Friday, August 15, 2014

குறுந்தொகை - 78



பாங்கன் கூற்று
(தலைவனது வேறுபாட்டுக்குக் காரணம் அவன் ஒருத்திபாற் கொண்ட காமமேயென்பதனை உணர்ந்து, “காமம் தகுதியில்லாரிடத்தும் செல்வதாதலின் அது மேற்கொள்ளத் தக்கதன்று” என்று பாங்கன் இடித்துரைத்தது.)

குறிஞ்சி - பாடலாசிரியர் நக்கீரர்

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
   
முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச்
   
சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப
   
நோதக் கன்றே காமம் யாவதும்

நன்றென வுணரார் மாட்டும்
   
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.


                    -நக்கீரர்

.

உரை -

பெரிய மலையின் உச்சியில் உள்ளதாகிய நெடிய வெள்ளிய அருவியானது அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது முழவைப் போல ஒலித்து பக்க மலையினிடத்து வீழும் மலைகளுடைய தலைவா! காமமானது சிறிதும் நன்மையென உணரும் அறிவில்லாதாரிடத்தும் சென்று தங்குகின்ற பெரும் அறிவின்மையையுடையது.ஆதலின் அது வெறுக்கத்தக்கது.(என்கிறான் தலைவனிடம் பாங்கன்)



     (கருத்து) நீ ஒருத்திபாற் கொண்ட காமத்தை ஒழிவாயாக.

பாங்கன் என்பவன் தலைவனின் பாங்கறிந்து ஒழுகுபவன். எப்போதும் தலைவனுடன் இருப்பவன்.


தலைவனுக்கு உறுதுணையாக இருத்தல் மட்டுமல்லாது தலைவனோடு மாறுபட்டு இடித்துரைக்கும் உரிமையும் உள்ளவன் பாங்கன். களவொழுக்கக் காலத்தில் தலைவன் தலைவியின் நினைவாகவே இருக்கும்போதும், கற்பொழுக்கக் காலத்தில் தலைவன் பரத்தையை நாடும்போதும் பாங்கன் இடித்துரைப்பான்.
 மாந்தர்களில் வாயில்களில் ஒருவராக இருந்து செயலாற்றுபவன் பாங்கன். [3]


 மிக உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள அருவி மிகத்தாழ்ந்த தாழ் வரையில் வீழ்ந்தது போல, மிக்க பெருமையையுடைய நீ நின் பெருமை நீங்கிக் காமங்கொண்டாயென்பது குறிப்பு.

No comments: