Thursday, August 21, 2014

குறுந்தொகை - 84



செவிலித்தாய் கூற்று
(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாளாக, அதனை யறிந்த செவிலி, “யான் நேற்று வழக்கம்போல் தழுவவும் அதனை என் மகள் வெறுத்தாள்; அதன் காரணத்தை அப்பொழுதே அறிந்திலேன்; இப்பொழுது அறிந்தேன்” என்று கூறி இரங்கியது.)

 பாலைத் திணை - பாடலாசிரியர் மோசிகீரன்

இனி பாடல்-

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனள்
 
இனியறிந் தேனது துனியா குதலே
 
கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
 
வேங்கையுங் காந்தளு நாறி

ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே.



                                 - மோசிகீரன்

உரை-

உழல இட்ட தோள் வளையையுடைய ஆயென்னும் வள்ளலது. மேகங்கள் தவழும் பொதியின் மலையில் உண்டான வேங்கை மலரினது மணத்தையும், காந்தள் மலரினது மணத்தையும் வீசி ., ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியுடையளாகிய என் மகள், நான் ஒருமுறை தழுவிய தோடமையாமல் மீண்டும் தழுவும் காலத்து, நான் வியர்வையையடைந்தேன் என்று கூறினாள்.அப்படி நான் தழுவியது அவளுக்கு வெறுப்பு உண்டாகக் காரணம், அவள் கூறிய அக்காலத்தே அறியவில்லையாயினும் இப்போது அறிந்தேன்.

 
    (கருத்து) தலைவி என்மேல் வெறுப்புற்று  தலைவன்பால் விருப்புற்றுச் சென்றனள்; இதனை முன்னரே நான் அறியவில்லை..


     செவிலி அறிந்தது, (“ தலைவனது தழுவலை இன்பமாகக் கருதியவளாதலின் பிறர் தழுவல் வெறுப்புறச் செய்தது” என்பதனை. “முன்பு விருப்பாயிருந்த என் அணைப்பு இப்பொழுது அவளுக்கு வெறுப்பாயிற்று” என்பது குறிப்பு;)

 ஆய்: ஏழுவள்ளல்களுள் ஒருவன். இவனுக்குரியது பொதியின் மலை. மழைதவழ் பொதியிலென்றது, காந்தளும் வேங்கையும் வளம் பெற வளர்தற்குரிய மழையுண்டென்பதைக் குறித்தது.



 


No comments: