Wednesday, August 20, 2014

குறுந்தொகை - 83


தோழி கூற்று
(திருமணம் செய்யும் முயற்சிகளோடு வந்த தலைவனைச் செவிலி ஏற்றுக் கொண்டமையைத் தோழி, அச்செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் வெண்பூதன்

இனி பாடல்-
 
அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
   
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை
   
தம்மிற் றமதுண் டன்ன சினைதொறும்
   
தீம்பழந் தூங்கும் பலவின்

ஓங்குமலை நாடனை வருமென் றோளே.

                - வெண்பூதன்


உரை-

தன் வீட்டில் இருந்து, தனது முயற்சியால் ஈட்டிய பொருளில், தம் பாகத்தை உண்டது போன்ற இன்சுவையை தருகின்ற , கிளைகள் தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலா மரங்களையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவன், தலைவியை திருமணம் செய்யும் பொருட்டு பொருளோடு வருவான் என கூறியவளாகிய அன்னை, பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாய்,பெரும் புகழுடைய சுவர்க்கத்தை பெறுவாளாக.


     (கருத்து) தலைவர் வருவாரென்று உணர்த்திய செவிலி வாழ்வாளாக.

(செவிலை எனப்படுபவள் வளர்ப்புத் தாய் ஆவாள்.பல நேரங்களில் தோழியின் தாயே தலைவியின் செவிலித்தாயாக இருப்பதுண்டு)

 

No comments: