் பலருக்கு பல பெயரில் இருப்பது என்ன தப்பு'
சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல்..யோசித்தான் அவன்.
அதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்'இப்ப நீ கடவுள் இருக்கிறதை நம்புகிறாய் இல்லையா'என்றார்.
'இருந்தால்..நன்றாயிருக்கும்'என்றான்.

No comments: