Saturday, August 30, 2014

குறுந்தொகை - 92



தலைவி கூற்று
(மாலைப்பொழுது வந்ததுகண்டு தலைவி, “பறவைகள் தம் குஞ்ச்கலுக்குரிய இரையை வாய்க்கொண்டு தம் கூடுகளை நோக்கிச் செல்கின்றன” என்று கூறி, “இனிஆற்றேன்” என்பதுணர்த்தியது.)

நெய்தல் திணை= பாடலாசிரியர் தாமோதரன்

இனி பாடல்-
   
ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்
   
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
   
இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
   
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய

இரைகொண் டமையின் விரையுமாற் செலவே

                      _ தாமோதரன்

உரை-

கதிரவன் மறைந்த அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில், வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், தாம் தங்கும்படி உயர்ந்த
வளர்ந்த கடம்ப மரத்தில் உள்ள கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் உள் வாயினுள்ளே செருகும் பொருட்டு இரையை தன் அலகில் எடுத்துக் கொண்டமையால் விரைந்து செல்லும்.அவை இரங்கத்தக்கன.


 (கருத்து) மாலைக்காலம் வந்தது; இனிக் காமநோயை ஆற்றேன்.

   
(இதனால் தலைவி மாலைப்பொழுது வந்ததையறிந்து காமநோய் மிகப்பெற்று ஆற்றாளாயினளென்பது மறைபொருள்)

Thursday, August 28, 2014

உவமைகளை ரசியுங்கள் (கொஞ்சி விளையாடும் தமிழ்)



உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர்.

உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், 'தெரிவிக்க விரும்பும் பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு 'போல' போன்ற இணைப்புச் சொற்களால் ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர்.

ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்...

பாரதிதாசன் 'குடும்ப விளக்கில்' குழந்தையின் புருவத்தை இப்படிச் சொல்கிறார்..

"எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்'

எறும்புகளின் வரிசையை அரும்பிவிட்ட புருவத்திற்கு உவமைப்படுத்தியுள்ளார்.

புலவர் நா.காமராசன் முதுமை பற்றி கூறுகையில்.

"தண்ணீரில் இருக்கும் மீனைத்தேடி
தூண்டில் வந்தது போல்..
என்னைத் தேடி
முதுமை வந்தது"   என்கிறார்.

அதே போன்று அவர்...

'ரோஜாவையும், மல்லிகையையும்
ஒரே நேரத்தில்
கூந்தலில் வைத்துக் கொள்ளும்
பெண் சிறுமி போல
சூரியனையும் சந்திரனையும்
விடியலின் மெல்லிய வெளிச்சத்தில்
சூடிக் கொண்டிருக்கும் வானம்'     என்கிறார்.

ரோஜாவையும்,மல்லிகையையும், சிறுமியையும் முறையே சூரியன், சந்திரன்,வானத்திற்கு ஒப்பிடுகிறார்.

மு.மேத்தா...'சரியாடி பராசக்தி' என்னும் கவிதையில்..

"தண்ணீர்க் குடம்போல்
தனித்துக் காட்சி தரும்
சின்னஞ்சிறிய சிங்களத்தில் தமிழர்களின்
கண்ணீர்க் குடமன்றோ
கவிழ்க்கப்பட்டு விட்டது'   என்கிறார்

தண்ணீர்க்குடம் தனியாகக் கிடப்பது போல சிங்களம் தனியாக நாற்புறமும் நீரினில் அமைந்துள்ளது என்றும் தமிழர்கள் கண்ணீரில் வாடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

வைரமுத்து..ஏ.இரண்டாயிரமே என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...

காவிரி பாய்ந்து
அன்னம் விளையுமா?
இல்லை
காவிரி அன்னம் போல்
காணாமல் போகுமா?

இதில் அன்னம் என்ற சொல் நெல்லிற்கும்..பழங்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் அன்னப் பறவையையும் குறிக்கிறது.அன்னப் பறவை காணாமல் போனதுபோல் காவிரி ஆறும் காணாமல் போகிவிடுமா? என்கிறார்.இக்கவிதை உவமையால் பொருளை வெளிக் கொணர்கிறது எனலாம்.

இதயத்தின் மணம்

                   


இதய நறுமணத்தை

நுகர்ந்ததுண்டா?

மென்மையான

ரோஜா மலராய்

இதயம் இருந்தால்

நீங்கள் நுகர்ந்திருப்பீர்


குறுந்தொகை - 91



தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று மீண்டுவந்த தலைவன் தலைவியினது உடம்பாட்டை வேண்டி நின்றவிடத்து அவன்பால் ஊடலையுடைய வளாயினும் தன் நெஞ்சம் அவன்பாற் செல்வதையறிந்த தலைவி, “நீ அவன்பால் அன்புடையையாகி இருப்பின் பலநாள் துஞ்சாதுறையும் துன்பத்தையடைவாய்” என்று கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஔவையார்  


அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
   
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
   
தண்டுறை யூரன் பெண்டினை யாயிற்
   
பலவா குகநின் னெஞ்சிற் படரே

ஓவா தீயு மாரி வண்கைக்
   
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
   
கொன்முனை யிரவூர் போலச்
   
சிலவா குகநீ துஞ்சு நாளே.

                          -ஔவையார்

உரை-
ஒன்றோடொன்று பிணங்கு தலையுடைய பிரப்பங்கொடியின் புறத்தே வரிகளையுடைய விளைந்த பழத்தை, ஆழமாக நீரையுடைய குளத்திலுள்ள கெண்டை மீன் கவ்வுதற்கிடமாகிய தண்ணிய நீர்த் துறைகளையுடைய ஊர்த்தலைவனுக்குரிய மனைவியாக நீ இருப்பின் நின் உள்ளத்தில் துன்பம் பலவாக ஆகுக.காலமும். இடமும் பெறுவார் தகுதியும் நோக்கி யொழியாமல் எப்பொழுதும் கொடுக்கும், மேகம் போன்று கைமாறு கருதாத வண்மையையுடைய கையினையும், விரைந்த செலவையுடைய ஆண்யானைகளையும் ,உயர்ந்த தேர்களையும் உடைய அதியமான் அஞ்சியெனும் உபகாரியினது அச்சத்தைச் செய்யும் போர்க்களத்தில் உள்ள இரவையுடைய ஊரிலுள்ளோர் போல நீ துயிலும் நாட்கள் சிலாஆகுக!


    (கருத்து) தலைவன்பால் இரங்கி இப்பொழுது உடம்பட்டாலும் பின்னும் தன் ஒழுக்கத்தினின்றும் அவன் மாறுபடான்.


.(கெண்டைமீன் பிரப்பம் பழத்தைக் கவர்ந்து உண்ணும் குளங்கள் சூழ்ந்த நாட்டை உடையவன் தலைவன். அவனது மனைவி நீ ஆயின் இரவூர் போல நீ துஞ்சும் நாள் சிலவாகுக. உன் நெஞ்சம் அவன் என்னைக் கவர்ந்து உண்டதை நினைந்து நினைந்து வருந்தும் நாள் பலவாகுக - இவ்வாறு பரத்தை தலைவிக்குச் சொல்லும் பாடல் இது.
கெண்டைமீன் பிரம்புப் பழத்தைக் கௌவும் என்றது தலைவன் பரத்தையைக் கௌவிக்கொண்டதை உணர்த்தும் உள்ளுறை.)

இரவூர் என்னும் ஊரை அதியமான் நெடுமான் அஞ்சி தன் யானைப்படையுடன் சென்று தாக்கினான். அதுமுதல் இரவூர் மக்கள் சில நாட்களே உறங்கினர். பலநாள் அவன் தாக்கியதை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகி வருந்தினர்.

Wednesday, August 27, 2014

குறுந்தொகை - 90



தோழி கூற்று
(தலைவன் திருமணம் செய்யாது நெடுங்காலம் தலைவியோடு பழகியபோது ஒருநாள் அவன் வேலிப்புறத்திலே வந்துநிற்ப அவன் கேட்கும்படி தலைவியை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவனது கேண்மையினால் நின் மேனிக்கு வாட்டம் நேர்ந்ததேனும் நீ அன்பிற் குறைந்தாயல்லை” என்று தலைவியின் நிலையைத் தோழி புலப்படுத்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் சேந்தன் பூதன்.

இனி பாடல்-


எற்றோ வாழி தோழி முற்றுபு
   
கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய
   
மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
   
கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி

வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம்
   
குன்ற நாடன் கேண்மை
   
மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.

                         - சேந்தன் பூதன்.

    உரை-

சூல் முற்றி மிளகுக்கொடி வளர்ந்திருக்கும் மலையடுக்கத்தில் இரவெல்லாம் முழங்கிக்கொண்டு மழை பொழிய, கலைமான் சுளையைத் தின்றபின் கோதுமயிரினை உடைய பலாப்பழம் வரைப்பாறையிலிருந்து விழும் அருவியில் மிதந்து வரும் நாட்டை உடையவன் தலைவனது நட்பு உனது மெல்லிய தோள்களை மெலியச் செய்தும் அமைதியைத் தந்தது


 (கருத்து) நீ மெலிந்தாயாயினும் இயல்பு வேறுபட்டாயல்லை.


தலைவன் தலைவியை அடைய வெளிப்புறத்தில் காத்திருக்கிறான். திருமணம் செய்துகொள்வதில் காலம் கடத்துகிறான். தலைவனுக்குக் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்கிறாள். (தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அடையலாம். (இப்போது அடைய முடியாது என்பது கருத்து.)


   

Tuesday, August 26, 2014

குறுந்தொகை - 89



தோழி கூற்று
(தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாளாக, அதனைக் கேட்ட ஊரினர் அலர் தூற்றுதலைத் தோழி தலைவன் சிறைப்புறத்திலிருக்கும் பொழுது புலப்படுத்தி, விரைவில் திருமணம் செய்து கொள்ளல் நலமென்பதை உணர்த்தியது.)
 

மருதம் திணை - பாடியவர் பரணர்.

இனி பாடல்-

பாவடி யுரல பகுவாய் வள்ளை
   
ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப
   
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
   
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
   
நல்லியற் பாவை யன்னவிம்
   
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.

                        - பரணர்

உரை-

பெரிய அணிகலத்தையுடைய சேரனுக்குரிய , அச்சம் தருதல் மிக்க கொல்லிமலையில் உள்ள கரிய கண்களையுடைய தெய்வம் அம் மலையின் மேற்குப் பக்கத்தில் எழுதிய நல்ல இயலையுடைய பாவையை ஒத்த இந்த மெல்லிய இயல்பையுடைய தலைவி,தன் தலைவனுடைய பெயரைப் பாடி இடிப்பாளாயின், அங்ஙனம் அவள் பரந்த அடியினையுடைய உரலினது பகுவாயிடத்து தானியம் இடிக்கும் போது பாடும் வள்ளைப் பாட்டைக் குறித்து அயலார்கள் குறைகூறுதலையும் செய்வார்கள்.இத்தகைய அறிவின்மையையுடைய ஊரினர் கூறும் சொற்களின் பொருட்டு வருந்துவதால் பயன் என்ன?
.


(கருத்து) ஊரினர், தலைவி ஒரு தலைவன்பால் நட்புடையளென்பதை அறிந்துகொண்டனர்.

   

    வள்ளை உரற்பாட்டு- மகளிர் உரலில் நெல் முதலியவற்றை இடிக்கும்போது அதனால் உண்டாகும் அயர்வு தோற்றாதிருக்கும் பொருட்டுப் பாட்டுப்பாடுதல் இயல்பு; இங்ஙனம் பாடும் பாட்டு வள்ளைப் பாட்டெனப்படும்.
    இப்பாட்டு, இடிப்பவர்களுடைய அன்புக்குரியாரைத் தலைவர்களாகப் பெற்றிருத்தல் மரபு;

Monday, August 25, 2014

தவிக்கும் செடி..



                 


மலரில்

அமர்ந்தது வண்டு

செடியின் அனுமதியின்றி

மலரும்

தேனைத் தந்தது..

தேனுண்ட வண்டு

தாவியது அடுத்த மலருக்கு

கையறு நிலையில்

தவித்தது செடி...

மலரோ.

வாட ஆரம்பித்தது..



குறுந்தொகை = 88



தோழி கூற்று

(“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்: இனி இரவிலே வருவான்” என்று தோழி தலைவிக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடியவர்  மதுரைக் கதக்கண்ணன்

ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்
 
சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
 
தொன்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
 
நடுநாள் வருதலும் வரூஉம்

வடுநா ணலமே தோழி நாமே.

                - மதுரைக் கதக்கண்ணன்

உரை-

ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன் சிறிய கண்ணையுடைய பெரிய களிறு வலிமையான புலியைத் தாக்கி ,தனது பழைய வலி சோர்தற்கிடமாகிய மக்கள் அடைதற்கரிய சாரலின் வழியே இடையிரவில் வருதலையும் செய்வான்.அங்ஙனம் அவன் வருதலினால் நமக்கு உண்டாகும் ப்ழிக்கு நாம் வெட்கப்பட மாட்டோம்.

(அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழிழிந்து நிலப்பரப்பி லுள்ளாருக்குப் பயன்படுவது போலத் தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து பார்ப்பான்)


   (கருத்து) தலைவர் இனி இரவில் வந்து அளவளாவுவர்.

     (வழியின் ஏதத்துக்கு அஞ்சாமல் அவனே வரும்பொழுது அவனை ஏற்றுக்கொள்ளாமல் நாணி மறுத்தல் அழகன்றென்பது தோழியின் நினைவு.)
 இரவுக்குறி _ தலைவன் இரவில் வந்து தலைவியை சந்திக்கும் இடம்
   .

Sunday, August 24, 2014

குறுந்தொகை - 87



தோழி கூற்று
(தலைவன் தெய்வம் உன் உறுதிமொழி அளித்துப் பின் பிரிந்து நீட்டித்தானாக, அதனால் அத்தெய்வம் ஒறுக்குமோவென்று அஞ்சிய தலைமகள், “என்பால் உண்டான வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவர் கொடுமையன்று; என் மனநிலையேயாகும்” என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
 
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
 
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்
 
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
 
பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.

என்பது தலைமகள் தெய்வத்திற்குப் பராயது.

                         -கபிலர்.

உரை-

பொதுவிடத்திலுள்ள மராத்தின் கண் தங்கும், பிறருக்கு அச்சம் தரும் முதிர்ந்த தெய்வம் கொடுமையுடையாரை வருத்தம் என்று அறிந்தோர் கூறுவர்.குன்றுகள் பொருந்திய நாட்டுடைய என் தலைவர் சிறிதும் அத்தெய்வத்தால் ஒறுத்தற்குரிய கொடுமையை உடையவர் அல்லர்.என் நெற்றி நான் அவரை விரும்பியதால் பசலை பெற்றது.என் மனம் அவர் திறத்து நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள் மெலிவுற்றது.

(கருத்து) என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் காரணரல்லர்.

 

     தலைவன் தலைவியோடு அளவளாவிய பொழுது கடம்ப மரத்திலுறையும் கடவுள்மேல் ஆணையிட்டு, “நின்னைப் பிரியேன்: பிரியின் ஆற்றேன்” என்று உறுதி அளித்தான்.தெளித்தான்; பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள். தன்னுடைய வேறுபாடு களுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின், அக் கொடுமை கருதி அவனாற் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒறுக்கு மென்று அவள் கவன்றனள். ஆதலின் தலைவன் கொடுமையுடையன் அல்லன் எனக் கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டுமென்று தெய்வத்தை வேண்டினாள்.
   

 

Saturday, August 23, 2014

குறுந்தொகை - 86


தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலை உற்ற தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருந்து இன்புறுதற்கு உரிய பொழுதாகிய இக்கூதிர் காலத்திலே தனிமைத்துன்பத்தை மிகுதிப்படுத்தும் ஆன்மணிக்குரலைக் கேட்பார் வேறு யாருளர்? நான் ஒருத்தியேயன்றோ?” என்று தலைவி கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெண்கொற்றன்

இனி பாடல்
 
சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட்
   
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
   
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்
   
தூதை தூற்றுங் கூதிர் யாமத்

தானுளம் புலம்புதொ றுளம்பும்
   
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.


                          -வெண்கொற்றன்.

  உரை -

மழைத்துளி மிக்க, வாடைக்காற்று வீசித் தூவுகின்ற கூதிர்ப்பருவத்தின் நள்ளிரவில் எருதானது ஈ ஒலிக்குந் தோறும் அலைகின்ற (தலையாட்டுதலால்)நா வினால் முழங்குகின்ற கொடிய மணியின் மெல்லிய ஓசையை தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளித் துளியாக விழுகின்ற செம்மையான அரிகளையும்   குளிர்ச்சியையுடைய கண்ணோடும், பொறுத்தற்கரிய காமநோயோடும் தனிமை வருத்துதளாற் கலங்கி கேட்டு வருந்துவார் என்னையன்றிப் பிறமகளிரும் உள்ளனரோ?

(கூதிர் கலம்
 _ஐப்பசி, கார்த்திகை)

  (கருத்து) தலைவர் உடனிருத்தற்குரிய இப்பருவத்தில் நானொருத்தியே தனிமைத் துன்பத்தை உடையேன் ஆயினேன்.

Friday, August 22, 2014

குறுந்தொகை - 85



தோழி கூற்று
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணன், “ தலைவன் மிக்க அன்புடையன்” என்று பாராட்டியபொழுது தோழி, “இவன் சொல்லத்தான் அவர் அன்பு புலப்படுகின்றது.  ஆனால் அவர் செயலால் தெரியவில்லை” என்று கூறி வாயில் மறுத்தது.)

மருதம் திணை - பாடலாசிரியர் வடமவண்ணக்கன்

இனி பாடல்-

யாரினு மினியன் பேரன் பினனே
   
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
   
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
   
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்
   
யாண ரூரன் பாணன் வாயே.

                 -வடமவண்ணக்கன்

உரை-
  உரினுள் இருக்கும் குருவியின் துள்ளிய நடையை யுடைய ஆண்பறவையானது, கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு பொறை யுயிர்த்தற்குரிய இடத்தை அமைக்கும் பொருட்டு தேன் பொதிதலைக் கொண்ட இனிய கோலை உடைய கரும்பினது மணம் வீசா வெள்ளிய பூவை கோதியெடுக்கும்.புதிய வருவாயை உடைய ஊருக்குத் தலைவன் பாணனது சொல்லின் அளவில் எல்லாரினும் இனிமை உடையான்/தலைவியினிடம் பெரிய அன்பினை உடையான்.(உண்மையில் அங்ஙனம் இல்லை)

   

(கருத்து) பாணன் தலைவனைப் புகழினும் தலைவன் அன்பிலன்.

Thursday, August 21, 2014

குறுந்தொகை - 84



செவிலித்தாய் கூற்று
(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாளாக, அதனை யறிந்த செவிலி, “யான் நேற்று வழக்கம்போல் தழுவவும் அதனை என் மகள் வெறுத்தாள்; அதன் காரணத்தை அப்பொழுதே அறிந்திலேன்; இப்பொழுது அறிந்தேன்” என்று கூறி இரங்கியது.)

 பாலைத் திணை - பாடலாசிரியர் மோசிகீரன்

இனி பாடல்-

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனள்
 
இனியறிந் தேனது துனியா குதலே
 
கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
 
வேங்கையுங் காந்தளு நாறி

ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே.



                                 - மோசிகீரன்

உரை-

உழல இட்ட தோள் வளையையுடைய ஆயென்னும் வள்ளலது. மேகங்கள் தவழும் பொதியின் மலையில் உண்டான வேங்கை மலரினது மணத்தையும், காந்தள் மலரினது மணத்தையும் வீசி ., ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியுடையளாகிய என் மகள், நான் ஒருமுறை தழுவிய தோடமையாமல் மீண்டும் தழுவும் காலத்து, நான் வியர்வையையடைந்தேன் என்று கூறினாள்.அப்படி நான் தழுவியது அவளுக்கு வெறுப்பு உண்டாகக் காரணம், அவள் கூறிய அக்காலத்தே அறியவில்லையாயினும் இப்போது அறிந்தேன்.

 
    (கருத்து) தலைவி என்மேல் வெறுப்புற்று  தலைவன்பால் விருப்புற்றுச் சென்றனள்; இதனை முன்னரே நான் அறியவில்லை..


     செவிலி அறிந்தது, (“ தலைவனது தழுவலை இன்பமாகக் கருதியவளாதலின் பிறர் தழுவல் வெறுப்புறச் செய்தது” என்பதனை. “முன்பு விருப்பாயிருந்த என் அணைப்பு இப்பொழுது அவளுக்கு வெறுப்பாயிற்று” என்பது குறிப்பு;)

 ஆய்: ஏழுவள்ளல்களுள் ஒருவன். இவனுக்குரியது பொதியின் மலை. மழைதவழ் பொதியிலென்றது, காந்தளும் வேங்கையும் வளம் பெற வளர்தற்குரிய மழையுண்டென்பதைக் குறித்தது.



 
“

Wednesday, August 20, 2014

குறுந்தொகை - 83


தோழி கூற்று
(திருமணம் செய்யும் முயற்சிகளோடு வந்த தலைவனைச் செவிலி ஏற்றுக் கொண்டமையைத் தோழி, அச்செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் வெண்பூதன்

இனி பாடல்-
 
அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
   
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை
   
தம்மிற் றமதுண் டன்ன சினைதொறும்
   
தீம்பழந் தூங்கும் பலவின்

ஓங்குமலை நாடனை வருமென் றோளே.

                - வெண்பூதன்


உரை-

தன் வீட்டில் இருந்து, தனது முயற்சியால் ஈட்டிய பொருளில், தம் பாகத்தை உண்டது போன்ற இன்சுவையை தருகின்ற , கிளைகள் தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலா மரங்களையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவன், தலைவியை திருமணம் செய்யும் பொருட்டு பொருளோடு வருவான் என கூறியவளாகிய அன்னை, பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாய்,பெரும் புகழுடைய சுவர்க்கத்தை பெறுவாளாக.


     (கருத்து) தலைவர் வருவாரென்று உணர்த்திய செவிலி வாழ்வாளாக.

(செவிலை எனப்படுபவள் வளர்ப்புத் தாய் ஆவாள்.பல நேரங்களில் தோழியின் தாயே தலைவியின் செவிலித்தாயாக இருப்பதுண்டு)

 

Tuesday, August 19, 2014

குறுந்தொகை - 82


தலைவி கூற்று
(தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற முன்பனிப் பருவம் வரவும் அவன் வாராமையினால் வருத்தமுற்ற தலைவியை நோக்கி, “நீ வருந்தற்க; அவர் தலையளி செய்து பிரிந்த அன்புடையவராதலின் விரைவில் வருவர்” என்ற தோழியை நோக்கி, “அவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது வந்திலராதலின் அவர் தன்மை மாறியது போலும்!” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கடுவன் மள்ளன்

 இனி பாடல்-

   
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்
   
பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார்
   
யாரா குவர்கொ றோழி சாரற்
   
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்

கொழுங்கொடி யவரை பூக்கும்
   
அரும்பனி யச்சிரம் வாரா தோரே.

                      - கடுவன்மள்ளன்

உரை -

(தோழி)மலைப்பக்கத்திலுள்ள பெரிய தினைப்புனத்திலுள்ள குறவனது, சிறிய தினையரிந்த மறு காலிடத்தில் கொழுவிய அவரைக்கொடி மலர்கின்ற, பொறுத்தற்கரிய பனியையுடைய அச்சிரக் காலத்திலும் வராத தலைவர் நீட்சியையுடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து முதுகைச் சார்ந்து ,அழுதலையொழியெனக் கூறி என் அழுத கண் துடைப்பார் முன்பு.இப்பொழுது, எப்படிப்பட்டவராய் இருக்கிறாரோ!


    (கருத்து) தலைவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது அன்பின்றி என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) தான் பிரியுங்கால் தலைவி வருந்துதலை அறிந்த தலைவன் அவள் கூந்தலை உளரியும் கண்ணீரைத் துடைத்தும் தலையளி செய்து பிரிந்தானாதலின் அச்செயல்களை நினைந்து, “அங்ஙனம் செய்த தலையளியை யுடையார் இன்னும் வாராமல் புறக்கணிக்கிறாரே!!” என்று வருந்தினாள். தோழி, தலைவன் பிரியுங்கால் செய்த தலையளியை நினைவுறுத்தி வற்புறுத்தினாளாக, “அங்ஙனம் செய்யினும் இப்பொழுது வாராமையால் அவர் தன்மை வேறுபட்டது போலும்!” என்னும் கருத்துப் படக் கூறினாள்.

    யாரென்றது நம்மோடு தொடர்பிலரென்னும் நினைவிற்று. குறவனுக்குரிய சிறுதினை, தினைக்கதிரை அரிந்தபின் அதன் அடியில் மீட்டும் கிளைத்துக் கதிர் உண்டாகும்; அதனை மறுகாலென்பர்; அம்மறுகாலில் விதைத்த அவரை வளர்ந்தது.
    தலையளி என்பது..முகமலர்ந்து, அன்பு வார்த்தைக் கூறுதல்

Monday, August 18, 2014

குறுந்தொகை -81


தோழி கூற்று
(பாங்கியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப்பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, “நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ அதோ தெரியும் எம் ஊர்க்கண்ணும் வந்து பழகுவாயாக” என்று தோழி கூறியது.)

குறிஞ்சி - பாடலாசிரியர் வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

இனி பாடல்-
 
இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்
   
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப்
   
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்
   
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்

நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்
   
கடலுங் கானலுந் தோன்றும்
   
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.

                      -வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

உரை -
தலைவியானவள் குறையுறும் நின் சொற்களை ஏற்றுக்கொண்டு தன்னிடத்துக் கூறிய என் சொற்களை தெளிந்து , பசிய அரும்புகளையுடைய ஞாழல் மரத்தினது பல கிளைகள் அடர்ந்த ஒரு பக்கத்து, இதுவரை புதியதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்தனாலுண்டான தனிமையையுடையவள். நிலவையும் அதனோடு நின்ற இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலும் அதன் கரையிலுள்ள சோலையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுடைய எமது சிறிய நல்ல ஊர் அதோ பார்.இனி எம்மைமறவாது நினைக்க வேண்டும்.


     (கருத்து) இனி எம்மை மறவாது எம்மூருக்கு வந்து பழக வேண்டும்.

 ஞாழல் - நெய்தற் குரியதொரு மரம். தோழியிற் கூட்டம் கூடிய தலைவன் தலைவியோடு கடற்கரையிலுள்ள ஞாழன்மரத்தின் நிழலில் அளவளாவினான் ஆதலால், ‘ஞாழற் பல்சினை யொருசிறைப், புதுநலனிழந்த புலம்புடையள்’ என்றாள்.
 
     அலையின் பிறழ்ச்சியால் வெண்மையாகத் தோற்றும் கடலுக்கு நிலவும், அடர்த்தியால் இருண்டு தோன்றும் கானலுக்கு இருளும் உவமை;
    “தலைவி தானாக விரும்பி இதனைச் செய்திலள்; நான் கூறினமையின் இது செய்தாள். நானும் நீ குறைவேண்டி இரந்தமையின் அவளை நயக்கச் செய்தேன். ஆதலின் அவள் நலனிழந்தமைக்கு நின் முயற்சியே காரணமாவது. இனி நீ அவள் துயருறாவாறு அவ்வூரினிடத்தும் வந்து அளவளாவுக” என்று தோழி கூறினாள்.

Sunday, August 17, 2014

குறுந்தொகை - 80


விலைமகள் கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளென்று கேட்ட விலைமகள் அத் தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றோம்: அவள் வலியுடையளாயின் தலைவனை வாராமற் காப்பாளாக!” என்று தன் வன்மைமிகுதி தோன்றத் தன்னை வியந்து கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஔவையார்

.  
கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப்
 
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி
 
யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ
 
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர

நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி
 
முனையான் பெருநிரை போலக்
 
கிளையொடுங் காக்கன் கொழுநன் மார்பே.

                         =ஔவையார்



உரை_

எனது கூந்தலில் ஆம்பலின் புறவிதழொடித்த முழுப்பூவைச் செருகி, வெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி, அப்புனல்
 விளையாட்டை விளையாடச் செல்வோம்.நான் அப்படி ய்தலைவனுடன் விளையாட தலைவி அஞ்சுவாளானால், வெவ்விய போரில்
பகைவரை நடுநிலை உண்டாகுமாறு பயப்படாமல் எதிரில் நின்று கொல்லும் பல வேற்படையையுடைய எழுனி என்னும் உபகாரியின் போர்முனையிடத்தேயுள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைப் போல தன் கணவர் மார்பை பாதுகாக்கட்டும்  

(தலைவன் என்னை விட்டு வரமாட்டான் என விலைமகள் நம்பிக்கையுடன் கூறுகிறாள்)



     (கருத்து) தலைவன் என்னுடைய விருப்பப்படித்தான் நடப்பான்..தலைவி விரும்பியபடி நடக்கமாட்டான்.

எழினி - அதியமான் அஞ்சி. தன்நாட்டுப் பசுக்களைப் பகைவர் கொண்டு சென்றாராக அவரொடு பொருது அப்பசுக்களை எழினி மீட்டுக் காத்தான்;

Saturday, August 16, 2014

அழகின் ரகசியம்

             

என்

அழகின் ரகசியம்

அன்றாடம்

உபயோகிக்கும்

உத்தமி சோப்பே

நடித்து முடித்த

நடிகைக்கு

ஒருமணி நேரம் ஆனது

ஓரங்குல மேக்கப்

கலைக்க

குறுந்தொகை - 79


தலைவி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “என்பாற் சொல்லின் நான் உடம்பட மாட்டேனென்னும் கருத்தால், சொல்லாமற் பிரிந்து சென்ற தலைவர் தாம் சென்ற ஊரிலேயே தங்கிவிட்டாரோ?” என்று கூறி வருந்தியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் குடவாயிற் கீரனக்கன்

இனி பாடல்-

.  
கான யானை தோனயந் துண்ட
   
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
   
அலங்க லுலவை யேறி யொய்யெனப்
   
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்

அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச்
   
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்
   
கொல்லே மென்ற தப்பற்
   
சொல்லா தகறல் வல்லு வோரே.

                           -குடவாயிற் கீரனக்கன்

உரை-

(தோழி) யாம் தாம் பிரிவதற்குப் பொருந்தேமென்ற தவற்றினால் ,சொல்லாமல் செல்லுதலில் வன்மையுடையோராகிய தலைவர் காட்டு யானையால் பட்டை விரும்பி உண்ணப்பட்ட பொறந்த அடியையுடைய ஓலைமரத்தினது காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில் ஏறி ஒய்யென தனிமையையும் வருத்ததையும் வெளிப்படுத்தும் குரலையுடையவனாகி ஆண்புறாக்கள் பெண்புறாக்களை அழைக்கும் பாலை நிலத்திற் பொருந்திய அழகிய தடிகளையுடைய சிற்றூரில் தங்கினரோ!


     (கருத்து) தலைவர் இனி மீளாரோ?

     (வி-ரை.) பாலைநிலத்தின் வெம்மையால் யானை ஓமை மரத்தின் தோலை உண்டது.
 
     பாலை நிலத்துள்ள ஆண்புறவு தன் பெடையை விரும்பி அழைக்கும் இடத்தில் தங்கினாரோ வென்றது, பறவையினங்களும் தம் துணையின்பால் அன்பு வைத்து ஒழுகும் அவ்விடத்தில் தங்கினார் என்றால், அங்கு நடைபேறும் நிகழ்ச்சி என்பால் வந்து சேர்க்கும்.ஏன்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது.
 ஒல்லேம் -  நாம் உடம் படாமையைத் தவறாக நினைத்து அதுபற்றிச் சினந்து அங்கே தங்கி விட்டனரோ வென்பது தலைவியின் ஐயம்.

Friday, August 15, 2014

குறுந்தொகை - 78



பாங்கன் கூற்று
(தலைவனது வேறுபாட்டுக்குக் காரணம் அவன் ஒருத்திபாற் கொண்ட காமமேயென்பதனை உணர்ந்து, “காமம் தகுதியில்லாரிடத்தும் செல்வதாதலின் அது மேற்கொள்ளத் தக்கதன்று” என்று பாங்கன் இடித்துரைத்தது.)

குறிஞ்சி - பாடலாசிரியர் நக்கீரர்

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
   
முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச்
   
சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப
   
நோதக் கன்றே காமம் யாவதும்

நன்றென வுணரார் மாட்டும்
   
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.


                    -நக்கீரர்

.

உரை -

பெரிய மலையின் உச்சியில் உள்ளதாகிய நெடிய வெள்ளிய அருவியானது அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது முழவைப் போல ஒலித்து பக்க மலையினிடத்து வீழும் மலைகளுடைய தலைவா! காமமானது சிறிதும் நன்மையென உணரும் அறிவில்லாதாரிடத்தும் சென்று தங்குகின்ற பெரும் அறிவின்மையையுடையது.ஆதலின் அது வெறுக்கத்தக்கது.(என்கிறான் தலைவனிடம் பாங்கன்)



     (கருத்து) நீ ஒருத்திபாற் கொண்ட காமத்தை ஒழிவாயாக.

பாங்கன் என்பவன் தலைவனின் பாங்கறிந்து ஒழுகுபவன். எப்போதும் தலைவனுடன் இருப்பவன்.


தலைவனுக்கு உறுதுணையாக இருத்தல் மட்டுமல்லாது தலைவனோடு மாறுபட்டு இடித்துரைக்கும் உரிமையும் உள்ளவன் பாங்கன். களவொழுக்கக் காலத்தில் தலைவன் தலைவியின் நினைவாகவே இருக்கும்போதும், கற்பொழுக்கக் காலத்தில் தலைவன் பரத்தையை நாடும்போதும் பாங்கன் இடித்துரைப்பான்.
 மாந்தர்களில் வாயில்களில் ஒருவராக இருந்து செயலாற்றுபவன் பாங்கன். [3]


 மிக உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள அருவி மிகத்தாழ்ந்த தாழ் வரையில் வீழ்ந்தது போல, மிக்க பெருமையையுடைய நீ நின் பெருமை நீங்கிக் காமங்கொண்டாயென்பது குறிப்பு.

Thursday, August 14, 2014

ஆண்டவனேயாயினும்...



எண்ணியவை

எண்ணியவாறு நடக்க

முயற்சிக்க

அல்லாவிடின்

ஆண்டவனேயாயினும்

இயலாது

(கவிதை