Sunday, December 30, 2018

2018...திரும்பிப் பார்க்கின்றேன்


(இறைவன் கொடுத்த வரம்" நாடகத்தில் பங்கு பெற்ற நன்பர்களுடன்)
2018

இந்த ஆண்டு எனக்கு எப்படி அமைந்தது...

வாழ்க்கை ஏட்டினை புரட்டுகின்றேன்..

சென்ற ஆண்டு எனது கதை, வசனம், இயக்கத்தில் சௌம்யா குழுவினர் அரங்கேற்றிய "இறைவன் கொடுத்த வரம்" சிறந்த கதைக் கருவினைக் கொண்ட நாடகமாக மைலாப்பூர் அகடெமியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு விருது வழங்கப்பட்டது.

இதே நாடகத்தில் நடித்த ஃபாத்திமா பாபு, பி டி ரமேஷ் சிறந்த நடிகை, நடிகருக்கான விருதினை மைலாப்பூர் அகடெமியினரால் மேற்சொன்ன நாடகத்திற்காகப் பெற்றனர்.

ஆண்டாளைக் குறித்து பிரச்னைப் பேச்சுகள் எழ..."நாச்சியார் திருமொழி"யை நூலாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட "திருமொழி" நூலாக வெளி வந்தது

அமெச்சூர் நாடகங்களின் பிதாமகர் என்றழைக்கப்படும் அமரர் திரு ஒய் ஜி பார்த்தசாரதியின், யூஏஏ குழுவினரின் 66 ஆண்டுகளின் சாதனையை ,ஒய்ஜிபியின் நூற்றாண்டு நிகழ்வுகளின் போது நூலாக வெளியிடும் எண்ணம் எனக்கு உண்டாக, அதை மகேந்திரனிடம் நான் கூறினேன்.

மகேந்திரனின் ஒப்புதல்களுடன்,நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் திரைப்பட நடிகர் சிவகுமார் "யூஏஏ எனும் ஆலமரம்" என்ற பெயரில் நூல் வெளியானது.

2008ஆம் ஆண்டு பல விருதுகளைப் பெற்ற "மாண்புமிகு நந்திவர்மன்:" எனும் அரசியல் நையாண்டி நாடகத்தை "மீண்டும் நந்திவர்மன்" என ரசிகர்கள் எண்ணும் படியாக நாடகமாக்கி மேடையேற்றினேன்

நண்பர்கள் அம்பி ராகவன், கிரீஷ் வெங்கட்ஆகியோர் புதிதாக நாடகக் குழுவினை ஆரம்பித்தனர்.தமிழ் நாடகங்களில் இளைஞர்கள் பங்கு அதிகமாக ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தபடியால்..இவர்களை ஊக்குவிக்கும் முறையில் "பௌர்ணமி நிலவில்" என்ற நாடகத்தை இவர்களுக்காக எழுதி அவர்களையே இயக்கச்சொன்னேன்.. 

2018ல் என்னால் நாடக உலகிற்கு செய்ய முடிந்தது இவைதான்.

2019ல்..

நிறைய செய்ய ஆவல் உள்ளது..
பார்ப்போம்...எந்த அளவில் மனமும்..உடலும் ஒத்துழைக்கப் போகிறது என்று..

2018ஏ உனக்குப் பிரியா விடை அளிக்கின்றோம்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிகிறோம்..
2019ஏ உன்னை அன்புடன் வரவேற்கின்றோம்.

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Thursday, December 27, 2018

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

4-1-19ஆம் நாள் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது.அதில் நீங்கள் வாங்க வேண்டிய நான் எழுதியுள்ள புத்தகங்களின் வரிசை - 1
"திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்"

வைணவத்தில் இவ்வளவு விஷயங்களா? என நம்மை வியக்கவைக்கும் விவரங்கள் அடங்கிய புத்தகம்.அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.


இந்த புத்தகம் பற்றி தினமணியில் வந்துள்ள விமரிசனம்
--------------------------------------------------------------------------------------- 
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் - டி.வி.ராதாகிருஷ்ணன்;  பக். 120; ரூ.80; வானதி பதிப்பகம், சென்னை-17. 
திவ்யதேசம் நூற்றி எட்டினுள் ஒன்று திருக்கோளூர்.  நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட இந்த ஊருக்கு ஒருமுறை ஸ்ரீராமானுஜர் செல்லும் போது,  அவ்வூரிலிருந்து பெண்மணி ஒருத்தி அவ்வூரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்துக் காரணம் கேட்கிறார்.

"காரணம், ஒன்றா இரண்டா? முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? ' என்று கூறும்  அப்பெண்மணி,  அருளாளர்கள் 81 பேரின் அருஞ்செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி,  ""இவர்களைப் போல நான் எதையும் செய்யவில்லையே... எனக்கு இந்த ஊரில் வசிக்க என்ன தகுதி இருக்கிறது?'' என்கிறாள். அவள் கூறிய காரணங்கள் ஒருசிலவற்றைப் படிக்கும்போதே  நமக்கும் ஒருவித ஏக்கம் பிறக்கிறது.
"ஆண்டாளைப் போல சிறு வயதிலேயே ஞானம் பெற்று எம்பெருமானை நான் அடையவில்லையே'; "வசுதேவர் கண்ணனிடம் ஆழியை மறைத்துக்கொள்ளச் சொன்னவுடன் எம்பெருமானும் மறைத்துக் கொண்டாரே... அந்த பாக்கியத்தை நான் செய்யவில்லையே'; "ஆழ்வார்கள் தங்களை யசோதையாகப் பாவித்து கண்ணனைக் கொண்டாடினார்களே. அந்த அளவிற்குப் பெருமை வாய்ந்த யசோதையாக நான் இல்லையே'; 
"ஸ்ரீராமன் பாதம் பட்ட அகலிகையாக நான் இல்லையே...'; "தொண்டைமானைப் போல  நான் பக்தியில் சிறந்தவளாக இல்லையே...'; "கூனியைப் போல கண்ணனுக்கு சந்தனம் பூசக் கொடுத்தேனா, இல்லையே...'; "கண்ணனுக்காகத் தன் உயிரைவிட்ட அந்தப் பெண்மணியைப் போல் (முனிபத்தினி) நானும் உயிரை விடவில்லையே'; "விதுரரைப் போல அகம்  ஒழிந்து விடவில்லையே... (இறைவன் மனதில் குடியேறினால் அகம் (அகங்காரம்) ஒழிந்துவிடும்) அதனால் இவ்வூரை விட்டுச் செல்கிறேன்'' என்கிறாள். வைணவர்கள் மட்டுமல்லர், எம்பெருமானை பக்தி செய்வோர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ரகசியம் இந் நூல். 

Wednesday, December 26, 2018

பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா?

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேற்தல் முடிவுகள் குறித்து  செய்திகள் தரும் ஊடகங்களும் சரி, கட்சிகளும் சரி சரியான தகவல்களைத் தருவதாக நான் எண்ணவில்லை.

அவை கண்டிப்பாக பி ஜே பிக்கு பின்னடைவுதான்.ஆனால் சரிவு அல்ல.

எந்த மாநிலமாயினும் சரி.. சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக பெரும்பாலும் இருப்பதில்லை.அப்படிப்பட்ட நிலையில் மத்தியபிரதேசத்திலும் அந்நிலை காணப்படுவதில் ஆச்சரியமில்லை.மேலும்..வாக்குகள் சதவிகிதமும் வென்ற அணிக்கும், தோற்றவர்களுக்கும் பெரும் சதவிகிதத்தில் இல்லை.ராஜஸ்தானிலும் இதே கதைதான்.

இன்றைய நிலையில், வலுவான கூட்டணி யார் அமைக்கிறார்களோ அந்தக் கூட்டணியே வெல்லும் என்ற நிலைதான்.

பாராளுமன்றத் தேர்தல் எனும் போது...சட்டசபைத் தேர்தலுக்கான மக்களின் மனப்பாங்கு மாறக்கூடும்.சென்ற சில தேர்தல்களில் கூட நாம் இதைப் பார்த்திருக்கிறோம்.

உண்மைநிலை என்னவெனில்...இன்றைய நிலவரப்படி காங்கிரஸ் பெரியதாக வளரவும் இல்லை..பி ஜேபி பெரிதாகத் தேயவுமில்லை.

இம்முறை எந்த ஒரு தனிக்கட்சியும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தோன்றவில்லை.

பெரும்பாலான இடங்களை வென்ற அணி...கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும்.

மீண்டும் தேவகௌடாக்களுக்கும்,சந்திர சேகர்களுக்கும், குஜரால்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் வரலாம்


Saturday, December 22, 2018

வள்ளுவன்

வள்ளுவனின் ஒவ்வொரு குறளிலும்ஆழ்ந்த அரத்தம் இருக்கும்.
உதாரணத்திற்கு இந்தக் குறளைப் பாருங்கள்..

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"

ஒருவருக்குத் தீக்காயம் ஏற்படுமேயாயின்..அது ஆறக்கூடியதாயினும், ஆறியபின் அதன் வடு உடலில் இருக்கும்.

ஆனால்..ஒருவரை, மற்றவர் காயப்படும்படி பேசினால், அப்படிப் பேசப்பட்ட பேச்சு காலப்போக்கில் இருவரும் மற
ந்துவிடுவார்.ஆனாலும், .தீயினால் சுட்ட வெளி வடு போல அல்லாது..மனத்திற்குள் அவ்வடு காயப்பட்டவர் மனதில் ரணமாய் ஆறாமல் என்றுமிருக்குமாம்.

தீக்காயம் ஆறும் ஆனால் வடு மறையாது
மனக்காயம்  வடு இன்றி மறைந்தாலும், அதனால் ஏற்பட்ட ரணம் உள்ளே ஆறவே ஆறாது.

ஆகவே..மறந்தும்எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவர் மனது புண்படும் வார்த்தைகளை பேசிவிடக் கூடாது.

Friday, December 14, 2018

சாகித்ய அகடெமி விருதுகள்

இந்தக் கட்டுரை "சாகித்ய அகடெமி" விருதுகள் பற்றியோ அல்லது அதைப் பெற்றவர்கள் தகுதிகள் குறித்தோ எழுதப் பட்டதல்ல என்பதை மனதில் இருத்திக் கொண்டு படிக்கவும்.

இந்த ஆண்டு சாகித்ய அகடெமி விருது பெற்றவரின் நாவல்  2014 ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டது.

விருது பெற்றவர் பெயர் வெளியாவதற்கு முன் சில பிரபல எழுத்தாளர்கள் பெயர்கள் உலா வந்தன..

எனக்கு எழுத்துள்ள சந்தேகம்..

1)தேர்வுக்கான எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்த பின் அவர் எழுதியுள்ள நாவல்களைப் படித்து (எப்போது எழுதி இருந்தாலும் பரவாயில்லை என)தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா?

2)அல்லது பிரசுரமாகியுள்ள அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை , அது பதித்து எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை என பார்க்கப்படுகிறதா? (இது சாத்தியமில்லை)

3)இல்லை..விருதிற்காக சில எழுத்தாளர்களின் எழுத்துகளே படிக்கப் படுகிறதா?


பின் எப்படி ஒரு எழுத்து 4 ஆண்டுகளுக்குப் பின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறது?அத்ற்குப் பிறகு இந்த எழுத்தாளர் எவ்வளவோ எழுதி விட்டாரே!

மேலே சொன்ன முதல் காரணப்படி எனில், பல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் இவர்கள் கண்களில் படாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதிகமாயிற்றே!

விவரம் அறிந்தவர்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்களா?

Thursday, December 6, 2018

அடுத்தவீட்டு ஜனன்ல் - 17

_________________
எஸ்.ராதாகிருஷ்ணன்  (ராது)
____________________________

1962ஆம் ஆண்டு..இந்திய-சீன யுத்தம் நடக்கிறது.மக்கள் தங்களால் ஆன நன்கொடைகளை யுத்தநிதியாக வழங்கி வருகின்றனர்,
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் சென்னைக் கிளையும் ஒரு நாடகம் நடத்தி யுத்தநிதியினைத் திரட்ட நினைத்தது.
இதுநாள்வரை பிற நாடகக் குழுக்களின் நாடகங்களைக் கண்டு ரசித்து வந்த ரிசர்வ் வங்கி ஊழியர் ராதாகிருஷ்ணன்  'ஜெயம் நமதே"என்ற நாடகத்தை எழுதினார்.இது இவரின் கன்னி முயற்சி.
இவரே, பினனாளில் நாடக உலகில் ராது என அறியப்பட்ட பெரும் சக்தியாய் திகழ்ந்தார்.
தன் நண்பர்களுடன் சேர்ந்து "கீதா ஸ்டேஜ்" என்ற குழுவினை ஆரம்பித்தார் ராது. இன்றும் மக்களால் மறக்க முடியாத 45 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு நடிகர்களால் நடிக்கப்பட்ட "கல்யாணத்தில் கலாட்டா" என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
இவரது அடுத்த நாடகம் "வாய்ச்சொல்லில் வீரரடி"
இந்நிலையில், ஆனந்த விகடனிலும் பின்னர் இதயம் பேசுகிறது என்ற பத்திரிகையிலும் ஆசிரியராய் இருந்த மணியன், "மயன் தியேட்டர்ஸ்" என்ற குழுவினை ஆரம்பித்து அதை ராதுவிடம் ஒப்படைத்தார்.
"சப்தஸ்வரங்கள்" நாடகம் அரங்கேறியது.அதில், பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ தங்கவேலுவும். எம் சரோஜாவும் நடித்தனர்
இவரால் நாடக மேடைக்கு வந்தவர்கள் ஏராளம்.காத்தாடி ராமமூர்த்தி, வி.கோபாலகிருஷ்ணன், நவ்ரங் விசு,அறந்தை மணியன் ஆகியோர் இவர் குழுவில் நடித்தவர்கள்

1983ல் ஒரே நாளில் "கல்யாணத்தில் கலாட்டா" நாடகம் எட்டு முறை நடத்தப் பட்டு லிம்கா புக் ஆஃப் ரிகார்ஸில் இடம் பெற்றது.தவிர்த்து ஒரே நாடகம் பத்து முறை நடந்து மீண்டும் ரிகார்ட ஆனது
1992ல் இவரது 15 நாடகங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன
எஸ்.வி.சஹஸ்ரநாமம் குழுவினரால் நடத்தப்பட்டு, பி எஸ் ராமையா எழுதிய "போலீஸ்காரன் மகள்",. "பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்" ஆகிய நாடகங்களை 1992ல் ராது மீண்டும் நாடகமேடையேற்றினார்.
தன் குழுவினரைத்தவிர, தில்லை ராஜன், நவ்ரங் விசு,அமிர்தம் கோபாலின் கீதாஞ்சலி ஆகியோருக்கும்  இவர் நாடகம் எழுதித் தந்துள்ளார்
நவ்ரங் ஆர்ட்ஸிற்கு இவர் எழுதித்தந்த . "மை டியர் குட்டிப் பிசாசு".தரை தட்டிய கப்பல்" "மண்ணில் தெரியுது வானம்" ஆகிய நாடகங்களும், தில்லை ராஜனுக்கு எழுதிய , "பாவ மன்னிப்பு",  ஆகியவை மறக்க முடியா நாடகங்கள்.
தவிர்த்து, நாடக அகடெமி என்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, பல நாடகக்குழுக்களின் நாடகத்திற்கு வாய்ப்பளித்தார்
தமிழக அரசின், "கலைமாமணி" விருது பெற்ற ராதுவின் கலைப்பணி அளப்பரியது
2009ல் நம்மைவிட்டுப் பிரிந்த இவரது சேவையைத் தொடர்ந்து இவரது மகள் பிரியா,மருமகன் கிஷோர் ,பேரன் அம்பரீஷ் ஆகியோர் தொடர்ந்து வருகின்றனர்   

Sunday, December 2, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 16

கே.விவேக் ஷங்கர்
------------------------------

2000ஆம் ஆண்டு விவேக் ஷங்கர் என்ற திறமைமிக்க இளைஞர் ஒருவர் பிரயத்னா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவினை, அமரர் வி.கோபாலகிருஷ்ணனின் நினைவு நாளன்று (29-4-2000) துவக்கினார்.
தனக்கென ஒரு தனிப்பாணியுடன் நாடகங்கள் எழுத ஆரம்பித்து அதே நாட்களில் அரங்கேற்றினார்.

நரேந்திரா,ID, நதிமூலம் ஆகிய நாடகங்களை அரங்கேற்றினார்.பிரபல தொலைக்காட்சி நடிகர்கள் அஃப்சர்,கௌஷிக், கிரீஷ் ஆகியோர் இவர் நாடகங்கள் மூலம் நாடக நடிகர்கள் ஆனார்கள்

மற்றொரு திறமை மிக்க நடிகரான திரு TDS என்று அழைக்கப்பட்ட சுந்தரராஜனை (காத்தாடியின் நாடகக் குழுவின் ஆரம்பகால நடிகர்) தன் நாடகங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க வைத்தார்.தவிர்த்து காத்தாடியின் குழுவினருக்கு இரு நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

"பிரம்மேந்திரர்" இவரது சமீபத்திய நாடகம்.இதில் கிரீஷ் அய்யப்பன் பிரம்மேந்திரராகவே வாழ்ந்திருப்பார்.

விவேக் ஷங்கர் 2014ல் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு ஸ்தாபனத்தின் அழைப்பின் பேரில் இரண்டு நகைச்சுவை நாடகங்களை சிட்னி நகரில் புதிதாக அரங்கேற்றினார்.

மேலும் :ஷ்ரத்தா: நாடகக்குழுவினருக்காக "தனுஷ்கோடி" என்ற நாடகத்தை எழுதி இயக்கி இருந்தார்.இந்நாடகத்தில் மழைக்காட்சிகளை தத்ரூபமாக அமைத்தார்.லாரிகளில் தண்ணீர்  கொணர்ந்து, மேடையின் பின்புறம் நிறுத்தி..சுழற்சி முறையைப் பயன் படுத்தி...மேடையில் தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு மேலாக மழையைக் காட்டி சாதனையை உண்டாக்கினார்.

மேடையில் ஒரு சுனாமி என்ற பெயரில் 10-11-2010  அண்ரு விகடனில் வந்த அவரது இந்த விமர்சனம் ஒன்றே இவர் திறமையை நிரூபிக்க போதுமானது.

சுற்றி சுழன்றடிக்கும் சுனாமி, இடைவிடாமல் கொட்டும் மழை, அவ்வப்போது உறுமும் புயல்காற்று…. இவை அனைத்தையும்  ஓரு நாடக மேடையில் கொண்டு வர முடியுமா?… “முடியும்” என்று நிரூபித்து இருக்கிறது ஸ்ரத்தா நாடகக் குழுவின் ‘தனுஷ்கோடி’ நாடகம்!
பல ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியை புயல் விழுங்கிய பின்னனியில், நகைச்சுவையும் த்ரில்லரும் கலந்த கதை.  ஒரு கண்டிப்பான வங்கி அதிகாரி, அதே வங்கியின் மற்றொரு கிளையில் பணிபுரியும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார். தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோருகிறார் அந்த ஊழியர். மறுக்கிறார் அதிகாரி.  உடனே, ஆஸ்துமா நோயாளியான அதிகாரியை கட்டிப் போட்டு மிரட்டுகிறார் ஊழியர்.  அதிகாரியின் நண்பர், ஒரு போலீஸ் ஏட்டு, ஒரு காதல் ஜோடி….இவர்கள் மூலம் அந்த அதிகாரி எப்படி மீட்கப்படுகிறார் என்பதே கதை.
ஒரே செட்டில் கதை நடப்பது புதிது அல்ல.  ஆனால், பெரியதொரு வீட்டிலும், அதைச் சுற்றியும், அதன் தாழ்வாரங்களிலும் உட்புறத்திலும், இடைவிடாமல் மழை ஒழுகுவதும், இடியும் மின்னலும், ஒலியும் ஒளியுமக அரங்கத்தையே கிடுகிடுக்க வைப்பதுமான தொழில்நுட்பத்தை இத்தனை சீராக இதுவரை எந்த நாடகமும் தந்தது இல்லை.
சுவையான, கெட்டிக்காரத்தனமான காம்பியர் போல கதையை நடத்திச் செல்லும் காத்தாடி ராமமூர்த்திக்கு ஸ்பெஷல் பாராட்டு.  ஆஸ்துமா நோயாளியான டி.டி. சுந்தர்ராஜன், குறும்புக்கார இளைஞனாக கெள்சிக் ஆகியோரின் நடிப்பு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.
இழுத்துக் கட்டப்பட்ட ஸ்வரக் கம்பியை மீட்டுவது போல, தொட்ட இடம் எல்லாம் தொடர் சஸ்பென்ஸ்.  ஒரு சாதுவான கதாபாத்திரமாக அறிமுகம் ஆகி, வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பாலாஜி.  கதையையும் உயிரோட்டமாக உள்ளே சஞ்சரிக்க வைத்த இயக்குநர் கே. விவேக்சங்கருக்கு வாழ்த்துக்கள்.  தனுஷ்கோடியில் இடி மழையுடன் கடல் பொங்கி வந்து கதவைத் தட்டுவதை கண் முன்னே காட்டிய ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’ பாலச்சந்தர் கவனிக்கப்பட வேண்டியவர்.
அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் பலர் தாங்கள் நனைந்துவிட்டோமோ என்று தொட்டுப் பார்த்துக் கொண்டார்கள் என்பதுதான் இந்த நாடகத்தின் வெற்றி