ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், அயல் நாட்டு வங்கிகளில் போட்டு வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று கோரி யோகா குரு பாபா ராம்தேவ் மேற்கொண்ட உண்ணாவிரத்தை காவல் துறையினரைக் கொண்டு மத்திய அரசு சீர்குலைத்த நடவடிக்கை ஊழலைக் காப்பாற்றும் அதன் உண்மையை முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த டெல்லி காவல் துறையினரிடம் அனுமதி பெற்றே பாபா ராம்தேவ் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். போராட்டத்திற்கு முதலில் அனுமதி அளித்துவிட்டு, பிறகு அதனை இரத்து செய்துவிட்டு, நள்ளிரவில் காவல் படையினரை அனுப்பி, தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்திருப்பது ஜனநாயக உரிமைகள் மீது காங்கிரஸ் கட்சியும், மன்மோகன் சிங் ஆட்சியும் கொண்டிருக்கும் மரியாதைக்கு அத்தாட்சியாகும்.
நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது என்று மன்மோகன் சிங் அரசு தனது ஊடக பலத்தைக் கொண்டு பலமாக பரப்புரை செய்துக்கொண்டிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் அத்யாவசியப் பொருட்களின் விலையேற்றம் 10 விழுக்காடு அளவிற்கு தொடர்வதும், அதனால் ரூபாயின் வாங்கும் சக்தி குறைவதும், மக்களின் வாழ்வை சமநிலை இழக்கச் செய்துக்கொண்டிருக்கும் வேளையில், தன்னை தூயவர் என்று நிலைநிறுத்துக்கொள்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில்தான் இந்தியா வரலாறு காணாத ஊழலை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
நாட்டை உலுக்கிய காமல்வெல்த் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், எல்.ஐ.சி. பங்குச் சந்தை முதலீட்டு ஊழல், வீட்டுக் கடனிற்கு இலஞ்சம் பெற்ற ஊழல் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் ஊழல் நாற்றம் வீசிகிறது. ஆனால் நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் அரசும், காங்கிரஸ் கட்சியும் கூசாமல் பரப்புரை செய்கின்றனர். ஒரு வேளை இலஞ்சம், ஊழல் ஆகியவற்றில் நாடு வளர்கிறது என்று கூறுகிறார்களோ?
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அயல் நாட்டு வங்கிகளின் கருப்புப் பணத்தின் அளவு நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமானது என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது. ஆனால், கருப்புப் பணத்தை வெறும் வரி ஏய்ப்பாக மட்டுமே காங்கிரஸ் அரசு பார்க்கிறதே தவிர, அது ஊழலில் சம்பாதிக்கப்பட்டு பணமாற்றம் செய்யப்பட்ட இந்த நாட்டின் சொத்து என்று கருதவில்லை. கருப்புப் பண வழக்கை விசாரித்த இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இது வெறும் வரி ஏய்ப்பு அல்ல, இந்த நாட்டின் சொத்து கொள்ளையடிக்கப்பட்டு அயல் நாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது. அவ்வாறு கூறுவதை இன்று வரை மன்மோகன் அரசு ஏற்கவில்லை. கருப்புப் பணத்தை அயல் நாட்டு வங்கிகளில் போட்டு வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட இன்று வரை மறுத்து வருகிறது மத்திய காங்கிரஸ் அரசு.
ஒரு பக்கம் விலைவாசியேற்றத்தால் நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே திணறிக்கொண்டிருக்கும் நிலையில், வரலாறு காணா ஊழல் இந்த நாட்டை தின்றுக்கொண்டிருக்கும் செய்தி, மக்கள் உள்ளத்தில் கோவக் கனலை உண்டாக்கியுள்ளது. இதனை உணர்ந்த - உண்மையான நாட்டுப் பற்றாளர்கள், மக்களுக்கு அறிமுகமான முகங்களை முன்னிறுத்தி ஊழலுக்கும், கருப்புப் பணத்திற்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதுதான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காந்திய சேவா சத்தியாகிரகப் படை எனும் அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்ட முதல் ஊழல் எதிர்ப்பு போராட்டம் ஆகும். 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத் தலைமையில் ஜனவரி 30ஆம் தேதி தொடங்கிய சாகும்வரை போராட்டம் மக்களை சென்றடையா வண்ணம் ஊடங்களை மிகச் சாமர்த்தியமாக பயன்படுத்தி அந்தப் போராட்டத்தை சாகடித்தது மத்திய அரசு.
அதன் பிறகுதான் அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலிற்கு எதிரான போராட்டம் தொடங்கப்பட்டது. அது லோக்பால் சட்ட வரைவு தொடர்பான உத்தரவாதத்தை பெற்று முடிந்தது. இப்போது கடந்த சனிக்கிழமை யோகா குரு பாபா ராம்தேவ தலைமையில் மீண்டும் ஒரு போராட்டம் தொடங்க, தனது ஊழல் முகம் நாட்டு மக்களிடம் பெரிதாக வெளிப்படுவதைத் தடுக்க, ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு, இரவோடு இரவாக அந்தப் போராட்டத்தை ஒடுக்க அராஜக வழியை கையாண்டுள்ளது. சட்டம் ஒழுங்கை(?) நள்ளிரவில் நடைமுறைப்படுத்த காவல் படைகளை ராம்லீலா மைதானத்தில் கொண்டு வந்து தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒடுக்குமுறையை கட்டவிழ்ந்துவிட்டுள்ளது.
ஜனநாயக நெறிமுறைகளை மதிக்கும் கட்சியாக தன்னை காட்டிக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் உண்மையாக முகம் இதன் மூலம் வெளிப்பட்டது மட்டுமின்றி, அது மறைத்துவரும் மற்றொரு முகமும் நேற்று வெளிப்பட்டது. அதுவே, பாபா ராம்தேவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக் விஜய் சிங் உதிர்த்த வார்த்தைகளாகும்.
பாபா ராம்தேவை ஒரு ‘முரடன்’ என்று திக் விஜய் சிங் வர்ணித்துள்ளார். சோனியாவின் முழு நேர ஊழியனாய், காங்கிரஸ் கட்சியின் அந்த முதல் குடும்பத்தின் விசுவாசமிக்க தொண்டனாய் திகழும் திக் விஜய் சிங், பாபா ராம்தேவ் யோகசனத்தை மற்றும் கற்றுக்கொடுக்க வேண்டும், அரசியலில் ஈடுபடக்கூடாது என்று உபதேசமும் செய்துள்ளார். அரசியல் அநாகரீகத்தின் உச்சகட்டம் அவருடைய பேச்சுகள்.
பாபா ராம்தேவ் ஒரு முரட்டுப் பேர்வழி என்றால் அவரிடம் மத்திய அரசு இத்தனை நாள் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்? யார் அரசியல் ஈடுபடவேண்டும் என்ற சொல்ல காங்கிரஸ்காரன் யார்? அதுமட்டமல்ல, தனது நடவடிக்கைகள் மூலம் இந்த நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகிறார் ராம்தேவ் என்று வேறு பேசியுள்ளார்.
ஊழலுக்கும், கருப்புப் பணத்திற்கும் உறுதுணையாக நிற்கும் கட்சிக்கு, அவைகளை ஒழிக்க முற்படும் நடவடிக்கைகள் தவறான வழிகாட்டுதல் என்றுதான் தெரியும். போபர்ஸ் பீரங்கி பேரத்தில் தரகு பரிமாற்றம் நடந்தது உறுதியான பிறகும் கூட, ஊழல் நடக்கவில்லை என்று சாதித்த கட்சியல்லவா காங்கிரஸ். எனவே அதற்கு ஊழல், கருப்புப் பணக் குவிப்பு ஆகிய அனைத்தும் தேச வளர்ச்சிக்கு உகந்த நடவடிக்கையாகத்தான் தெரியும்.
இன்னமும் இந்தக் கட்சியை இந்திய நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேதனையானது. இந்த நாட்டை, நாட்டின் வளத்தை பெரு நிறுவனங்களும், அயல் நாட்டு நிறுவனங்களும் முழுமையாக சுரண்டிக் கொண்டு செல்ல உறுதுணையாக இருந்து, அவைகள் கொடுக்கும் இலஞ்சப் பணத்தில் கொழுத்துக்கொண்டிருக்கும் ஒரு கட்சியை மீ்ண்டும் மீண்டும் தேர்வு செய்து ஆளவிட்டதன் பலன் இன்று உச்ச கட்ட ஊழலையும், கருப்புப் பண வளர்ச்சியையும் இந்த நாடு கண்டுக்கொண்டிருக்கிறது.
காங்கிரஸை ஒழிக்காமல் ஊழல் ஒழியாது என்பதையும், காங்கிரஸ் கட்சியை அரசியலில் இருந்த அகற்றாமல் கொண்டுவரப்படும் எந்த லோக்பாலும் இந்த நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்றாது என்பதையும் இந்த நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
(நன்றி -வெப்துனியா )
1 comment:
தற்போதைய நிலையில் ஊழலில் நம்பர் ஒன் தி.மு.க. தான். மற்ற கட்சிகளெல்லாம் எப்போதோ பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.
Post a Comment